இந்துத்துவா சக்திகளை முறியடிப்பதே
நம் தலைவர்களுக்கு நாம் காட்டும் மரியாதை!
விடுதலை சிறுத்தைகள் விருது அளித்த விழாவில் 'அயோத்திதாசர் ஆதவன் விருது’ பெற்ற கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் உரை
சென்னை, மே 8- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் அளிக்கப்பட்ட விழாவில் திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் உரையாற்றுகையில் இந்துத்துவா சக்திகளை முறியடிப்பதே - நம் தலைவர்களுக்கு நாம் காட்டும் உண்மையான மரியாதை என்றார்.
சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் 4.5.2017 அன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் விருதுகள் வழங்கப்பட்டன.
Ôஅயோத்திதாசர் ஆதவன் விருதுÕ பெற்றுக்கொண்டு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஏற்புரையாற்றினார்.
கவிஞர் கலி.பூங்குன்றன் உரை
இந்த நாள் எனக்கும் மிக முக்கியமான நாளாக நான் கருது கிறேன். அதேநேரத்தில் எனக்கென்று உள்ள சாதனைகள், திறமைகள் இவற்றால் அடையாளம் காணப்பட்டு இந்த விருது எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என நினைத்தால், என்னைவிட பைத்தியக்காரன் இருக்க முடியாது. இது கண்டிப்பாக திராவிடர் கழகம் இந்த நாட்டிலே ஆற்றி வருகின்ற தொண்டு, தந்தை பெரியாரால் நாம் பெற்ற பலன், எழுச்சி, தந்தை பெரியாருக்குப் பின்னாலே அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி ஆகியோர் ஆற்றிய, ஆற்றுகின்ற தொண்டு இவற்றுக்கு அடையாளமாக யாரையோ ஒருவரைக் கூப்பிட்டு, விருது கொடுக்க வேண்டும் என்பதற்காக, இந்த விருதை எனக்கு அளித்திருக்கிறார்கள் என்று நான் அடக்கத்தோடு சொல்ல விரும்புகின்றேன்.
இன்றைக்கும் 90 வயதைக் கடந்த எண்ணற்ற தந்தை பெரியாரின் தொண்டர்கள், கருஞ்சட்டை அணிந்து, மரணத் தின் வாயிலில் நின்றுகொண்டு, அந்த நேரத்தில்கூட மரண சாசனத்தை எழுதிவைத்துக்கொண்டு, நான் மரணமடைந்தால், எந்தவித மதச் சடங்குகளும் செய்யப்படக்கூடாது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், என் உடலை மருத்துவ மனைக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று சொல்கின்ற லட்சக்கணக்கான இயக்கத் தொண்டர்களுக்கெல்லாம் சேர்த்து ஒருவனைத் தேடி இந்த விருதைக் கொடுத்ததாக நான் கருதி, இந்த நேரத்திலே என்னுடைய மனமார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மயிலாடுதுறையிலே சாதாரண குடும்பத்திலே பிறந்த நான், புத்தன் தேநீர் விடுதி வைத்திருந்த அண்ணன் அரங்க சாமி அவர்களால் இந்த இயக்கத்துக்கு ஈர்க்கப்பட்டு, எங்கள் வீட்டில் அண்ணன் ம.க.கிருஷ்ணமூர்த்தி அவர்களுடைய வழி காட்டலால் இந்த இயக்கத்திலே நின்று கொண்டிருக்கின்றேன்.
தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் இந்த மூன்று தலைவர்களின்கீழே பணியாற்றக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது மிகப்பெரிய பேறு. அதுவும் கலி.பூங்குன்றன் மைனஸ் ஆசிரியர் வீரமணி என்றால், நான் ஒரு பூச்சியம். முழுக்க முழுக்க அவரால் தயாரிக்கப்பட்ட ஒருவன் என்பதை இந்த நேரத்திலே அடக் கத்தோடு நான் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கி றேன்.
“பள்ளன், பறையன் இயக்கம்
திராவிடர் கழகம்”
இந்த விளம்பரத்திலே ஒரு செய்தியை நான் படித்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காக பாடுபட்டுவரும் தலித் அல்லாத சான்றோரைப் போற்றும் வகையில் என்று ஒரு வரி இருக்கிறது. இது எங்களுக்குப் பொருந்தாது என்று கருதுகிறேன். ஏனென்றால், திராவிடர் கழகமே ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இருக்கக்கூடிய ஓர் இயக்கம். இன்னும் சொல்லப்போனால், இந்த இயக்கத்துக்குப் பெயரே பள்ளன் கட்சி, பறையன் கட்சி என்பதே! தந்தைபெரியார் சொல்லுவார், சூத்தி ரனாக இருப்பதை விட தாழ்த்தப்பட்டவனாக இருப்பது பெருமை என்று சொன்னார். அதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது தந்தை பெரியார் சொன்னார், சூத்திரன் என்றால் வேசி மகன் என்று பொருள். விபச்சாரி மகன் என்று பொருள். அந்த இழிவு தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கிடையாது.
தந்தை பெரியாரை ஒரு பொதுக்கூட்டத்தில் கேள்வி சீட்டு எழுதி கேட்டார்கள். அய்யா, சூத்திரன் பிர்மாவினுடைய காலிலிருந்து பிறந்தான் என்று சொல்கிறார்களே, பிராமணன் பிர்மாவினுடைய நெற்றியிலிருந்து பிறந்ததாக சொல்கிறார் களே, சத்திரியன் பிர்மாவினுடைய தோள்பட்டையிலிருந்து பிறந்ததாக சொல்கிறார்களே, வைசியன் பிர்மாவின் தொடை யிலிருந்து பிறந்ததாக சொல்கிறார்களே, அய்யா தாழ்த்தப்பட்ட வர்கள் எங்கேயிருந்து பிறந்ததார்கள்? என்ற ஒரு கேள்வியை தந்தை பெரியார் அவர்களிடம் கேட்டார்கள். தந்தை பெரியார் அவர்கள் அவருக்கே உரித்தான முறையில், அவர்கள்தான் முறையாக அவர்களின் அப்பா, அம்மாவுக்குப் பிறந்தவர்கள் என்று சொன்னார்.
பெரியார் திடலும் திருமாவும்
அந்த மக்கள் கொடுக்கின்ற விருதைவிட உலகத்தில் சிறந்த விருது ஒன்று இருக்க முடியாது என்பது என் கருத்து. நான் திருமா அவர்களை அண்ணன் என்று சொல்வேன், அவர் என்னை அண்ணன் என்று சொல்வார் மரியாதைக்கு. அவர் சட்டக்கல்லூரியில் படிக்கும்போது, மாலை நேரம் இருக்கின்ற இடம் பெரியார் திடல். பெரியார் திடலில் வளர்ந்த பிள்ளை, பெரியார் திடலில் வளர்ந்த குழந் தைக்கு விருது அளித்திருக்கிறது என்று நான் கருதுகிறேன். ஈழ விடுதலைப் போராட்டம், ரயில் மறியல் போராட்டத்தில் எங்களோடு கலந்துகொண்டு, கைதானவர் தொல்.திருமா என்பதை உங்களுடைய கவனத்துக்கு நான் கொண்டு வர விரும்புகின்றேன். திராவிடர் கழகம் நடத்துகின்ற மிக முக்கியமான நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும், அங்கே எழுச்சித் தமிழர் இருப்பார்.
அதேபோல, விடுதலை சிறுத்தைகள் நடத்துகின்ற எந்த சிறந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அங்கே தமிழர் தலைவர் ஆசிரியர் இருப்பார். ஒருமுறை ஆசிரியர் சொன்னார், நன்றாக நினைவிருக்கிறது. எழுச்சித் தமிழருக்கு உள்ள இடம் இந்த நாட்டிலே கண்டிப்பாக வந்தே தீரும். அதற்கு திராவிடர் கழகம் தோள் கொடுக்கும், துணை நிற்கும் என்று அறிவித்த வர் தமிழர் தலைவர்.
தேர்தலில் அவர் தோல்வி கண்டதால், மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கருத வேண்டிய அவசிய மில்லை. தந்தைபெரியார்கூட தேர்தலில் நிற்கவில்லைதான். இரண்டு முறை கதவைத்தட்டி முதலமைச்சர் பதவி அவருக்கு வந்தபோது கூட, நீங்கள் அட்ரஸ் தெரியாமல் வந்துட்டீங்க என்று சொன்னார். இந்த முதலமைச்சர் பதவிக்கு ஏராளமான வர்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்தப்பணியை செய்ய என்னைவிட்டால் நாதி இல்லை என்று சொன்னார். தந்தை பெரியார் பதவிக்கு செல்லாமல் இருந்ததால்தான் தமிழர்கள் எல்லாம் பதவி பெற்றார்கள். நாம் மறந்துவிடக்கூடாது. இன்னொரு முறை குறும்புத்தனமாகக் கேட்டார்கள். நீங்கள் ஏன் தேர்தலில் நிற்கவில்லை என்று தந்தை பெரியாரைக் கேட்டபோது, அவர் சொன்னார், எனக்கு ஓட்டு போடுகின்ற அளவுக்கு மக்களுக்கு புத்திசாலித்தனம் இல்லை என்று சொன்னார். இது ஒரு மிக முக்கியமான ஒரு காலக்கட்டம்! இந்த பாராட்டு புகழ்ச்சி என்பதெல்லாம் ஒரு பக்கம். இன்றைய காலக்கட்டம் எப்படி இருக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். நீங்கள் அயோத்திதாசர் பெயரிலே விருது கொடுத்தாலும் சரி, அண்ணல் அம்பேத்கர் பெயரிலே விருது கொடுத்தாலும் சரி, தந்தை பெரியார், காமராசர் பெயரில் விருது கொடுத்தாலும் சரி, ஒரு மய்யப்புள்ளி என்பது ஜாதி ஒழிப்பு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
அயோத்திதாசர் யார்?
திராவிட இயக்கம் 1912இல் டாக்டர் நடேசனார் அவர் களால் தொடங்கப்பட்டது என்றால், 1891இல் திராவிட மகா சபை உண்டாக்கியவர்தான் அயோத்திதாசர் என்பது வரலாற் றுக் குறிப்பு. அதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்னாலே 1885இல் “திராவிடப் பாண்டியன்” என்ற பத்திரிகையும் நடத்தி யிருக்கிறார். ஆகவே, விடுதலை சிறுத்தைகள் என்றால், அதுவும் ஒரு திராவிட இயக்கமே!
திராவிடத்தால் எழுந்தோம்!
திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்லுகிறவர்கள் இருக்கிறார்கள். அதற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் கொடுத்த பதிலைவிட, கடந்த ஆண்டு தந்தை பெரியார் நினைவு நாளில் டிசம்பர் 24 அன்று எழுச்சித் தமிழர் பெரியார் திடலில் உரையாற்றினார். மிகச்சிறப்பான உரை. அன்று அவர் ஆற்றிய உரையும், மதுரையிலே ஆசிரியர் அவர்களுக்கு வாகனம் கொடுத்த விழாவிலும், எழுச்சித் தமிழர் ஆற்றிய உரையும் திராவிடர் கழக நூலாக வெளி வந்திருக்கிறது. திராவிடத்தால் எழுந்தோம் என்கிற பெயரிலே வந்திருக்கிறது. அதிலே அவர் சொல்லுகிறார், திராவிடம் என்று சொன்னால், ஜாதி ஒழிப்பு என்று பொருள். திராவிடம் என்று சொன்னால், பெண்ணடிமை ஒழிப்பு என்று பொருள். திராவிடம் என்று சொன்னால் மூடநம்பிக்கை ஒழிப்பு என்று பொருள். திராவிடம் என்று சொன்னால், இந்துத்துவத்தை வேரறுப்பது என்று பொருள் என்று அழகான முறையிலே அந்தக்கருத்தை எடுத்துச்சொன்னார்.
பெரியாரும், அயோத்திதாசரும்
1947 ஆகஸ்டு 15இல் இந்தியா சுதந்திரம் அடைந்ததாக சொல்லப்பட்டாலும், 1912இல் தமிழன் இதழில் அயோத்திதாசர் அவர்கள் எழுதுகிறார், இந்த திராவிடர்களுக்கு சுதந்திரம் அளித்தால் இம்மண்ணின் மைந்தர்களான ஆதித்தமிழர் களிடம் அந்த அதிகாரத்தை வழங்க வேண்டும்.
சுயாட்சியத்தை அளிப்பதாயினும், இத்தேசப் பூர்வக்குடி களுக்கு அளிப்பதே கருணையாகும். நேற்றுக் குடியேறி வந்தவர்களையும், முன்னாடி குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் எனக் கருதி அவர்கள் வசம் சுயராட்சிய ஆளு கையைக் கொடுத்தால் நாடு பாழாகி சீர்கெட்டுப் போகும் என்று ‘தமிழன்’ இதழில் (30.10.1912) தொலைநோக்கோடு எழுதினார். இதே கருத்தை 1925இல் சேலத்தில் தந்தை பெரியார் வேறு ஒரு முறையில் சொல்கிறார், வெள்ளைக் காரர்கள் இருக்கின்றபோதே, இந்த பார்ப்பன ஆதிக்கப் பிரச் சினைக்கு ஒரு முடிவு கட்டப்பட வேண்டும். இல்லையென்றால், இதில் டெமாக்கரசி இருக்காது, பிராமினோகரசி இருக்கும் என்று சொன்னார். Ôஇந்துÕ பத்திரிகையின் நூற்றாண்டு விழா மலரில், பிராமினோகரசி என்கிற புதிய வார்த்தையை ஆங் கிலத்துக்கு பெரியார் கொடுத்திருக்கிறார், பிராமினோகரசி என்கிற வார்த்தையே இல்லை. ஆனால், ஆங்கில அகராதிக்கு புதிய வார்த்தையை பெரியார் கொடுத்திருக்கிறார் என்று இந்து பத்திரிகை சொன்னது. இப்படி, தந்தை பெரியாராக, அம்பேத்கராக இருந்தாலும், அயோத்திதாசராக இருந்தாலும் அவர்களின் கருத்துகள் முக்கியமான புள்ளியில்தான் சந்திக்கின்றன.
தகுதி, திறமை குறித்து
உச்சநீதிமன்ற நீதிபதி
ஒரு முறை டில்லி பல்கலைக்கழகம் சம்பந்தமான வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு செல்கிறது. அது மதிப்பெண் அடிப் படையில் தகுதி, திறமை பற்றிய வழக்கு. அந்த வழக்கிலே உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர்.ரவீந்திரன் சொல்கிறார் ரொம்ப தகுதி, திறமை மார்க் என்றெல்லாம் அதிகம் பேசாதீர்கள், நீங்கள் சொல்கின்ற மார்க் தகுதியை வைத்திருந்தால் ஓர் அம் பேத்கர் கிடைத்திருக்க மாட்டார். அம்பேத்கர் 37 மதிப் பெண்கள் பெற்றார். நீங்கள் சொல்லுகின்ற மார்க்குதான் தகுதி, திறமை என்றால், இந்திய அரசுக்கு ஓர் அரசமைப்புச்சட்டம் கிடைத்திருக்காது என்று சொன்னவர் உச்சநீதிமன்ற நீதிபதி. இன்றைக்கு தகுதி, திறமை என்றால் மதிப்பெண் (மார்க்) என்கிற ஒரு முறையை வைத்திருக்கிறார்கள். அது ஒரு மனப்பாடம் அவ்வளவுதான். அது ஒரு மோசடி!
