காவிரி: தமிழக அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டம் வரவேற்கத்தக்கதே!
சுருதி பேதமில்லாமல் ஒருமித்த முறையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு ஒத்த கருத்தினை எடுத்திடவேண்டும்!
அரியலூரில் தமிழர் தலைவர் பேட்டி
அரியலூர், பிப்.21 காலந்தாழ்ந்தாவது காவிரி நதிநீர்ப் பிரச் சினைக்காக தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட் டத்தை கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு சுருதி பேதத்துக்கு இடமில்லாமல் ஒருமித்த கருத்தினை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
அரியலூரில் நேற்று (20.2.2018) திராவிடர் கழக மாவட் டக் கலந்துரையாடலில் பங்கேற்கச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்.
விவரம் வருமாறு:
மக்கள் பிரச்சினையைப்பற்றி மட்டும்
கேள்வி கேளுங்கள்!
செய்தியாளர்: நடிகர் கமலகாசன் அரசியல் பிரவேசம் பற்றி...?
தமிழர் தலைவர்: முழுக்க முழுக்க இந்த மீடியாக்கள் அதை ஊதி ஊதி பெரிதாக்குகிறீர்கள். பளு தாள முடி யாமல், அந்த பலூன் எப்பொழுது வெடிக்கும் என்று தெரி யாது. இதுபோன்ற கேள்விகளை அரசியல்வாதிகளிடம் கேளுங்கள். மக்கள் பிரச்சினைகள்பற்றி என்னிடம் கேள்வி கேளுங்கள்.
காவிரிநீர்ப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மறுஆய்வு செய்யலாம்
செய்தியாளர்: காவிரி நீர் பிரச்சினையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு 15 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாது என்று சொல்லியிருக்கிறதே?
தமிழர் தலைவர்: அந்தத் தீர்ப்பைப் பொறுத்தவரையில், இந்தத் தீர்ப்பை ஏற்கவேண்டும் என்றும், 15 ஆண்டுகளுக்கு இந்தத் தீர்ப்பை மாற்ற முடியாது என்றும் சொல்வதற்கு எந்த அளவிற்கு உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு என்பது ஒரு சட்டபூர்வமான பிரச்சினையாகும்.
இருந்தாலும், அதை அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதைப்பற்றிய ஒரு பெரிய விமர்சனம் தேவையில்லை.
அதேநேரத்தில், அந்தத் தீர்ப்புக்கு மறு ஆய்வு தேடலாம்; தேடுவதற்கு இடமுண்டு. உதாரணத்திற்கு, ஏற்கெனவே முன்மாதிரி இருக்கிறது.
நீட் தேர்வைக் கொண்டு வந்தது செல்லாது என்று இதே உச்சநீதிமன்றம், மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கிய பிறகு, அதில் மாறுபட்ட கருத்தை தெரி வித்த மூன்றாவது நீதிபதி, தலைமை நீதிபதி ஓய்வு பெற்ற பிறகு, மாறுபட்ட கருத்தை தெரிவித்த நீதிபதியின் தலை மையில், அவர் ஒரு அமர்வை உருவாக்கிக் கொண்டு, அவசர அவசரமாக நீட் தேர்வின் தீர்ப்பை மாற்றினார். இது ஏற்கெனவே அதே உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று இருக்கிறது.
ஆகவேதான், அதையே முன்னுதாரணமாகக் காட்டி, தமிழக அரசு ஒரு மறுசீரமைப்பை செய்யலாம்; செய்வதற்கு இடமுண்டு. இது சட்ட ரீதியாக வழக்குரைஞர் என்கிற முறையில் என்னுடைய கருத்தாகும்.
ஆளுநர் பணி என்ன?
செய்தியாளர்: ஓ.பி.எஸ். அவர்கள் அண்மையில், மோடி சொல்லித்தான் நான் அ.தி.மு.க.வோடு இணைந்தேன் என்று சொல்லியிருக்கிறார். மத்திய அரசுதான் தமிழக அரசை ஆட்டிப்படைக்கிறது என்று நினைக்கிறீர்களா?
தமிழர் தலைவர்: அதற்கு ஆதாரப்பூர்வமான செய்தி கள் வேண்டுமென்றால், வித்யாசாகர் ராவை சாட்சிக் கூண் டில் ஏற்றினால், சரியாக இருக்கும். அதோடு உங்களைப் போன்ற ஊடகக்கார்கள், ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆகியோரின் கைகளை ஆளுநர் வித்யாசகர் ராவ் அவர்கள் இணைப் பதை நிறைய காட்டியிருக்கிறீர்கள். ஆகவே, ஊடக ஆதாரங்களையும் அதில் தாக்கல் செய்யலாம்.
இதை மறுப்பதற்கு இல்லை. ஓ.பி.எஸ். அவர்கள் இதை சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி, இரண்டு பேரை யும் சேர்த்து வைத்தது ஆளுநர்தான். ஆனால், ஆளுநரின் பணி அது கிடையாது. அவருடைய பணி, ஆளுநர் உரையைப் படிப்பதுதானே தவிர, இரண்டு பேருடைய கைகளையும் கோர்த்து வைப்பதில்லை. மாட்டுத் தரகர்கள் இரண்டு பேர் கைகளைக் கோர்த்துக் கொள்வதுபோல; இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால், மாட்டுத் தரகர் கள் கைகளின்மேல், துணியைப் போட்டு இருப்பார்கள். இவர் துணியைப் போடாமல் காட்டியிருக்கிறார்.
இனி நடப்பவைகள்
நல்லவைகளாக இருக்கட்டும்!
செய்தியாளர்: தமிழகப் பிரச்சினைகளாக இருக்கட்டும்; விவசாயிகள் பிரச்சினைகளாக இருக்கட்டும்; நீட் பிரச்சி னையாக இருக்கட்டும் - ஒப்புக்காவது எடப்பாடி அரசு, கண்டன அறிக்கையை விட்டிருக்கலாம்; தலையாட்டி பொம்மையாகவே இருக்கிறதே தமிழக அரசு?
தமிழர் தலைவர்: இந்தப் போக்கு நீண்ட காலமாக நீடித்த பிறகு, 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதல் முறையாக, அத்துணைக் கட்சிகளும் ஒருமித்து குரல் கொடுத்த பிறகுதான், இப்பொழுதுதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட ஆரம்பித்திருக்கிறார்கள்.
எனவே, இனிமேல் இதுபோன்ற போக்கைக் கடை பிடிக்கட்டும். அந்த உணர்வாவது தொடரட்டும்.
நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும்; இனி நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும்.
பா.ம.க. தனித்து நின்றால் மகிழ்ச்சிதான்
செய்தியாளர்: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அவர்கள், தேர்தலில் தனியே நின்று 50 சதவிகித வாக்குகளைப் பெறுவோம் என்று சொல்லியிருக்கிறாரே?
தமிழர் தலைவர்: அவருடைய நம்பிக்கையை நான் பாராட்டுகிறேன். கட்சியை நடத்துகிறவர்களுக்கு, தலைவர்களுக்கு அதுபோன்ற நம்பிக்கைகள் இருக்கவேண்டும்.
அவருக்கு இதுபோன்ற நம்பிக்கைகள் ஏராளம் உண்டு. அவர் சொன்னதை - தயவு செய்து அதிலிருந்து மாறாமல், தேர்தலில் தனியே நின்றால் மகிழ்ச்சிதான்.
தனியே நிற்கவேண்டும். எந்தக் கூட்டணியோடும் சேராமல், மீண்டும் 50 சதவிகித வாக்குகளைப் பெறுவோம் என்று நம்பிக்கையோடு சொல்லியிருக்கிறார்.
நம்பிக்கைதான் வாழ்க்கை என்று ஒரு பழமொழி உண்டு. ஆகவே, அந்த நம்பிக்கையோடு அவர் வேறு யாரோடும் கூட்டணி சேராமல் அந்த 50 சதவிகிதத்தை வாங்கினால் அவருக்கு வாழ்த்து தெரிவிப்போம்.
உண்ணாவிரதத்தில் புதிய முறையை உருவாக்கியிருக்கிறார் ஜீயர்!
செய்தியாளர்: உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், ஜீயரைக் கைது செய்யவேண்டும் என்று சொல் லியிருக்கிறது. ஆனால், அவர் விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டும் என்பதற்கு உண்ணாவிரதம் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாரே?
தமிழர் தலைவர்: அவருடைய பழைய தொழில்மீது இருக்கிற விசுவாசத்தை அவர் மறக்கவில்லை. ஜீயர் ஆவதற்குமுன்பு அவர் என்ன தொழில் செய்து கொண்டிருந்தாரோ, அந்த விசுவாசத்தை மறக்க முடியாமல், அதனை அடிக்கடி ஞாபகப்படுத்தி சொல்லி வருகிறார்.
