Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மத்திய அரசு பணிகளில் சேரலாமாம் மத்திய அரசின் பாசிச இந்துத்துவ திட்டத்தை முறியடிப்போம் வாரீர்!

$
0
0

சமஸ்கிருதத் திணிப்பையடுத்து அடுத்த கட்டம்

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மத்திய அரசு பணிகளில் சேரலாமாம்

மத்திய அரசின் பாசிச இந்துத்துவ திட்டத்தை முறியடிப்போம் வாரீர்!


தமிழர் தலைவர் ஆசிரியர் முக்கிய அறிக்கை

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் கட்டாயம் சமஸ்கிருதம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மத்திய அரசு பணிகளில் சேரலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த இந்துத்துவா, ராம ராஜ்ய அணுகு முறையை மதச் சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து முறியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தேர்தல் முடிவுகள்  - திராவிட கட்சிகளுக்கு மாற்று ஏதுமில்லை என்பதற்கான நிரூபணம்!  அதிமுக வெற்றி மிகப் பெரியது என்றோ - தி.மு.க. தோல்வி பரிதாபமானது என்றோ சொல்லுவதற்கு இடமேதுமில்லை

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ளவர்கள் மத்திய அரசு பணிகளில் சேரலாம் என்று மத்திய பிஜேபி அரசு முடிவெடுத்துள்ளது என்ற செய்தி அபாயகரமானது; வீதிகளில் சண்டையிட்டவர்கள் இப்பொழுது அரசு அலுவலகங்களை யுத்தக் களமாக கொலைக்களமாக மாற்றப் போகிறார்கள்.

சிறுபான்மையினரும் - மதச் சார்பற்ற  கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்களும் ஒவ்வொரு நொடியையும் அமைதியற்ற முறையில் கழிக்க வேண்டும் என்கிற அபாயகர நிலைக்குக் கத்தியைத் தீட்டி விட்டார்கள் என்று தெரிகிறது.

குஜராத்தில் அன்று பிறப்பித்த ஆணை

2000ஆம் ஆண்டு பிப்ரவரியில் குஜராத் மாநிலத்தில் - நரேந்திர மோடிக்கு முன்னதாக முதல் அமைச்சராக இருந்த கேசுபாய் படேல் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அரசு பணியில் சேரலாம் என்று ஆணை பிறப்பித்து ஆழம் பார்த்தார். அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயும் ஆமாம் ஆர்.எஸ்.எஸ். சமுதாய அமைப்புதான்  அரசு பணியில் சேரலாம் என்று ஆமாம் சாமி போட்டார். அதனைக் கண்டித்து அப்பொழுது ‘விடுதலை’யில் (12.2.2000) அறிக்கை வெளியிட்டோம்.

எதிர்ப்பால் பின் வாங்கப்பட்டது

நாடெங்கும் எதிர்ப்புகள் வெடித்துக் கிளம்பியவுடன் புற்றுக்குள்ளிருந்து வெளியே தலையை நீட்டிய அந்த ஆர்.எஸ்.எஸ். பாம்பு, புற்றுக்குள் தலையை இழுத்துக் கொண்டது. அந்த ஆணை பின் வாங்கிக் கொள்ளப்பட்டது. இன்றைக்கு மறுபடியும் அந்தப் பாம்புப் பட்டாங்கமாய் வெளியில் வந்து படம் எடுத்து ஆடுகிறது. மத்திய அரசுப் பணிகளில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சேர்த்துக் கொள்ளப்படலாம் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அஜண்டா ஒவ்வொன்றாக..

மோடி தலைமையில் பிஜேபி ஆட்சி அமைந்தவுடன் ஆர்.எஸ்.எஸின் அஜண்டாவிலிருந்து ஒவ்வொன்றாக வெளியில் எடுத்து செயல்படுத்தும் வேலையில் வேக வேகமாக இறங்கியுள்ளனர். இதன் நோக்கம் என்ன? இதன் பின் விளைவு எங்கே போய் முடியும்?

மத்திய அரசு ஆணை என்ன கூறுகிறது?