வைகை எக்ஸ்பிரஸ் சோதனை
ஓட்டுநர் தாழ்த்தப்பட்டவர்
ஒன்றைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். வைகை எக்ஸ்பிரஸ் மதுரையிலிருந்து எழும்பூருக்கு பயிற்சி ஓட்டம், மூத்த ஓட்டுநர்கள்தான் அதை ஓட்டுவார்கள். அப்போது மீட்டர் கேஜில் மிக அதிக வேகமாக ஓடக்கூடிய ரயில் வைகை எக்ஸ்பிரஸ். எந்த சீனியர் ஓட்டுநரும் ஓட்ட முன்வரவில்லை. ஒரேயொரு இளைஞர்தான் ஓட்ட முன் வந்தார். அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதை மறந்துவிடக்கூடாது. இது தகுதி இல்லையா? இது திறமை இல்லையா? வெறும் மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்குவதுதான் தகுதி திறமையா? இது பார்ப்பன ஆரிய சூழ்ச்சி. இதையும் நாம் உடைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
சிறையில் உள்ள பார்ப்பனர்கள்
யாருக்கு பிறந்தார்கள்?
சென்னையிலே இராயப்பேட்டையிலே ஒரு பார்ப்பனர் சிவநாம சாஸ்திரி உபதேசம் செய்கிறார். அந்தக் கூட்டத்துக்கு அயோத்திதாசர் செல்கிறார். அந்த சிவநாம சாஸ்திரி என்ன சொல்கிறார்? திருவள்ளுவர் மிக புத்திசாலித்தனமான கருத்து களை எல்லாம் சொல்லியிருக்கிறார். அதனாலே அவர் பிராம ணருக்குப் பிறந்திருக்க வேண்டும். (கண்டு பிடித்திருக்கிறார் பாருங்கள்). அயோத்திதாசர் எதிர்பாராத விதமாக அங்கே செல்கிறார். உடனே எழுந்து சில கேள்விகளை கேட்கிறார். திருவள்ளுவர் இவ்வளவு சிறந்த புத்திசாலித்தனமான கருத்துகளைக் கூறுவதற்கு காரணம் பிராமண விந்துவுக்கு பிறந்திருக்க வேண்டும் என்று சொல்லுகிறீர்கள். இன்றைக்கு வெள்ளைக்கார ஆட்சியினாலே, தாழ்த்தப்பட்டவர்கள் பி.ஏ., எம்.ஏ., படித்து பெரிய நிலைக்கு வந்திருக்கிறார்களே, அவர் கள் எல்லாம் யார் விந்துக்குப் பிறந்தவர்கள்? இரண்டாவது கேள்விதான் முக்கியம். சிறைச்சாலைகளிலே கொடுமையான தண்டனைகளைப் பெற்றிருக்கிறார்களே பார்ப்பனர்கள், அவர்கள் யார் விந்துக்குப் பிறந்தவர்கள்? கேட்டவர் அயோத்திதாசர். கொஞ்ச நேரத்திலே சிவநாம சாஸ்திரியை காணவில்லை மேடையிலே.
