- சமூகநீதி போர்வையில் இந்து அகதிகளுக்குச் சலுகைகள்
- ‘பசுவை’ மட்டும்தான் பாதுகாக்கவேண்டுமா? ஏன் எருமை பால் தரவில்லையா?
- ஜாதி வேறுபாடு கூடாதாம் - வருணாசிரமம் நல்லதாம்!
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் முரண்பட்ட வாதங்கள்- மக்கள் ஏமாறமாட்டார்கள்-வித்தைகள் பலிக்காது!
தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்டுள்ள
முக்கிய அறிக்கை
விஜயதசமி நாளில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் தெரிவித்த முரண்பட்ட, மதவாதத்தை உள்ளடக்கிய உரையை விமர்சித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான் மத்திய ஆட்சியை நடத்துகிறது. பா.ஜ.க. என்ற அதன் அரசியல் வடிவக் கட்சி மூலம் ஆட்சியை நடத்தி, முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமாக - அரசியல் சட்டத்தின் மதச்சார்பின்மை, சம தர்மம் போன்ற பல மூலக்கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு, ஜனநாயகப் போர்வையைப் போர்த்திக் கொண்டு தன்னிச்சை ஆட்சியை நடத்துகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவரான மோகன் பகவத் அவர்கள் ‘விஜயதசமி’ என்ற நாளில்தான் பெரிதும் முக்கிய கொள்கை உரை ஆற்றியுள்ளார்.
புதிய சமூகநீதியா?
1. முக்கியமாக, வடக்கே உள்ள மேற்கு பாகிஸ் தானிலிருந்து வந்த அகதிகளுக்கு குடியுரிமை உள்பட எல்லா உரிமைகளையும் இந்திய அரசு வழங்கவேண்டும்.
அகதிகளான காஷ்மீர் பண்டிட்டுகள் என்ற பார்ப் பனர்களுக்குச் சகல வசதியும் செய்து தருவதுபோலவே, இக்கோரிக்கையையும் வைத்துள்ளார்!
இதில் ஒரு புதிய விசித்திரம் என்னவென்றால், அதில் உள்ள பலரும் பிற்படுத்தப்பட்டோர் (OBC),, தலித்துகளாம். அதற்காகவே சலுகை - உரிமைகள் வழங்கவேண்டும் என்ற புதிய ‘சமூகநீதி’ பல்லவியைப் பாடியுள்ளார்.
திடீர் கரிசனம் ஏன்?
இங்கே உள்ள ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட் டோர், குஜராத் உள்பட பல மாநிலங்களில் எப்படி நடத்தப்படுகின்றனர் என்பதும், பிற்படுத்தப்பட் டோருக்கான இட ஒதுக்கீடு எப்படியெல்லாம் பறிபோகிறது என்பதைச் சுட்டிக்காட்டியும், தடுக்க இயலாத ஆட்சிதான் மத்தியில் உள்ள ஆட்சி. இப்போது அவர்கள்மீது திடீர் கரிசனம், அவசர அக்கறை வழிந்தோடுகிறது!
பசு மட்டும்தான்
பால் தருகிறதா?
அடுத்து, பசுப் பாதுகாப்பினை அரசுகள் அமல் படுத்தவேண்டுமாம்!
இதற்கும் ஒரு புதிய வாதம் என்ன தெரியுமா? கிராமப் பொருளாதாரம் இதன்மூலம் வளருமாம்; பால் முதல் பஞ்சகவ்யம், சாணி எல்லாம் வளர்ச்சிக்கு உதவுமாம்! அதனால் பசுக்கள் கொல்லப்படக்கூடாதாம்!
நமக்கொரு சந்தேகம். இந்த வாதம் எருமை மாடு களுக்கும், ஆடுகளுக்கும் மற்ற கொல்லப்படும் பிராணி களுக்கும் பொருந்தாதா?
பசு மட்டும்தான் பால் தருகிறதா? சாணி போடுகிறதா? எருமை மாட்டுக்கு மட்டும் ஏன் இப்படிப் பாதுகாப்பு இல்லை? இந்திய அரசியல் சட்ட வழிகாட்டுதல் நெறிமுறை விதிகள் - பால் தரும் இனங்கள் என்பதுதானே முதலில் புகுத்தப்பட்டது?
