கோவையில் ஒரே நாளில் கழகத் தலைவர் பங்கேற்ற கோர்வையான நிகழ்ச்சிகள்
தமிழர் தலைவர் முழக்கம்
கோவை, பிப்.12 பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம சாத்திர நூலை அன்னை மணியம்மையார் பிறந்த நாளான மார்ச்சு 10ஆம் தேதியில் பெண்கள் தலைமையில் கொளுத்துவோம் என்று முழக்கமிட்டார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
கோர்வையான நிகழ்ச்சிகள்
திராவிடர் கழகத்தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நீலகிரி விரைவு ரயில் மூலம் கோவைக்கு நேற்று (11.2.2017) விடியற்காலை 5.30 மணியளவில் வந்தடைந்தபோது மிகப் பெரிய வரவேற்பு காத்திருந்தது.
உலகத் தலைவர் தந்தை பெரியார் வாழ்க! தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க! என்ற ஒலி முழக்கங்கள் கழகத் தோழர்களிடமிருந்து கிளம்பி விண்ணைப் பிளந்தன.
தமிழ்நாடு இல்லத்தில் வழக்கம்போல் தமிழர் தலைவர் தங்கினார். கழகத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக கழகத் தலைவரைச் சந்தித்தனர். பயனாடை அணிவித்து மகிழ்ந்தனர்.
செய்தியாளர்கள் சந்திப்பு
காலை 10 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது (முழு விவரம் நேற்றைய விடுதலையில் 11.2.2017).
தமிழ்நாட்டில் ஆட்சி உடனடியாக அமைக்கப் பெறாமைக்குக் காரணம் - ஆளுநரே! அந்த ஆளுநரைக் கருவியாகப் பயன்படுத்துவது மத்திய பிஜேபி அரசே! அதன் பின்னணியில் பிஜேபி, ஆர்எஸ்எஸ். இருக்கிறது. தமிழ்நாட்டு அரசியலில் குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கும் ஒரு சூழ்ச்சியில் பிஜேபி இருக்கிறது என்ற குற்றச்சாட்டைப் பகிரங்கமாக வைத்தார்.
தொடக்க முதலே இந்தக் குற்றச்சாட்டை திராவிடர் கழகத் தலைவர் வைத்து வருகிறார். தொடக்கத்தில் இதனை சரிவரப் புரிந்து கொள்ளாதவர்கள்கூட தற்போது அதனை வழிமொழிகிறவர்களாக மாறி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
கழகத் தலைவரின் கோவைப் பேட்டியினை அநேகமாக எல்லாத் தொலைக்காட்சி நிறுவனங்களும் முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கதாகும்.
திராவிடர் கழகத் தலைவரின் கோவைப் பயணம் பல வகையான பரிமாணங்களைக் கொண்டதாக அமைந்திருந்தது என்றே சொல்ல வேண்டும்.
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சந்திப்பு
திராவிடர் கழகத்தின் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் 'வசந்தம்' கு. இராமச்சந்திரன் அவர்கள் உடல் நலம் குறைவாக இருக்கும் நிலையில், அவர் இல்லம் சென்று உடல் நலம் விசாரித்தார் கழகத் தலைவர் தம் இணையருடன்! வழக்கம்போல 'வசந்தம்' இராமச்சந்திரன் ஆசிரியர் அவர்களிடத்தில் பல நூல்களைக் காட்டி, தேவையானநூல்களை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ஓர் அறிவு இயக்கத்தில்தான் இது போன்ற அரிய நிகழ்ச்சிகளைக் காண முடியும்.
சிறிது நேரம் உரையாடி விட்டு விடை பெற்றனர்.
டாக்டர் துரை. நாச்சியப்பன் இல்லத்தில்...
கால்நடை வளர்ப்புத் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும் - கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவருமான டாக்டர் துரை. நாச்சியப்பன் அவர்கள் அமெரிக்காவில் உள்ள மகன் வீட்டிற்குச் சென்ற நிலையில் மாரடைப்புக் காரணமாக மரணம் அடைந்தார். உடல் அடக்கம் அமெரிக்காவிலேயே நடைபெற்றது.
கோவையில் உள்ள அவரது இல்லத்துக்குக் கழகத் தலைவர் அவர்கள் தம் இணையருடன் சென்று குடும்பத் தினருக்கு (துணைவியார் சுப்புலட்சுமி) ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.
