பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழக 24ஆம் பட்டமளிப்பு விழா
நோபல் பரிசு போல பெரியார் பெயரால் சர்வதேச விருது அளிக்கப்பட வேண்டும்
மாணவர்களே பெரியாரை முன்னுதாரணமாகக் கொள்வீர்!
பெரியார் இந்தக் காலத்திற்கு மிகவும் தேவையான தலைவர்!
காந்தியாருக்குக் கிடைத்த வினோபா பாவே போல பெரியாருக்குக் கிடைத்தவர் வீரமணி
காந்தி - ராஜாஜி பேரன், மேற்குவங்க மேனாள் ஆளுநர் கோபால் கிருஷ்ண காந்தி மனம்திறந்த பாராட்டு - வாழ்த்து
வல்லம், அக். 21- இந்தக் காலத்திற்கும் பொருத்தமான தலைவர் பெரியார் - அவர் பெயரால் சர்வதேச விருது - நோபல் பரிசு போல அளிக்கப்பட வேண்டும். மாணவர்கள் பெரியார் என்ற மாபெரும் தலைவரை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்றார் காந்தி - இராஜாஜி ஆகியோரின் பேரனும், மேற்குவங்க மேனாள் ஆளுநருமான கோபால் கிருஷ்ணகாந்தி.
உங்கள் (வேந்தர் வீரமணி) கருத்தாழம் மிக்க பேச்சுக்கு தற்போது உள்ள எந்த ஒரு பேச்சாளரையும் ஒப்பிட முடியாது, உங்களது ஒவ்வொரு சொல்லும் சிறந்த கருத்துகளைக் கொண்டது, உங்களது பேச்சு மிக வும் அரிதானவர்களின் வரிசையில் சேரும். ஆசிரியர் வீரமணி போன்று கருத்தாழம் மிக்க வகையில் பேசு வேன் என்று என்னால் கூறமுடியாது,
பார்த்தேன் - வியந்தேன்
தனது சீரிய முயற்சியால் அரசின் உதவிகளை எதிர்பாராமல் மக்கள் சேவையை மனதில் வைத்து, மக்களின் ஆதரவோடு தலைசிறந்த பல்கலைக்கழகத்தை உருவாக்கியுள்ளீர்கள், உங்களது உரைக்கு மடடுமல்ல உங்களின் தொண்டறத்திற்குக் கூட யாரையும் இணை யாகக் கூறமுடியாது,
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தைப் பார்வையிட என்னை அழைத்துச் சென்றார்கள்.
எதிர்காலத்தில் சிறந்த மாணவமணிகளை உருவாக்கும் அனைத்து சிறப்பம்சங்களும் இந்தப் பல்கலைக்கழகத்தில் இருப்பதைக் கண்டு வியந்தேன், இதை எப்படி வார்த் தைகளில் சொல்லுவது என்று திகைத்து நின்றேன்,
இன்று இந்தப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு மிக்கவர்களாக, பெருமைமிக்க பட்டங்களை வாங்கிய மாணவர்களைப் பாராட்டுகிறேன், மேலும் சிறப்புப் பட்டம் பெற்ற நர்த்தகி நடராஜ் அவர்களைப் பாராட் டுவதில் பெருமையடைகிறேன், நீங்கள் மேலும் மேலும் நடனத்தில் பல்வேறு நுணுக்கங்களைக் கண்டறிந்து அதைப் பயிற்சியில் சேர்த்து நடனக் கலையில் புரட் சியை உருவாக்கவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
உலகம் அளவில்லாத திறமைகளை வெளிப்படுத்தும் களமாக உள்ளது, பட்டம் பெற்றவர்கள் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி புதிய வாழ்க்கையை பயனுள்ளதாக மாற்றுங்கள். மாணவர்களாகிய நீங்கள் ஆசிரியர்கள் மற்றும் பெரியோர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் சாதிப்பது இயலாத காரியமாகும், எனவே உங்கள் சாதனைக்கு காரணமான ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் நான் வாழ்த்துகிறேன், நம்பிக்கை தான் மனித இனத்திற்கு மிகவும் முக்கியமானதாக திகழ்கிறது, உங்கள் திறமை மீது நம்பிக்கை வையுங்கள், முன்னேற்றம் காண்பீர்கள், எனது சொற்களை மாணவர் களாகிய நீங்கள் மனதில் கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.
