சென்னை அய்.அய்.டி.யில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்குப் பதிலாக சமஸ்கிருதப் பாடலா?
அய்.அய்.டி.யின் ஆர்.எஸ்.எஸ். போக்கை எதிர்த்து விரைவில் திராவிடர் கழகம் போராட்டம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிவிப்பு
மத்திய அமைச்சர்கள் இருவர் பங்கேற்ற சென்னை அய்.அய்.டி.யில் தமிழ்த்தாய் வாழ்த்துத் தவிர்க்கப்பட்டுள்ளது. அய்.அய்.டி.யின் இந்த ஆர்.எஸ்.எஸ். போக்கை எதிர்த்து விரைவில் திராவிடர் கழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.
தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு.நிதின்கட்காரி, மத்திய இணையமைச்சர் திரு.பொன்.ராதாகிருஷ்ணன் ஆகி யோர் அய்.அய்.டி. நிகழ்ச்சி ஒன்றில் இன்று (26.2.2018) கலந்துகொண்டுள்ளனர்.
மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படவில்லை. அதற்கு மாறாக, சமஸ்கிருதத்தில் மகாகணபதி என்று தொடங்கும் பாடல் பாடப்பட்டுள்ளது.
மற்றுமொரு செய்தி, நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை அய்.அய்.டி. என்பது மத்திய அரசுக்குட்பட்ட நிகர்நிலைப் பல்கலைக் கழகம் ஒத்த நிறுவனமாகும். கோடிக்கணக்கில் மத்திய அரசின் பணம் இதற்கு வாரி இறைக்கப்படுகிறது.
அத்தகைய ஒரு நிறுவனம் குறிப்பாக சென்னை அய்.அய்.டி. என்பது All Iyer + Iyangar Technology என்று கூறக் கூடிய நிலையில்தான் செயல்பட்டு வருகிறது.
ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யின் கட்டுப்பாட்டில்தான் சென்னை அய்.அய்.டி. நடைபெறுகிறது போலும்!
தமிழ்நாட்டுக்குட்பட்ட எந்த அரசு நிறுவனமாக இருந்தாலும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படுவது கட்டாயமாகும். அதைத் தவிர்த்துவிட்டு செத்த மொழியான சமஸ்கிருதத்தை சிம்மாசனம் ஏற்றும் வகையில், சமஸ் கிருதப் பாடலைக் கடவுள் வாழ்த்தாகப் பாடுவது சட்ட விதிமீறலும் - பார்ப்பனத்தனமும் அல்லாமல் வேறு என்ன வாக இருக்க முடியும்?
தேசிய கீதமும் பாடப்படவில்லை என்பது எதைக் காட்டுகிறது; மற்ற நிறுவனங்களில் இப்படி நடந்திருந்தால், எப்படியெல்லாம் துள்ளிக் குதித்திருப்பார்கள்!
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற தமிழ்நாடு அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியிலும் (24.2.2018) தேசிய கீதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இரு நிகழ்ச்சியிலும் தேசிய கீதம் தவிர்க்கப்பட்டு இருப்பதை எதேச்சையாக நடந்ததாகக் கருத முடியாது - திட்டமிட்டே தவிர்க்கப்பட்டுள்ளது.
ஒருக்கால் ஜனகன தேசிய கீதம் வங்க மொழியில் இருப்பதாலும், அந்தப் பாடலில் ‘திராவிட' என்று சொல் இருப்பதாலும்தான் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டு வருகிறது என்றே கருதவேண்டியுள்ளது.
ஒரே இந்தியா, ஒரே தேசியம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்னும் இந்துத்துவாவின் இத்தகு திருவிளையாடல்கள் படிப்படியாக அரங்கேறி வருகின்றன.
சென்னை அய்.அய்.டி.,யின் தமிழ் விரோத போக்கினை எதிர்த்து திராவிடர் கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை விரைவில் நடத்தும்!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
26.2.2018