அயோத்திதாசர் என்றால் என்னவோ ஒரு தாசர் என்று நினைக்கக்கூடாது. எத்தகைய வீரியமுள்ள, நேருக்குநேர் எதிர்க்கக்கூடிய திராணி படைத்தவர்கள் இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
திருக்குறளும், பார்ப்பனர்களும்,
எல்லீஸ்துரையும்
இன்றைக்கு திருக்குறளைப்பற்றி சொல்லும்போது, தமிழ்த் தாத்தா உ.வே.சா.தான் கொண்டு வந்தார் என்று சொல்லிக் கொள்வார்கள். அயோத்திதாசனார் பாட்டனார் கந்தசாமி. அவர் எல்லீஸ் துரை வெள்ளைக்காரரிடம் பணியாற்றினார். ஒரு பழைய திருக்குறள் புத்தக ஓலைச்சுவடியைக் கொண்டு வந்து கொடுக்கிறார். அந்த எல்லீஸ் துரைக்கு தமிழ் கற்றுக் கொடுப்பவர்கள் பார்ப்பனர்கள். இந்த செய்தியை சொல்லு கிறார், ‘கந்தசாமி திருக்குறள் ஓலைச்சுவடியை கொண்டு வந்திருக்கிறார்’ என்றதும், அய்யய்யோ, திருக்குறளா? அது தீண்டத்தகாதது என்று அந்த பார்ப்பனர்கள் சொல்லுகிறார்கள். கந்தசாமி வந்தவுடன் அவரிடத்தில் கேட்கிறார், என்ன இந்த பார்ப்பனர்கள் எல்லாம் திருக்குறள் தீண்டத்தகாதது என்று சொல்லுகிறார்களே, என்ன விஷயம் என்று கேட்கிறார்.
அது ஒன்றுமில்லை, அவர்களுக்கும், எங்களுக்கும் நீண்ட காலப் பரம்பரைப் பகை. பார்ப்பனர்கள் எங்கள் வீதி யில் வந்தால், நாங்கள் விரட்டி அடிப்போம். வந்த பாதையில் சாணி கரைத்து ஊற்றுவோம். ஆகவே, அவர்களுக்கும் எங்களுக்கும் பெரிய பகை இருக்கிறது என்று சொல்லுகிறார் கந்தசாமி. அற்குப் பின்னால் உண்மை உணர்ந்து எல்லீஸ் துரை அவர்கள் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த் தார். ஒரு பகுதிதான் அவரால் மொழி பெயர்க்க முடிந்தது. அதற்குள் மரண மடைந்து விட்டார். இதற்கு வரலாறு இருக்கிறது.
இப்போதுள்ள பிரச்சினைக்கு வருவோம். இன்றைக்கு நம்மை சூழ்ந்திருக்கக்கூடிய பேராபத்து என்ன? இதுபோன்ற விழாக்களில் நாம் அவற்றைப்பற்றி கவலையோடு சிந்திக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இப்போது மத்திய அரசாங் கத்திடமிருந்து ஒரு சுற்றறிக்கை வந்திருக்கிறது. அவர்கள் ஒரு சுற்றறிக்கையை விட்டிருக்கிறார்கள். பாரதிய ஜனசங் கத்தை உண்டாக்கிய பண்டிட் தீனதயாள் உபாத்யாயா அவரைப்பற்றிய சுற்றறிக்கையை மத்திய அரசு, மத்திய அரசினுடைய பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுப்பியிருக்கிறது. என்னவென்றால், இனி நீங்கள் பயன்படுத்துகின்ற அந்த கடிதத் தொடர்புகளில் நூற்றாண்டு காணும் தீனதயாள் உபாத்யாயா படம் போட்ட அந்த லோகோவை பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அந்த சுற்றறிக்கை. யார் அந்த தீனதயாள்? ஜனசங்கத்தை உண்டாக்கியவர். இப்போது பிஜேபி அதிகாரத்திற்கு வந்திருக்கின்ற காரணத்தாலே எப்படி யெல்லாம் அவர்கள் தங்களுடைய இந்துத்துவாத் தன்மை களைப் புகுத்துகிறார்கள். அந்த உபாத்யாயா பெயரினைப் பல நிறுவனங்களுக்கு சூட்டுகிறார்கள்.
இந்துத்துவா திணிப்புகள்!
