Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முக்கிய முடிவுகள்

$
0
0

காவிரி நதிநீர் உரிமைப் பிரச்சினை

தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை உடனே கூட்டுக!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்குக் கண்டனம்

விவசாயம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்குக!

கோரிக்கைகள் ஏற்கப்படாத பட்சத்தில் மறுபடியும்
அனைத்துக் கட்சிகளும் கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள்!

எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முக்கிய முடிவுகள்


சென்னை, அக். 25 - காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் தமிழ் நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்பது உள்பட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காவிரி நதிநீர்ப் பிரச்சினை குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாய அமைப்புகளுடனான கலந்துரையாடல் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (25.10.2016) காலை 10.30 மணியளவில் சென்னை கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1:

சிறப்பு சட்டமன்றக்
கூட்டத்தை கூட்டுக!


தமிழக விவசாயிகள் குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகள்  வறுமையினாலும், கடன் தொல்லைகளாலும் தற்கொலைக்குத் தள்ளப்படும் நிலை தமிழகத்தில் உருவாகி விட்டது. மேலும், ஏறத்தாழ 24 மாவட்டங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் குடிநீர்ப் பஞ்சத்தால் தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் கர்நாடக அரசு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடை முறைப்படுத்தாமல்  தொடர்ந்து  புறக்கணித்து  வருகிறது.  பிடிவாதமான அணுகுமுறையின் காரணமாக, அரசியல் சட்ட நெருக்கடியையும், மோதல் போக்கையும் கர்நாடக அரசு உருவாக்கி வருகிறது.  கூட்டாட்சித் தத்துவத்தைக் கேலிப் பொருளாக்கும்  கர்நாடக அரசுக்கு அறிவுரை புகட்டி நல்வழிப் படுத்திட வேண்டிய மத்திய அரசு, அரசியல் காரணங்களுக்காக கர்நாடகத்தின் எதிர்மறை நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவும், தமிழகத்தின் பக்கமுள்ள சட்ட நெறிமுறை நியாயத்தை அலட்சியப் படுத்திடும் வகையிலும் நடந்து கொள்வது தமிழக விவசாயிகளுக்குப் பெரும்  துரோகம் விளைவிப்பதாக உள்ளது.  மேலும், தமிழகத்தில் உள்ள ஏறத்தாழ 20 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

எனவே, தமிழக விவசாயிகளுக்கு உரிய நீதி வழங்கி அவர்களின் துன்பத்தைப் போக்கவும்,  இந்தப் பிரச்சினையில் தமிழக மக்கள் அனைவரும் எந்தவிதக் கருத்து வேறுபாடுமின்றி ஒருங்கிணைந்து ஒரே நோக்கத்தோடு  செயல்படுகிறார்கள் என்பதை உலகத்திற்கு உணர்த்தவும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மத்திய அரசும், கர்நாடக அரசும் சிறிதும்  மதிக்கவில்லை என்பதைக் கண்டிக்கும் வகையிலும், தமிழக அரசு,  தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி இந்தப் பிரச்சினை குறித்து விவாதித்துத் தீர்மானம் நிறைவேற்றி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தரவேண்டும் என்றும் - அனைத்துக் கட்சித் தலைவர்களையும், விவசாய சங்கங்களின் பிரநிதிநிதிகளையும் அழைத்துச் சென்று பிரதமரைச் சந்தித்து இப்பிரச்சினையில்  காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் நர்மதா நதிநீர் மேலாண்மை வாரியம், கிருஷ்ணா-கோதாவரி நதிநீர் மேலாண்மை வாரியம் ஆகிய முன்னுதாரணங்களைப் பின்பற்றி, விருப்பு வெறுப்பின்றி, நடுநிலையோடு   தீர்வு காண வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் இந்தக் கூட்டம் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 2:

மத்திய அரசுக்குக்
கண்டனம்!


காவிரி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினையில் உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், 30.9.2016 அன்று காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நான்கு  நாட்களில் அமைக்க வேண்டுமென்று உத்தரவிட்டது.   கர்நாடக அரசின் வழக்குரைஞர் தண்ணீர்ப்  பங்கீடு குறித்து காவிரி மேற்பார்வைக் குழுவிடம்  தமிழகம் முறையிடவேண்டுமென்று வாதிட்டாரே அன்றி,  காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சம்பந்தமான உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.  மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, காவிரி மேலாண்மை வாரியத்தை 4.10.2016 க்குள் அமைக்க ஒப்புக் கொண்டார்.   காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பிறகு, நதி நீர் பங்கீட்டில் உள்ள உண்மை நிலைமைகளையும் அதற்கான அடிப்படைகளையும்  மேலாண்மை வாரியம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் என்று மத்திய அரசு குறிப்பிட்டது.  இதன் தொடர்ச்சியாக மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணிகள் தொடங்கி விட்டதாக மத்திய நீர்வளத் துறை செயலாளர் கூறினார்.   உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதாக ஒப்புக் கொண்ட மத்திய அரசு,   அதை நிறைவேற்றுவதற்கு 24 மணி நேரம் மட்டுமே இருந்த தருணத்தில், ஏற்கெனவே மேற்கொண்ட நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாறான நிலைப்பாட்டினை மேற்கொண்டது.  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு உத்தரவிட உச்சநீதிமன்றத் துக்கு அதிகாரம் இல்லை யென்றும், காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ஏற்பதா மறுப்பதா என்பதை நாடாளுமன்றம் தான் முடிவெடுக்க முடியுமென்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது  குறித்து மத்திய அரசே இறுதி முடிவெடுக்க முடியுமென்றும் மத்திய அரசு வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இவ்வாறு மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு அரசியல் காரணங்களுக்காக ஏற்கெனவே மேற்கொண்ட நிலைப் பாட்டில்   ஓர் உறுதியற்ற போக்கைக் கடைப்பிடித்து நடுநிலையிலிருந்து தவறி விட்டது.  

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பிரச்சினைகள் சட்டத்தின் Inter State Water Disputes Act 1956)  அடிப் படையில் மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் நதிநீர்ப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைக்கப்படும் நடுவர் மன்றங்களின் உத்தரவு, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு நிகரான தாகும் என்றும், நடுவர் மன்ற உத்தரவை அரசிதழில் பதிவிட்ட உடனேயே அதனை மேற்பார்வையிடவும், கண்காணிக்கவும் ஒரு வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும், அந்த வாரியம் அமைக்கப்பட்ட பிறகு,  30 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் அவ்வாரியம் குறித்த அறிவிக்கையைச் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும் என்றும் அச்சட்டம் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது.  எனவே, நதிநீர்ப் பிரச்சினைகள் சட்டம் 1956 இன்படி மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது சட்டப்படியான கடமையும் பொறுப்புமாகும்.

உச்சநீதிமன்றத்தில் காவிரிப் பிரச்சினை சம்பந்தமான வழக்கில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள்,  காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாகத்  தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பதை முடிவு செய்வதற்கான விசாரணை 19.10.2016 அன்று நடைபெற்றது.  விசாரணையின் போது  மாநிலங்கள் ஒரு நிலைப்பாட்டையும், மத்திய அரசு அதற்கு முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டையும் எடுத்துள்ளன.   தமிழகத்திற்குச் சிறிதும் பயனில்லாத நிலைப்பாட்டினை  மத்திய அரசு ஏற்கெனவே மேற்கொண்டதன் காரணமாக,  காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சம்பந்தமான கோரிக்கை  தற்போது பின்னுக்குத் தள்ளப்பட்டு,   மாநிலங் களின் மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதா வேண்டாமா என்ற பிரச்சினை  முன்னணிக்கு வந்திருக்கின்றது.

வேண்டுமென்றே நீதி - நியாயத்திற்கு எதிராகவும்,  சட்டத்துக்குப் புறம்பாகவும்  ஒரு சார்பு நிலைப்பாட்டை மேற்கொண்டு கருத்துகளை வெளிப்படுத்தும் மத்திய அமைச்சர்களின் போக்கை மிகக் கடுமையாகக் கண்டிப்பதோடு, அரசியல் ஆதாயம் கருதி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதைத் தள்ளிப் போட்டு, பிரச்சினையை திசை திருப்பும்  மத்திய அரசின் முயற்சியையும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் இந்தக் கூட்டம் கண்டிக்கிறது.

தீர்மானம் 3:

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்குக!

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த அய்ந்தாண்டுகளாக குறுவை பொய்த்துப் போய் விட்டது.   மேட்டூர் அணையில் தற்போது உள்ள தண்ணீர் அடுத்த பதினெட்டு நாட்களுக்குக் கூடப் போதாத நிலை ஏற்பட்டுள்ளது.   வினாடிக்கு 2000 கன அடி வீதம்  தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டுமென்று  கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபோதும்,  அந்த உத்தரவினை  கர்நாடக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. அப்படியே நிறைவேற்றினாலும்  அந்தத் தண்ணீர் சம்பாப் பயிரைக் காப்பாற்ற  நிச்சயமாக உதவாது.

இந்த நிலையில்  காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சொல்லொணா துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.   எனவே குறுவை, சம்பா சாகுபடிக்குத்  தேவையான தண்ணீரை வழங்காத காரணத்தால்,  விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்து அவர்களுடைய துன்பங்களை ஓரளவிற்கேனும் குறைத்திடும் வகையில் ஏக்கர் ஒன்றுக்கு  30 ஆயிரம் ரூபாய் வீதம்  இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமென்று தமிழக அரசையும், மத்திய அரசையும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 4:

காவிரி நீர்ப் பங்கீடு குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவினர் காவிரி படுகைப் பகுதிகளில் பார்வையிட்ட நிலையிலும் அந்த குழுவினரின் அறிக்கை தற்போது தமிழகத்தில் நிலவி வரும் உண்மைச் சூழ்நிலையை நடுநிலையோடு வெளிப்படுத்தும் வகையில் இல்லை என்று பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் இந்தக் கூட்டம் பதிவு செய்கிறது.

அடுத்தகட்ட நடவடிக்கைகள்!

நமது கோரிக்கைகளை மாநில அரசோ, மத்திய அரசோ ஏற்காத பட்சத்தில், மறுபடியும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று கூடி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று பல்வேறு கட்சித் தலைவர்கள் கூறிய கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles