‘இந்து' ஆங்கில ஏட்டிற்கு தமிழர் தலைவர் சிறப்புப் பேட்டி
மத அடிப்படையில் நாடு பிளவுபடுத்தப் படுவதை அனுமதிக்க மக்கள் மறுத்து விட்டுள்ளனர் 2020 ஜனவரி 2 ஆம் தேதியன்று ‘இந்து' ஆங்கில நாளிதழில் (பேட்டி கண்டவர் டென்னிஸ் எஸ்.ஜேசுதாசன்) வெளியான தமிழர் தலைவரும் திராவிடர் கழகத் தலைவருமான கி.வீரமணி அவர்களின் நேர்காணலின் தமிழாக்கம்.
நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இந்துத்துவ செயல் திட்டத்தினை மத்திய பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்திய குடியுரிமை திருத்த சட்டம் இந்த செயல் திட்டத் திசையில் எடுத்து வைக்கப்படும் முதல் படியாகும் என்று கூறும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்த புதிய குடியுரிமை திருத்த சட்டம் இந்திய அரசமைப்பு சட்டத்துக்கும், நாட்டின் மதசார்பற்ற தன்மைக்கும் எதிரான தாகும் என்று கூறுகிறார்.
கேள்வி: இந்துக்களின் வாக்குகளை ஒன்று திரட்டுவதற்கு பா.ஜ. கட்சிக்கு இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் உதவி செய்யுமா?
பதில்: இந்த சட்டத்தை அவர்கள் கொண்டு வந்தபோது இத்தகைய ஒரு மாயையில்தான் அவர்கள் இருந்தனர். நாட்டை மத அடிப்படையில் பிளவுபடுத்த அவர்கள் விரும் பினாலும், இந்திய நாட்டு மக்கள் அதனை அனுமதிக்கத் தயாராக இல்லை என்பது மிகத் தெளிவாக உறுதிப் படுத்தப்பட்டு விட்டது. அதனால்தான் இந்துக்கள் பலரும் அந்த சட்டத்திற்கு எதிராகப் போர்க் கொடியைத் தூக்கி யுள்ளனர். நுண்ணறிவாளர்களான மாணவர்களும் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு போராடி வருகின்றனர். மத அடிப்படையில் மாணவர்கள் பிளவு பட்டிருக்கவில்லை. எங்களை மத அடிப்படையில் பிளவு படுத்தாதீர்கள். அவ்வாறு செய்வது அரசமைப்பு சட்டத் திற்கும், மதசார்பற்ற தன்மைக்கும் எதிரானது என்று மக்கள் கூறுகின்றனர். உதாரணத்துக்கு பெண்களை எடுத்துக் கொள்ளுங்கள். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான முழக்கங்களை தங்கள் கோலங்களில் அவர்கள் எழுதி வருகின்றனர். இது எதனைக் காட்டுகிறது? மக்களவையில் மிருகத்தனமான பெரும்பான்மையை பா.ஜ.க. பெற்றிருப்பது மட்டுமே, அவர்கள் விரும்பும் எந்தவிதமான சட்டங்களை வேண்டுமானாலும் நிறைவேற்றுவதற்கு அது அனுமதிக்கிறது என்ற அர்த்தத்தைத் தராது. சட்டங்கள் அரசமைப்பு சட்டத்தின் ஒரு வரையறைக்குள் இருப்பதாகவும், அடிப்படை அரசமைப்பு சட்டக் கட்டமைப்பை மீறாததாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவை எதிர்க்கப்படவே செய்யும்.
கேள்வி: இந்துக்களின் மீதான தங்களின் தாக்குதலை தி.மு.க. குறைத்துக் கொண்டதாகவே தோன்றுகிறது. அக்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களும் தொண்டர்களும் இந்துக் கள்தான் என்று அக்கட்சியின் தலைவர்கள் உறுதிபடக் கூறி வருகிறார்கள். இந்துக்கள் எதிர்ப்பு கொள்கை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று ம.தி.மு.க. தலைவர் வை.கோபால்சாமி கூறியிருக்கிறார். அதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?
பதில்: உங்கள் கேள்வியின் சொல் அமைப்பிலேயே நான் மாறுபடுகிறேன். தி.மு.க. எப்போதுமே இந்துக்களுக்கு எதி ரானதாக இருந்தது இல்லை. அவர்கள் இந்து எதிர்ப்பாளர்கள் அல்ல. அவர்கள் மக்கள் ஆதரவாளர்கள். அவ்வளவுதான். திராவிடக் கோட்பாடு இந்து மதக் கோட்பாட்டுக் கொள்கை களுக்கு எதிராக இருப்பதாகும். அதனாலேயே அவர்கள் இந்து எதிர்ப்பாளர்கள் என்று கருதப்பட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்து மதத் தத்துவத்தில் உள்ள அடிப்படை தனித் தன்மையே, மக்களை அது சமத்துவம் கொண்டவர்களாகப் பார்க்காமல் வேறுபாட்டுடன் பார்க்கிறது என்பதுதான். மக்களிடையே சமத்துவமின்மை, ஜாதி நடை முறை மற்றும் தீண்டாமை ஆகியவை பாராட்டப்படுவதால் இந்து மதம் செழித்து வளர்ந்து வருகிறது.
கேள்வி: இந்துக்களும், முஸ்லிம் அல்லாத மக்களும் அயல் நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவதை இந்த குடியுரிமை திருத்த சட்டம் வரவேற்கிறது என்ற ஒரு காரணத்துக்காகவே திராவிடர் கழகம் அதனை எதிர்க்கிறதா?
பதில்: இல்லை. தொடக்கம் முதலே நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். இந்த சட்டத்தை முதன் முதலாக எதிர்த்தவர்களே நாங்கள்தான். மூன்று நாடுகளை அவர்கள் தேர்ந்தெடுப்பதற்கு ஏன் அவர்கள் மதத்தை அடிப்படையாக எடுத்துக் கொண்டனர்? மக்கள் துன்புறுத்தப்பட்டு, பாதிக்கப் பட்ட ஒரு நாட்டில் இருந்து மக்கள் ஓடிவரும்போது அவர்கள் மீது கருணை காட்டவேண்டும். இதில் எங்கிருந்து மத வேறுபாடு காட்டப்படுவது என்பது வருகிறது? குடியுரிமை திருத்த சட்டத்தில் அவர்கள் மிகவும் தெளிவாகவே முஸ்லிம் மத மக்களைத் தனிமைப்படுத்தியுள்ளனர். அவ்வாறு அவர் கள் ஏன் செய்ய வேண்டும்? இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம் மத மக்களும் கூடத்தான் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.
இவ்வளவு பெரும் எண்ணிக்கை கொண்ட அகதிகளுக்கு அடைக்கலம் தருவதற்கு நீங்கள் தயாராக இருக்கும்போது, அது மனித நேய அடிப்படையில் மட்டுமே பரிசீலனை செய்யப்படுவதாக இருக்க வேண்டுமே தவிர, மதப் பாகுபாட்டின் அடிப்படையில் பரிசீலிக்கப்படுவதாக இருக்கக் கூடாது. குடியுரிமையைப் பற்றி விளக்கும் அரசமைப்பு சட்ட 8 மற்றும் 14 ஆவது பிரிவுகள் மத அடிப்படையில் அதற்கு விளக்கம் அளித்திருக்கவில்லை. நடைமுறைப்படுத்தப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள தேசிய குடியுரிமைப் பதிவேட்டு திட்டத்தின் பின்னணியில் உள்ள மறைமுகமான நோக்கம் என்ன என்ற கேள்வி கட்டாயமாகக் கேட்கப்படவே வேண்டும்.
கேள்வி: பெரும்பான்மையானவர்கள் இந்துக்களாக இருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் குடியுரிமை திருத்த சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்ற தமிழ்நாட்டு நாடாளு மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை பா.ஜ.க. அரசு ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மட்டுமே இருக்க வில்லை; தங்களது சொந்த மதத்துக்கே எதிரானவர்களாகவும் அவர்கள் இருக்கின்றனர். இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு தமிழ் உணர்வு உண்டு. அதனால்தான் இலங்கைத் தமிழ் மக்களை எடுத்துக் கொள்ள பா.ஜ.க. விரும்பவில்லை. அதுவே ஒரு மிகப்பெரிய முரண்பாடாகும். அவர்களுக்கு என்று ஒரு மாறுபட்ட அளவுகோலை நீங்கள் பயன்படுத்த முடியாது. இலங்கைத் தமிழ் மக்கள் அதிக அளவிலான பக்தி மனப்பான்மையைக் கொண்டவர்கள். அவர்களுக்கு உள்ள ஒரே தகுதியின்மை அவர்கள் தமிழர்களாகப் பிறந்து விட்டதுதான்.
கேள்வி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு மிகமிகக் குறைந்த அளவிலான மக்களே ஆதரவு தெரிவித்து வருவதாக அமைச்சர் கே. பாண்டிய ராஜன் கூறியிருக்கிறார். இத்தகைய போராட்டங்களை நடத்துமாறு மாணவர்களை சில சக்திகள் தூண்டிவிட்டு வருவதாக மத்திய அரசு கூறிவருகிறதே?
பதில்: பெரும்பான்மையான மக்கள் இந்த சட்டத்தை எதிர்க்க வில்லை என்றால், அவர்கள் ஏன் அச்சப்பட வேண்டும்? ஆயிரக்கணக்கான மக்கள் மீது அவர்கள் ஏன் வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும்? பெண்கள் வரையும் கோலங்கள் அவர்களது தூக்கத்தைக் கெடுப்பதற்கு அவர்கள் ஏன் அனுமதிக்க வேண்டும்? இந்த கோலங்கள் ஏன் அவர்களை அச்சுறுத்த வேண்டும்? குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகப் போராடுபவர்கள் அரசமைப்பு சட்ட வழிகளிலேயே மிகவும் அமைதியாக தங்களது உணர்வுகளை, எதிர்ப்புகளை வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றனர். அதை ஆதரிப் பதோ ஆதரிக்காமல் இருப்பதோ எனது உரிமை. அ.இ. அ.தி.மு.க. ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. மத்திய பா.ஜ.க. அரசின் ஆதரவினால் மட்டுமே தமிழ்நாடு அரசு ஆட்சியில் இதுவரை தொடர்ந்து நீடித்து வர முடிந்திருக்கிறது.
போராட்டங்களைத் தூண்டிவிடுவது என்ற குற்றச் சாட்டைப் பொருத்தவரை, யார் அதைத் தூண்டிவிட்டார்கள்? எந்தவிதத் தூண்டுதலும் இல்லாமலேயே மக்கள் இந்த சட்டத்திற்கு எதிராகப் போராட திரண்டெழுந்து கொண்டி ருக்கின்றனர். இதற்கு அவ்வாறு எவர் மீதாவது குற்றம் சாட்டவேண்டுமென்றால், மத்திய அரசின் மீதுதான் குற்றம் சுமத்தவேண்டும். மக்கள் போராட்டம் நடத்தவேண்டும் என்பதற்கான தூண்டுதல் மத்திய அரசிடமிருந்து வந்ததுதான்.
கேள்வி: பெரியாருக்கு எதிராக தமிழக பா.ஜ.க. பிரிவு அண்மையில் சில கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். பெரியார் ஏன் இப்போது இவ்வாறான தாக்குதலுக்கு இலக்காக ஆகியுள்ளார் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: உண்மையில் அவற்றின் பிரதிபலிப்பு என்னவாக இருக்கும் என்பதைப் பார்க்கவே அவர்கள் விரும்பினர். புரட்சியின் அடையாளமாகத் திகழ்பவர் தந்தை பெரியார். வட இந்திய மாணவர்களும்கூட தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கு பெரியாரைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பா.ஜ. கட்சியினர் பெரியாரின் தோற்றத்தை சீரழிக்க, சிறுமைப்படுத்த முயன்று வருகின்றனர். அந்த முயற்சியில் அவர்கள் மிகவும் பரிதாபமானஅளவில் தோற்றுப் போனார்கள். அதனால்தான் அவர்கள் தெரிவித்த அந்தக் கருத்துகளை அவர்களே திரும்பப் பெற்றுக் கொண்டனர். இது எதனைக் காட்டுகிறது? பெரியாரைப் பற்றி அவர்கள் மிகப் பெரிய அளவிலான அச்சம் கொண்டுள்ளனர் என்பதையே அது காட்டுகிறது. பெரியார் உயிரோடு இருந்த போது அவர்களை எல்லாம் அவர் எதிர்கொண்டார். செருப்பு மற்றும் அழுகிய முட்டைகள் கொண்டு அவர் தாக்கப்பட் டுள்ளார். என்றாலும், பெரியாரைத் தாக்குவதற்கு இலக்காக பா.ஜ.க. பதிவிட்ட டிவிட்டு செய்திகளை நாங்கள் வரவேற் கிறோம். ஒரு ஆஸ்திரேலிய பூமராங் எவ்வாறு எதிரியைத் தாக்கிவிட்டுத் திரும்பி வந்து எறிந்தவரையே தாக்குமோ அதைப் போன்ற பாதிப்பை அவர்களது பதிவுகள் ஏற் படுத்தும். பெரியார் சிலைகளை சேதப்படுத்தி இழைக்கப்படும் வன்முறைச் செயல்களும் மற்றும் அது போன்ற அவர்களது இதர செயல்பாடுகளும், பெரியாரின் தத்துவத்திற்கு ஒரு மாபெரும் வெற்றியை ஈட்டித் தருவதற்கு உதவி புரிபவையாகவே இருக்கும்.
நன்றி:
‘தி இந்து', 02.01.2020
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்