அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் பெருமிதம்
சென்னை, ஏப்.18- சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து - நடராசன் மாளிகையில் ஏழாம் மாடியில் நேற்று (17.4.2017) முற்பகலில் எண்ணெய், இயற்கை எரிவாயு கார்ப்பொரேசன் தெற்கு வட்டம் மற்றும் அனைத்திந்திய தாழ்த்தப்பட்ட, பழங் குடியின பணியாளர்கள் நலச்சங்கம் இணைந்து அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடத்தப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினராக பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு ஆங்கிலத்திலும், தமிழிலும் சிறப்புப் பேருரை ஆற்றினார்கள்.
தமிழர் தலைவருக்கு நினைவுப்பரிசு
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சிறப்பிக்கும் வகையில் ஓஎன்ஜிசி காவிரி படுகை மேலாளர் பவன்குமார் பூங்கொத்து வழங்கியும், கோதாவரி படுகை வி.சியாம் மோகன் பயனாடை அணிவித்தும் சிறப்பித்தார்கள். விழாக்குழுவினர் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
விழா தொடக்கத்தில் ஓ.என்.ஜி.சி. அனைத்திந்திய தாழ்த் தப்பட்ட, பழங்குடியின பணியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் சி.ஆறுமுகம் வரவேற்றுப் பேசினார். வனிதா இணைப்புரை வழங்கினார்.
அனைத்திந்திய தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பணியாளர்கள் நலச்சங்க செயலாளர் விமலநாதன், இராமகிருஷ்ணன், புவனேசுவரி உள்ளிட்ட ஓஎன்ஜிசி அலுவலர்கள், அனைத் திந்திய தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பணியாளர்கள் நலச் சங்க பொறுப்பாளர்கள் ஏராளமானவர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
விழாவின் தொடக்கத்தில் ஓஎன்ஜிசி அலுவலக வளாகத் திற்குள் பெரிய அளவில் அமைக்கப்பெற்ற தந்தை பெரியார், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் படங்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் ஓஎன்ஜிசி அலுவலர்கள் ரோஜா மாலைகள் அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தமிழர் தலைவர் சிறப்புப் பேருரை
சிறப்புப்பேருரையில் தமிழர் தலைவர் பேசும்போது,
மொழிப்போர்த்தியாகிகள் தாளமுத்து- நடராசன் மாளிகையில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடைபெறுகிறது. ஆண்டுதோறும்அண்ணல்அம்பேத்கர்பிறந்த நாளை கொண்டாடி வரும் சிறப்பான மத்திய அரசு நிறுவனமாக உள்ள ஓஎன்ஜிசி பாராட்டுதலுக்குரியது. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் இருவரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக சிந்தனையில் செயல்பாடுகளில் ஒத்திருந்தனர் என்பதை உணர்த்தும் வகையில் இருபெரும் புரட்சியாளர்களின் படங்கள் பொருத்தமாக அமைக்கப்பட்டுள்ளன. தந்தைபெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஒருவரையொருவர் சந்திக்காமலேயே கருத்துகளால் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்கள். தந்தை பெரியார் அவர்கள் ‘குடிஅரசு' ஏட்டினை நடத்தினார். குருதி சிந்தாத அமைதிப்புரட்சியை நடத்திக்காட்டியவர். தந்தை பெரியார் அம்பேத்கரை தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தினார். அம்பேத்கர் பேச அனுமதி மறுக்கப்பட்ட உரையை ÔகுடிஅரசுÕ ஏட்டில் வெளியிட்டார்.
1934 ஆம் ஆண்டில் ஜாதி, தீண்டாமைக்கு எதிராக போராடி னார். ஜாதிமுறையை வருணாசிரம முறையை எதிர்த்தவர். வாழ்நாள்முழுவதும் ஜாதியை எதிர்த்து வந்தவர். பஞ்சாபில் ஜாதி ஒழிப்பு சங்கம் சார்பில் மாநாட்டில் தலைமையுரை ஆற்ற அம்பேத்கருக்கு அழைப்பு விடுத்தார்கள்.
அங்கேயும் உயர் ஜாதியினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதனையடுத்து அம்பேத்கரிடம் அவருடைய தலைமை யுரையை நூலாக ஆக்கவேண்டும் என்று கூறி முன்னதாகவே தலைமையுரையை அனுப்பி வைக்குமாறு கோரினார்கள். அம்பேத்கர் அறிவியல் முறைப்படி ஜாதியை ஒழிப்பதற்கான வழிகள்குறித்து விரிவாக எழுதி மாநாட்டின் நிர்வாகிகளுக்கு அனுப்பிவைத்தார். அவர் உரையில் மாற்றம் செய்து தருமாறு கோரினார்கள். அதற்கு அம்பேத்கர் இசைவு தரவில்லை. சுயமரியாதையுடன் அந்த நிகழ்ச்சிக்கும் செல்லவில்லை. கொள்கையில் உறுதியாக இருந்தார். அப்படி அம்பேத்கர் பேசாத அந்த உரையை (Undelivered Address) தந்தை பெரியார் அனுப்பி வைக்குமாறு கேட்டு, தமிழில் மொழிபெயர்த்து 1936 ஆம் ஆண்டில் ‘குடிஅரசு' ஏட்டில் வெளியிட்டார்.
அம்பேத்கர் உரை முதன்முதலாக மொழிபெயர்க்கப்பட்டது தமிழில்தான். தந்தை பெரியாரால்தான்! அதுதான் ஜாதியை ஒழிக்க வழிÕ என்கிற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டு, நான்கு அணா விலையில் பல்லாயிரக்கணக்கில் அந்த விற் பனையானது. 25 பதிப்புகளுக்கும் மேல் அச்சாகி வெளியானது.
தந்தை பெரியார் அம்பேத்கர் இன்றும் தேவைப்படுகிறார்கள்
Ôசதுர்வர்ணம் மயா சிருஷ்டம் என்று ஜாதியை நானே உருவாக்கினேன். நானே நினைத்தாலும் அதை மாற்ற முடியாதுÕ என்று கீதையில் கிருஷ்ணன் கூறுகிறான்.
மலேரியாஒழிக்கப்பட வேண்டுமானால், கொசுக் கள் ஒழிக்கப்பட வேண்டும். கொசுக்களை அழிக்க வேண்டுமானால், சாக்கடைகள் மூடப்பட வேண்டும். ஆகவே, தீண்டாமை, பிறவி பேதம், சமத்துவமின்மை, பெண்ணடிமை ஆகியவற்றை ஒழிப்பதற்கு ஜாதியை ஒழிக்க வேண்டும். மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமம்.
தீண்டாமை பழக்கம் இன்னமும் நீடிக்கிறது. தேநீர்க்கடைகளில் இரட்டைக் குவளைகள் உள்ளன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் இன்றும் தேவைப்படுகிறார்கள்.
தீண்டத்தகாதவர்கள், பார்க்கக்கூடாதவர்கள் என்று ஜாதியின் பெயரால் ஆக்கப்பட்டார்கள். மின் சாரம் தொடக்கூடாது. தொட்டால் என்ன ஆகும் என்பது தெரியும். மனிதனைத் தொடக்கூடாது என்று இருக்கலாமா? கடவுள், மதம், புராணங்கள், சடங்குகளின் பெயரால் ஜாதி திணிக்கப்பட்டது. ஜாதி முறை ஒழிக்கப்படவில்லை என்றால், சமத்துவம் ஏற்படாது.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை கொண்டாடுவதுடன் நிற்காமல், அவர்களின் கொள்கைகளை பரப்புகின்ற பணிகளைச் செய்ய வேண்டும். அவர்களின் கொள்கைகளை செய லாக்கத்துக்கு கொண்டு வரவேண்டும்.