மற்றபடி ஜீயரைப் பொறுத்தவரையில், ஒரு புதிய வழியை தமிழ்நாட்டிற்குக் காட்டியிருக்கிறார். அது என்னவென்றால், தவணை முறையில் உண்ணாவிரதம் இருக்கலாம் என்று காட்டிய பெருமை அந்த ஜீயருக்குத்தான் உண்டு. ஆகவே, அது தொடரட்டும்!
ஒருவேளை மருத்துவர்கள் சொல்லியிருப்பார்கள், விட்டு விட்டு உண்ணாவிரதம் இருங்கள் என்று.
ஆகவே, அதை அவர் வழிகாட்டியிருக்கிறார். இதுவரையில், தொடர் உண்ணாவிரதம், வெவ்வேறு வகையான உண்ணாவிரதம், சாகும்வரை உண்ணாவிரதம் என்பதுதான் இருக்கிறது.
ஜீயர் இருப்பது, வாழும் வரை உண்ணாவிரதம் என்று தொடர் உண்ணாவிரதம் என்று புதிய முறையை உருவாக்கிய ஜீயருக்கு எங்களுடைய ‘வாழ்த்துகள்!'
நேர்மையாக இருந்தால்,
இந்த ஆட்சியில் நீடிக்க முடியாது
செய்தியாளர்: அரியலூரில் மாவட்ட ஆட்சித் தலைவரை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஏற்கெனவே, இருந்த மாவட்ட ஆட்சியர் அவர்கள், பணம் வாங்காமல், அங்கன்வாடி பணியிடங்களை வழங்கினார்கள். இப்பொழுது ரேஷன் கடை பணியாளர்களை நியமிக்கவிருப்பதால், மாற்றியிருக்கிறார்களா? உங்களுடைய கருத்து என்ன?
தமிழர் தலைவர்: உங்களுடைய கேள்வியிலேயே தெளிவான பதில் இருக்கிறது. ஏற்கெனவே இருந்த மாவட்ட ஆட்சித் தலைவர் எவ்வளவு நேர்மையாக இருந்திருக்கிறார் என்பது தெரிகிறது. நேர்மையாக இருந்தால், இந்த ஆட்சியில், அவர் நீடிக்க முடியாது என்ற உண்மை மக்களுக்குப் பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதைத்தான் உங்கள் வாக்குமூலத்திலிருந்து நான் தெரிந்துகொள்கிறேன்.
அழைப்பு வந்தால் கலந்துகொள்வோம்!
செய்தியாளர்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திராவிடர் கழகம் கலந்துகொள்ளுமா?
தமிழர் தலைவர்: அழைப்பு வந்தால் கலந்துகொள்வோம். ஏனென்றால், இது அரசு கூட்டுகின்ற கூட்டம். அழைத்தால்தான் போக முடியும். நான் வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருக்கிறேன். அழைப்பு வந்தால் நிச்சயமாகக் கலந்துகொள்வோம்.
மத்திய அரசு செய்யவேண்டிய முதல் பணி
செய்தியாளர்: தமிழக அரசின் நிதியுதவியோடு நடைபெறும் ஸ்கூட்டர் வழங்கும் விழாவினை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என்று சொல்கிறார்களே?
தமிழர் தலைவர்: இதுவரையில், எத்தனையோ விழாக்களை பிரதமர் மோடி வந்து தொடங்கி வைப்பார் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எது மிக அவசியமோ அதை செய்யவேண்டும். ஸ்கூட்டர் கொடுப்பதைத் தொடங்கி வைப்பதைவிட, அவசர அவசரமாக மத்திய அரசு செய்யவேண்டிய முதல் பணி.
காவிரி நீர்ப் பிரச்சினையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பின்படி, அளிக்கப்பட்ட நீர்ப் பங்கீடு செயல்முறைப்படுத்தப்பட வேண்டுமானால், தமிழகத்திற்குக் கொடுக்கவேண்டிய நீரை குறைத்திருக்கலாம்; அதிகப்படுத்தியிருக்கலாம் என்பது வேறு பிரச்சினை. ஆனால், தீர்ப்பில் கூறப்பட்ட நீர் தமிழக விவசாயிகளுக்குக் கிடைக்கவேண்டும் என்று சொன்னால், அதற்கு ஒரே வழி காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் - ஒழுங்காற்று குழு இந்த இரண்டையும் அமைக்கவேண்டியது மத்திய அரசினுடைய கடமையாகும்.
