மசூதி கட்டுவதற்காக கோவில் இடிக்கப்படவில்லை
12 ஆம் நூற்றாண்டில் ராமர் கோவில் இருந்ததற்கு ஆதாரம் இல்லை
நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட முடியாது
1992 ஆம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்டது சட்ட விரோத செயலே!
புதுடில்லி, நவ.9 பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டப்படலாம் என்றும், புது மசூதியைக் கட்டிட 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண் டும் என்றும், வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க முடியாது என்றும், 1992 ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்ட விரோதம் என்றும் உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கியுள்ளது.
அயோத்தியில் பாபர்மசூதி இடிக்கப்பட்ட இடம் யாருக்கு சொந்தம் என்கிற வழக்கு விசாரணையில் இறுதி தீர்ப்பு இன்று (9.11.2019) காலை வெளியானது.
தீர்ப்பின் மற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம்.
அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்.
இசுலாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை வழங்க மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும். 3 மாதத்தில் இந்த இடம் வழங்கப்பட வேண்டும்.
இஸ்லாமியர்கள் புதிய மசூதி கட்டிக்கொள்ள சன்னி வக்போர்டு ஏற்கும் இடத்தில் இந்த 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும்.
தீர்ப்பை 3 மாதத்தில் செயல்படுத்த வேண்டும்
சர்ச்சைக்குரிய நிலத்தை 3 தரப்புக்கும் பிரித்து வழங்கி அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதல்ல.
பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களுக்குச் சொந்தமான பகுதி என்பதை இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை.
அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலை நாட்டப்பட வேண்டும்.
நிலத்தின் உரிமையை நம்பிக்கை அடிப்படையில் முடிவு செய்ய முடியாது.
1946 இல் பைசாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஷியா வக்போர்டு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.
ஒருவரின் நம்பிக்கை மற்றவரின் நம்பிக்கையைச் சீர்குலைக்கக் கூடாது.
தொல்லியல் துறை அறிக்கையை நிராகரிக்க முடியாது.
நிர்மோகி அகாராவின் வாதம் ஏற்புடையதாக இல்லை.
காலியிடத்தில் மசூதி கட்டப்படவில்லை.
அயோத்தி ராமர் பிறந்த இடம் என்பது இந்துக் களின் நம்பிக்கை.
அந்த இடம் பாபர் மசூதி என்பது இசுலாமியர் களின் வாதம்.
பாபர் மசூதி கட்டப்படும் முன்பு அங்கிருந்த இடம் இசுலாமிய கட்டுமானம் அல்ல.
ஆவணங்களின்படி அந்த நிலம் அரசுக்கு சொந்தமானது.
நடுநிலையைக் காக்கும் பொறுப்பு நீதிமன்றத்துக்கு உள்ளது.
ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு ராம் சபுத்ரா, சீதா ரசோய் இந்துக்களால் வழிபடப்பட்டனர் என் பதற்கான சான்றுகள் உள்ளன. சர்ச்சைக்குரிய நிலத் தின் வெளிப்பகுதியை இந்துக்கள் வைத்திருந்ததாக பதிவுகளில் உள்ள சான்றுகள் காட்டுகின்றன.
நம்பிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்க மு டியாது. ஆனால் உரிமைக் கோரல்களில் அயோத்தி என்பது ராமரின் பிறப்பிடம் என்று இந்துக்களின் நம்பிக்கையை வரலாற்று விவரங்கள் குறிப்பிடுகின்றன.
நிலத்தின் மொத்த இடத்தையும் மத நம்பிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்க முடியாது.
1857 ஆம் ஆண்டே கட்டடத்தின் உள்பகுதிக்கும், வெளிப்பகுதிக்கும் இடையே தடுப்புகள் கட்டப்பட்டு உள்ளன.
1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதமான செயல். நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல்!
அயோத்தியில் இசுலாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கூறியதுடன், அலாகாபாத் உயர்நீதி மன்றம் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடத்தை 3ஆக பிரித்துக் கொடுக்க உத்தரவிட்டது தவறு.
சர்ச்சைக்குரிய இடத்தை மத்தியஅரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற வரலாற்றில் அதிக நாட்கள் விசாரணை நடைபெற்ற இரண்டாவது பெரிய வழக்கு என அயோத்தி நிலம் வழக்கு கூறப்படுகிறது. இந்த வழக்கில் விசாரணையின்போது நடைபெற்ற வாதங்கள் குறிப்பிடத்தக்கன.
தீர்ப்பின் போது தலைமை நீதிபதி கூறிய சில முக்கிய கருத்துக்கள்
மசூதி கட்டுவதற்காக கோவில் இடிக்கப்படவில்லை
மசூதி காலி இடத்தில் கட்டப்பட வில்லை
மசூதிக்கு கீழ் உள்ள கட்டுமானங்கள் இஸ்லாமிய கட்டுமானமும் அல்ல, கோவிலும் அல்ல.
கட்டுமானம் இருப்பதாலேயே ஒருவர் அந்த நிலத்திற்கு உரிமை கொண்டாட முடியாது.
12ஆம் நூற்றாண்டில் ராமர் கோவில் இருந்ததற் கான ஆதாரங்களை இல்லை.
வழக்கின் பின்னணி
இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010ஆம் ஆண்டு தீர்ப்பு கூறியது.
இதை எதிர்த்து அந்த அமைப்புகள் உள்ளிட்ட 14 பேர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வந்தது.
இதற்கிடையே நீதிமன்றத்திற்கு வெளியே இந்த விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்காக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் சிறீரவிசங்கர், மூத்த வக்கீல் சிறீராம் பஞ்சு ஆகியோரை கொண்ட சமரச குழு அமைக்கப்பட்டது. அந்த குழு சம்பந்தப் பட்ட தரப்பினருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி யது. ஆனால் அந்த குழுவின் சமரச முயற்சி தோல் வியில் முடிந்தது. இதுபற்றிய தகவல் கடந்த ஆகஸ்டு மாதம் 2ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது.
இதையடுத்து கடந்த ஆகஸ்டு 6ஆம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணையை அரசியல் சாசன அமர்வு தினசரி விசாரித்து வந்தது. விசாரணையின் போது சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா தரப்பினர் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர். 40 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த விசா ரணை கடந்த மாதம் 16ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
அரசியல் சாசன அமர்வுக்கு தலைமை வகிக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற 17 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்.
இந்த நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நேற்று உத்தரப்பிரதேச மாநில தலைமைச் செயலாளர் ராஜேந்திர குமார் திவாரி, டி.ஜி.பி. ஓம்பிரகாஷ் சிங் ஆகியோரை தனது நீதிமன்ற அறைக்கு வரவழைத்தார். அவர்களுடன், உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பாது காப்பு நடவடிக்கைகள் பற்றி கேட்டு அறிந்தார். சுமார் ஒரு மணி நேரம் அவர்களுடன் தலைமை நீதிபதி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு, அயோத்தி மேல் முறையீட்டு வழக்கில் அரசியல் சாசன அமர்வு நவம் பர் 9-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: சன்னி வக்ஃப் வாரியம்
தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம் என்றும் ஆனால் நாங்கள் திருப்தி அடையவில்லை என்றும், சன்னி வக்ஃப் வாரிய வழக்குரைஞர் ஜாபரியப் ஜிலானி கருத்து தெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும் சன்னி வக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளது.