தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள இனமான அறிக்கை
திருவள்ளுவர் கீழ்ஜாதிக்காரன் என்று கூறி அவருடைய சிலை கங்கைக் கரையில் வைப்பதை தடுக்கப்பட்டு இருப்பது தேசிய அவமானம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மத்தியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவான பா.ஜ.க. ஆட்சி அமைத்த பிறகு, வடபுலத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகிய தருண்விஜய் என்பவர், வடக்கே திருவள் ளுவர் தம் பெருமையையும், தமிழன் மேன்மையையும், சிறப்பையும் பரப்பப் போவதாகவும், அதற்குமுன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 'தூண்டில் முள்ளில் ஒன்றாக' ராஜேந்திர சோழன் 1000 ஆண்டு விழா - கப்பற் படை வைத்த மன்னன் - என்று கூறி ஒரு திடீர் பாசத்தைக் கொட்டியும் தமிழ்நாட்டிலுள்ள தமிழர்களை திராவிடர்களை வயப்படுத்த முயன்றனர்!
தமிழ்நாட்டில் கால் ஊன்றவே
ராஜேந்திர சோழன் நாவாய் ஓட்டி நானிலம் ஆண்டவன் என்பதை, தம் கொள்கை அமைப்பு தமிழ்நாட்டில் கால் ஊன்றவே இப்படி ஒரு முயற்சி என்பதை திராவிடர் கழகம் சுட்டிக் காட்டத் தவறவில்லை. அதனால் அது எடுபடவில்லை; எதிர்பார்த்த பயன் அவர்களுக்கு - அதன் மூலம் கிட்டவில்லை!
கனவு கண்ட தமிழ் அன்பர்கள்
அடுத்து இந்த தருண்விஜய் மூலம், திருவள்ளுவர் பற்றி ஆங்காங்கு பிரச்சாரம் - வடக்கே அவரைக் கொண்டு சேர்ப்பேன் என்றெல்லாம் சொல்லியது கண்டு 'மயக்கம் கொண்ட' பரிதாபத்திற்குரிய தமிழ் அன்பர்கள் சிலரும் இவர் ஏதோ பிரமாதமாக சாதிக்கப் போகிறார் என்றே கனவு கண்டனர்!
(இவர் R.S.S. நடத்தும் ஹிந்தி "பாஞ்சன்யா" என்ற பெயரில் வரும் வார இதழின் முன்னாள் ஆசிரியர் ஆவார்! சமஸ்கிருதம் இந்தியாவின் ஒரே பொது மொழி ஆக வேண்டும் என்பவர்)
இவர் கங்கைக் கரையில் திருவள்ளுவருக்குச் சிலை வைப்பேன் என்று ஓங்கி முழங்கினார். இதனால் நாமக்கல்லி லிருந்து திருவள்ளுவர் சிலை ஏகப்பட்ட தடபுடல் விளம்பரத் துடன் 'வடயாத்திரை' சென்றது!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியிலோ அல்லது கங்கைக் கரையிலோ வைப்பதாகச் சொல்லி, அவ்விழாவில் கலந்து கொள்ள உத்தரகாண்ட் ஆளுநர் கே.கே. பால், உ.பி. ஆளுநர் ராம் நாயக், மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் (இவர்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பது உலகறிந்த செய்தி) இவர்களோடு உத்தரகாண்ட் முதல் அமைச்சர் ஹரிஷ் ராவத் (காங்) அவர்கள் அச்சிலை திறப்பு விழாவில் வந்து கலந்து கொள்வார்கள் என்று அவர் களிடம் ஒப்புதல் வாங்கப்பட்டு பணிகளும் ஆயத்தமானது.
இதற்கிடையில் நடந்த பல்வேறு சம்பவங்கள், திருவள்ளு வருக்கு மிகப் பெரிய தேசிய அவமானத்தை, எளிதில் துடைக்கப்பட முடியாத கறையை ஏற்படுத்துவதாக அமைந்து விட்டது மிகவும் வேதனைக்கும் அனைவரது கண்டனத் திற்கும் உரியதாகும்!