காந்தியாரின் கொலைக்குப் பிறகு தடைசெய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினருக்கு அரசுப் பதவிகள் வழங்கப்படமாட்டாது என்று மத்திய அரசு உறுதிமொழி ஒன்றை எடுத்தது, அதன்படி மத்திய அரசுப் பணியாளர் பதவி உறுதிமொழி ஆவணங்களில் நான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவனல்லன் என்று எழுதப்பட்ட விதிமுறைப் படிவத்தில்  கையொப்பமிடவேண்டும். இது கடந்த 60 ஆண்டுகாலமாக நடைமுறையில் இருந்து வந்தது.

இந்த நிலையில் திடீரென்று பிரதமரின் அலுவலகம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தாலும் பரவாயில்லை. அவர்களுக்கு மத்திய அரசுப்பணிகள் வழங்கலாம் என்றும் இதற்கு முன்பிருந்த தடையாணையை திரும்பப் பெற முடிவெடுத்துள்ளது.   

1948-ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி  காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தடைசெய்து 1948 பிப்ரவரி 4-இல் அரசு அறிக்கை வெளியானது. இந்த அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ். இந்துக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் தங்களுடைய நோக்கம் என்று கூறுகிறது. ஆனால், நடைமுறையில் அந்த இயக்கத்தவர்கள் அப்படி நடந்துகொள்ளவில்லை. விரும்பத்தகாத, அதேசமயம் பயங்கரமான சில நடவடிக்கைகளில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டுள்ளனர். பொதுச் சொத்துக்களுக்குத் தீயிடல், சேதப்படுத்துதல், கொள்ளை போன்ற சம்பவங்களில் அவர்களுக்குத் தொடர்பிருப்பது தெரியவருகிறது. சட்ட விரோதமாக ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும், குண்டுகளையும் அவர்கள் சேகரித்து வைத்துள்ளனர். அரசுக்கு எதிராகப் பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபடுமாறும், ஆயுதங்களைச் சேகரிக்குமாறும் அரசுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டிவிடுமாறும், காவல் துறை,  ராணுவம் ஆகியவற்றுக்குக் கட்டுப்பட மறுக்குமாறும்கூட அவர்கள் கூறுகின்றனர். அவர்களுடைய செயல்பாடுகள் ரகசியமாகவே உள்ளன.(இந்தியஅரசு, 1948 பிப்ரவரி 4 அரசு அறிக்கை)

மத்திய அரசு வெளியிட்ட இந்தத் தடையை அடுத்து 1951-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச்சேர்ந்த எவருக்கும் மத்திய அரசுப் பணிகள் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பில் முடிவெடுக்கப்பட்டு அது விதியாகவே சேர்க்கப்பட்டது.  

இந்த விதியின்படி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினர் அல்லது ஆதரவாளர் இல்லை என்று அரசுப் பணியில் சேர்பவர்கள் உறுதிமொழி எடுக்கவேண்டும். இந்த ஆணை 1966-ஆம் ஆண்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது, அதன் பிறகு 1975 மற்றும் 1980ஆம் ஆண்டுகளில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது,  தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்ட இந்த உறுதிமொழியை பிரதமர் அலுவலகமே இப்பொழுது நேரடியாக தலையிட்டு நீக்க உத்தரவிட்டுள்ளது.  

பிரதமர் அலுவலகத்தில் தனிச் செயலாளர் கூறுவது என்ன?

இது குறித்து பிரதமர் அலுவலக தனிச்செயலாளர் ஜிதேந்திரசிங் தலைநகர் டில்லியில் செய்தியாளர்களிடம் பேசும் போது, கோவா அரசுப் பணியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச்சேர்ந்த ஒருவர் பணிக்கு விண்ணப்பிக்கும்போது அவரது விண்ணப்பம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச்சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணமாக  முதலில் இருந்த ஒரு விதி மேற்கோள் காட்டப்பட்டது.