நிறவெறி மாட்டிலுமா?
கோமாதா மட்டும்தான் குலமாதா? எருமை யாருடைய மாதா? வெள்ளை நிறத்திற்கும் அல்லது மஞ்சள் நிறத்திற் கும், கருமை நிறத்திற்கும் உள்ள போராட்டம், பாரபட்சம் - இதிலும் நீடிக்கிறது என்பதும் உண்மை அல்லவா?
அடுத்தது ஜாதி வேறுபாடுகள் Caste Discrimination) கூடாது என்று கூறி, வருணாசிரம தர்மம்தான் சிறந்தது என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறுகிறார்.
ஜாதியை ஒழிக்காமல்
தீண்டாமையை ஒழிக்க முடியுமா?
தீண்டாமை - ஜாதி வேறுபாடு எல்லாம் எதிலிருந்து முளைக்கிறது?
ஜாதியிலிருந்துதானே? ஜாதியை ஒழிக்காமல், ஜாதி பேதத்தை மட்டும் எப்படி ஒழிக்க முடியும்?
அதிலும், தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் கூறியபடி, ஒருவருக்கு மேல் மற்றொருவர் என்று அடுக்கு ஜாதிமுறை அல்லவா (‘‘Graded inequality’’) இந்நாட்டில் உள்ளது.
அதை அழிக்காமல் வைத்துக்கொண்டே இப்படி பேசுவது - இதோபதேசம் செய்வது யாரை ஏமாற்ற?
செத்த எலியை அகற்றாமல் அதன் துர்நாற்றத்தை மட்டும் அகற்ற முடியுமா? எவ்வளவு ‘‘நறுமணங்களை’’ மேலே கொட்டினாலும், மீண்டும் மீண்டும் கெட்ட வாடை வரத்தானே செய்யும்?
கொசுவை ஒழிக்காமல் - மலேரியா நோயை ஒழிக்க முடியுமா?
தந்தை பெரியார் போட்ட
தீர்மானம்
நோய் நாடி நோய் முதல் நாடலாமே! தந்தை பெரியார் அவர்கள் கடைசி மாநாட்டில் (9.12.1973) போட்ட தீர்மானத்தை இவர்களுக்குள்ள தனித்த பெரும்பான்மை நிலை மூலம் (மக்களவையில்) அரசியல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றலாமே!
‘‘தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது; அதனை எந்த ரூபத்தில் கடைப்பிடித்தாலும் குற்றம்’’ என்ற 17 ஆம் அரசியல் சட்டப் பிரிவில் உள்ள தீண்டாமை என்ற வார்த்தையை மாற்றி ‘‘ஜாதி’’ என்று போட்டுவிட்டால், சட்டப்படி ஜாதி ஒழியும், ஜாதி பேதம் சட்டப்படிக் குற்றமாயிற்றே!
அதனைச் செய்ய முன்வராமல், ஏதோ தாழ்த்தப்பட்டவர்களுக்கு, ‘‘தலித்துகளுக்காக’’ முதலைக் கண்ணீர் வடிப்பது எவ்வளவு போலித்தனம் என்பதை குஜராத் காட்டிவிட்டதே!
உடுப்பி மடத்தை நோக்கி தாழ்த்தப்பட்டோர் திரள்வது ஏன்?
கருநாடகத்தில் சில நாட்களுக்குமுன் தாழ்த்தப் பட்டவர்கள் திரண்டு உடுப்பி மடத்தினை நோக்கி பெருந்திரள் பேரணியாகச் சென்றனரே - ஏன்? இதை அறியாதவரா சர் சங் சாலக் (ஆர்.எஸ்.எஸ். தலைவர்). வாய்ப் பேச்சு அதுவும் புண்ணுக்குப் புனுகு தடவும் மாய்மாலம் வேண்டாம்!
மக்கள்
ஏமாறமாட்டார்கள்
மக்கள் ஏமாறமாட்டார்கள்! ‘வித்தைகள்’ பலிக்காது! விதையில்லாமல் செடி முளைக்காது!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
19.10.2016