தமிழ்நாட்டில் எம்.சி.எச்., டி.எம். போன்ற தனி சிறப்பு மருத்துவப் படிப்புக்கான இடங்களை அகில இந்தியாவுக்குத் தாரை வார்ப்பதா?
தமிழர் தலைவர் கண்டனம்
தமிழ்நாட்டில் எம்.சி.எச்., டி.எம். போன்ற தனி சிறப்பு மருத்துவப் படிப்புக்கான இடங்களை அகில இந்தியாவுக்குத் தாரை வார்ப்பதா? என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இன்று (3.7.2016) விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இடஒதுக்கீட்டையும் மாநில உரிமைகளையும் ஒழித்தே தீருவது என்பதில் இன்றைய மத்திய அரசும் - உச்சநீதிமன்றமும் ஒற்றைக் காலில் நிற்பதாகவே தெரிகிறது.
மாநிலத் தொகுப்பிலிருந்து எம்.பி.பி.எஸ். மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களையும் அகில இந்திய தொகுப்புக்கு எடுத்துச் சென்று மாநிலங்களின் தலையில் கை வைத்து வந்ததையே கடுமையாக எதிர்த்து வருகிறோம். அதற்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று போராடி வருகிறோம்.
இந்த நிலையில் ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதைபோல இதுவரை தமிழ்நாட்டில் மருத்துவத் துறையில் மருத்துவப் படிப்பில் (ஷிuஜீமீக்ஷீ sஜீமீநீவீணீறீவீtஹ்) தமிழ்நாடு அளவில் நுழைவுத் தேர்வு வைத்துத் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். எம்.சி.எச்., டி.எம். போன்ற சிறப்பு மருத்துவத்தில் முறையே 108 இடங்களும், 81 இடங்களும் உள்ளன. தமிழ்நாடு அளவில் நுழைவுத் தேர்வு நடத்தி, மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இதன்மீது உயர் ஜாதி வட்டாரங்கள் இடஒதுக்கீடு - சமூகநீதி எதிர்ப்பாளர்களின் கண்கள் உறுத்திக் கொண்டுள்ளன. இதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி. நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மாநில அளவில் இருந்த நடைமுறைக்கு எதிராக - அகில இந்திய அளவில் நுழைவு தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்புக் கூறியுள்ளது.
இது மிகவும் கண்டிக்கப்படத்தக்கதாகும். இந்திய அளவில் 10 மாநிலங்களில் - பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசம் உள்பட இந்த சிறப்பு மருத்துவக் கல்வி கிடையாது.
இந்த நிலையில் மாநில அரசுகள் தங்கள் சொந்த நிதியை ஒதுக்கி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்ற நன்னோக்கத்தில் இத்தகைய மருத்துவப் பிரிவுகளை உண்டாக்கி, சிறப்பு மருத்துவர்களை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியை, ஏற்பாட்டைத் தடை செய்வது எந்த வகையில் நியாயமாகும்?
நான் உமி கொண்டு வருகிறேன் நீ அரிசி கொண்டு வா ஊதிஊதி சாப்பிடலாம் என்கிற நயவஞ்சகத்தை முறியடித்தே தீர வேண்டும். குறிப்பாக தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்தி மத்திய அரசுக்கு உடனடியாக கடிதம் எழுதி, தனது எதிர்ப்பைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாடு சமூகநீதி மண் என்பதை நிரூபிக் கும் கடமை தமிழ்நாடு அரசுக்கு உண்டு. சமூகநீதி யாளர்களும் தங்களுடைய எதிர்ப்பை பெரிய அளவில் தெரிவிக்கவும் கேட்டுக் கொள்கிறோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பது அவசியமாகும்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
3-7-2016
சென்னை