இது அரசமைப்புச் சட்டவிதிகளுக்கு முரணானது என்பது அரசின் நிலைப்பாடு; விரைவில் இதற்கான அரசு அறிக்கையை வெளியிடுவோம் இதற்கு முன் உள்ள தடை ஆணையை நீக்குவோம் என்றும் கூறியுள்ளார்.

மதச் சார்பற்ற சக்திகளே ஒன்று திரள்வீர்

இந்து ராஜ்யம், ராமராஜ்யம் என்ற அவர்களின் நோக்கத்தை - அந்த பெயர்களை அதிகாரப் பூர்வமாகக் கொடுக் காமலேயே தந்திரமாக இப்படி ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றனர்.
எச்சரிக்கை ! எச்சரிக்கை!!

காந்தியாரைக் கொன்ற, பசுவதை தடுப்பு என்ற பெயரில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரான பச்சைத்தமிழர் காமராசரை பட்டப்பகலில் இந்தியாவின் தலைநகர் டில்லியில் உயிரோடுகொளுத்த முயற்சி செய்த, 450-ஆண்டுகால வரலாறு படைத்த சிறுபான்மை  மக்களின் வழிபாட்டுத்தலமான பாபரி மசூதியை பட்டப்பகலில் கூட்டமாக வந்து இடித்து துவம்சம் செய்த கூட்டம், அரசு அலுவலகங்களில் நுழைகிறது.

நுழைந்தால் நாடு என்னவாகும் என்பதை சிந்தித்து செயல்படுவீர்

மதச் சார்பற்ற சக்திகளே ஒன்று திரண்டு பாசிச மதவாத இந்துத்துவ சக்திகளை முறியடிப்போம், வாரீர்! வாரீர்!!


கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்



------------------------



நீதிபதி வேணுகோபால்
ஆணையம் என்ன கூறுகிறது?


மண்டைக்காடு கலவரத்தையொட்டி அமைக்கப்பட்ட நீதிபதி பி. வேணுகோபால் ஆணையம் என்ன கூறுகிறது? இதோ?

ஆர்.எஸ்.எஸ். சிறுபான்மையினருக்கு எதிராக இந்துக்களின் உரிமைகளை பாதுகாப்பவர்கள் என்ற போர்வையில் தீவிரவாத ஆத்திரமூட்டும் செயல்களை செய்கிறது. இதுசிறுபான்மையினருக்கு ஒரு பாடம் கற்பித்துக் கொடுத்து அவர்களை உரிய இடத்தில் வைப்போம் என்ற கடமையை மேற்கொள்வதாகக் கூறி செயல்படுகிறது.

இதனுடைய செயல்பாட்டால் பல ஆண்டுகாலம் நண்பராக வாழ்ந்த இந்துக்களும், கிறிஸ்தவர்களும் ஓர் இரவுக்குள் பகைவராக மாறி விட்டனர். இத்தகைய ஒரு வகுப்புவாத ஸ்தாபனம் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினைகளையும், பதற்றத்தையும் மோதல்களையும் சமுதாயத்தில் உருவாக்குகிறது. இதற்கு எதிரான தத்துவார்த்த விஷயங்களை இவ்வியக்கத்தின் தத்துவம் மற்றும் செயல்பாடுகளின் அபாயங்களை மக்கள் மத்தியில் புரிய வைக்க வேண்டும். இவர்களது அணிவகுப்புகளையும், பயிற்சிகளையும் தடை செய்ய வேண்டும்.

"ஆர்.எஸ்.எஸ். கொள்கைகள் இந்த தேசத்தை கற்காலத்துக்கு அழைத்துச் செல்லும். ஆர்.எஸ்.எஸ். கொள்கையும், சித்தாந்தமும், மனித சமூகத்திற்கும், வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பொருத்தமானது அல்ல.

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் திராவிட கலாச்சாரத்துக்கும், பாரம்பரியத்துக்கும் எதிரானது. ஆர்.எஸ்.எஸின் தீங்கான கொள்கை மற்றும் சித்தாந்தம் குறித்து மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்து பொது மக்கள் மத்தியில் சரியான கருத்தை உருவாக்கினால் இது இந்த மண்ணில் வேரூன்ற இயலாது".


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles