பெரியார் இயக்கம் உலக இயக்கமாக பரிமளிக்கிறது வருங்காலத்தில் உலகம் முழுவதும் பயணிப்பார் பெரியார்!
தமிழ்நாட்டிலிருந்து 50-க்கும் மேற்பட்ட பேராளர்கள் மாநாட்டில் பங்கேற்பு
செப்டம்பர் 21, 22 இல் அமெரிக்காவில் நடைபெறும் பெரியார் பன்னாட்டமைப்பு மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து 50-க்கும் மேற்பட்ட பேராளர்கள் பங்கேற்கிறார்கள். பெரியார் இயக்கம் உலக இயக்கமாக பரிமளிக்கிறது; வருங்காலத்தில் உலகம் முழுவதும் பயணிப்பார் பெரியார் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்
அவர்தாம் பெரியார் - பார்!
என்று அறிவு ஆசான் தந்தை பெரியாரை நம் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் ஓவியமாக வரைந்து தன் கவிதையை எழுதினார்.
உலகம் முழுவதும் தேவைப்படும் - பரவிடும்!
சுயமரியாதை இயக்கத்தைத் தான் ஏன் தொடங்கினேன்? அது எதிர்காலத்தில் இங்கே மட்டுமா இருக்கும்? உலகம் முழுவதிலும் தேவைப்படும் - பரவிடும்.
காரணம், ‘உலகம் எதற்கும் காரண காரியத்தைத் தேடுகிறது - அதன் காரண மாகவே ஏன்? எதற்கு? எப்படி? யாரால்? என்ற அடுக்கடுக்கான கேள்விக் கணை களால் துளைத்து, எதனையும் ஆராய்ந்து, அறிந்து அதன் பிறகு, அதன் வழி நடப்பதற்கு அறிவியல் உலகம் ஆயத்த மாகுவதுதான் இன்றைய நடைமுறை; நாளை இன்னும் வேகமாகி மனிதன் வேறு கோள்களில்கூட குடியேறும் சாதனைகள் சரித்திரமாக்கக் கூடும்.
வருண பேதம் பிறவி பேதமாக இருப்பதுதானே உண்மைக் காரணம்
இந்த தொலைநோக்குடன் தனது இயக் கத்தைத் தந்தை பெரியார் தொடங்கினாலும், முதலில் இங்குள்ள மனிதர்களில் ஏன் மேல் - கீழ்? ஏன் பேதங்கள்? - அடிமை - ஆண்டான், படிக்கக் கூடியவன் - படிக்கக் கூடாதவன் - தொடக் கூடியவன் - தொடக் கூடாதவன் என்று மனிதர்களை சமத்துவ மாக நடத்தாமல் ஆறறிவு படைத்திருந்தும், மிருகங்களைவிட கீழாக மனிதர்களை நடத்துவதற்கு ஜாதி - வர்ண பேதம் பிறவி பேதமாக இருப்பதுதானே உண்மைக் காரணம்.
அதே பிறவி பேதம் ஆண் - பெண் என்ற பேதத்தையும் பிறவி அடிப்படை யிலே உருவாக்கி - சமத்துவத்தையும், சம வாய்ப்பையும், சுதந்திரத்தையும், சகோ தரத்துவத்தையும் ‘ஏன்' பெரும்பாலான மக்களுக்கு - அதுவும் பாடுபட்டு உழைக்கும், மண்ணுக்குரிய மக்களுக்கு மறுப்பதும் அவர்களது சுயமரியாதையைப் பறிப்பதும் மானுட உரிமைகள் மறுக்கப் படுவதும் அல்லவா? என்ற கேள்வியில் பிறந்ததுதான் தந்தை பெரியாரின் சுயமரி யாதை இயக்கம், சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, பாலியல் நீதி, பகுத்தறிவுச் சிந்தனை இவைகளை மக்களிடையே பரப்பி விழிப்புணர்வு கொள்ளச் செய்து அறிவு விடுதலை பெற வைக்கும் அயராத பணிதான் அவ்வியக்கப் பணி!
பெரியார் ஒரு சமூக விஞ்ஞானம்!
தந்தை பெரியார் மறைந்து 46 ஆண்டு கள் ஆகின்றன!
என்றாலும், அவரது தத்துவங்களும், லட்சியங்களும் இப்போதும் தேவை! எப்போதும் பயன்படும் என்ற நிலை - காரணம் அது ஒரு சமூக விஞ்ஞானம்!
அதனால்தான் உலகமே பெரியாரின் சுயமரியாதையை, மனிதநேயத்தைத் தேடு கிறது - நாட்டின் எல்லை கடந்து! தந்தை பெரியார்தம் கொள்கைகளை உலகமெ லாம் பரப்பும் பெரியார் பன்னாட்டு அமைப் பும் அமெரிக்காவிலேயே மிக அதிகமான பகுத்தறிவாளர்கள், நாத்திகர்கள், மனித நேயர்களைக் கொண்ட அமைப்பான அமெரிக்க மனிதநேய அமைப்பும், Periyar International - American Humanist Association இணைந்து ஒரு பன்னாட்டு மாநாட்டை அமெரிக்காவில் வாஷிங்டன் அருகே உள்ள மேரிலாந்தில் செப்டம்பர் 21, 22 (இன்றும், நாளையும்; சனி - ஞாயிறு) மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளன.
உலகின் பல பகுதிகளிலிருந்து பேரா ளர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்!
தமிழ்நாட்டிலிருந்து 50 பேராளர்கள்
தமிழ்நாட்டிலிருந்து சுமார் 50 பேராளர் கள் விமானம்மூலம் புறப்பட்டுச் சென்று பங்கேற்கிறார்கள்.
டாக்டர் சோம.இளங்கோவன் அவர் களும், AHA-யின் தலைவர் ராய்ஸ் பெக் ஹார்ட் அவர்களும் ஏற்பாடு செய்யும் இம்மாநாட்டில் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் போன்றவர்களும், டாக்டர் இலக்குவன் தமிழ், ஜெர்மனி பேராசிரியை உல்ரிக் நிகோலஸ் மற்றும் பலர் கலந்துகொள்கி றார்கள். நானும், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், ‘கலைஞர்' தொலைக்காட்சி ப.திருமாவேலன், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, கல்வியாளர் கள் எல்லாம் அந்த மாநாட்டில் பங்கேற் கிறோம்.
வருங்காலத்தில் உலகம் முழுவதும் பயணிப்பார் பெரியார்!
பெரியார் இயக்கம் உலக இயக்கமாக பரிமளிக்கிறது. 2 ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனி - வருங்காலத்தில் உலகம் முழுவதும் பெரியார் பயணிப்பார்!
மாநாட்டிற்கு வாழ்த்துகள்!
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
21.9.2019