மக்களின் அன்றாட வாழ்வு - நீதித்துறை- ஊடகங்கள் - சமூகநீதி அனைத்தும் அச்சுறுத்தப்படும் அவலநிலை!
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நாட்டைக் காப்பாற்றுவதுதான் ஒரே தீர்வு!
நாட்டின் சகல துறைகளும் அச்சுறுத்தப்படும் அவல நிலைதான் - நூறு நாள் பா.ஜ.க. ஆட்சியின் சாதனை; இவற்றை முறியடித்து நாட்டைக் காப்பாற்றிட எதிர்க்கட்சிகள் ஒன்றி ணைந்து அமைதி வழியில் போராடுவதே இதற்கு ஒரே தீர்வு என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நடைபெற்று முடிந்த பொதுத் தேர் தலுக்குப்பின் மீண்டும் இரண்டாவது தடவை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் அமைந்த பா.ஜ.க. ஆட்சியின் நூறு நாட்கள் சாதனை என்று அவர்கள் தெரிவிப்பது, வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம் என்றே!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள தனி அந்தஸ்து 370 ஆவது பிரிவு - நாடாளு மன்றத்தில் சட்டப்படி ரத்து சட்டம் நிறை வேற்றம்; இராமன் கோவிலைக் கட்டியே தீருவோம் - பிரச்சினைக்குரிய அயோத்தி நிலத்தில் என்ற அறிவிப்பு; அதற்காக உச்சநீதிமன்றம் நாள்தோறும் அமர்ந்து இந்த வழக்கு விசாரணையை கடந்த 22 நாள்களாக விசாரித்து வருகிறது.
ரொட்டியா - இராமன் கோவிலா?
இராமன் கோவில் கட்டுவதற்குக் காட்டும் மத்திய அரசின் வேகமும், ஆர்வ மும் மக்களுக்கு ரொட்டி'' - உணவு தருவதற்கும், விலைவாசி ஏற்றத் தடுப்பு, பணவீக்கத்தின் உயர்வு - ஜி.டி.பி. என்ற பொருளாதார வளர்ச்சி அளவுகோலின் - வரலாறு காணாத சரிவு - தொழிற்சாலைகள் பொருளாதார வீழ்ச்சியால் மூடப்படும் அபாயம் - அதன் தவிர்க்க இயலாத விளைவான வேலை கிட்டாத திண்டாட்டம் - ஏற்கெனவே இருந்த வேலைகள் இழப்பு - ஏற்றுமதி குறைவு - அதனால் அந்நியச் செலாவணி ஈட்டல் வெகுவாகக் குறைவு - இப்படி வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி! முட்டுச்சந்தில் நமது பொருளா தாரம்!
இதுபற்றி பிரதமர் எந்த விளக்கமும் இதுவரை கூறி, நிலைமையை ஆய்வு செய்து, அவசரமாக தக்கப் பரிகாரம் காணும் வகையில் மக்களுக்கு உறுதியளிக் காதது வேதனையானதாகும்.
சட்டம் ஒழுங்கு, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும், ஏன் வடபுலத்தில் காங் கிரஸ் கட்சி ஆளும் சில இந்தி மாநிலங் களில்கூட ஜெய் சிறீராம்' கூறச் சொல்லி, வலுக்கட்டாயமாக மற்றவரை அடித்துக் கொல்லுவது (Lynching) என்ற கொடுமை பரவலாகியுள்ளது!
உ.பி. பா.ஜ.க. அமைச்சரின் சட்ட விரோதப் பேச்சு
உ.பி. பா.ஜ.க. அமைச்சர் ஒருவர், இந்த தேசம் இந்துக்களுடையது; கோவில் இந் துக்களுடையது; உச்சநீதிமன்றம் இந்துக் களுடையது. அதாவது எங்களுக்குரியது - உங்களால் என்ன செய்ய முடியும்'' என்று கூறி, உ.பி. அமைச்சராகத் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடிகிறது.
பிரதமரோ, கட்சித் தலைவர் அமித் ஷாவோ அந்த அமைச்சரை இதுவரை கண்டித்ததாகத் தெரியவில்லை. விளக்கம் - வியாக்கியானம் தருகிறார் - வெந்த புண்ணில் வேலைச் சொருகுவதுபோல! இவரை பதவியில் நீடிக்கவிடலாமா? உச்சநீதிமன்றம் சும்மா இருக்கலாமா?
வழக்குரைஞர் மிரட்டப்படும் கொடுமை!
