2007 முதல் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு கிடையாது
மத்திய அரசு திணிக்கும் தேசிய நுழைவுத் தேர்வு (நீட்) தமிழகம் கட்டி வந்த சமூகநீதியை குழிதோண்டிப் புதைத்துவிடும்!
தமிழக அரசு வேகமாக செயல்பட்டு முறியடிக்கவேண்டும்
தமிழக மக்கள் இதில் உறுதியாக தோள் கொடுப்பார்கள்
தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள சமூகநீதிக்கான
முக்கிய அறிக்கை
2007 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால், ஒடுக்கப்பட்டோரும், கிராமப்புற மாணவர்களும் மருத்துவக் கல்லூரியில் அதிக இடங்களைப் பெற்று வருகின்றனர். இதனை குழிதோண்டிப் புதைக்க மத்திய அரசு தேசிய நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்துள்ளது. தமிழக அரசு இதனை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும்; தமிழ்நாட்டு மக்கள் தோள் கொடுப்பார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.
மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி - பொதுப் பட்டி யலுக்குக் கொண்டு சென்றாலும் சென்றார்கள் - தொடர்ந்து மாநில உரிமைகளில் தலையிட்டு பெரியண்ணன் வேலையில் மத்திய அரசு கண்மூடித்தனமாக இறங்கி விட்டது.
குறிப்பாக 2010 ஆம் ஆண்டில் நீட் National Eligibility cum Entrance Test)
என்னும் அகில இந்திய நுழைவுத் தேர்வு ஒன்று திணிக்கப்பட்டது. மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (யு.பி.ஏ.) ஆட்சியிலேயே திணிக்கப்பட்ட ஒன்றே!
தமிழ்நாடு எதிர்ப்பு
இதனை எதிர்த்து தமிழ்நாடு, ஆந்திர மாநில அரசுகளும், சிறுபான்மையினர் அமைப்புகளும், உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், ‘‘மருத்துவக் கல்விச் சேர்க்கை யில் தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு என்ற முடிவு - மாநில அரசு மற்றும் சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களின் உரிமைகளில் தலையிடுவதாகும். இந்திய மருத்துவக் கவுன்சில் இத்தகைய தேர்வினை நடத்தும் உரிமையுடையதல்ல’’ என்று தலையில் அடித்ததுபோல, நீதிபதிகள் அல்தாமஸ் கபீர், விக்கிர மஜீத் சென் ஆகிய இரு நீதிபதிகளும் நுழைவுத் தேர்வுக்கு எதிராகவும், நீதிபதி அனில் ஆர்.தவே நுழைவுத் தேர்வை ஆதரித்தும் தீர்ப்பு வழங்கினர். பெரும்பான்மை முடிவு என்ற அடிப்படையில், ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்பட்டது.
அத்துடன் நின்று இருக்கவேண்டாமா மத்திய அரசும், மருத்துவக் கவுன்சிலும்? மறு சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அம்மனுவைத் திரும்பப் பெறக்கோரி கோரிக்கை வைத்தும், செவிசாய்க்கப்படவில்லை.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசைத் தொடர்ந்து பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் (என்.டி.ஏ.) நுழைவுத் தேர்வை நடத்தியே தீருவது என்பதில் பிடிவாதமே காட்டியது. (சமூகநீதிக்கு எதிரான கொள்கை கொண்ட கட்சியாயிற்றே பி.ஜே.பி. - கிடைத்த வாய்ப்பை விடுமா?).
உச்சநீதிமன்றத்தின்
முரண்பாடான தீர்ப்பு
கடந்த முறை நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய அனில் ஆர்.தவே தலைமையில் அய்ந்து பேர் அடங்கிய அமர்வு வழக்கினை விசாரித்து, இம்முறை நுழைவுத் தேர்வுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டது. ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு ‘அவசர கெதியானது’ என்று ‘குத்தலோடு’ தீர்ப்பு வரிகள் அமைந்தன.
அனில் ஆர்.தவே ‘நீட்டுக்கு’ ஆதரவாக தீர்ப்பு வழங்கியவர் என்று தெரிந்திருந்தும், அவர் தலைமை யிலேயே அதே வழக்கை விசாரிக்கச் செய்ததே தவறான ஒன்றல்லவா!
தமிழ்நாடு அரசு நுழைவுத் தேர்வு எதிர்ப்பில் உறுதியாக இருந்ததால், இவ்வாண்டுக்கு மட்டும் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
ஆனாலும், 2017 கல்வியாண்டில் நுழைவுத் தேர்வு என்பது தமிழ்நாட்டையும் கட்டுப்படுத்தக் கூடியதாகும். 2007 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி சேர்க்கை நடைபெற்று வருகிறது.
அதன் காரணமாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மருத்துவம் உள்ளிட்ட தொழிற் கல்லூரிகளில் தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்த இருபால் மாணவர்களுக்கும் போதிய அளவுக்கு இடங்கள் கிடைத்து வருகின்றன.
நுழைவுத் தேர்வு இல்லாமையால்...
தமிழ்நாட்டில் 2016 மருத்துவக் கல்லூரி சேர்க்கை யில் பொதுப் போட்டியிலேயே (Open Competition) தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் சிறப் பாக வெற்றி பெற்றுள்ளனர்.
பொதுப் போட்டிக்கான மொத்த இடங்கள் 884.
