'அம்மா ஆட்சி' என்று சொல்லிக் கொண்டே
மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டதில்
69% ஒதுக்கீடு பின்பற்றப்படாதது ஏன்?
இதன் பின்னணியில் நடந்ததுதான் என்ன?
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள சமூகநீதிக்கான அறிக்கை
தமிழ்நாட்டில் 744 மருத்துவர்கள் பணிக் கான நியமனத்தில் 69 சதவிகித வழிமுறை புறக்கணிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு மருத்துவத் துறைக் காலிப் பணியிடங்களுக்கான கலந்தாய்வில் சமூகநீதி அடிப்படையிலான 69% இட ஒதுக்கீடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி பெரும் அதிர்ச்சிக்கும், கண்டனத் திற்கும் உரிய ஒன்றாகும்.
இடஒதுக்கீடு விவரம் இல்லை
744 காலிப் பணியிடங்கள் இருப்பதாக 20.9.2017 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் இடஒதுக்கீடு வாரியான காலிப் பணியிட விவரம் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். இடஒதுக்கீடு பின்பற்றப்படும் என்ற பொதுவான அறிவிப்பு இடம்பெற்றுள்ளதே தவிர, எந்த துறைக்கு எந்த பணியிடம் என்ற விவரம் இடம்பெறவில்லை.
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட 577 பேரில் 465 பேருக்குப் பணிவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நவம்பர் 17, 18ஆம் தேதிகளில் நடந்த கலந்தாய்வுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது. (பொது சுகாதாரம் - 29; மருத்துவப் பணிகள் - 255; மருத்துவக் கல்லூரி - 181) இதிலும், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட்ட பணியிட விவரம் வெளியிடப்படாதது ஏன்? அதன் மர்மம்தான் என்ன?
Assistant Surgeon (Speciality) என்பது இதுவரை இல்லாத ஒரு பதவி (Post)க்கு இந்த கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. அதிலும் எந்தெந்த துறைக்கு எவ்வளவு காலிப் பணியிடம் என்று செப்டம்பரில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தரப்பட்ட விவரத்திற்கும், தற்போது நிரப்பப்பட்ட பணியிட விவரத்திற்கும் பெரும் முரண்பாடு உள்ளது.
சான்றாக, தோல் மருத்துவர்களுக்கான (Dermatology) காலிப் பணியிடம் 1 என்று அறிவிக்கையில் உள்ளது. ஆனால் நடந்து முடிந்த கலந்தாய்வில், 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் எப்படிக் குதித்தது புதிய ஏழு இடங்கள்? இதே போல உயிர்வேதியியல் துறை, மருந்தியல் உள்ளிட்ட பல துறைகளிலும் அறிவிப்புக்கு அதிகமான பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. கூடுதல் காலிப் பணியிடங்கள் உருவானால், அதற்கென தனி அறிவிப்பு உள்ளிட்ட நடைமுறைகள் தான் பின்பற்றப்படுமே ஒழிய, முந்தைய அறிவிப்பில் சேர்த்துவிடுவது சட்ட விரோதம் தானே?
ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியே இடஒதுக்கீடு பின்பற்றப்படும் நடைமுறை மத்திய அரசிலேயே வந்தபின், தமிழ்நாடு அரசு அதனைப் பின்பற்றவில்லையே ஏன்?
முறையற்ற தேர்வு முறை
முறைப்படி தேர்வு நடத்தி, அதில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, அதன் பின் கலந்தாய்வு நடத்தித் தான் பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எழுத்துத் தேர்வே நடத்தாமல், அவசர அவசரமாக நிரப்ப வேண்டிய அவசியம் என்ன? தேர்வு நடத்துவதற்கோ, முறைப்படி பணிகளை நிரப்புவதற்கோ என்ன பிரச்சினை? ஏன் இந்த அவசரம்? இதன் பின்னணி என்ன?
மருத்துவப் பணிகள் தேர்வாணையம் (Medical Services Recruitment Board) என்பது மருத்துவத் துறை தொடர்பான பணியிடங்களை நிரப்புவதற்கென்றே அரசால் தனியே உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இந்நிலையில், முறைப்படி காலதாமதம் இல்லாமல் பணியிடங்களை நிரப்ப வேண்டிய இவ்வமைப்பு, அவசர அவசரமாக எழுத்துத் தேர்வு நடத்தாமல், நேரடியாகப் பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?
மிகப் பெரிய மோசடியோ!
கடந்த ஜூன் மாதத்தில் உயர் படிப்பை முடித்த அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் பணி வழங்காமல், சுகாதாரத் துறைக்கும், மாவட்ட, வட்ட மருத்துவ மனைகளுக்கும் அவர்களை அனுப்பும்போது, முக்கியமான துறைகளுக்கு காலிப் பணியிடங்கள் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அடுத்த மூன்று மாதங்களில் 744 காலிப் பணியிடங்கள் எப்படி உருவாயின? நடந்திருப்பதைப் பார்த்தால் மிகப் பெரிய மோசடி நடந்துள்ளது என்ற அச்சமும், அய்யப்பாடும் ஏற்பட்டுள்ளது.
அரசாணை எண் 131-இன் படி மருத்துவக் கல்லூரிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுமானால், அரசு மருத்துவமனைகளில் குறைந்தது ஓராண்டு பணியாற்றிய அனுபவம் வேண்டும் என்பது அடிப்படை. ஆனால், மருத்துவக் கல்லூரிக்கான 181 இடங்கள் உள்பட நிரப்பப்பட்டுள்ள 465 பேரில் நேரடியாக அரசுப் பணியில் அனுபவம் இல்லாத தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது அரசாணைக்கும், நடைமுறைக்கும் எதிரானதே!
எந்த விதிமுறை பற்றியும் கவலைப்படாமல் கண் மூடித்தனமாகப் பின்பற்றப்பட்டதற்கு 'ஏதோ' ஒன்று நடந்திருக்கிறது என்பது மட்டும் தெளிவாகவே தெரிகிறது.
உரிய தகுதி படைத்த அரசு மருத்துவர்கள் பணி உயர்வுக்காகவும், பணியிட மாறுதலுக்காகவும் காத்திருக்கும் நிலையில், இதே காலத்தில் நடைபெற்ற பணியிட மாறுதலுக்கான கலந் தாய்வில், இப்போது நிரப்பப்பட்டுள்ள இடங்கள் பட்டியலிடப்படவே இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அப்படி பட்டியலில் வெளிவந்திருந்தால் அரசு மருத்துவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அரசு மருத்துவத் துறையில் இணைவோர் அடுத்தடுத்து அத் துறையில் முன்னேற முடியும் என்ற வாய்ப்பு தான் தமிழ்நாடு மருத்துவத் துறையின் முக்கிய அம்சம். அதனால் தான் தகுதிவாய்ந்த மருத்துவர்கள் தனியார் பணியைவிட அரசு மருத்துப் பணியைத் தேர்ந்தெடுக்கின்றனர். இது ஒரு தொடர் பயனாகும்.
எம்.ஜி.ஆரே தோற்ற இடம் - மறவாதீர்!
ஒரு பக்கத்தில் 'நீட்' என்ற பெயரில் மத்திய அரசு சமூகநீதிக்குக் குழி பறிக்கிறது என்றால், இன்னொரு பக்கத்தில் தமிழ்நாடு அ.தி.மு.க. அரசும் தன் பங்குக்கு சமூகநீதிக்குத் துரோகம் செய்வது ஏன்?
சமூகநீதி நெருப்புடன் விளையாடாதீர் அரசினரே!
எச்சரிக்கை.
சமூகநீதி காரணமாக அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரே. தோற்ற இடத்தில் அ.இ.அ.தி.மு.க. வீண் வம்பை விலைக்கு வாங்க வேண்டாம்!
கி. வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
30-11-2017