சமூகநீதி, மதச்சார்பின்மை இவற்றைப் புறந்தள்ளி இந்துத்துவாவை நிலை நிறுத்தத் துடிக்கிறது மத்திய பி.ஜே.பி. ஆட்சி!
அபாயகரமான இந்த பி.ஜே.பி. ஆட்சியை முறியடிக்க எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் சோனியா காந்தியின் முயற்சி வெல்லட்டும்!
சற்றுத் தாராளமான முறையில் எதிர்க்கட்சிகளும் ஒத்துழைக்கவும் வேண்டும்
தமிழர் தலைவரின் காலங்கருதிய முக்கிய அறிக்கை
சமூகநீதி, மதச்சார்பின்மை இவற்றைப் புறந்தள்ளி இந்துத்துவாவை ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி நிலை நிறுத்தவும், அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறத் திட்டங்களைத் தீட்டும் மத்திய மதவாத ஆட்சியை வீழ்த்திட, காங்கிரசு தலைவர் சோனியா காந்தி அவர்கள் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் சிறப்பான முயற்சியை மேற்கொண்டுள்ளார்; அவர் முயற்சி வெற்றி பெற எதிர்க்கட்சிகள் இணக்கமான முறையில் ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் வடிவமான பா.ஜ.க. தலைமையிலான மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசு பல்வேறு தந்திரங்களையும், உத்திகளையும், வியூகங்களையும், வித்தைகளையும், அவ்வப்போது தனது நிறங்களையும், குரல்களையும் மாற்றி மாற்றி, எளிதில் எவரும் ஏமாந்துவிடக் கூடிய பல்வேறு நடைமுறைகளைக் கையாண்டு தேர்தல்களில் வெற்றி பெறுவதையே தனது இலக்காகக் கொண்டு இயங்கி வருகிறது!
அதனிடம் அதிகார பலம், பண பலம், வன்முறை பலம் (Muscle Power), பத்திரிகை பலம், திரிபுவாத திருகுதாள பலம் - எல்லாம் ஒருங்கே அமையப் பெற்று இப்போதே 2019 பொதுத் தேர்தலில் மீண்டும் தங்களது ஆட்சி அமைய திட்டமிட்டு பணியாற்றி வருகின்றது!
பா.ஜ.க. வெற்றிக்குப்
பின்புலம் எது?
பா.ஜ.க. வின் வெற்றிக்குப் பின்புலம் அதன் பலமோ, கொள்கைகளோ அல்ல; மாறாக, எதிர்க்கட்சிகளின் ஒற்று மையின்மை, பலவீனம்தான்! மக்களின் அறியாமையும் நம் இளைஞர்கள் ஏமாளித்தனமும்தான்!
‘‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு -
ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு!’’
என்பது இந்தியாவிலும், மாநிலங்களிலும் உள்ள எதிர்க் கட்சிகளுக்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒன்றாகும்!
அரசமைப்புச் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்துள்ள நிலையிலும், துணிந்து அரசியல் சட்ட துஷ்பிரயோகத்தை செய்யக்கூடிய ஆட்சியாகவும், கட்சியாகவும் இன்றைய பா.ஜ.க. ஆட்சி - கட்சி இரண்டும் உள்ளன.
ஒருபுறம், ஹிந்தித் திணிப்பு தென்னாட்டு மக்களின் மீது.
மறுபுறம் கர்நாடகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வாக்கு வங்கியை வளைத்துப் போட உச்சநீதி மன்றம் காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க தீர்ப்பு தந்தும், அந்நீதிமன்றத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு விட்ட அடுத்த சில நாள்களில் அப்படியே பகிரங்க தலைகீழ் ‘பல்டி’ அடித்தது எதைக் காட்டுகிறது?
திடீரென்று ‘‘பசவண்ணா பஜனை’’, ‘‘தமிழ் மொழியின் மீது அளவில்லா காதல்’’ - பிரதமர் மோடியின் பேச்சில் வழிந்தோடிவரும் வஞ்சக இரட்டைக் குரல் - இரட்டை வேடம் இல்லையா?
இப்படி அடுக்கடுக்காய் எத்தனையையோ சுட்ட முடியும்.
பா.ஜ.க.வின் ‘நளினமான’ நடவடிக்கைகள்
இந்நிலையில், ஆளும் கட்சியின் அபாயகரமான ஹிந்துத்துவ கொள்கைகளான பசுப் பாதுகாப்பு, சிறுபான் மையினருக்கு எதிரான ‘பல நளினமான’ நடவடிக்கைகள் போன்றவைகளுக்கு இப்போது எதிர்த்து முற்றுப்புள்ளி வைக்கத் தவறினால், நாட்டின் ஜனநாயகமும், அரசியல் சட்டமும் கேலிக் கூத்தாகிவிடும்!
அனைத்து எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்புத் தேவை!
அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலையில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், நாட்டில் உண் மைப் பெரும்பான்மை பலம் கொண்ட மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற - மதச்சார்பின்மை, மாநில உரிமைகள், சமூகநீதி முதலிய கருத்து சுதந்திரம் - உண்ணும் - எண்ணும் சுதந்திரம் உள்பட பலவற்றைக் காப்பாற்றிட, அனைத்து எதிர்க்கட்சியினரும் ஓரணியில் திரண்டால், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் மதவாத அரசின், சமூகநீதிக்கான சதிராட்டம், கூட்டாட்சி முறைக்கு வேட்டு வைக்கும் ஒன்றை - ஆட்சியை மறைமுகமாகத் திணிப்பது போன்ற சூழ்ச்சிகளை - மக்கள் விரோத நடவடிக்கைகளை முறியடிக்க முடியும்!
இதற்கு முன் காணப்பட்ட ஒற்றுமையின்மையை எதிர்க் கட்சிகள் கைவிட்டு - சற்று தாராளமான அணுகுமுறையில், தீ எரியும்போது, அணைப்போர் எப்படி ஒற்றுமையுடன் நின்று தீயை அணைப்பார்களோ அப்படி ஒன்றுபட்டு ஓரணியில் திரளவேண்டிய சரியான தருணம் இது!
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் சோனியா அவர்களின் சிறப்பான முயற்சி!
இன்று ‘தி எகனாமிக் டைம்ஸ்’ நாளேட்டில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி அவர்கள் இதற்கான கடும் முயற்சியை மேற்கொண்டு அத்துணை அரசியல் எதிர்கட்சிகளை ஒரே அணியில் கொண்டுவர - குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு, தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார் என்பது நம்பிக்கை ஒளியாகும். இது வரவேற்றுப் பாராட்டத்தக்க சிறப்பான முயற்சியாகும்.
மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் ஒரே அணியில்,
உத்தரப்பிரதேசத்தில் முலாயம் சிங்கின் சமாஜ்வாடியும், செல்வி மாயாவதியின் பகுஜன் கட்சியும் (ஏற்கெனவே பீகார் ஒற்றுமை சிறந்த பலனையும் தந்துள்ளது). தெற்கே ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாட்டில் தி.மு.க., கேரளாவில் இரண்டு கம்யூனிஸ்டுகள், சோஷியலிஸ்டுகளான சரத் யாதவ், நிதிஷ்குமார், லாலுபிரசாத் - இப்படி அனைத்து எதிர்க்கட்சிகளை ஓர் அணியில் திரள முயற்சிகளை எடுத்து வருவதாக வரும் செய்திகள் - காலத்தே மேற்கொள்ளப்படும் நல்முயற்சிகள்!
சோனியா காந்தியின் முயற்சி வெற்றி காணட்டும்!
பொது எதிரிதான் முக்கியம். பொது எதிரி - மதவாதம், மாநிலங்களின் கூட்டாட்சி முறைப் பறிப்பு - சமூகநீதி - மதச்சார்பின்மைப் பறிப்பு, ஜனநாயக வழிமுறைகளைத் தடுப்பது இவைகள்தான் - பிரதமர் மோடியின் தலைமையில் ஆர்.எஸ்.எஸ்.சால் கண்காணிக்கப்பட்டு நடத்தப்பட்டு வரும் ஆபத்தான போக்குகள்!
‘‘Now or Never’’ - ‘‘இப்போது இன்றேல் எப்போதும் கிட்டாது’’ என்ற கருத்து மொழிக்கேற்ப, பா.ஜ.க.வினர் அரசியல் நடத்துகின்றனர்! வெற்றிக்காக எதையும் இழக்க அவர்கள் ஆயத்தமாகி விட்டனர். இந்நிலையில், சோனியா காந்தி அம்மையாரின் முயற்சி முழு வெற்றியாக நம் வாழ்த்துகள்! இது காலத்தின் கட்டாயம்!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
4.5.2017