பெரியார் தான்
உங்களுக்கு முன்னுதாரணம்
உங்கள் முன்பு உரையாற்றும் எனக்கும் பொறுப்புகள் உண்டு, நானும் மாணவப்பருவத்தில் இருந்து வந்தவன் தான்; நானும் பல தலைசிறந்த தலைவர்களின் உரையைக் கேட்டு வளர்ந்தவனே! எனக்கும், மாணவர்களாகிய உங்களுக்கும் அதிக வேறு பாடு கிடையாது,
பெரியாரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது அதிகம் உள்ளது, இருப்பினும் அதில் ஒன்றை நான் உங்கள் முன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன், பெரியார் எந்த ஒரு செயலையும் மேம்போக்காக செய்யாமல், ஆழமாக அதன் தாக்கத்தை உணர்ந்து களமிறங்குவார், மிகவும் புத்திக்கூர்மைமிக்கவர், தொலைநோக்காளர், இதனால்தான் அவர் எந்தச் செயலில் இறங்கினாலும் அதன் இறுதி, வெற்றியாகவே அமைந்தது, இதற்குக் காரணம் அவரது உள்ளார்ந்த திட்டமிட்ட ஈடு பாடுதான், மேலும் அவருக்கு உறுதுணையாக இருந்த இயக்கத் தொண்டர்களுக்கு மிடையான நட்புறவு, இது மிகவும் முக்கியமான ஒரு காரணமாக இருந்தது.
பெரியாரின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன. மாணவர் களாகிய உங்களுக்கு இவரின் வாழ்க்கையே ஒரு தனிப் பாடமாகும். இவரின் வாழ்க்கையில் எங்குமே சுயநலம் இல்லை.
பெரியாரும் - ராஜாஜியும்
வேந்தர் அவர்கள் தமது உரையில் பல வரலாற்றுச் சான்றுகளை நம்மிடம் எடுத்துரைத்தார். முக்கியமாக ராஜாஜி மற்றும் பெரியாருக்கு இடையேயான நட் புறவு பற்றிக் கூறியிருந்தார். பெரியார், ராஜாஜி இரு வருமே ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள், அவர்களைப் பற்றி அதிக தகவல்களை நமக்கு இங்கே வேந்தர் எடுத்துரைத்தார். அரசியல் களத்திலும், பொதுக்களத்திலும் இருவருமே மிகவும் திறமையாக பணியாற்றியவர்கள் இருவருக்குமிடையே இருந்த நட்புறவை மாணவர்களாகிய நீங்கள் வாழ்க்கைப் பாடமாக எடுத்துக்கொள்ளவேண்டும், மாணவர்கள் தங்கள் திறமையின் மூலம் இந்த உலகை மாற்றும் ஆற்றல் பெற்றவர்கள் இன்று நவீன பார்வைகள் வளர்ந்துகொண்டு இருக்கும் அதே வேளையில், மூட நம்பிக்கைகளும் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இரண்டு பிரிவுகளுக்கிடையேயான வெறுப்புணர்வு மற்றும் பழிவாங்கும் செயல்கள் அதிகரித்துக்கொண்டு வருகின்றன. முன்னெப்பொழுதையும் விட தற்போது அது மிகவும் அதிகமாக நடந்துகொண்டு இருக்கிறது, இதை பெரியார் அன்றே உணர்ந்தார், பெரியார், ராஜாஜி இருவருமே இந்த ஆபத்தை அன்றே உணர்ந்து எச்சரித் தனர்.
இரண்டு பெரிய தலைவர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. இருப்பினும் அவர்களிடையே யான நட்பு உளப்பூர்வமானது. இந்த உளப்பூர்வமான நட்புதான் இருவருக்குள் கருத்துமோதல்கள் இருந்த போதிலும் நட்பில் விரிசல் வராமல் இருந்தது, இருவருமே ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள், ஆகையால்தான் அவர்கள் தங்களிடையே இருந்த கருத்து மோதல்கள் நட்பைப் பாதிக்காவண்ணம் பார்த்துக்கொண்டனர். இன்றைக்கு பெரியார், ராஜாஜி போன்ற அரசியல் தலைவர்களைப் பார்க்கமுடியவில்லை, இன்று தங்களின் அரசியல் எதிரிகளை பகைமையுடன் பார்க்கின்றனர். நாம் சாதாரணமாக நடந்த சில கசப்பான நிகழ்வுகளையே அசைபோட்டுக்கொண்டு இருக்கிறோம், பெரியார் மற்றும் ராஜாஜியிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை ஏராளம் உள்ளன.
வேந்தர் அவர்கள் எனது குடும்பத் தொடர்புடைய, எனது தொடர்புடைய மிகவும் பழைமையான ஒரு ஆவணத்தை பரிசாக அளித்தார். நான் வியப்படைந்து விட்டேன். அந்தப் பரிசினை நான் பெற்றதும், இது எனது அரசியல் வாழ்க்கை மற்றும் அந்த காலத்திய இனிய நினைவுகளை மீட்டெடுத்துவிட்டது. இதுபோன்ற அரிய ஆவணங்களை சேகரித்து ஆவணப்படுத்தி அந்த ஆவணங்களுடன் தொடர்புடையவர்களுக்கு தக்க தருணத்தில் வழங்கி அவர்களை மகிழ்விக்கும் ஆற்றல்படைத்தவர் இப்பல்கலைக் கழக வேந்தர் வீரமணி ஆவார்.
இன்றைக்கும் பொருத்தமான தலைவர்
பெரியார் தான்
மாணவச்செல்வங்களே, உங்களுக்கு அருமையான ஆசிரியர்களும்,பெற்றோர்களும்கிடைத்துள்ளனர். உங்களுக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்வேன்; மாண வர்கள் மனதில் பொறாமை, வன்முறைக்கு ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது. இங்கே யாரும் வெறுப்பதற்கில்லை, பலரிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் மூலம் நல்லவர்களைத் தேடுங்கள், அரசியல் தலைவர்களும் ஜனநாயகத்திற்கு தேவை; தலைவர்களை நீங்கள் தேடிப்போக வேண்டியதில்லை நீங்களே தலைவராக இருக்கலாம் அரசியலில் அதற்கென்று தலைவர்கள் தேவையில்லை ஆனால் அரசியல் தொண்டாற்ற தலைவர்கள் உங்களுக்கு தேவை, அப்படிப்பட்ட தலை வர்களின் சிந்தனைகளை போற்றுங்கள் பெரியார், ராஜாஜி போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், சிந்தனைகளையும், தொண்டுகளையும் படியுங்கள். இன்றைக்கும் பொருத்தமான தலைவராக ஒருவர் உண்டென்றால் அவர் பெரியார்தான். பெரியாரை ஒவ் வொருவரும் முன்மாதிரியாகக் கொண்டு எதிர்காலத்தில் சிறந்த தலைவராக நீங்கள் உருவாக வேண்டும்.
பெரியார் பெயரில் சர்வதேச விருது தேவை
நான் உங்களுக்கு ஒன்றைக் கூறுகிறேன் இது எனது மனதில் தோன்றியது, இதை உங்கள் முன்பு கூறுவதை பெருமையாக நினைக்கிறேன், இந்திய அரசு இரண்டு பெரும் தலைவர்களின் பெயரில் ஒரு கோடி ரூபாய்க்கான விருது ஒன்றை வழங்கி வருகிறது, இதை பலர் அறியாமல் உள்ளனர், என்று நினைக்கிறேன், மகாத்மா காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு ஆகியோரின் நினைவாக சர்வதேச விருது ஒன்று வழங்கப்பட்டு வருகிறது.
இந்தத் தலைவர்களின் விருது பெயரில் கொடுப்பது போன்றே ஒரு விருதை பெரியார் பெயரில் சர்வ்தேச அளவில் வழங்கவேண்டும், அது நோபல் பரிசுக்கு இணையாக இருக்கவேண்டும் பெரியார் பெயரில் கொடுக்கப்படும். இந்த விருதானது. சமத்துவம், சமூக நீதி, கலை, இலக்கியம், நவீன அறிவியல் தொழில்நுட்பத்திற்காகவும் பாடுபடுபவர்களுக்கு என பல்வேறு பிரிவுகளில் பெரியார் பெயரில் விருது வழங்கவேண்டும். இந்த விருதை அரசோ, அல்லது பிற அமைப்புகளோ வழங்கிட முன்வரவேண்டும்.
பசுமைச் சூழலில் அமைந்த பல்கலைக்கழகம்
நான் இந்தப் பல்கலைக்கழகத்தை சுற்றிப்பார்த்தேன். பசுமைச் சூழலில் மனம் ரசிக்கும்படி அழகாக பல்வேறு வண்ணப்பூக்களுடன் மிகவும் அருமையாக இருந்தது. நான் பார்வையிட்டு பலவற்றை ரசித்து மகிழ்ந்தேன். அதேபோல் பல்கலைக்கழகத்தில் பலரிடையே உரையாடும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது, இந்தப் பல்கலைக்கழகம் மிகவும் அமைதியாக அழகாக அதே நேரத்தில் தலைசிறந்தவர்களால் நடத்தப்பட்டு வருகிறது, இப்பல்கலைக்கழகத்திற்கு மேலும் ஒரு சிறப்பு உண்டு
அது பெரியாரின் இறுதி காலத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்த வாழ்க்கைத் துணைவரும், அவரது வாரிசுமான மணியம்மையார் அவர்கள் பெயரையும் இப்பல்கலைக்கழகத்திற்கு இணைத்துச் சூட்டியுள்ளனர். இது மிகவும் பொருத்தமானதாகும், உங்களது இந்தச் சேவையை தொடர்ந்து செய்யவேண்டும், மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் மூலம் நல்ல எதிர்காலத்தை அமைத்துக்கொள்ளவேண்டும், வேந்தர் அவர்களின் அயராது உழைப்பு, அர்ப்பணிப்பு, மற்றும் அவர்களின் தலைசிறந்த ஆலோசனையின் மூலம் இந்தப் பல்கலைக்கழகம் மேலும் மேலும் வளர்ச்சியடைய வேண்டும், என்றும் கூறிக்கொண்டு என்னை அழைத்து கவுரவித்து, என்னை உங்களிடையே பேச நல்.வாய்ப்பை அளித்த பல்கலைக்கழகத்திற்கும், வேந்தர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.
- இவ்வாறு கோபால்கிருஷ்ண காந்தி அவர்கள் உரையாற்றினார்.
---------------
கழிவுகள் - மறுசுழற்சி
இப்பல்கலைக் கழகத்தின் தனிச்சிறப்பு
நான் நாட்டின் பல பல்கலைக்கழகங்களுக்குச் சென்றுள்ளேன். அங்கெல்லாம் கண்டிராத ஒரு புதிய செயல்முறையை இங்கே இந்தப் பல்கலைக்கழகத்தில் நான் பார்க்கிறேன். இங்கே கழிவுகளை மறுசுழற்சிக்கு விட்டு, அதை தொழில்முறையில் மீண்டும் பயன் படுத்தும் முறை இந்தப் பல்கலைக்கழகத்தில் மட்டும்தான் நான் பார்த்திருக்கிறேன். இதுபோன்ற திட்டங்களை பல பல்கலைக் கழகங்கள் வெறும் காகிதத் திட்டங்களாகத்தான் வைத்திருக்கின்றன. ஆனால், அதை நடைமுறைப்படுத்தி, அதன்மூலம் மீண்டும் பயன்படும் வகையில் செயல்படுத்தும் பல்கலைக்கழகம் இந்தப் பல்கலைக்கழகம்தான்.
---------------
காந்தியாருக்கு கிடைத்த வினோபா பாவே போல பெரியாருக்கு கிடைத்தவர் ஆசிரியர் கி.வீரமணி
நான் உங்களுக்கு (ஆசிரியரைப் பார்த்து) ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், அது என்னவென்றால் ஆச்சாரிய வினோபா பாவே எப்படி காந்தியடிகளுக்கு ஒரு தலைசிறந்த சீடராக கிடைத்தாரோ, அதே போல் நீங்கள் பெரியாருக்குக் கிடைத்த தலைசிறந்த சீடராவீர்கள். காந்தியடிகளின் உள்ளக்குறிப்பறிந்து நடக்கும் பண்பு மிக்கவர் ஆச்சாரிய வினோபாபாவே, அவர் காந்தியடிகளுக்குப் பிறகு அவர்விட்டுச்சென்ற பணியைத் தொடர்ந்து செய்துகொண்டு இருந்தார். பெரியாருக்குச் சரியான பொருத்தமான சீடராக கிடைத்தவர் வேந்தர் வீரமணி என்று கூறலாம்,
வீரமணி அவர்கள் மற்றவர்களுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகவிளங்குபவர்,அதற்கேற்றாற்போல் தன்னுடையசொல்லிலும் செயலிலும் நடைமுறை யிலும் வாழ்ந்து காட்டுபவர், இதைத்தான் நான் ஆரம் பத்திலேயே கூறினேன் மிகவும் அரிதான மனிதர்களுள் வீரமணியும் ஒருவர் ஆவார். பெரியார் அவர்களின் வாழ்க்கை ஒரு சாதாரண கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடியதல்ல, தன்னுடைய வாழ்நாளில் பல வழிகளில் அவர்களின் போராட்டக்களம் கண்டு வெற்றிகரமாக இருந்ததை நான் படித்திருக்கிறேன், அவர்களின் வழிவந்தவர் நீங்கள்; உங்களின் வாழ்க்கையும் இன்றைய இளைஞர்களுக்கும், எதிர்கால இளைஞர்களுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும்.