பண்டிட் தீனதயாள் உபாத்யாயா சேகாவதி பல்கலைக் கழகம் ராஜஸ்தானில். பண்டிட் தீனதயாள் உபாத்யாயா சனாதன தரும பள்ளி கண்டியூர், தீனதயாள் உபாத்யாயா கோரக்பூர் பல்கலைக்கழகம், தீனதயாள் உபாத்யாயா மருத் துவமனை புதுடில்லி, பண்டிட் தீனதயாள் உபாத்யாயா கல்விக்கூடம் கான்பூர், தீனதயாள் உபாத்யாயா பெட்ரோலியப் பல்கலைக்கழகம், காந்திநகர் குஜராத், தீனதயாள் உபாத்யாயா மருத்துவக்கல்லூரி ராஜ்கோட் குஜராத், தீனதயாள் உபாத் யாயா மருத்துவமனை சிம்லா இப்படி இவர்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பின்னாலே இந்துத்துவாவை, அதிகாரத்தைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் திணிக்கிறார்கள் என்பதை நாம் சிந்தித்துப்பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறோம். மிகப் பெரிய ஆபத்து சூழ்ந்திருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், காலூன்றுவதற்கு பல வழிகளில், பல முயற்சிகளில், தந்திரங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு மாநிலத்தில் ஓர் ஆட்சி இருக்கிறது என சொல்லிக்கொள்கிறார்கள். ஜெயலலிதா அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்ட நேரத்திலே, மத்தியிலே பிஜேபி ஆட்சி எப்படி நடந்துகொண்டது?
இந்த ஆட்சிக்குப்பின்னாலே யார் இருக்கிறார்கள் சரியாக இரண்டு தலைவர்கள்தான் சொன்னார்கள். அதிமுகவின் ஆட்சிக்குப் பின்னாலே பாஜக இருக்கிறது என்று சரியாக சொன்ன தலைவர்கள் இரண்டு பேர். ஒருவர் திராவிடர் கழகத் தலைவர், மற்றவர் விடுதலை சிறுத்தைகள் கட்சினு டைய தலைவர். அன்றைக்கு அவர்கள் சொன்ன பொழுது பலர் முகம் சுளித்தார்கள். ஆனால், அவர் சொன்னதுதான் இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
பிஜேபியினர் கனவு காண முடியாது
திராவிடக்கட்சிகளில் ஒன்றை ஒழித்துவிட்டு, அந்த இடத்தில் தாங்கள் வந்துவிட வேண்டும் என்கிற ஓர் அரசியல் தந்திரத்தோடு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், திராவிட இயக்கமும், விடுதலை சிறுத்தைகளும் இந்த நாட்டில் இருக்கின்றவரை அவர்கள் கனவு காண முடியாது என்பதை மட்டும் இந்த நேரத்திலே அர்த்தத்தோடு தெரி வித்துக்கொள்ள விரும்புகிறோம்.
கடைசியாக ஒன்று, அவர்கள் இன்றைக்கு தமிழ்நாட்டிலே வேரூன்றுவதற்கு ஒரு திட்டத்தை வகுத்து வைத்திருக்கிறார் கள். 1,500 முழு நேரப்பணியாளர்கள். 2,500 பகுதிநேரப் பணி யாளர்கள். களப்பணியாளர்கள் ஒன்றரை லட்சம் பேர். ஒவ் வொரு பஞ்சாயத்திலும் ÔஷாகாÕ நடைபெற வேண்டும். இப்படி ஒரு பெரிய திட்டத்தோடு, இங்கே களமிறங்க இருக்கிறார்கள். அவர்களை களத்தில் சந்திக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு திராவிட இயக்கத்துக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் உண்டு சந்திப்போம்! - நம் தலைவர்களுக்கு நாம் காட்டும் உண்மையான மரியாதை அதுவாகத்தான் இருக்க முடியும் என்பதை இந்த நேரத்தில் எடுத்துச்சொல்லி இந்த அருமையான பேற்றினை, பெருமையினை எனக்கு வழங்கிய, பெரியார் தொண்டர்களுக்கு வழங்கிய விடுதலை சிறுத்தைகளுக்கும், அதன் ஒப்பற்ற தலைவர் எழுச்சித் தமிழருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். வணக்கம்.
இவ்வாறு கவிஞர் கலி.பூங்குன்றன் பேசினார்.