இதில் பிற்படுத்தப்பட்டோர் 599.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 159
முஸ்லிம் 32
தாழ்த்தப்பட்டோர் 23
மலைவாழ் மக்கள் 1
அருந்ததியர் 2
முற்பட்டோர் 68
பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்து வக் கல்லூரியில் சேர்க்கப்பட்டதால், இந்த அளவில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முற்பட்டோரை விட அதிக இடங்களைப் பெறும் வாய்ப்பு இருக்கிறது.
தலைகீழாகப் புரட்டிப் போடத் திட்டம்!
இந்த சமூகநீதியின் விளைச்சலைத் தலைகீழாகப் புரட்டியடித்து, உயர்ஜாதியினரின் ஆதிக்கம் கடந்த காலத்தைப்போலவே நிலை பெறுவதற்கான மறைமுக சூழ்ச்சித் திட்டம்தான் இந்த தேசிய நுழைவுத் தேர்வாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பிக்க தாழ்த்தப்பட்டோருக்கு 45 சதவிகிதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 55 சதவிகிதம், பிற் படுத்தப்பட்டோருக்கு 60 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும் என்பது நிபந்தனை!
இப்பொழுது அதையும் மாற்றி, தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு 65 சதவிகிதம், மற்றவர்களுக்கு 75 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கத்தான் இந்த சதவிகிதம் - ஆனால், தேசிய நுழைவுத் தேர்வின் அடிப்படையில்தான் சேர்க்கை. ஏனிந்த வீண் விளையாட்டு?
சமூகநீதியின் கழுத்துக்குக்
கத்தி வீச்சு!
இது எவ்வளவுப் பெரிய மோசடி என்பதைக் கவனிக்க வேண்டும். நுழைவுத் தேர்வுமூலம்தான் சேர்க்கை என்றால், பிளஸ் டூ என்ற வகுப்பு எதற்கு? அதில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள்தான் எதற்கு?
மாநில அரசு நடத்தும் கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள் வாங்கும் மதிப்பெண் என்பது குப்பைத் தொட்டியில் வீசி எறியப்பட வேண்டியதுதானா?
ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கான சமூகநீதியின் கழுத்தில் கத்திப் பாய்ச்சுவது ஒருபுறம் - மாநில அரசின் உரிமைமீது தொடுக்கப்படும் சம்மட்டி அடி மறுபுறம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சமூகநீதி என்னும் உணர்வால் பக்குவப்படுத்தப்பட்ட பூமி. 1928 ஆம் ஆண்டிலேயே சமூகநீதிக்கான விதை - ஆணை - செயல்பாடு - திராவிட இயக்கமான நீதிக்கட்சியால் ஊன்றப்பட்ட நிலம் இது!
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சமூகநீதிக்காக முதல் திருத்தம் கொண்டு வருவதற்குக் காரணமான தந்தை பெரியார் அவர்களால் முக்கால் நூற்றாண்டுக் காலமாக முழு மூச்சாக சமூகநீதி நீரோட்டம் வளர்த்தெடுக்கப்பட்ட நாடு இது.
இந்த நிலையில், அகில இந்திய அளவில் சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிந்திட இந்தத் திராவிட இயக்கத் தமிழ் மண்தான் முதல் போர்க் குரல் கொடுக்கவேண்டும்.
2007 ஆம் ஆண்டு முதல் ஒழிக்கப்பட்ட நுழைவுத் தேர்வை - மீண்டும் தேசிய நுழைவுத் தேர்வு என்ற பெயரில் மத்திய அரசு தன் மூக்கை நுழைத்துவிட்டது.
தி.மு.க. ஆட்சியின்போதுதான் 2007 இல் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டு செயல் பாட்டுக்கு வந்தது.
வரும் ஆண்டுமுதல் சமூகநீதிக்கு எதிரான ‘நீட்’ உள்ளே நுழையவிருப்பதால், அ.தி.மு.க. அரசு இப்பொழுது முதற்கொண்டே தனது எதிர்ப்பு நடவடிக்கையைத் தொடங்கிட வேண்டும்.
தமிழக அரசின்
முக்கிய கடமை!
இந்தியாவிலேயே 69 சதவிகிதம் சட்ட ரீதியாக நிலை பெற்று இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். அதற்கான முயற்சியைத் திராவிடர் கழகம் ஓயாது மேற்கொண்ட போது, அதற்கு உறுதுணையாக இருந்து நிலை நிறுத்தியது - செல்வி ஜெயலலிதா தலைமையில் அமைந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சிதான்.
இந்த உண்மையின் அடிப்படையில், தமிழக அரசு ‘நீட்’ என்னும் நுழைவுத் தேர்வு தமிழ்நாட்டில் நுழையாதபடி தடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும், முயற்சிகளையும் இப்பொழுது முதற்கொண்டே வேகமாகத் தொடங்கவேண்டும் என்று மிகவும் அழுத்தமாகக் கேட்டுக் கொள்கிறோம்.
ஆண்டாண்டு காலமாக தமிழ் மண்ணில் கட்டிக் காக்கப்பட்ட சமூகநீதிக் கொடி - இந்தக் காலகட்டத்தில் இறக்கப்பட்டது என்ற பழிக்கு ஆளாக நேரிடும் என்று எச்சரிக்க வேண்டியதும் திராவிடர் கழகத்தின் கடமையாகும்.
ஆட்சிக்குத்
தோள் கொடுப்போம்!
நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்தும் பணியில், ஆட்சிக்கு திராவிடர் கழகம் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தோள் கொடுக்கும் என்பதில் அய்யமில்லை.
தமிழக அரசு தன் கடமையைத் தொடரட்டும்! வலுவாகவே தொடரட்டும்!!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
14.10.2016