செத்த மொழியான சமஸ்கிருதத்தின்மூலம் ஆரிய பண்பாட்டுப்
படையெடுப்பை அரங்கேற்றுகிறது மத்திய அரசு
இது முதற்கட்ட போராட்டம் - விரைவில் ஒத்த கருத்துள்ள
அனைவரையும் இணைத்து மாபெரும் மாநாட்டை நடத்துவோம்
சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்
சென்னை, ஜூலை 1- சமஸ்கிருத திணிப்பு மூலம் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை அரங்கேற்றுகின்றனர். இது முதற்கட்ட போராட்டம் விரைவில் ஒத்த கருத்துள்ளவர்களை எல்லாம் கட்சி வித்தியாசம் பாராமல் அழைத்து சமஸ்கிருத எதிர்ப்பு மாநாட்டை திராவிடர் கழகம் நடத்தும் - மாநாட்டில் போராட்ட திட்டம் வகுக்கப்படும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.
1.7.2016 அன்று காலை 11 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்குத் தலைமை வகித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
அனைத்து மாவட்டங்களிலும்
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது
முதலாவதாக சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் - சமஸ்கிருத திணிப்பு எதிர்ப்பு போராட்டம் என்ற இந்தப் போராட்டம் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சுட்டிக்காட்டியதைப்போல, தமிழ் நாட்டினுடைய அனைத்து மாவட்டங்களிலும் இப்பொழுது சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இங்கே நண்பர்கள் அழகாக எடுத்துக்காட்டியதைப்போல, மேனாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அய்யா பலராமன் அவர்கள் சொல்லியதுபோல, இது ஒரு அச்சாரப் போராட்டம். இது ஒரு தொடக்கமே தவிர, முடிவல்ல.
என்றைக்கு அந்தக் கட்டாய திணிப்பு ஒழிக்கப்படுகிறதோ அன்றுவரையில் தொடர் போராட்டமாக இந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் என்ற ஒரு தெளிவான நோக்கத்தோடு தொடங்கப்படுகின்ற போராட்டம் இது.
தயவு செய்து இங்கே சில செய்திகளை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஊடகவியலாளர்களுக்கு கடைசியில் சுருக்கமாகக் கூட சொல்லுவேன்.
செத்த மொழிக்கு மீண்டும்
உயிரூட்ட முயற்சிக்கிறார்கள்
ஏதோ ஒரு மொழிக்கு எதிராக இவர்கள் எல்லாம் திரண்டு இருக்கிறார்களே, யார் எத்தனை மொழி படித்தால் என்ன? இவர்கள் ஏன் தடுக்கவேண்டும்? என்று நினைக்கிறார்கள். நண்பர்களே, வடமொழி என்கிற சமஸ்கிருத மொழி இருக் கிறதே, அந்த மொழி, நண்பர்கள் சொன்னதைப்போல, செத்த மொழிக்கு மீண்டும் உயிரூட்ட முயற்சிக்கிறார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், மொழி என்ற முறையில் யாரும் படித்துக் கொள்ளட்டும். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படுவ தில்லை. ஏற்கெனவே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இடையறாமல் சொல்லிக் கொடுத்து, சமஸ்கிருதம் படிக்க வாருங்கள், சாப்பாடு கொடுக்கிறோம், மற்றவை எல்லாம் உங்களுக்கு செய்கிறோம் என்று அழைக்கிறார்கள். அது நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றது. அவையெல்லாம் இப்பொழுது மானியத்தோடு நடைபெறுவதற்கான திட்டம் இந்தத் திட்டம்.
அதன் பின்னால் ஒளிந்திருக்கின்ற மிகப்பெரிய ஆர்.எஸ்.எஸ். ஆபத்து இருக்கிறதே, அது சாதாரணமானதல்ல. அவர்களுடைய கொள்கையை இதன்மூலம் திணிக்கிறார்கள். மத்தியில் ஏற்பட்டு இருக்கின்ற பா.ஜ.க.வினுடைய ஆட்சியில், மூன்றை தெளிவாகச் சொல்வார்கள்.
இந்துத்துவா ஆட்சி - பல மொழிகள், பல மதங்கள், பல கலாச்சாரங்கள் இருக்கின்ற நாட்டில்,
என் மதம்தான் ஆளவேண்டும் - அதுதான் இந்து மதம் என்கிற ஆரிய, பார்ப்பனிய, வேத மதம்.
ஒரே மதம் - இந்து மதம் இருக்கவேண்டும்; ஒரே மொழி - சமஸ்கிருத மொழி இருக்கவேண்டும். ஒரே கலாச்சாரம் - சமஸ்கிருத கலாச்சாரம் என்ற பெயரால் பாரதீய இந்துத்துவ கலாச்சாரம் இருக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய அடிப்படையான கொள்கையாகும்.
அதைத்தான் தங்கள் ஆட்சியில், தங்களுக்குக் கிடைத் திருக்கின்ற பெரும்பான்மை வாய்ப்பை வைத்துக்கொண்டு, இந்த மக்களிடம் அதனைத் திணிக்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். ஆணையிட்டு, இப்பொழுது வெளிப்படையாகவே வந்திருக்கிறார்கள். இதனை தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு அறிஞர் பெருமக்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
ஒரு ஆதாரபூர்வமான செய்தி, பல ஊடகங்கள்கூட அதிகமான முக்கியத்துவத்தை இவைபோன்றவைகளுக்குக் கொடுப்பதில்லை.
கோபால்சாமி அய்யங்கார்
தலைமையில் ஒரு குழு!
சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற தலைமைத் தேர்தல் ஆணையராக இருக்கக்கூடிய கோபால்சாமி அய்யங்கார் அவர்களுடைய தலைமையில், சமஸ்கிருதத்தை மேலும் பத்தாண்டு காலத்திற்கு எப்படி திணிப்பது? எப்படி பெருக்குவது? என்பதற்காக போடப்பட்டது.
அந்த அறிக்கையின் பெயர் Vision and Road map for the Development of Sanskrit ten year perspective plan.
மூன்று மாதங்களில் ஒரு குழு அமைத்து, அந்தக் குழு அறிவித்துள்ளது - எல்லா பள்ளிக்கூடங்களிலும், ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் இருந்து பல்கலைக் கழகம் வரை இதனைத் திணிக்கவேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள். படிப்படியாக எல்லாம் ஒரே நேரத்தில் செய்யவேண்டும் என்று. அதனுடைய முதல் தொடக்கம்தான் இங்கே தொடங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, வெறும் மொழிக்காக அல்ல; ஒரு கலாச்சார திணிப்பு - ஆரிய பண்பாட்டுத் திணிப்பு என்பதுதான் மிக முக்கியம்.
இங்கே சொன்னார்கள், 22 மொழிகள் அரசியல் சட்டத் தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று. அதில் இருக்கின்ற 22 மொழிகளில், பேசப்படாத மொழி ஒன்று இருக்கிறது என்றால், அது சமஸ்கிரும்தான். அதுமட்டுமல்ல நண்பர்களே, செத்த மொழி என்ற பெருமை பெற்ற ஒரு மொழி உண்டென்றால், அது சமஸ்கிருதம்தான்.
அதுமட்டுமல்ல, இதைத் தெரிந்தவர்கள் 000 என்று போட்டு புள்ளி ஒன்று என்று சொல்லக்கூடிய நிலையில் இருக்கக்கூடியது சமஸ்கிருதம்.
பெரும்பான்மையோர்
பேசாத மொழியை திணிக்கிறார்கள்!
முன்பு இந்தியைத் திணிக்கின்ற நேரத்தில் என்ன சொன் னார்கள், பெரும்பான்மையோர் பேசுகிறார்கள், ஆகவே அதனைப் படியுங்கள் என்று சொல்கிறார்கள். அதே வாதத்தை இப்பொழுது திருப்பிப் போட்டால், பெரும்பான்மையோர் பேசாத மொழியை, ஏன் மிகச் சிறுபான்மையோர்கூட பேசாத மொழியை திணிக்கிறீர்களே என்று கேட்டால்,
அவர்கள் சொல்கிறார்கள், இதுதான் கலாச்சாரத்தின் அடையாளம்; இதுதான் இந்தியாவின் ஆத்மா என்று கூறுகிறார்கள்.
தேவ பாஷை என்று சமஸ்கிருதத்தை சொன்னார்கள்; தமிழை நீஷ பாஷை என்று சொன்னார்கள்
.
இங்கே சகோதரர் குமரி அவர்கள் சொன்னதைப்போல, தமிழன் கட்டிய கோவிலில், தமிழன் அர்ச்சகனாகவும் இல்லை, தமிழ் அர்ச்சனை மொழியாகவும் இல்லை. அதனை நினைத்து நாம் வேதனைப்படவேண்டும் - மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும்.
இது மொழித் திணிப்பு மட்டுமல்ல நண்பர்களே, ஒரு பண்பாட்டுத் திணிப்பு
எனவேதான், இந்தப் போராட்டம் என்பது ஒரு பண் பாட்டுப் படையெடுப்பை எதிர்த்து நடக்கக்கூடிய போராட்ட மாகும். இந்தப் போராட்டம் முதல் கட்ட போராட்டம். இது மொழித் திணிப்பு மட்டுமல்ல நண்பர்களே, ஒரு பண்பாட்டுத் திணிப்பு, ஒரு கலாச்சார திணிப்பு. இந்த மக்களை காலங்காலமாக அடிமையாக்கக்கூடிய மீண்டும் மனுதர்ம ஆட்சியை கொண்டு வருவதற்காக, பூர்வாங்க ஏற்பாட்டின் முதல் தொடக்கம். ஆகவே, இதனை நன்றாகப் புரிந்து கொண்டு, கட்சி வேறுபாடின்றி அனைவரும் சிறப்பான வகையில் இங்கு ஒவ்வொருவரும் ஒத்துழைக்கவேண்டும். அந்த வகையில் நீங்கள் தெளிவாக இருக்கவேண்டும்.
சமஸ்கிருத மொழிக்கு ஒரு சிறப்பு உண்டு - வேறு எந்த மொழியைச் சொன்னாலும், அந்த மொழியிலிருந்துதான் சொற்களைச் சொல்வார்கள். ஆனால், சமஸ்கிருதம் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்றால், ஆங்கில மொழியின் உதவியோடுதான் சொல்லிக் கொடுப்பார்கள்.
இதுவரையில் பார்த்தீர்கள் என்றால், ஆங்கில உதவி யோடுதான் சமஸ்கிருத வகுப்பு நடக்கும். இனிமேல்தான், சமஸ்கிருத மொழியை வைத்தே சொல்லிக் கொடுக்கப் போகிறோம் என்கிறார்கள். இதனைவிட பரிதாபம் வேறு எதுவும் கிடையாது.
நாம் ஒருபோதும் ஏமாளிகளாக
இருப்பதற்குத் தயாராக இல்லை
நாம் எல்லாம் ஏமாளிகளா? அவர்கள் கோமாளிகளாக இருக்கலாம்; ஆனால், நாம் ஒருபோதும் ஏமாளிகளாக இருப்பதற்குத் தயாராக இல்லை. அதனை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். ஆகவேதான், இது முதற்கட்ட போராட்டம்.
அடுத்த நிலையில், வெகுவிரைவில் இதுபோன்ற அறிஞர்கள், மொழி அறிஞர்கள், பண்பாட்டுக் காவலர்கள், அனைத்துக் கட்சியினர், ஒத்தக் கருத்துள்ளவர்களை அழைத்து, சென்னையில் ஒரு மாபெரும் மாநாடு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு உங்களுக் குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆகவே, ஒரு பிரம்மாண்டமான போராட்டத் திட்டம் தேவை. வந்திருக்கின்ற ஆபத்து சாதாரணமானதல்ல. இப்பொழுதுதான் தொடக்கம். அவர்கள் சொன்னதுபோல, பாம்பு உள்ளே நுழைந்துவிட்டது, எனவே, அது படமெடுத்து ஆடுவதற்கு முன்பாக அதனுடைய நச்சுப் பல்லை பிடுங்க வேண்டும் என்பதுதான் மிக முக்கியம்.
அந்த வகையில், அப்படிப்பட்ட ஒரு மாநாடு, உங்களைப் போன்றவர்கள், தமிழறிஞர்கள், இன உணர்வாளர்கள், கட்சிக் கண்ணோட்டமில்லாமல் எல்லோரையும் அழைக்கிறோம். ஆகவே, அப்படிப்பட்ட ஒரு மாநாட்டுத் திட்ட அறிவிப்பை கொடுக்கிறோம்.
நச்சுப் பாம்பின் பல்லை பிடுங்குவதற்குத்
தயாராக இருக்கவேண்டும்!
கலைஞர் அவர்கள் மிக அழகாகச் சொன்னார்கள், சமஸ் கிருதத் திணிப்பா? சவுக்கை எடுங்கள் என்று சொன்னார்கள்.
அந்தப் பாம்பின் நச்சுப் பல்லை பிடுங்குவதற்குரிய கருவிகளோடு தயாராக இருக்கவேண்டும்.
ஆகவே, ஒன்றுபடுவோம், முறியடிப்போம்! ஒன்றுபடு வோம், முறியடிப்போம்! இதுதான் நம்முடைய முழக்கமாக இருக்கவேண்டும்.
எதிர்த்தாகவேண்டிய மகத்தான பொறுப்பு
நம் அனைவருக்கும் உண்டு
நம்முடைய பிள்ளைகளுக்கு இன்னும் தமிழே சரிவர பேச வரவில்லை. தமிங்கலம் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். தமிழும், ஆங்கிலமும் கலந்தே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, திராவிட இயக்கத்தினுடைய சாதனைகளில் ஒன்று, தனித்தமிழ் உணர்வு. அதனை அழிப்பதற்கான பெருமுயற்சிதான் சமஸ்கிருத திணிப்பு. வடமொழித் திணிப்பு. ஆகவே, எல்லா கோணங்களிலும் அதனை எதிர்த்தாக வேண்டிய மகத்தான பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.
எனவேதான், இதில் கட்சியில்லை, ஜாதியில்லை, மதமில்லை. நம்முடைய பண்பாட்டு மீட்டுருவாக்கத்திற்குப் பாதுகாப்பு இருக்கிறது என்று கூறி, இந்தப் போராட்டத்தைத் தொடருவோம், தொடருவோம் என்று கூறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.