மனிதத்தன்மையுடன் நடக்கவேண்டும் என்கிற நிலையில் இந்த நாட்டில் மனிதத்தன்மையற்ற தீண்டாமை, ஜாதிக்கொடுமைகள் சமுதாயத்தை சீரழித்துவந்தன.
மகர் போராட்டத்திற்கு முன்னோடியான வைக்கம் போராட்டம்
1924ஆம் ஆண்டில் திருவாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கத்தில் உள்ள கோயிலைச்சுற்றி நான்கு தெருக் கள் இருக்கின்றன. கோயில் நகரங்களில் அதுபோல் இருப்பதுண்டு. அந்த தெருக்கள் வழியே உயர் ஜாதியினர் நடந்து செல்லலாம். ஆனால், ஈழவர்கள், தீயர்கள், தீண்டத்தகாதவர்கள் செல்லக்கூடாது என்கிற தீண்டாமை, ஜாதிக்கொடுமை இருந்தது.
ஈழவ மக்கள் சாதாரணமாக தெருவில் சென்றால் கூட உயர்ஜாதியினர் தங்கள் வீட்டின் ஜன்னல் கதவு களைக்கூட அடைத்துவிடுவார்கள்.
தெருவில் செல்வதற்கான உரிமை கோரி அம்மக்கள் போராடினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அம்மக்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வெற்றி பெற வேண்டும் என்று தந்தை பெரியாருக்கு அழைப்பு விடுத்தார்கள். வைக்கம் இருப்பதோ கேரளாவில். தந்தைபெரியாரோ தமிழகத்தில் இருந்தார். ஆனால், ஜாதி தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக இருந்தவர் தந்தை பெரியார். ஆகவே, தந்தை பெரியார், அவரது மனைவி அவர் சகோதரி என பலரும் வைக்கம் போராட்டத்தில் பங்கேற்க சென்றார்கள்.
அரிஜன் என்றெல்லாம் கூறிவந்த காந்தி, வைக்கம் அறப்போராட்டத்துக்கு ஆதரவளிக்கவில்லை. ஜாதியைவலியுறுத்தும்வருணாசிரமத்தில்நம்பிக் கொண்டுள்ளதாக கூறிவிட்டார். தந்தை பெரியாரை யும் ஏன் தமிழகத்திலிருந்து வைக்கம் செல்கிறீர்கள்? உயர்ஜாதியினரின் எதிர்ப்பு வருகிறதே என்று கேட்டார்.
அப்போதுதான் தந்தை பெரியார் காந்திக்கு எழுதிய கடிதத்தில் தெருவில் பன்றிகள், நாய்கள், கழுதைகள் போகின்றன. அவையெல்லாம் சத்தியா கிரகம் செய்தா அந்த தெருவில் செல்கின்றன? என்று கேட்டார். அதன்பின்னர் தந்தை பெரியார் போராட்டத்தில் பங்கேற்று வெற்றி கண்டார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி கிணறு போன்ற காந்தியின் திட்டத்தை தந்தை பெரியார் எதிர்த்தார்.
தனஞ்செய்கீர் எழுதிய அம்பேத்கர் குறித்த புத்தகத்தில் 63ஆம் பக்கத்தில் குறிப்பிடுகிறார். 1924ஆம் ஆண்டில் தந்தை பெரியார் நடத்திய வைக்கம் போராட்டம்தான், அம்பேத்கர் மகர் சத்தியாக்கிரகப்போராட்டத்துக்கு முன்னோடியான போராட்டமாக திகழ்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசமைப்புச்சட்டத்தின்சிற்பிஎன்று அம்பேத் கரைக் குறிப்பிடுகிறோம். அரசமைப்புச்சட்டத்தில் லிவீதீமீக்ஷீtஹ், ணிஹீuணீறீவீtஹ் ணீஸீபீ திக்ஷீணீtமீக்ஷீஸீவீtஹ் ஆகிய வாசகங்கள் பிரெஞ்சு புரட்சியிலிருந்து எடுக்கப்பட்டவை அல்ல, புத்தரிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டதாகும் என் றார் அம்பேத்கர்.
இந்து மதத்தில் வருணாசிரமதருமத்தில் நான்கு வருணங்களாக தலையில் பிறந்தவன் பார்ப்பனன், தோளில் பிறந்தவன் சத்திரியன், தொடையில் பிறந்தவன் வைசியன், காலில் பிறந்தவன் சூத்திரன் என்று நான்கு வருணங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. நான்கு வருணத்துக்கு கீழே அய்ந்தாம் நிலையில் பஞ்சமர்கள் உள்ளனர். நான்கு வருணத்தாருக்கும், பஞ்சமருக்கும் கீழான நிலையில் உள்ளவர்களாக பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று பெண்களை இழிவுபடுத்தியுள்ளார்கள்.
ஓஎன்ஜிசியில் பெண்கள்
இங்கே ஓஎன்ஜிசியில் 700 பணியாளர்களில் 200 முதல் 250 பேர் பெண்கள் பணிபுரிகிறார்கள் என்று அறிந்தேன். இன்னமும் நாடாளுமன்றத்தில் பெண்கள் மூன்றில் ஒரு பங்கு பெற முடியாத நிலை உள்ளது. ஆனால், ஓஎன்ஜிசியில் அந்த நிலையை எட்டியுள்ளீர்கள். இது தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் பெற்றுள்ள வெற்றியைக் காட்டுகிறது.
ஓஎன்ஜிசி அலுவலக வளாகத்துக்குள் பெரிய அளவில் அமைக்கப் பெற்ற தந்தை பெரியார், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் படங்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் ஓஎன்ஜிசி உயர் அலுவலர்கள் ரோஜா மாலைகள் அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்
1929 ஆம் ஆண்டில் செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் பெண் களுக்கு சொத்தில் உரிமை வேண்டும் என்றார். அரசமைப்புச்சட்டம் இயற்றியபோது அம்பேத்கர் இந்து சட்டத்தில் பெண்களுக்கு உள்ள உரிமைகளை வலியுறுத்தினார்.
பெண்கள் சொத்துரிமை, கல்வி உரிமை, வேலை வாய்ப்பு உரிமைகளுடன் பிறப்பால் பாலின பாகுபாடுகளின்றி அனைத்து உரிமைகளையும் பெற்றிட வேண்டும் என்கிற கருத்துகள் இருபெரும் தலைவர்களின் குறிக்கோள்களாக இருந்தன.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் கண்ட கனவு, பெண்களுக்கு சொத்துரிமைக்கான சட்டம் 2006ஆம் ஆண்டில் நிறைவேறியது.
நேற்றைய ÔவிடுதலைÕயில் (16.4.2017) தந்தை பெரியார்வடநாட்டுசுற்றுப்பயணம்குறித்துவந்துள் ளது. தந்தை பெரியார் வட நாட்டு சுற்றுப்பயணத்தின் போது, நான் செயலாளராக உடன் சென்றேன். டில்லியில் தந்தைபெரியாரின் அண்ணன் மகன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரான ஈ.வெ.கி. சம்பத் வீட்டில் தங்கினோம். அம்பேத்கர் பவனுக்கு தந்தை பெரியார் அழைக்கப்பட்டிருந்தார். அங்கே அம்பேத்கர் பவன் தலைவராக சங்கரனந்த சாஸ்திரி இருந்தார்.
தந்தை பெரியார் பம்பாய் நகரில் அம்பேத்கரை மூன்றுமுறைசந்தித்துள்ளார்.ஜின்னாவுடன்சந் தித்த போதும், அதன்பிறகும் அம்பேத்கரை சந்தித் தார். 1940 ஆம் ஆண்டுகளில் பல முறை சந்திப்பு நிகழ்ந்தது. தமிழ்நாட்டுக்கு அம்பேத்கர் வந்தபோதும் சந்தித்துள்ளார்கள்.
அம்பேத்கர் இந்து மதத்துக்கு முழுக்கு
உலக பவுத்த மாநாடு 1954 இல் நடந்தது. அதற்கு முன்னதாக தந்தை பெரியாரிடம் அம்பேத்கர் பேசும்போது, நான் ஏற்கெனவே கூறியுள்ளபடி, இந்துவாக சாகமாட்டேன் என்றார். புத்த மதத்தைத் தழுவப்போவதாகவும், தந்தைபெரியாரும் புத்த மதத்தை தழுவ முன்வரவேண்டும் என்றும் அம் பேத்கர் கேட்டுக்கொண்டார். அப்போது, தந்தை பெரியார் தனியாளாக செல்ல வேண்டாம். 10 லட்சம், 20 லட்சம் பேருடன் செல்லவேண்டும் என்றார்.
தந்தைபெரியாரையும்அழைத்ததற்கு,இன் னும் அந்த சூழ்நிலை ஏற்படவில்லை. இங்கிருந்து சென்றுவிட்டால்,இந்துமதத்தைப்பற்றி பேசு வதற் கான வாய்ப்பு இருக்காது. எனவே, இங்கிருந் ததுகொண்டுதான் இருப்பவர்களைத் திருத்த முடியும், இழிவுகளைப்போக்க முடியும் என்று தந்தை பெரியார் கூறினார்.
முதல் பகுத்தறிவுவாதி புத்தர்
பவுத்தம் என்பது ஒரு மதமே அல்ல. முதல் பகுத்தறிவுவாதி யார் என்றால், அவர் புத்தர்தான். அவர்தான் நான் சொல்வதை அப்படியே நம்பாதே, முன்னோர்கள் சொன்னார்கள், எழுதிவைத்தார்கள் என்று கூறி எதையும் அப்படியே நம்பாதே, ஏற்காதே. எதையும் உன் அறிவுப்படி சிந்தித்து சரியெனப்பட்டதை ஏற்றுக்கொள் என்றார். தந்தை பெரியாரும் அதுபோன்றே சொன்னார்.
புத்தியைப் பயன்படுத்துபவன் புத்தன்
எழும்பூரில் உள்ள மகாபோதி சொசைட்டியில் தந்தை பெரியாருடன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றபோது, புத்தரைப்போல் தந்தை பெரியாரும் ஒரு புத்தர் என்று நான் பேசினேன்.
பிறகு தந்தைபெரியார் பேசியபோது, இங்கே என்னை புத்தர் என்று பேசினார்கள். புத்தர் பெயர் சித்தார்த்தர். பாலி மொழியில் புத்தியை பயன்படுத் துபவர் புத்தர் என்றார். யாரெல்லாம் புத்தியைப் பயன்படுத்திகிறார்களோ அவர்கள் அனைவருமே புத்தர்கள்தான் என்றார்.
பவுத்தம் குறித்த
தந்தைபெரியாரின் விளக்கம்
டில்லியில் தந்தை பெரியாரிடம் Ôமெயில்Õ பத்திரிகை நிருபர் ஒரு கேள்வியைக் கேட்டார்.
நீங்கள் மதம் கூடாது என்கிறீர்களே, புத்தத்தில் Ôபுத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமிÕ என்று அங்கேயும் மந்திரங் களைத்தானே சொல்கிறார்கள், அதை மட்டும் ஏற்றுக்கொள்கிறீர்களே என்றார்.
