அறப்போர் ஆயுதங்களும், எதிர்ப்புப் படைகளும் இங்கு எப்போதும் தயார் நிலையே!
களம் காணாமலே பெற்ற வெற்றி இது!
இந்தியாவின் ஒரே மொழி ஹிந்தி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டுவிட்டரில் பதிவு செய்த நிலையில், தமிழ்நாட்டில் எதிர்ப்புப் புயல் வெடித்ததன் காரணமாக, தான் அவ்வாறு சொல்லவில்லை என்று கூறி, தன் பதிவைப் பின்வாங்கியுள்ளார் என் றாலும், இப்போதைக்குப் போராட்டம் இல்லையென்றாலும், அறப்போர் ஆயுதங்களும், எதிர்ப்புப் படைகளும் தமிழ்நாட்டில் எப்பொழுதும் தயார் நிலைதான் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் ஹிந்தி தான் ஒரே மொழியாக இந்தியாவில் இருக்க வசதியாக அனை வரும் அதனைக் கற்றுக்கொள்ளுவது அவசியம்; அதுதான் உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக இருக்க முடியும்'' என்று, இந்தி நாள்' என்ற வாய்ப் பைப் பயன்படுத்தி தனது டுவிட்டரில்' பதிவு செய்தார்.
இது அப்பட்டமான ஹிந்தித் திணிப் புக்கும், ஹிந்தி ஏகாதிபத்தியத்திற்கும் வழிவகுக்கும் என்பதால், தமிழ்நாட்டி லிருந்தே - பெரியார் மண்ணிலிருந்தே முதல் எதிர்ப்புக்குரல், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் முதலிய திராவிட இயக்கத்தினால் எழுப்பப்பட்டது; மற்ற அத்துணைக் கட்சிகளும், இயக்கங் களும், நடுநிலையாளர்களும், பல ஏடு களிலும் எதிர்த்ததால் எதிர்ப்புப் புயல்போல் கிளம்பியது.
தமிழ்நாட்டின் கண்டனமும் - மத்திய அரசின் பின்வாங்கலும்!
நாம் சொன்னோம் - நமது கண்டன அறிக்கையில்; இது அரசமைப்புச் சட்ட விரோதம் மட்டுமல்ல; நாட்டின் பன்முகத் தன்மைக்கு உலை வைக்கும் சர்வாதிகாரப் போக்கு. இதனைக் கைவிடாவிட்டால், பெரும் விளைவை - போராட்டங்களை மத்திய அரசு எதிர்கொள்ள வேண்டி யிருக்கும்'' என்று எச்சரித்தோம்.
இது காற்றை விதைத்துப் புயலை அறுவடை செய்யும் விபரீதத்தில் முடியும்'' என்றும் கூறினோம்.
திராவிட முன்னேற்றக் கழகம் அதன் ஆற்றல்மிகு தலைவர் தளபதி மு.க.ஸ்டா லின் அவர்கள் தலைமையில், திருவண் ணாமலையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கடுமையான அறப்போர்க் குரலில் - கண்டனம் தெரிவித்து, போராட்டக் களம் காண போர்ச் சங்கு ஊதினார்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல; கேரளம், கருநாடகம் போன்ற மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் மற்றும் முற்போக்காளர்கள் வன்மையாகக் கண்டனம் தெரிவித்தனர்.
சென்னையில் 16.9.2019 இல் தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூடி, 20 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறத் திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், குடியாத்தம் போன்ற பகுதிகளில் மாணவர்கள் இரயில் நிலைய பலகைகளில் உள்ள ஹிந்தி எழுத்துக்களைத் தார் கொண்டு - பெரியார் வழியில் - அழித்துக் கைதாயினர்.
போராட்ட மேகங்கள் கடுமையாக சூழ்ந்த நிலையில், டில்லி அரசு - மோடி, அமித்ஷா அரசு - தங்களது "விபரீத அறிவிப்பு வினையாகிவிட்டதே'' என்று அவசரமாக உணர்ந்தோ அல்லது வேறு அரசியல் காரணத்தாலோ, ஹிந்தியைத் திணிக்கவில்லை என்று நேற்று (18.9.2019) உள்துறை அமைச்சர் விளக்கம் கூறி, தனது அதிவேகக் குரலை அடக்கி வாசித்து, 2 ஆம் மொழியாகத்தான் படிக்கவேண்டும் என்றேன்'' என்று தனது ராகத்தை மாற்றியுள்ளார்!
ஆளுநர் அழைப்பு - தி.மு.க. தலைவர் சந்திப்பு!
தி.மு.க. தலைவர் தளபதியை தமிழக ஆளுநர் அவசரமாக அழைத்து, 20 ஆம் தேதி போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்ட போது, மத்திய அரசு சொல்லட்டும் என்று கூறிய நிலையில், மத்திய அரசு கூறியுள்ள உறுதிமொழி யைத்தான் அதன் சார்பில் உங்களுக்குத் தருகிறேன்; அவர்கள் சொல்லச் சொல் லியே சொல்லுகிறேன். கிளர்ச்சி வேண்டாம் - கைவிடுங்கள்'' என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க, தற்காலிகமாக ஹிந்தித் திணிப்புக்கெதிரான தி.மு.க.வின் அறப் போர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தி.மு.க. தலைவர் அறிவித்திருக்கிறார்.
களம் காணாமலேயே வெற்றி தி.மு.க. வுக்குக் கிடைத்திருப்பது தந்தை பெரி யாரும், அறிஞர் அண்ணாவும், மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞரும் வாழ் கிறார்கள்; தி.மு.க.வுக்கும், அதன் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கி றோம்.
திராவிடம் வெல்லும்; ஹிந்தி மொழித் திணிப்பு என்ற பண்பாட்டுப் படையெடுப் பை தடுத்து நிறுத்திட என்றும் திராவிட பூமி தயார் நிலையில் என்பதை உணர்த்தி விட்டது.
இதுபோல் வடக்கே இருக்கும் ஹிந்தித் திணிப்பாளர்கள் - குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வினர் சமூகநீதி போன்ற பல முக்கிய கொள்கைகளில் பலவற்றில் எதிர்ப்புக் குரல் கொடுப்பது, கடும் எதிர்ப்பு ஏற்பட்டவுடன் பின்வாங்குவது வாடிக் கையாக நடைபெறுவதுதான்.
பாம்பு புற்றுக்குள் இருந்து தலைநீட்டி படமெடுத்தாடத் தொடங்கும்போது, பெரியாரின் கைத்தடி ஓங்கப்பட்டவுடன், தனது தலையைப் புற்றுக்குள் இழுத்து உள்ளே செல்வது போன்றது இது!
என்றும் தயார் நிலையில் இருப்போம்!
இது தற்காலிகமாக, திராவிட பூமிக்கு, பெரியார் மண்ணுக்கு திராவிடர் இயக் கத்திற்கு, தமிழ் மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்றாலும், எப்போதும், எந்நிலை யிலும் விழிப்பும் தேவை! தேவை!!
அறப்போர் ஆயுதங்களும், எதிர்ப்புப் படைகளும் என்றும் தயார் நிலையிலேயே இருப்பது மிகவும் அவசியமானதும்கூட!
தந்திரங்களால் நாம் ஏமாற்றப்பட ஒருபோதும் இடம் கொடுத்துவிடக் கூடாது.
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்
சென்னை
19.9.2019