(30.6.2016, 1.7.2016 ஆகிய இரு நாட்களில் வெளிவந்த ஆங்கில நாளேடான "டைம்ஸ் ஆஃப் இந்தியா" மிகவும் விரிவாக அங்கே நடந்த அவலங்கள் நிறைந்த அலங்கோல அவமான நிகழ்வுகளை அப்படியே தந்துள்ளது; அதை வைத்தே இவ்வறிக்கை)
கங்கை கரையில் உள்ள ஹர்க் கி பூரி (Har Ki Puri) என்ற இடத்தில் உள்ள 'கங்கா சபா' முன், திருவள்ளுவர் சிலை திறக்கப்படும் என்பதுதான் ஏற்பாடு. தருண்விஜய் எம்.பி. அவரது எம்.பி. நிதியிலிருந்து ஆகும் செலவினத்தையும் தருவதாக சொன்னார்.
புரோகிதக் கூட்டத்தின் எதிர்ப்பு
இதற்கு 1) 'கங்கா சபா' 2) அகில் பாரதீய தீர்த் புரோகித் மஹாசபா என்ற ஹரித்துவாரின் புரோகிதக் கூட்டத்தார், அமைப்பினர் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்!
"கங்கை என்பதே கடவுள்(ச்சி) தான் மற்ற தெய்வத்திற்கோ, தெய்வப் புலவர்களுக்கோ, எதற்கு இடம் - கூடவே கூடாது" என்றார் - கங்கா சபாவின் தலைவர், புருஷோத்தம்தாஸ் ஷர்மாகாந்திவாதி என்பவர்!
இவர்களது கடும் எதிர்ப்பு காரணமாக, திருவள்ளுவர் சிலை கங்கா சபா முன் நிறுவப்படும் திட்டம் - மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து பேசி சற்று தூரத்தில் உள்ள 'சங்கராச்சாரியா சவுக்' என்ற இடத்தில் ஆதி சங்கரர் சிலை அருகில் 29.6.2016 புதன் அன்று திறப்பதெனவும், அதில் கலந்து கொள்ள 5 மாநில ஆளுநர்களும், முதல்வர் ஹரிஷ்ராவத்தும் அழைக்கப்பட்டிருந்தனர்.
குறிப்பிட்ட இடத்தில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்ட வுடன் அப்பகுதியில் உள்ள அக்ரஹாரம் - (Akharas) ஆசிர மங்கள் முதலியவற்றில் உள்ள சாமியார்கள் அனைவரும் அந்த சிலை அங்கே வைக்கப்படக் கூடாது என்று தங்களின் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.
திருவள்ளுவர் கீழ் ஜாதிக்காரனாம்
"யாரோ ஒருவரின் அதுவும் கீழ் ஜாதிக்காரனான ஒருவர் சிலைக்கு ஆதி சங்கரர் பக்கத்தில் என்ன வேலை? இதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்" என்று கடும் அதிருப்தி, எதிர்ப்பினைத் தெரிவித்த வண்ணம் திரண்டனர்!
இதன்பின், அந்த ஹர்பர்ன்ஸ்சிங் சவுக் பகுதிக்கான மாவட்ட ஆட்சியர் வேறு ஒரு தேதியில் நிகழ்ச்சி நடத்தப்படும் என்று கூறி அவர்களை அனுப்பி, விழா நிறுத்தப்பட்டது! இதன் பிறகு விரிவான தகவல்களும் வந்துள்ளன.
சுவாமி ஸ்வரூப்பானந்த சரஸ்வதி (என்ற சங்கராச்சாரி) இந்தப் பிரச்சினையில் சாமியார்களுக்குப் பெரும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்!
இரண்டாவது இடத்திலும் எதிர்ப்பு
இரண்டாவது இடமான 'சங்கராச்சாரியா சவுக்' என்னு மிடத்திற்கு சிலையை நகர்த்தியதை எதிர்த்து, யார் யாருடைய சிலையெல்லாம் - அதுவும் ஆதி சங்கரர் சிலை அருகில் கொண்டு வந்து வைக்க நாங்கள் ஒருபோதும் அனுமதியோம். காரணம் அந்த திருவள்ளுவர் ஒரு கீழ் ஜாதிக்காரப் புலவர்.
அரசியல் லாபம் பெற தருண்விஜய், இப்படி வித்தைகள் செய்கிறார் என்று ஹரித்துவார்காரர் ஒருவர் கூறியுள்ளார்!
தருண் விஜய் கொடும்பாவி எரிப்பு
இந்த சாமியார்கள் அவரது (தருண்விஜய்) கொடும்பாவி யையும் கொளுத்தி, ஆர்ப்பாட்டம் செய்து, கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்!
"எங்கள் ஆதி சங்கரர் டிரஸ்ட்டுக்காக டில்லி - ஹரித்துவார் நெடுஞ்சாலையில் 1980இல் எங்களுக்கு - எங்கள் டிரஸ்ட்டுக்கு வழங்கப்பட்ட இந்தப் பகுதி நிலத்தில் வேறு எவரும் பிர வேசிக்க - ஆக்ரமிக்க - சிலை வைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளார்கள்.
தற்போது எங்கோ ஒரு பூங்காவில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டு காற்று வாங்கிக் கொண்டுள்ளதாம்!
தேசிய அவமானம்!
இப்படிப்பட்ட அவமானம் திருவள்ளுவருக்கு ஏற்பட்டது தேசிய அவமானம் அல்லவா? தேவையா இது?
திருவள்ளுவருக்கே "ஜாதி முத்திரை" - எனவே ஆதி சங்கரர் சிலைக்கு அருகில் வைத்தால் தீட்டுப்பட்டு விடுமாம்! என்னே கொடுமை!
5 மாநில ஆளுநர்கள், ஒரு முதல் அமைச்சர், எல்லா வற்றையும்விட பிரதமர் மோடி மிகப் பெருமையுடன் கூறிக் கொள்ளும் அவரது தொகுதியும் கூட, அங்கே திருவள்ளு வருக்கு இப்படி ஏற்பட்ட அவமானம் துடைக்கப்பட வேண்டாமா?
வர்ண - ஜாதியால் திருவள்ளுவரை அளந்து அவமானப்படுத்தப்படுவது சகிக்கத்தக்கதா, ஏற்கத்தக்கதா?
நடுநிலையாளர்களே! சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டி - ஆட்சியாளர்கள்பற்றி, வாய்மூடி மவுனிகளாக அவமானப் புழுக்களாகத்தான் தமிழர்கள் - திராவிடர் திருவள்ளுவரின் பரம்பரையினராகிய நாம் இருக்க வேண்டுமா? உங்களுக்கே விட்டு விடுகிறோம்!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
2-7-2016
-----------------
புனிதமான நகரத்தில்
பிச்சைக்காரனின் சிலை (பக்கீர்) வைத்தால் அவமானம் இந்துக்களுக்காம்!
திமிர்வாதப் பேட்டி!
அரித்துவாரில் திருவள்ளுவர் சிலை வைப்பது தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரித்துவார் கோரக்நாத் அகாடாவைச் சேர்ந்த நர்மதேஷ்வர் என்ற சாமியார் ஸ்டார் குழும செய்தி தொலைக்காட்சியான எ.பி.பி-யில் நடந்த விவாதம் ஒன்றில் பங்கேற்று கருத்து தெரிவித்த போது கூறியதாவது:
அரித்துவார் அரியின் ஊர். இங்கே இருப்பவர்கள் புனிதர்களாகவும், புண்ணிய காரியம் செய்தவர் களாகவும் இருக்கவேண்டும், இங்கே துளசிதாஸ், மீராபாய், சந்த் கபீர் போன்றோர்களின் சிலைகள் உள்ளன, ஆதிசங்கராச் சாரியா மற்றும் பல முனிவர் களின் சிலைகள் உள்ளன, இவர்கள் அனைவரும் இந்துமதத்தின் புனிதத்தை காப் பாற்ற பல நூல்களை எழுதியுள்ளனர்.
இந்துமதப் புகழை மக்களிடையே கொண்டுசெல்வதில் மிகவும் முக்கிய பங்காற்றிய வர்கள். ஆகவே இவர்களின் சிலைகள் இங்கு இருப்பதில் அரித்துவாருக்கே பெருமை ஆனால் தென் னகத்தில் பிறந்து தனது மனம் போன போக்கில் ஏதோ ஒன்றை (திருக்குறளை) எழுதி வைத்துள்ளார். அங்கு (தமிழகத்தில்) உள்ளவர்களுக்கு வேண்டு மென்றால் அது நல்லதாக படலாம், ஆனால் அது (திருக்குறள்) எப்படி இருந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம், புனித நகரில் பக்கீர் (பிச்சைக் காரர்களின்) சிலையை வைப்பதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்!
பக்கீர்களை தமிழகச் சொல் வழக்கில் பக்கிரி என்றும் கூறுவார்கள்.
- ABP News