உச்சநீதிமன்றம் கூறிய சாதகமான அம்சங்களை செயல்படுத்த வைப்பதே முக்கியம்!
அனைத்துக் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பிரதமரைச் சந்திக்க முதலமைச்சர் ஏற்பாடு செய்யவேண்டும்
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கருத்துரை
சென்னை, பிப்.24 உச்சநீதிமன்றம், பாதகமான அம்சங்களையும், சாதகமான அம்சங்களையும் கூறியுள்ளது. சாதகமான அம்சங்கள் செயல்படுத்தப்பட அனைத்துக் கட்சித் தலைவர்கள், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்து அழுத்தம் கொடுக்க முதலமைச்சர் உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
22.2.2018 அன்று தமிழக அரசு கூட்டிய காவிரி தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறிய கருத்து வருமாறு:
‘‘நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படி ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியதற்காக தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீட் தேர்வுபற்றிய பிரச்சினை உள்பட மாநில உரிமைகளைப் பாதுகாக்க இதே அணுகுமுறை, முயற்சிகள் தொடரவேண்டும்.
இங்கே பேசிய பல்வேறு கட்சித் தலைவர்களும் சுருதி பேதமின்றி இந்தக் காலகட்டத்தில் நாம் செய்யவேண்டியது என்ன? நமது அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும் என்ற வகையில் பொறுப்புணர்வோடு கருத்துகளை எடுத்துக் கூறியது வரவேற்கத்தக்கதாகும்.
பல்வேறு பிரச்சினைகளில் மாறுபட்டு இருக்கும் நாம், தமிழ் நாட்டின் உயிர்ப் பிரச்சினையான இந்தக் காவிரி பிரச்சினையில், நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பதுதான் முக்கியம்.
தந்தை பெரியார் ஒரு கருத்தைக் கூறுவார். பொதுப் பிரச்சினை என்று வரும்போது,
‘‘எது நம்மைப் பிரிக்கிறதோ, அதனை அலட்சியப்படுத்த வேண்டும்.
எது நம்மை இணைக்கிறதோ அதனை அகலப்படுத்தவேண்டும் - ஆழப்படுத்தவேண்டும்'' என்பார்.
அந்தக் கருத்துதான், அணுகுமுறைதான் நமக்கு இப்பொழுது தேவை.
நாம் காட்டுகிற ஒற்றுமைதான் நமக்கு மிகப்பெரிய பலம்; கருநாடகத்தைப் பொறுத்தவரையில் கட்சிகளைக் கடந்து அவர்கள் ஒன்றுபட்டு நிற்பதை நாம் அறிவோம்!
500 பக்கங்கள் கொண்ட உச்சநீதிமன்றத் தீர்ப்புரையில், பல பாதகமான அம்சங்களும் உண்டு; நியாயமான, சாதகமான அம்சங்களும் உண்டு. பாதகமான அம்சங்களைத் தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளோம் - இனியும் எதிர்ப்போம்.
அதேநேரத்தில், சாதகமான அம்சங்களை எப்படி செயல்படுத்த வைக்கவேண்டும் என்பதுதான் நமது முக்கிய கவனமாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் நிலத்தடி நீர்பற்றி தீர்ப்பில் அதிக இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையில், அது பொருத்த மற்றதாகும். தமிழ்நாட்டின் நிலத்தடி நீரைப்பற்றிப் பேசும் தீர்ப்பு, கருநாடகத்தின் நிலத்தடி நீர்ப்பற்றி ஏனோ பேசவில்லை!
இந்த வழக்கைப் பொறுத்தவரை மேல்முறையீடு செய்ய முடியாது என்றாலும், மறு ஆய்வு கோர இடம் உண்டு; அதையும் ஒரு பக்கத்தில் நாம் செய்யவேண்டும். நிலத்தடி நீர்பற்றி தமிழ்நாட்டில் ஒரு நிபுணர் குழு அமைத்து, அந்தக் குழுவின் அறிக்கையை மறு ஆய்வில் இணைத்திட வேண்டும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் 450 ஆம் பக்கம் இவ்வாறு கூறுகிறது.
இதன் தமிழாக்கம் வருமாறு:
399. ‘‘காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின்படி, தொடர் புடைய மாநிலங்கள் மற்றும் மத்திய நீர் ஆணையத்துக்கு உதவிட, வல்லுநர்களைக் கொண்ட ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட வேண்டும். மாதந்தோறும் அக்குழு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், ஆற்று நீர்ப் பங்கீட்டில் ஒரு மாநிலத்துக்குரிய (Lower Riparian State) பங்கீட்டளவு பாதிக்கக்கூடிய வகையில் அடுத்த மாநிலம் (Upper Riparian State)
எவ்விதத்திலும் செயல்படக்கூடாது.'' (பக்கம் 450).
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் 456 ஆம் பக்கம் இவ்வாறு கூறுகிறது.
இதன் தமிழாக்கம் வருமாறு:
74. ‘‘நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை இரண்டு மாநிலங்களும் நீதிமன்றத்தின் ஆணையாக ஏற்றுக்கொண்டு அதற்கு கட்டுப்பட்டு, அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பிரிவு 6(2) இல் கூறியுள்ளதன்படி, நடுவர் மன்றம் அறிவிக்கின்ற தீர்வு என்பது உச்சநீதிமன்றம் அளிக்கின்ற ஆணை அல்லது உத்தரவைப்போன்று வலிமையுள்ளதாகும்.
உச்சநீதிமன்றம் அளிக்கின்ற உத்தரவைப்போன்றே, நடுவர்மன்றம் அளிக்கின்ற உத்தரவுக்கும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப்போன்று முழுமையான வலிமை உண்டு என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
‘‘நாடாளுமன்றத்தில் உள்நோக்குடன் சட்ட கற்பனைÕ எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. கற்பனை என்று கூறுவதன் நோக்கம் அதனுடைய எல்லைகளுக்கப்பால் சென்று விடக்கூடாது என்பதுதான். உண்மையில்நோக்கம் என்னவென்றால்,நடுவர்மன்றம்அளிக்கின்றஉத்தரவைநடைமுறைப்படுத்தவேண்டும் என்பதுதான்.
ஆகவே, அதுகுறித்து சுருக்கமாக தெளிவுபடுத்தும் போது, அதன் நோக்கம் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான்.'' (பக்கம் 456) என்று உச்சநீதிமன்றத் தீர்ப்புக் கூறுகிறது.
இந்தத் தீர்ப்பு நடுவர் மன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்துகிறது. காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்றுக் குழுவும் கண்டிப்பாக அமைத்தே ஆகவேண்டும்.
அதனை நாம் தொடர்ந்து வலியுறுத்துவோம்! இன்னொன்று முக்கியமானது. நமக்குத் தேவையான நேரத்தில் மாத வாரியாக தண்ணீரைக் கருநாடகம் தந்தாகவேண்டும்; கருநாடகத்தில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்ட நேரத்தில், அதற்குமேல் அணை யில் தேக்க முடியாது என்ற ஒரு சூழ்நிலையில், தமிழ்நாட்டை வடிகாலாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது.
காவிரி மேலாண்மை வாரியமும், ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டால், இதில் கருநாடக அரசு தன் விருப்பப்படி எல்லாம் செயல்பட முடியாது.
உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாட்டுக்காகக் கூறப்பட்டுள்ள அம்சங்களை செயல்படுத்திட அனைத்துக் கட்சித் தலைவர்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரத மரைச் சந்திக்க முதலமைச்சர் ஏற்பாடு செய்யவேண்டும்.
இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் வெற்றி பெற வாழ்த்துகள்'' என்று பேசினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.