அண்மையில் மரணமடைந்த கழகத் தோழர் ஞானசேகர் இல்லத்திற்கும் கழகத் தலைவர் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
படத்திறப்புகள்
கோவை குனியமுத்தூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், மரணம் அடைந்த கோவையைச் சேர்ந்த "சுயமரியாதைச் சுடரொளிகள்" டாக்டர் துரை. நாச்சியப்பன், கணபதி ராமசாமி, குனியமுத்தூர் ஞானசேகர், பொள்ளாச்சி நடராசன் ஆகியோரின் உருவப் படங்களைத் திறந்து வைத்து அவர்களின் சிறப்புகளையெல்லாம் எடுத்துக் கூறினார்.
கோவை விஞ்ஞானி ஜி.டி. நாயுடு மாளிகையில்...
தந்தை பெரியார் அவர்களின் நெருங்கிய நண்பரும், தந்தை பெரியார் அவர்களுடன் உரிமையின் காரணமாக நகைச்சுவையுடன் பேசக் கூடிய தகுதி பெற்றவருமான கோவை விஞ்ஞானி ஜி.டி. நாயுடு அவர்களின் மாளிகைக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பிற்பகல் 4 மணியளவில் சென்றார். கழகத் தலைவரையும், உடன் சென்ற தோழர்களையும், ஜி.டி. நாயுடு அவர்களின் அருமை மகன் கோபால் அவர்கள் தம் இணையர் சந்திரலேகாவுடன் அன்புடன் வரவேற்று உபசரித்தார்.
கடந்த காலங்களில் தந்தை பெரியார் அவர்களுக்கும், ஜிடி. நாயுடு காரு அவர்களுக்கும் இடையில் இருந்த நட்புறவு, ஈடுபாடுகள் பற்றி விரிவாக உற்சாகத்துடன் உரையாடினர். குறிப்பாக சென்னையில் இருக்கக் கூடிய பெரியார் திடல் வாங்கப்பட்டதற்கு ஜி.டி. நாயுடு அவர்கள் மேற்கொண்ட முயற்சியையும், இன்றைக்கு பெரியார் திடல், இயக்கத்திற்கும் இயக்க ஏடுகளுக்கும், பல்வேறு கொள்கை ரீதியான ஈடுபாடுகளுக்கும் தலைமையிடமாக செயல்படுகிறது என்றால் - இவற்றிற்கெல்லாம் அடித்தளமிட்டவர் ஜி.டி. நாயுடு அவர்கள்தான் என்பதை மிகுந்த நன்றி உணர்வுடன் அந்த உரையாடலில் பதிவு செய்தார் கழகத் தலைவர்.
தந்தை பெரியார் அவர்களின் அரிய ஒளிப்படங்கள் அங்கே இருப்பது கண்டு மகிழ்ந்த கழகத் தலைவர் அவர்கள், அவற்றை உரிய முறையில் கழகம் பயன்படுத்திக் கொள்ளும் என்றார்.
ஜி.டி. நாயுடு அவர்களின் விருந்தினர்களாக நீண்ட காலம் தங்கி இருந்தவர் சாமி கைவல்யம். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் போன்றவர்கள் அடிக்கடி அங்கு வருகை தந்து ஜி.டி. நாயுடுகாரு அவர்களின் அன்புக்கும், விருந்தோம்பலுக்கும் ஆளானதை எல்லாம் நினைவு கூரப்பட்டன.
ஒருமுறை தந்தை பெரியார் அவர்கள் ஜி.டி. நாயுடு அவர்களின் மாளிகைக்கு வந்த பொழுது தந்தை பெரியாருக்கும், உடன் வந்தவர்களுக்கும் (ஆசிரியர் வீரமணி அவர்கள் உட்பட) ஒரு இனிப்பு உருண்டை அளித்து உபசரிக்கப்பட்டது. மிகவும் சுவையாக இருந்ததாக, தந்தை பெரியாரும், உடன் வந்தவர்களும் மகிழ்ந்து கூறிய போது - ஜி.டி. நாயுடு அவர்கள் அவருக்கே உரித்தான தனித் தன்மையோடு இது வெறும் தவிட்டிலிருந்து தயாரிக்கப்பட்டது. (தவிடு என்றால் அலட்சியமா? அதில்தான் சத்து அதிகம் என்பது ஜி.டி. நாயுடு அவர்களின் கருத்து) என்று சொன்னாரே பார்க்கலாம்; ஒரே கலகலப்பு, சிரிப்பொலி!
