மதவாதத்தை மட்டும் முன் வைத்து செலாவணியாகலாம் என செயல்பட்ட பிஜேபி கட்சி கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பகுத்தறிவு, முற்போக்குச் சிந்தனை, சமத்துவச் சிந்தனை இல்லாத எந்த அமைப்பும் மக்களால் கூட்டி ஒதுக்கப்படும் என்பதில் அய்யமில்லை என தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள விளக்க அறிக்கை வருமாறு:
காங்கிரஸ் இல்லாத இந்தியாவை நோக்கி பிஜேபியின் பயணம் சென்று கொண்டிருக்கிறது என்று பிஜேபியின் தலைவர் அமித்ஷா கடந்த வியாழனன்று டில்லியில் உள்ள பிஜேபி தலைமையகத்தில் மார்தட்டினார்.
ஆனால், உண்மை நிலை என்ன? தற்போது உ.பி.யில் நடைபெற்ற சட்டப் பேரவை இடைத் தேர்தலுக்கான இரண்டு இடங்களிலும் பிஜேபி தோல்வியைச் சந்தித்துள்ளது.
2015ஆம் ஆண்டு முதல் பிஜேபியின் வளர்ச்சியை நோக் கினால் அது வளர்ச்சியா, வீழ்ச்சியா என்பது விளங்கி விடும்.
டில்லி மாநகராட்சி தேர்தல் பாஜக படுதோல்வி
டில்லி மாநகராட்சிக்கு 13 இடங்களுக்கான தேர்தல் கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. தேர்தல் நடந்த 4 இடங் களைத் தவிர்த்து மற்ற அனைத்திலும் முன்பு பாஜக உறுப்பினர்களின் வார்டுகளாக இருந்தது, இந்த நிலையில் பல்வேறு காரணங்களுக்காக 13 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற்றது. திங்களன்று நடைபெற்ற இந்த தேர்தலில் தஹகண்ட், மாடியாளா, நான்பூரா, மற்றும் விகாஷ் நகர் தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. முனிர்கா, கமருத்தீன் நகர், ஜுல்மில் மற்றும் கசேரிபூர் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பாஜக 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்தில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றார்.
குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் பிஜேபியின் நிலை என்ன? 232 இடங்களில் போட்டியிட்டு ஓரிடத்தில்கூட வெல்லவில்லை என்பது மட்டுமல்ல 4 இடங்களைத் தவிர்த்து அத்தனை இடங்களிலும் ‘டெபாசிட்’ காலி. டெபாசிட் பெற்றவர்கள்கூட முள் முனையில் தப்பித்துள்ளனர் என்பதுதான் உண்மை. கட்சியின் மாநில தலைவரும் டெபாசிட்டைப் பெற முடியவில்லை.
தேசிய கட்சியான பிஜேபி தமிழ்நாட்டில் பெற்றுள்ள வாக்குகளின் சதவிகிதம் 2.8 தான்
2014 மக்களவைத் தேர்தலில் நாகர்கோயில் தொகுதியில் வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சர் ஆனவர் திரு பொன். இராதாகிருஷ்ணன்; அவர் வெற்றி பெற்ற தொகுதியில் அடங்கிய ஒரு சட்டமன்ற தொகுதியில்கூட பிஜேபி வெற்றி பெறவில்லையே - இது எதைக் காட்டுகிறது - பிஜேபியின் வளர்ச்சியையா - தளர்ச்சியையா?
சென்னை, மதுரை போன்ற இடங்களில் சுயேச்சைகளைவிட குறைவான வாக்குகளுக்குச் சொந்தக்காரர்கள்தான் பிஜேபியினர்! தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் நாங்கள் வெற்றி பெறாவிட்டாலும் வாக்கு வங்கி குறையவில்லை என்று வீரார்ப்புப் பேசியுள்ளார் பிஜேபி தலைவர் அமித்ஷா. தேசிய கட்சியான பிஜேபி தமிழ்நாட்டில் பெற்றுள்ள வாக்குகளின் சதவிகிதம் 2.8 தான். இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?
தமிழக பிஜேபியில் முன்னிலையினர் என்று கூறப்படுபவர்கள் தந்தை பெரியார் போன்ற மக்களால் மதிக்கப்படும் தலைவர்களைக் கொச்சைப்படுத்திப் பேசி வருவதற்கெல்லாம் சேர்த்துதான் தமிழ்நாட்டு மக்கள் வட்டியும் முதலுமாக சேர்த்து மொத்தியுள்ளனர். இனியாவது நாவடக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிஜேபியைக் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள எந்த ஒரு கட்சியும் முன்வரவில்லை என்பதிலிருந்தே - பிஜேபி ஒரு வகையில் நவீன தீண்டத்தகாத கட்சி என்ற மனப்பான்மை தமிழ்நாட்டு மக்களிடையே நிலவி வருவதை மறுக்க முடியுமா?
வட மாநிலங்களில் தான் என்ன வாழ்கிறதாம்?
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 211தொகுதிகளில் வெற்றிபெற்று சரித்திர சாதனை படைத்துள்ளது. . அங்கு மோடி அலை அடங்கிவிட்டது. மம்தாவை வீழ்த்திவிடவேண்டும் என்பதற்காகவே சுபாஸ் சந்திரபோஸ் பெயரில் பல்வேறு போலி ஆவணங்கள், சுபாஸ் சந்திர போஸின் குடும்பத்தார்களுடன் செல்பி, சுபாஸ் சந்திரபோஸின் சாம்பலைக் கொண்டுவருவோம் என்று கூறியது, அவரது பேரன் தான் மேற்கு வங்க முதல்வர் என்றெல்லாம் கூறி பல்வேறு மாயாஜாலங்களைச் செய்து பார்த்தார்.
மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜியை தாக்கிப் பேசினார். கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்தது பற்றி பேசும் போது கடவுள் மம்தாவின் ஆட்சியை விரும்பவில்லை என்றும் கூறிப்பார்த்தார். சாரதா ஊழல், நாரதா ஸ்டிங் ஆப்ரேஷன், என்று மம்தாவின் ஆட்சியில் நடந்தவற்றை எல்லாம் நினைத்துப் பார்த்து தங்களுக்கு வாக்களிக்குமாறு மோடி மக்களை கேட்டுக் கொண்டார். ஆனால் மக்கள் மோடியின் பேச்சைக் கேட்கவில்லை, மிகவும் பரிதாபமான தோல்வியைத் தழுவினார். அதுமட்டுமா 2014-ஆம் ஆண்டு 16.8 விழுக்காடாக இருந்த பாஜக வாக்குவங்கி இம்முறை வெறும் 9 விழுக்காடாக சரிந்துவிட்டது.
காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி அதிகரிப்பு
அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் பாஜக 60, அசாம் கண பரிஷத் 14, போடோ மக்கள் இயக்கம் 12 இதில் போடோ மக்கள் இயக்கம் நக்சல் பாரி இயக்கமாகும், அசாம் கணபரிஷத் இந்துத்துவாக் கொள்கைக்கு எதிரான பழங்குடிமக்களைச் சார்ந்த அரசியல் அமைப்பாகும். இந்த நிலையில் வரும் அய்ந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நடத்தவேண்டுமென்றால் அசாம் பாஜக, டில்லி பாஜகவின் அஜண்டாக்களை விட்டுத் தூர விலகி நிற்கவேண்டும். காவிகளின் ஆட்சி என்று டில்லியில் சொல்லிக்கொண்டாலும் அசாமில் இதைப் பெருமையாக சொல்லவும் முடியாது. உண்மையில் மோடி அலை என்று இருந்தால் அங்கு பாஜக அறுதிப்பெரும்பான்மை பெற்றிருக்கவேண்டும்.
பிஜேபியின் வீழ்ச்சியைத் தெளிவுபடுத்தும் தேர்தல் முடிவுகள்
புள்ளி விவரத்தோடு சொல்ல வேண்டுமானால் கீழ்க்கண்ட தகவல்கள் பிஜேபியின் வீழ்ச்சியைத் தெளிவுபடுத்தும். அசாம் மாநிலத்தில் 2014 மக்களவைத் தேர்தலில் பெற்ற சதவீதம் 36.50 நடைபெற்றுள்ள சட்டப் பேரவைத் தேர்தலிலோ அது பெற்ற சதவீதம் 29.50.
கேரள மாநிலத்தில்: 2014 மக்களவைத் தேர்தலில் பிஜேபி பெற்ற வாக்குகளின் சதவீதம் 10.70; நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பிஜேபி பெற்ற இடம் 9.10 சதவீதம்.
தமிழ்நாடு: 2014 மக்களவையில் பிஜேபி கூட்டணி பெற்ற வாக்குக ளின் சதவீதம் 18.50, நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பிஜேபி பெற்ற சதவீதம் 2.80.
மேற்கு வங்கம்: 2014 மக்களவைத் தேர்தலில் பிஜேபி பெற்ற வாக்கு சதவீதம் 16.80 தற்போது நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அக்கட்சி பெற்ற வாக்குகளின் சதவீதம் 9.10.
இந்தப் புள்ளி விவரங்கள் எதைக் காட்டுகின்றன? கண்டிப்பாக பிஜேபி மக்கள் மத்தியில் உதாசீனப்படுத்தப் படுகிறது என்பது விளங்கவில்லையா?
மதவாதத்தை மட்டும் முன்வைத்து செலாவணியாகலாம் என்பது இனி நடக்காது. பகுத்தறிவு, முற்போக்குச் சிந்தனை, சமத்துவச் சிந்தனை இல்லாத எந்த அமைப்பும் மக்களால் கூட்டி ஒதுக்கப்படும் என்பதில் அய்யமில்லை.
தந்தை பெரியாரின் தமிழ்நாட்டு மக்கள் பிஜேபிக்கு கொடுத்த தண்டனை இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் என்பதில் அய்யமில்லை.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
21.5.2016