Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

தமிழகத்திலும் விவசாயிகள் தற்கொலை - கருநாடகம், கேரளாவைப் போல ‘வறட்சி மாநிலமாக’ அறிவித்திடுக!

$
0
0

தமிழகத்திலும் விவசாயிகள் தற்கொலை -

கருநாடகம், கேரளாவைப் போல ‘வறட்சி மாநிலமாக’ அறிவித்திடுக!

இறந்துபோன விவசாயிகளின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி அளித்திடுக-

அமைச்சர்கள் நேரில் சென்று அந்தக் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்க!

தமிழர் தலைவர் ஆசிரியர்

விடுத்துள்ள மனிதநேய அறிக்கை

விவசாய சங்கங்களின் பரப்புரைப் பயணத்தை வரவேற்கிறோம்

தமிழ்நாட்டிலும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு விரட்டப்பட்டுள்ளனர். அந்தக் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் ஆதரவு நிதியாக அரசு அளித்திடவேண்டும்; கேரளம், கருநாடகம் போல வறட்சி மாநிலமாக தமிழ்நாட்டை அறிவித்திட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கடந்த இரண்டு நாள்களில், காவிரி டெல்டா பகுதியில் சுற்றுப்பயணம் செய்து திரும்பினோம். அங்கு நாளும் டெல்டா விவசாயிகளின் தற்கொலை 3, 4, 5 என்று பெருகிய வண்ணமே உள்ளதானது - மிகுந்த வேதனையையும், துயரத்தையும் தருவதாக உள்ளன!

தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை

மத்திய, மாநில அரசுகளின் அமைச்சர்கள் ‘இந்தத் தற்கொலைகள் வேண்டாம். நாங்கள் எப்படியும் துயர் துடைக்க ஆவன செய்கிறோம்‘ என்ற ஒரு ஆறுதல் வார்த்தையைக்கூட கூறவில்லை. வங்கிக் கடன் தொல் லையாலும், பயிர்ப் பாசனத்திற்கு நீர் வராமையாலும் தங்களது விவசாயமே மிகப்பெரும் ஏமாற்றத்தையும் அதன் காரணமான வறுமையை, கடனைத் திருப்பிக் கட்ட முடியாத நிலையையும் உருவாக்கி விட்டதே என்ற விரக்தி கலந்த துன்பத்தினாலும் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளும் அவலம் அன்றாடச் செய்திகளாகி வருகின்றன!

மத்திய அரசின் பல்டி!

காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டிருந்தால், காவிரி நதி நீர்ப் பங்கீடு பெரும் அளவுக்கு நியாயமான பங்கீடாக அமைந்து, டெல்டா விவசாயிகளின் மனதில் ஒரு நிம்மதியை விதைத்திருக்கும்.

அதற்கும் வழியில்லாமல், நியாய விரோத மத்திய அரசு உச்சநீதிமன்றத்திலேயே மூன்று நாள் வழக்காடும்போது முதல் நாள்ஒப்புக்கொண்டதை, மறுநாள் தலைகீழ் பல்டி அடித்து, ‘முடியாது,  உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை’ என்று கூறியது மகாமகா வெட்கக்கேடு!

தமிழ்நாட்டு அரசோ, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்ட முன்வர வில்லை! தேவையற்ற தனது வறட்டுப் பிடிவாதத்தையே இன்னமும் கடைப்பிடித்து வருகிறது!

தேவை போர்க்கால நடவடிக்கைகள்!

விவசாயிகளிடம் கருணையே இல்லாமல் நடந்து, அவர்களது உயிர்களையே மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு விரட்டப்படுவது அரசுகளுக்கு அழகாகுமா?

எனவே, உடனடியாக நம்மாநிலத்தின் டெல்டா பகுதிகளையாவது வறட்சிப் பகுதி என்று அறிவித்து, விவசாயிகளுக்கு உதவிட போர்க்கால நடவடிக்கைகளை எடுத்தாகவேண்டும்.

கருநாடகம், கேரளம் வறட்சி மாநிலங்களாகத் தங்களை அறிவித்துள்ளனவே! அம்மாநில அரசுகளின் நடவடிக்கைகளைக் கவனிக்கவேண்டாமா தமிழ்நாடு அரசு?

உயிர் இழந்தவர்கள் குடும்பத்திற்கு குறைந்தது 25 லட்ச ரூபாய்களை ‘ஆறுதல் ஆதரவு நிதி’யாக அளித்து பழி துடைக்க தமிழக அரசு முன்வரவேண்டும்.

அமைச்சர்கள் சென்று ஆறுதல் கூறி, இறந்துபோன விவசாயிகளின் குடும்பங்களுக்கு மீண்டும் வாழ்வாதா ரத்தைப் பாதுகாப்போம் என்று கூறி, நம்பிக்கையை ஊட்ட முன்வரவேண்டும்!

‘கார்ப்பரேட் முதலாளிகளான அடானி, அம்பானி களைப் பாதுகாக்கும் மத்திய அரசு, விவசாயிகளின் தற்கொலைகள் நிகழாவண்ணம் உடனடியாக, நாட்டின் முதுகெலும்பான நம் விவசாயத்தைக் காப்பாற்றிடும் வகையில் அந்த விவசாயத்தையே நம்பி வாழும்,  விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரணப் பணிகளை செய்யவேண்டியது அவசியம், அவசரமாகும்.

 

கி.வீரமணி  
தலைவர், திராவிடர் கழகம்.


சென்னை 
8.11.2016


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles