கழகத் தலைவர் வேண்டுகோள்!
தருமபுர மடத்துக்குப் புதிய ஆதினகர்த்தராகப் பதவி ஏற்றுள்ள தவத்திரு மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் என்பவர் - நீண்ட காலத்துக்கு முன்பே தடை செய்யப்பட்ட - மனிதர்கள் தூக்கும் பல்லக்கில் பவனி வரும் பட்டினப்பிரவேசம் என்னும் - ‘மனித உரி மையைச் சிறுமைப்படுத்தும் நிகழ்ச்சியைப் புதுப்பித்து வருகிறார்' என்ற தகவல் நமக்குக் கிடைத்துள்ளது.
திராவிட சந்நிதானங்கள் மீது நமக்கு மதிப்புண்டு என்ற போதிலும் கூட, பல்லாண்டுகளுக்கு முன்பே இதே தருமபுர ஆதினத்தில் நடைமுறையில் இருந்த மனிதர்கள் சுமக்கும் பட்டினப்பிரவேசத்தைத் தடுப்பது என்று திராவிடர் கழகம் முடிவு செய்தபோது, தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலையீட்டின் பேரில், கடைசி நேரமானதால் அந்த ஆண்டு மட்டும் நடைபெற்று - அதற்குப்பின் அது நிறுத்தப்பட்டது. பிறகு திருவாவடு துறை ஆதினகர்த்தர் பட்டினப்பிரவேசத்தை நடத்திய போது திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப் பட்டது, பிறகு நிறுத்தப்பட்டு விட்டது.
இப்பொழுது நீண்ட இடைவெளிக்குப் பிறகு தருமபுர ஆதினகர்த்தர் அதனை புதுப்பிப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல.
தந்தை பெரியார் கூறிய கருத்தினை ஏற்று சங்கராச் சாரியாரும் கூட, மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் செல்வதைத் தவிர்த்தார் என்பது வரலாறு.
இந்த நிலையில் தருமபுர ஆதினகர்த்தர் வரும் 12.2.2020 அன்று மேற்கொள்ள விருக்கும் மனிதர்கள் சுமக்கும் பட்டினப்பிரவேசத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
நியாயமான இந்த வேண்டுகோள் புறக்கணிக்கப் படுமேயானால், பட்டினப் பிரவேசத்தை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் மறியல் செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
6.2.2020