இதுபோன்ற பல்வேறு தகவல்களும், சுவையான நிகழ்வுகளும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
பெரியார் படிப்பகம் பார்வையிடல்
ஜி.டி. நாயுடுவின் மகன் ஜி.டி. கோபால் அவர்கள் மனமுவந்து அளித்த இடத்தில் ஜி.டி. நாயுடு நினைவு - தந்தை பெரியார் படிப்பகத்தை (மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் - ஜி.டி. நாயுடு வளாகத்தில்) கழகத் தலைவர் பார்வையிட்டு - வருகையாளர் பதிவேட்டில் கையொப்பமிட்டார். படிப்பகத்திற்கு ஓய்வு பெற்ற ஒருவரை நியமித்து நிருவாகம் செய்ய ஏற்பாடு செய்யுமாறு மண்டலக் கழக செயலாளர் தோழர் சந்திரசேகரனிடம் கழகத் தலைவர் கூறினர்.
இருபெரும் விழாக்கள்
தந்தை பெரியார் 138ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - "விடுதலை" சந்தா வழங்கும் விழா ஆகிய இரு பெரும் விழாக்கள் குனியமுத்தூரில் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றன. ஊரெங்கும் கழகக் கொடிகள் கம்பீரமாகப் பறந்தன. 20 ஆண்டுகளுக்குப் பிறகு கழகத் தலைவர் அங்கு பேசியதால் மிகுந்த எதிர்ப்பார்ப்போடு ஏராளமான பொது மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
"உலகத்திலேயே ஒரு நாட்டுப் பூர்வீக மக்களுக்குக் கல்வியைக் கொடுக்காதே என்று சொன்ன ஒரே மதம் இந்து மதம்தான். இப்பொழுது புதிய கல்வி என்றும், 'நீட்' என்ற நுழைவுத் தேர்வு என்றும் மத்திய பிஜேபி அரசு திணிக்கிறதே; இதனால் நமது பிள்ளைகள் பாதிக்கப்பட மாட்டார்களா? அருமைத் தோழர்களே! உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு ஏற்படவிருக்கும் பேராபத்தினை தடுப்பது திராவிடர் கழகம் தானே! இந்த இயக்கம் இல்லா விட்டால் உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கான கல்வியின் நிலை என்ன?
70 ஆண்டு சுதந்திரத்தில் நாம் இன்னும் சூத்திரர்கள் தானே - பஞ்சமர்கள்தானே" என்ற வினாவை எழுப்பினார் 'விடுதலை' ஆசிரியர்.
"பெண்கள் பிறவியிலேயே ஒழுக்க மற்றவர்கள், அடிமைகள் என்று கூறும் மனுதர்மத்தை நாம் அனுமதிக்கலாமா? மனுதர்மம் தான் இந்தியாவின் அரசி யல் சட்டமாக வேண்டும் என்று கூறு கின்றது இந்துத்துவா - காவி கூட்டம். அமைச்சர்களேகூட. இந்தக் கருத்தினைக் கூறுகிறார்களே - நாம் என்ன செய்ய வேண்டும்?
அந்த சாஸ்திரத்தை எரித்துச் சாம்பலாக்க வேண்டாமா? அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாளான மார்ச் 10ஆம் தேதியன்று தமிழ்நாடெங்கும் பத்து முக்கிய நகரங்களில் மனுதர்ம எரிப்புப் போராட்டம் நடைபெறும். தன்மானத்தைக் காக்க முக்கியமாகப் பெண்கள் முன் வர வேண்டும்" என்று தமிழர் தலைவர் கேட்டுக் கொண்ட போது பெரிய வரவேற்பு இருந்ததைப் பலத்த கரஒலி மூலம் அறிய முடிந்தது. விழாவில் விடுதலை சந்தாக்கள் வழங்கப்பட்டன. (தனியே காண்க).
கோவையில் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார், பொருளாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி, அமைப்பு செயலாளர் ஈரோடு த. சண்முகம், மண்டல செயலாளர் சந்திரசேகரன், குன்னூர் டாக்டர் கவுதமன், மற்றும் தோழர்கள், கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.