மம்தா பானர்ஜி மக்களுக்கு அறிவுரை
கொல்கத்தா,பிப்.14 மேற்குவங்க மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்காக வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களின் மூலம் மறைமுக கணக் கெடுப்பு நடப்பதாகவும், அதற்காக யாரும் தகவல்களை அளிக்க வேண்டாம் எனவும் மக்களை அறிவுறுத்தியுள்ளார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.
இதுதொடர்பாக மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது,
“பாரதீய ஜனதாவின் பெயரைக் குறிப் பிடாமல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்கள் மூலமாக வீடு களுக்கே நேரடியாக வந்து கணக்கெடுப்பு நடத்துகின்றனர்.
அரசின் அனுமதி இல்லாமல் நடத்தப்படும் இந்தக் கணக்கெடுப்புகளுக்கு யாரும் தங்களின் விவரங்களை அளிக்க வேண்டாம். தற்போது தொலைக்காட்சி செய்தியில் பார்த்தபோது ஹவுராவில் உள்ள நகைக்கடையில் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த 15 பேர், சிஏஏ மற்றும் என்ஆர்சி தொடர்பான ஆவணங்களை காட்ட வேண்டும் எனக் கூறுகின்றனர்.
இதனை செய்வதற்கு அவர்களுக்கு அதி காரம் வழங்கியது யார்? அப்படி கேட்பவர் களை விரட்டுங்கள். அவர்கள் மாநில அர சிடமிருந்து வருவதாகக் கூறினால் நம்பாதீர் கள்” என்று கூறியுள்ளார் மம்தா பானர்ஜி.
இதனிடையே கொல்கத்தாவில் உள்ள ஒரு நகைக்கடைக்கு வந்த சிலர், மத்திய அரசு அதிகாரிகள் என்று கூறி, சில ஆவணங்களைக் கேட்டுள்ளனர். அவர்கள் வருமான வரி அதிகாரிகள் இல்லை என்று தெரிந்த பிறகு, ‘‘எங்களிடம் ஆவணங்களைக் கேட்க நீங்கள் யார்?'' என்று கேட்ட நகைக்கடைக்காரர், அந்த அதிகாரிகள் மீது ஹவுரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனைத்தொடர்ந்து மத்திய அரசிலிருந்து வருவதாகக் கூறிக்கொண்டவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.