உலக சமூகநீதி நாள் சிந்தனை
இந்தியாவில் சமூகநீதி என்பது வருணாசிரம தகர்ப்பு
மற்ற நாடுகளிலோ ஏழை - பணக்காரர் என்ற வர்க்கப் பிரச்சினை!
சமூக நீதியில் நாம் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் உண்டு
தமிழர் தலைவர் வெளியிட்டுள்ள சமூகநீதி அறிக்கை
உலக சமூகநீதி நாளான இன்று - இந்தியாவில் இத்திசையில் பயணிக்க வேண்டிய தூரம் பற்றி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இன்று (20.2.2018) உலக சமூகநீதி நாள்.
'சமூகநீதி' என்ற சொல்லாக்கம் - பயன்பாடு - அண்மைக் காலத்தில் அதிகமான அளவில் மக்கள் மத்தியில் தாராளமான புழக்கத்தில் உள்ளது.
உலகின் மற்ற நாடுகளில், குறிப்பாக மேலை நாடுகளிலும், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் அதன் பொருள் - பொருளாதார பேதத்தை நீக்கி சம வாய்ப்பை ஏற்படுத் துவதற்கே இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. காரணம் இந்தியாவில் உள்ள சமூக அமைப்பான ஜாதி வர்ண தர்ம முறை அங்கே எங்கேயும் கிடையாது என்பதுதான்.
பிறவிப் பேதம் பிறவியினால் நிர்ணயிக்கப்படும் சமூகத் தகுதி என்பது இந்தியா என்ற இந்நாட்டில் மட்டும்தான் உண்டு. அதற்குக் காரணம், வேத மதமாகிய பார்ப்பன சனாதன ஆரிய மதமான ஹிந்து மதம் என்று சமீப காலமாக அழைக்கப்படும் மதத்தின் உயிர் நாடியான வர்ணாசிரம பிறவிப் பேதமே!
இந்தியாவில் சமூகநீதி என்பது என்ன?
வெகு சிறுபான்மையோர், மிகப் பெரும்பான்மையோரை அடக்கி, தங்களின் அடிமைகளாக்கிட, அவர்களது அறிவு, கல்வி வாய்ப்புகளை அடைத்து, தடுத்து, 'கீழ்ஜாதி' படிக்கட்டு ஜாதி முறையிலே - பிறவி அடிப்படையில் நீக்க முடியாத வெளியேற முடியாத ஒன்றை ஆழ்ந்து திட்டமிட்டே நுழைத்து, தாங்கள் 3 சதவீதமே என்றாலும் ஆளும் வர்க்கத்தினையே ஆட்டிப் படைக்கும் 'அறிவு எஜமானர்களாக' தங்களை உயர்த்திக் கொண்டனர்.
சமூகநீதி கோரிடும் மற்ற நாடுகளில் (பொருளாதார அடிப்படையில் - ஏழை பணக்கார முதலாளி - தொழிலாளி என்ற பேதத்தின் அடிப்படையில் சமத்துவத்திற்கு எதி ரானது) சம தளத்தில் - கயிறு இழுக்கும் போட்டியில் நேருக்கு நேர் எதிர் அணிகளாக நிற்கும் நிலை உண்டு.
ஆனால் இந்த 'ஞானபூமி' என்ற 'ஆரிய வர்த்த பூமியில்' - படிநிலை ஏற்றத் தாழ்வுதான் வர்ண தர்ம முறையின் தனித்தன்மையான கொடுமையாகும்.
படிக்கட்டு முறை சமத்துவமின்மை
இதை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் குறிப்பான ஒரு சொற்றொடரில் விளக்கினார். - (Graded Inequality) 'படிக்கட்டு சமத்துவமின்மை' என்று
வர்ணஸ்தர்கள்
பிராமணர்
க்ஷத்திரியர்
வைசியர்
சூத்திரர்
அவர்ணஸ்தர்கள்
பஞ்சமர்
பெண்கள்
என்று ஆறுபடிகள். இந்த படிநிலை மேல்கீழ் முறையில் கடைசியில் வர்ண ஜாதிப் பெண்கள் அனைவரும் கீழானவர்களுக்கும் கீழானவர்கள்' என்ற தகுதியில்தான் ஹிந்து மதம் வைத்துள்ளது என்பதை விட மிகப் பெரிய சமூக அநீதி வேறு இருக்க முடியுமா?
பெண்களுக்கு சமூகநீதி மறுக்கப்பட்டது ஏன்?
இதற்கு மூல காரணம், ஆரியர்கள் இந்நாட்டிற்குள் ஆடு, மாடுகளை ஓட்டி வந்தபோது உடன் தங்கள் பெண்களை அழைத்த வராததோடு, வந்த ஒரு சிலரும் தொடர்ந்து இவர்களுடன் பயணிக்க முடியவில்லை. (ஆதாரம்: அக்னிஹோத்ரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதியுள்ள 'இந்து மதம் எங்கே போகிறது' என்ற நூல்) இங்குள்ள பெண்களையே தங்கள் வாழ்க்கையில் இணைத்துக் கொண்டதால், வேதத்தில் அவர்களை
"ஸ்திரீனாந்த சூத்ரஜாதினாம்"
பெண்கள் அனைவரும் சூத்திர ஜாதி
"நஸ்தரீ சூத்ர வேதமத்யாதாம்" என்று கூறப்படுகிறது.
அதனால் பெண்களும், சூத்திரர்களும் வேதங்களை ஓதக் கூடாது; வேத ஓசையைக் கேட்கக் கூடாது. யாகங்கள் நடந்தால்... அதில் ஓதப்படும் வேதமந்திரங்களைக் கேட் காமல் இருப்பதற்காக புடவையால் காதை மூடிக் கொள்ள வேண்டும்.