முஸ்லிம்களின் சார்பாக இராமன் கோவில் இட சர்ச்சை வழக்கில் உச்சநீதி மன்றத்தில் வாதாடும் உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ராஜீவ் தவானை தமிழ் நாட்டிலிருந்த ஒரு வக்கில் மிரட்டல் விடுத்தார் என்ற புகாரும், அவரது குமாஸ் தாவை டில்லி நீதிமன்ற வளாகத்திலேயே மிரட்டினார்கள் என்றும் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்!
மத்திய ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இங்கே உள்ள ஆட்சி கண்டும் காணாதது போல் நடந்துகொள்கிறது! உச்சநீதிமன்றம் தான் - ஜனநாயகத்தைக் காக்கவேண்டிய அரண்.
நீதித்துறையும் தடுமாற்றம்!
இப்போது அங்கேயே வெளிப்படைத் தன்மை இல்லை. எனவே, கொலிஜியம்'' பற்றிய நம்பகத்தன்மை வெகுவாகக் குறைந்து வருகிறது என்று வழக்குரைஞர் அமைப்பினரே போராட்டக் களத்தில் நின்று பகிரங்கமாக அறிவிக்கும் விசித்திர நிலை!
பணி மூப்பில் உள்ள மூத்த நீதிபதிகள் பதவி உயர்வில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாற்று, உச்சநீதிமன்ற சக நீதி பதிகளாலேயே கடிதம் எழுதி, அது ஏடு களில் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச் சிக்கு உரியது அல்லவா?
நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கான பரிந்துரையில், ஒரே ஜாதி - உயர்ஜாதி பார்ப்பனர்களாக இருப்பது அரசியல் சட்ட முகப்புரையில் உறுதி அளிக்கப்பட்டுள்ள சமூகநீதிக்கு முரணானது அல்லவா? என்ற கேள்வி எதிரொலிக்கிறது!
மூத்த பார்ப்பனரல்லாத உயர்ஜாதி அல்லாத நீதிபதிகள் புறக்கணிக்கப்பட்டு, அவர்களைவிட பணிமூப்பு வரிசையில் பின்னால் உள்ளவர்கள் பரிந்துரைக்கப்பட் டுள்ளது நியாயந்தானா? என்ற கேள்வி களுக்கு இடம் ஏற்பட்டுள்ளது!
தொழிலதிபர்கள் தற்கொலை முதல் பலவகைத் தற்கொலைகளும் - கொலை களும் நாட்டில் நாளும் அதிகமாகி உள்ளன!
ஊடகங்களும் தப்பவில்லை!
இதை மக்கள் சிந்தனையிலிருந்து மாற்றிட - திசை திருப்பிட, ஊடகங்கள் -ஜனநாயகத்தின் நான்காவது தூண் - மவுன ராகத்தில் வைக்கப்பட்டுள்ளன! அல்லது அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படு கிறது. உ.பி.யில் ஒரு செய்தியாளர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார் - உப்பே சப்பாத் திக்கு மதிய உணவு என்பதை அவர் வெளியிட்ட ஒரே காரணத்தால்!
பழிவாங்கும் அரசியல்'' படமெடுத் தாடுகிறது. எதிர்க்கட்சியின்மீது வழக்குகள் 30, 35 ஆண்டுகளுக்குமுன் நடைபெற்றது என்று தூசு தட்டி எடுத்துப் பாய்கின்றன!
மீண்டும் "பார்ப்பன நாயகமா?''
மக்களவைத் தலைவராக இருக்கும் ஓம்பிர்லா அவர்கள், ராஜஸ்தானில் நடைபெற்ற பிராமண சம்மேளனத்தில் கலந்துகொண்டு, பிராமணர்கள் மிகவும் உயர்ந்த அறிவுள்ளவர்கள் என்றெல்லாம் பேசி, அதனை டெக்கான் கிரானிக்கள்'' மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ்'' போன்ற ஏடுகளே தலையங்கம் எழுதி கண்டனம் தெரிவித்துள்ளன.
நாடு எங்கே போகிறது?
மீண்டும் "பார்ப்பன நாயகம்'' (‘Brahminocracy') உருவாக இவர்களைப் போன்றவர்கள் சிவப்புக் கம்பளம் விரிக் கிறார்களா? நாடு எங்கே போகிறது?
நாடு எங்கே போகிறது?
இந்நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு - ஓரணியில் நின்று ஜனநாயகத்தை, மதச்சார்பின் மையை, சமூகநீதியைக் காப்பாற்றிட தங்களை பின்னால் தள்ளி, நியாயங்கள், நீதிகளை - உரிமைப் பாதுகாப்பை முன்னே நிறுத்திட, பாதுகாத்திட முன்வந்தால் ஒழிய இனி ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியாது, முடியவே முடியாது!
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
13.9.2019