ஏற்கெனவே, இதே மத்திய அரசு சில ஆண்டுகளுக்குமுன், இதே உச்சநீதிமன்றத்தில், மூன்று நாள்கள் கால அவகாசம் கேட்டு, அதனை அவர்கள் செய்யவில்லை.
ஏற்கெனவே, கருநாடக அரசியலில் மீன் பிடிக்கலாம்; அது அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று அவர்கள் நினைக்கக் கூடாது.
இப்பொழுது உச்சநீதிமன்றம் ஆறு வாரம் அவகாசம் கொடுத்திருக்கிறது. அந்த ஆறு வாரத்திற்குள் அதனை அமைப்பதுதான் முக்கியமே தவிர, இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் முக்கியமல்ல.
முதலில் கொள்கைகளை அறிவிக்கட்டும் அவர்கள்!
செய்தியாளர்: நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஆன்மிக அரசியல் என்றும், நடிகர் கமலகாசன் திராவிட அரசியல் என்றும் சொல்கிறார்களே, இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: கொள்கைகளை அறிவிக்காதவர்களைப்பற்றி நான் எப்பொழுதும் கருத்து சொல்வதற்கில்லை. ஊடகங்கள் ஊதுவதால், அவர்கள் பெரியவர்களாக ஆக்கப்பட்டு இருக்கிறார்கள். கொள்கைகளை அறிவிக்காதவரையில் அவர்களைப்பற்றி கருத்து சொல்வதற்கு எங்களைப் போன்றவர்களுக்கு மனமில்லை.
ஏழை, எளியவர்களின் வயிற்றில் அடிக்கக்கூடாது!
செய்தியாளர்: மார்ச் மாதம்முதல் ஸ்மாட் கார்டு இருந்தால்தான், ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்கப்படும் என்று சொல்கிறார்களே?
தமிழர் தலைவர்: ஏற்கெனவே, மசூல் பருப்பு கிடையாது என்று சொல்லி விட்டார்கள். ஏற்கெனவே குடும்ப அட்டை இருந்தவர்களை, ஆதார் அட்டை போன்றவற்றை காட்டி அவர்களை சங்கடப்படுத்தி இருக்கிறார்கள்.
மேலும் மேலும் ஏழை, நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கக்கூடாது. அப்படி செய்தால், அதனுடைய விளைவுகளை விரைவில் இந்த அரசு ஏற்கவேண்டி இருக்கும்.
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை!
செய்தியாளர்: பா.ஜ.க.வின் பின்னணியில்தான் அ.தி.மு.க. செயல்படுகிறது என்று சொல்லப்படுகிறது. ஓ.பி.எஸ். அவர்கள்கூட பிரதமர் மோடியினால்தான் சேர்ந்தோம் என்று சொல்லியிருக்கிறாரே?
தமிழர் தலைவர்: ஒப்புதல் வாக்குமூலங்களே ஏராளமாக இருக்கும்பொழுது, இதற்கு முன்னணி, பின்னணி என்றெல்லாம் பார்க்கவேண்டிய அவசியம் கிடையாது.
ஒப்புதல் வாக்குமூலங்களை சொல்லியிருக்கிறார்கள். அதோடு, தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வியாக்கியான கர்த்தாக்களாக, ஒவ்வொரு வியாக்கியான கருத்தாக சொல்கிறார்கள்.
நான் மனமில்லாமல் இருந்தேன், அவருடைய வற்புறுத்தலால் இணைந்தேன். பெரிய மனிதர் கையைப் பிடித்து இழுத்தார் என்று கிராமங்களில் சொல்வார்கள் அல்லவா, அதுபோன்ற சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
இதில் ஒன்றும் கருத்து சொல்வதற்கு இடம் இல்லையே. நீண்ட காலமாக தமிழக அரசை, மத்திய அரசு பொம்மையாக ஆட்டி வைத்துக்கொண்டிருக்கிறது என்பது, சிறு பிள்ளைக்குக்கூட தமிழ்நாட்டில் தெரிந்த செய்தி.
எனவேதான், கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை.
- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
=========================
முதல் அமைச்சரின் கவனத்துக்கு...
காவிரி நீர் ஒப்பந்தம் 1974ஆம் ஆண்டோடு முடிந்துவிட்டதா?
