காவிரி: அனைத்துக் கட்சி கூட்ட வெற்றிக்குப் பாராட்டு
காவிரிபோல ‘நீட்' உள்ளிட்ட பொதுப் பிரச்சினைகளிலும்
அனைத்துக் கட்சிகளின் ஒற்றுமை தொடரட்டும்! தொடரட்டும்!!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
காவிரி பிரச்சினைக்காக தமிழ்நாடு அரசால் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் சுருதி பேதம் இல்லாமல் ஒருமித்த நிலையில் முடிவுகள் எடுக்கப்பட ஒத்துழைத்த அனைத்துக் கட்சிகள், சங்கங்கள், அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுக்குப் பாராட்டு தெரிவிப்பதுடன், இதேபோல, ‘நீட்' எதிர்ப்பு உள்ளிட்ட பொதுப் பிரச்சினைகளிலும் நமது ஒற்றுமை தொடரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:
நேற்று (22.2.2018) தமிழக தலைமைச் செயலகத்தில் நடந்த காவிரி நீர்ப் பங்கீடு உரிமை மீட்டெடுப்புக்கான அனைத்துக் கட்சிகள், விவசாய அமைப்புகள் ஆகிய வைகளை அழைத்து தமிழக அரசு நடத்திய கூட்டம் ஒரு புதிய வரலாறு படைத்த கூட்டமாகும்.
புதிய வரலாறு படைத்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி- பாராட்டு!
ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு மேலாக இல்லாத புதுமை அதில் மலர்ந்தது! மாநில உரிமைக்கான உரத்த, ஒன்றுபட்ட குரல் அதில் ஒலித்தது!!
இதற்குக் காரணமாக அமைந்த மாண்புமிகு முதல மைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், அமைச்சர் பெருமக்கள், அனைத்துக் கட்சி, விவசாய அமைப்பின் தலைவர்கள், சமுதாய அமைப்புத் தலைவர்கள் அத்துணைப் பேருக் கும் நமது நெஞ்சம் நிறைந்த நன்றியும், வாழ்த்தும் உரித்தாகட்டும்!
‘‘இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்''
என்ற புரட்சிக்கவிஞரின் வாக்கு அடிநாதமாகியது!
டில்லிக்கு - மத்திய அரசுக்கு அரசியல் ரீதியாக உறவுக் குக் கைகொடுக்கும் அதேநேரத்தில்கூட உரிமைக்குக் குரல் கொடுக்கத் தயங்கோம் என்று உறுதிபட மூன்று முத்தாய்ப்பான முக்கியத் தீர்மானங்கள் முழக்கங்களாகி முறுவலித்தன.
மேலும் முக்கிய பிரச்சினைகள் உண்டு
இப்பிரச்சினை மட்டுமல்ல; ‘நீட்' தேர்வுக்கான விலக்குப் பெறும் உரிமை, முல்லை பெரியாறு உரிமை, கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொணரும் பொறுப்புரிமை, தமிழக மீனவருக்குள்ள வாழ்வாதாரத்தை இலங்கை அரசு பறித்து, அச்சுறுத்தும் (20 கோடி ரூபாய் அபராதம் போன்றவை) கொடுமைகளை எதிர்ப்பது போன்ற பல மாநில உரிமைகள் மீட்டெடுப்பிலும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் ஒற்று மையை, முன்னெடுத்துச் செல்ல வேண்டிய முக்கிய கடமையும், பொறுப்பும் அனைவருக்கும் உண்டு.
தேர்தல் களத்தில்
மோதலாம்!
தேர்தல் களத்தில் நிற்கும்போது வேண்டுமானால், எதிர் எதிர் நின்று ஒருவரை ஒருவர் வென்றிட முயலலாம்!
மற்ற நேரங்களில், குறிப்பாக மாநில மக்கள் உரிமையை வென்றெடுத்து, மீட்டு, நிலைநாட்டுவதில் நாம் ஒன்றாய் ஒன்றுபட்டு நிற்கவேண்டும்!
நேற்று நடந்த கூட்டம் படைத்த வரலாறு - சுருதி பேதமிலாத பேச்சுகள் - பட்டிமன்றங்களாக வாதிடாமல், ஓர் நிலையில், பொது நிலையில் நின்று எளிதில் தீர்மானங்களை நிறைவேற்றிய மகிழ்ச்சியுடன் அனைவரும் கைகோத்துக் களம் காண முடிவெடுத்த முயற்சி தொடரட்டும்!
பொதுப் பிரச்சினைகளில்
ஒத்த கருத்து தேவை!
தமிழ்நாட்டு அரசியலில் பொதுமை - கருத்தொத்த கடமைகள் - நமது ஜனநாயகத்திற்கு நல்ல பலம் சேர்க் கட்டும்.
அனைவருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்!
தலைவர்
திராவிடர் கழகம்.
சென்னை
23.2.2018