பெண்களுக்குக் கல்விக்கான வாய்ப்பே கிடையாது அவர்கள் வெளியில் போகவும் கூடாது. அப்புறம்...?
"ஸ்தரிதாம உப நயனஸ்தானே
விஹாகம் மநு ரப்ரவீத்"
அதாவது பெண்களுக்கு உபநயனம் உள்ளிட்ட எவ்வித மந்திர சமஸ்காரங்களும் கிடையாது."
(அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் - "இந்துமதம் எங்கே போகிறது?" நூல் (பக்கம் 171). முதல் பதிப்பு 2005
சமூகநீதி ஏன் தேவை?
எனவே சமூகநீதி என்பது நமது நாட்டில் கல்வி உத்தியோக, சம வாய்ப்பு, சம தகுதி (Equality before law, and equal opportunities for all) என்ற இந்திய அரசமைப்புச் சட்டம் அளிக்கும் அடிப்படை உரிமைகளை நிலை நாட்டவே, ஜாதியினால் காலங்காலமாக கல்வி உரிமை, உத்யோக உரிமை, சமத்துவம் மறுக்கப்பட்டவர்களுக்கு தனி வசதியாக வகுப்புரிமை - இடஒதுக்கீடு தேவைப்பட்டது; இன்னமும் தேவைப்படுகிறது.
இதில் மக்கள் தொகையில் சரி பகுதியாக உள்ள அனைத்து ஜாதிப் பெண்களுக்கும் இடஒதுக்கீடு கட்டாயம் தேவை; அவர்களுக்கு 50 விழுக்காடு ஒதுக்க வேண்டும் என்று தந்தை பெரியார் வற்புறுத்தினார். கல்வி உத்தியோகத் துறையில் திமுக ஆட்சியில் கலைஞர் முதல்வராக இருந்தபோது இதை ஆணை - சுற்றறிக்கை மூலம் செயல்படுத்தினார்கள்.
திராவிடர் இயக்கம் இல்லா விட்டால்...
திராவிடர் இயக்கம் இன்றேல், அதன் ஆட்சிகள் மலர்ந்திருக்காவிட்டால் கல்வியில், உத்தியோகங்களில் இடஒதுக்கீடு, வகுப்புரிமை ஆணையாக, சமூக நீதி சட்டங் களாகியிருக்கவோ, அதன் பயனை வாய்ப்பு மறுக்கப்பட்ட பல கோடி மக்கள் துய்க்கவுமான வாய்ப்போ இன்றைய சமூக மாறுதல் - அமைதிப் புரட்சியாக வந்திருக்காது;
இந்தியாவின் இதர மாநிலங்களின் ஆட்சிக் கலங்கள் இந்த கலங்கரை வெளிச்சத்தில், தன் ஆட்சிக் கடலில் பயணிக்க முயற்சிக்கின்றன!
வர்க்க, பேதமும் வருண வேதமும்
எனவே, வேறு நாடுகளில் சமூகநீதி வர்க்க பேதத்தை ஒழிப்பது, மாற்றுவது என்பதாகும். இங்கோ சமூகம் என்பது வர்ண பேதத்தை - பிறவிப் பேதத்தை - உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி - ஆண் எஜமானன் - பெண் அடிமை என்ற பிறவிப் பேதத்தையும் இணைத்து சேர்த்து ஒழிப்பது என்ற பெரும் பணியாகும்.
பெரியார் கண்ட பெரு வெற்றி!
இதுதான் பெரியார் கண்ட பெரு வெற்றி - இதனை மாற்றிட எந்த கொம்பன்கள், முட்டினாலும் மோதினாலும் ஒழிக்க முடியாது - ஆம் ஒழிக்கவே முடியாது! எனவே, சமூக நீதி என்பது இந்த தனிப் பொருள் கொண்ட தத்துவப் போராட்டமாகும்!
சமூகநீதி என்பது இங்கே ஆணாதிக்க சமூகத்தை, வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்தெறியும் பாலியல் நீதியையும் உள்ளடக்கியதே!
அரசமைப்புச் சட்டம் என்ன சொல்லுகிறது?
எனவேதான் தந்தை பெரியார் தத்துவங்களை பற்பல நேரங்களில் பல முக்கிய இடங்களில் பிரதிபலிக்கிறது. டாக்டர் அம்பேத்கர் அரசமைப்புச் சட்ட முகவுரை - பீடிகையில் (Preamble) "Justice Social, Economic, Political என்ற மூன்றையும் இணைத்தார்; இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்ன தெரியுமா?
சமூகநீதி என்பது நமது நாட்டில் தனித்தன்மையானதும் முதன்மையானதும், முன்னுரிமை பெற வேண்டிய ஒன்றும் ஆகும்.
சமூகநீதி
பொருளாதார நீதி
அரசியல் நீதி
இவை மூன்றும் தனித்தயானவையே! இந்நிலையில் சமூகநீதியையும், பொருளாதார நீதியையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றில் (வசந்தகுமார் வழக்கில், ஜஸ்டீஸ் ஓ. சின்னப் ரெட்டி அவர்கள் குறிப்பிட்டது முக்கியம்).
இடஒதுக்கீடு என்பது ஏழ்மையை ஒழிக்கும் திட்டம் அல்ல; (அது தனியே செய்யப்பட வேண்டியது - சமத்துவப்படுத்தும் ஏற்பாடு). காலங் காலமாக நிலவிய சமூக அநீதியை விரட்டும் ஏற்பாடுதான் சமூகநீதி. (Reservation is not a poverty - alleviation scheme) புரிந்து கொள்வீர்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்