உடனே, தந்தை பெரியார், Ôபுத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமிÕ என்பதில் Ôபுத்தம் சரணம் கச்சாமிÕ என்றால் தலைவனிடம்ஒப்படைத்துக்கொள்கிறேன்என்று பொருள். Ôதம்மம் சரணம் கச்சாமிÕ என்றால் கொள்கைக்காக, இலட்சியத்துக்காக ஒப்படைத்துக் கொள்கிறேன் என்று பொருள். Ôசங்கம் சரணம் கச்சாமிÕ என்றால், அந்தக் கொள்கையை செயல்படுத்துகின்ற அமைப்புக்கு நம்பிக்கையுடன் இருப்பேன் என்று பொருள் என்று விளக்கினார் தந்தை பெரியார். அதன்பிறகு, அந்த நிருபர் எதுவும் சொல்லமுடியாமல் மவுனமானார்.
இன்னமும் இடஒதுக்கீட்டை முழுமையாகப் பெற முடியவில்லை. அரசமைப்புச்சட்டத்தின் பிரிவு 17 கூறும் தீண்டாமை ஒழியவில்லை. தேநீர்க்கடைகளில் இரட்டை குவளைகள் உள்ளன. அதே நிலையில் சாராயக்கடைகளில் ஒரே குவளையாக உள்ள நிலை. போதைகளில் ஜாதி, மத போதைகள் அதிக மாக உள்ளன. அண்ணல் அம்பேத்கர் 126ஆம் பிறந்த நாள் நிறைவடைந்து 127ஆம் பிறந்த நாள் தொடங்குகிறது. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்ற தலைவர்களை படங்களாகப் பார்க்காதீர்கள், பாடங்களாகப் பாருங்கள். அம்பேத்கர் என்று சொன்னதும் பலபேர் அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் என்று கூறுகிறார்கள். அப்படி அல்ல, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல், உலக மக்களின் தலைவர் ஆவார். தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த தலைவர். தந்தை பெரியார் சொல்வார். மனிதன் தானாக, தனக்காக பிறக்கவில்லை. மனித சமுதாயத்துக்காக தொண்டாற்ற வேண்டும் என்கிறார்.
சமுதாயத்தில் மற்றவர் உயர கைதூக்கிவிடுங்கள். அம்பேத்கர் கற்பி, ஒன்று சேர், போராடு என்றார். ஆடுகளாக இருக்கும்வரை பலியிடப்படுவீர்கள், சிங்கங்களாக மாறினால், பலியிடப்பட மாட்டீர்கள். ஆகவே, இருபெரும் தலைவர்களின் கொள்கைகளை அனைவரும் கடைபிடியுங்கள். வாழ்க தந்தை பெரியார், வாழ்க பாபா சாகேப் அம்பேத்கர்.
இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றியபோது குறிப்பிட்டார்.
கலந்துகொண்டவர்கள்
திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் வீ.கும ரேசன், பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன், ஓஎன்ஜிசி அலுவலர்கள், பணியாளர்கள், ஓஎன்ஜிசி எஸ்சிஎஸ்டி பணியாளர்கள் நலச்சங்கத்தின் பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவை யொட்டி வறியநிலையில் உள்ள பெண்களுக்கு சேலைகள், சுடிதார்கள் ஓஎன்ஜிசி மற்றும் ஓஎன்ஜிசி எஸ்சிஎஸ்டி பணியாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டன. விழா முடிவில் வனிதா நன்றி கூறினார்.
தமிழர் தலைவரின் மனிதநேயம்
ஓ.என்.ஜி.சி. அனைத்திந்திய தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பணியாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் சி.ஆறுமுகம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைப்பதற்காக பெரியார் திடலில் அணுகியபோது, அவருக்கு கிடைத்த வரவேற்பு, அன்பின் மனிதநேயத்தை வெளிப்படுத்தியது என்றும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மிகவும் மகிழ்வுடன் உடனடியாக வருகை தருவதற்கான ஒப்புதலை அளித்தார் என்பதையும் நன்றிப்பெருக்குடன் குறிப்பிட்டு நன்றியறிதலைத் தெரிவித்துக்கொண்டார்.