1924ஆம் ஆண்டு சென்னை மாநில அரசுக்கும், மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையே மேற்கொள்ளப் பட்ட காவிரி நீர் தொடர்பான ஒப்பந்தம் 50 ஆண்டு களுக்குப் பிறகு - அதாவது 1974ஆம் ஆண்டோடு தானாகவே ரத்தாகிவிட்டது என்று பல கால கட்டங்களில் தவறாகக் கூறப்பட்டு வந்திருக்கிறது.
குடியரசு தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் அவர்களே பொறுப்பில்லாமல் அவ்வாறு கூறியதற்காக திராவிடர் கழகம் அவருக்கு சென்னையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை நடத்தி (9.11.1991) கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டதுண்டு.
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களும், காவிரி நதி நீர் ஒப்பந்தம் 1974ஆம் ஆண்டோடு முடிவுற்றது என கூறியிருப்பது அதிர்ச்சிக்குரியதாகும். (‘இந்து', 19.2.2018)
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசே கூட்டியுள்ள ஒரு காலகட்டத்தில் ஒரு முதலமைச்சரிடமிருந்து இத்தகு கருத்து வெளியாகி இருப்பது தேவையில்லாதது ஆகும். கருநாடக மாநில அரசு எதைச் சொல்லிவருகிறதோ அதையே தமிழ்நாடு முதலமைச்சரும் சொல்லுவது சரியானதுதானா? அப்படியே இருந்தாலும் இந்தக் காலகட்டத்தில் இப்படிக் கூறுவது யாருக்கு இலாபமாக முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
உண்மை நிலை என்ன? 1974இல் போடப்பட்ட அந்த ஒப்பந்தம் என்ன கூறுகிறது?
ஒப்பந்தத்தில் பிரிவு 10- உட்பிரிவு 11 இவ்வாறு கூறுகிறது,
“50 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்திருக்கிற அனுப வங்களைக் கொண்டு இந்த ஒப்பந்தத்தில் திருத்தங் களையும், சேர்க்கைகளையும் செய்து கொள்ளலாம்; குறிப்பாக காவிரி உபரிநீர் பற்றிப் பரிசீலனை செய்யலாம்” என்பதுதான் 1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் கூறப் பட்டுள்ளதாகும்.
உண்மை இவ்வாறு இருக்க, தமிழ்நாடு முதலமைச்சர் இந்தக் காலகட்டத்தில் இத்தகைய கருத்தினைத் தவிர்த்திருக்க வேண்டும்.
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
21.2.2018
===========================
சுருதி பேதம் வேண்டாம்
திராவிடர் கழகத்தின் வேண்டுகோள்!
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின், தமிழக அரசு, குறிப்பாக அ.தி.மு.க. அரசு, பலமுறை எங்களைப் போன்றவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், இன்னும் பல கட்சி நண்பர்கள், விவசாயிகள் ஆகியோர், நீட் உள்பட பல பிரச்சினைகளில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று சொன்னபொழுதெல் லாம், மறுத்து, அசையாமல் இருந்த தமிழக அரசு, இம்முறை காவிரிப் பிரச்சினையில், ஒன்றுபட்டு, நாம் கருத்துகளை அறியவேண்டும் என்கிற முயற்சி எடுத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை 22 ஆம் தேதி கூட்ட முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வில்லை என்ற காரணத்தினால், திராவிட முன்னேற்றக் கழகம், 23 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று முன் அறிவித்ததைக்கூட, ரத்து செய்கிறோம் என்று சொன்னது, ஜனநாயகத்தில், அவர்களுக்கு இருக்கிற ஈடுபாடு; லட்சியத்தில் இருக்கின்ற உறுதிப்பாடும் அதில் தெளிவாக தெரிகிறது. அது பாராட்டத்தகுந்தது.
அந்த வகையில், அந்தக் கூட்டத்தில் கலந்துகொள் கின்ற அத்துணைப் பேரும், எந்தவிதமான சுருதி பேதமும் இல்லாமல், எது மாறுபட்ட கருத்தோ, அதனை வலியுறுத்தாமல், தமிழ்நாடு இந்தப் பிரச்சினையில் ஒன்றுபட்டு, உரிமைக்குரல் எழுப்புகிறது என்று காட்ட வேண்டிய அவசியம் முக்கியம். அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்கின்ற அனைத்துக் கட்சிகளும், அனைத்து அமைப்புகளும் வெற்றிகரமாக நடத்தவேண்டும் என்று உங்கள்மூலமாக திராவிடர் கழகம் வேண்டுகோள் விடுக்கிறது. - அரியலூரில் தமிழர் தலைவர் பேட்டி