ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களை தூத்துக்குடி மாவட்டம்
புன்னைக்காயல் கிராமத்தில் நுழையக்கூடாது என்று சொல்வதா?
குண்டர் சட்டத்தில் கைது செய்க!
ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களை தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் கிராமத்தில் நுழையக்கூடாது என்று கட்டப்பஞ்சாயத்தில் முடிவெடுத்து தண்டோரா போட்டிருப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்றும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்குத் தக்கப் பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்றும், காவல்துறையின் செயல்பாடுகள் மேம்படவேண் டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
சமூகக் கொடுமையான பகிரங்க நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் என்ற ஊரில், ‘‘கிராமப் பஞ்சாயத்து'' என்ற பெயரில் சிலர் கூடி, அவ்வூரில் வசித்து, ஜாதி மறுப்புத் திருமணங்களை நடத்திக் கொண்ட 12 குடும்பத்தவர் ஊருக்குள் நுழை யக் கூடாது, ஊரில் வசிக்கத் தகுதியற்றவர்கள் என்ற கருத்தை உள்ளடக்கி, மணமக்களுக்குரிய அடிப் படை உரிமைகளைப் பறிக்கும் வகையில், முடிவு செய்ததோடு, இந்த ஊர்ப்பஞ்சாயத்து என்ற பெயரில் ‘கட்டப் பஞ்சாயத்து' கூட்டி முடிவெடுத்து, அதை தண்டோரா போட்டும் அறிவிக்கச் செய்தனர் என்ற செய்தி, தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; அனைத்து நாகரிக உலகத்திற்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை அளிக்கும், ஜாதி வன்முறை, கலவரத்திற்கு வித்திடும் மிகப்பெரிய சமூகக் கொடுமையான பகிரங்க நடவடிக்கையாகும்!
சட்டக் கடமையைச் செய்யாமல்
காவல்துறை மவுனம் சாதிப்பது ஏன்?
இதை அம்மாவட்ட காவல்துறை எப்படி அனும தித்தது? ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை? தனது சட்டக் கடமையைச் செய்யாமல் மவுனம் சாதிப்பது ஏன்?
இப்படி ஒரு நிகழ்வு - ‘‘கூட்டம், தண்டோரா'' போடுதல்பற்றி அம்மாவட்ட காவல்துறை நுண் ணறிவுப் பிரிவு முன்கூட்டியே அறிந்து அதைத் தடுத் திருக்கவேண்டாமா?
மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் எப்படி இதுபற்றி கண்டும் காணாத மிகமிக மென்மையான அணுகுமுறையைக் கையாளுகிறார்கள் ஏன் என்பது புரியவில்லை!
தூத்துக்குடியில் அண்மையில் கூடிய இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணியில், ஒரு காவல்துறை துணை அதிகாரி பேரணியில் தேவை யில்லாமல், ஒரு கலவரம், வன்முறை வெடிக்கும் - புத்திசாலித்தனமற்ற அணுகுமுறையைக் கையாண்டு, அடிதடிகளை நடத்தியுள்ளார். அது காவல்துறையின் அனுமதி வாங்கி நடைபெற்ற ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியின் பேரணியில் அவ்வாறு நடந்துகொண்டது எவ்வகையில்நியாயம்?இதுபோன்றவர்களால் காவல் துறையின் கடமைப் பொறுப்புள்ள நல்ல அதிகாரி களுக்கும்கூட மிஞ்சுவது அவப்பெயரும், பழியும்தானே!
மாநிலக் காவல்துறைத் தலைமை, உள்துறை செயலாளர் முதலியவர்கள் இதுபற்றி சிந்தித்து, இத்தகு நிகழ்வுகள் நடைபெறாது தடுக்கவேண்டும்.
வன்மையான
கண்டனத்திற்குரியது!
அதுபோலவே, திராவிடர் கழகக் கொள்கைப் பிரச் சாரப் பொதுக்கூட்டங்கள் - முக்கிய தலை மைப் பொறுப்பாளர்கள் கலந்துகொள்ளும் கூட்டங் களுக்குக்கூட அனுமதி தராமல் இழுத்தடிப்பது, ஒப்புக்கொள்ளப்பட்ட இடங்களைக்கூடத் தராது, வேறு சந்து பொந்துகளைக் காட்டி, கடைசி நேரம் வரை அலைக்கழிப்பது (அவ்வூரில் உள்ள இரண்டொரு பா.ஜ.க., இந்து முன்னணி என்ற லெட்டர் பேட் ஆசாமிகள் வழமையாக எழுதிய புகாரைப் பெரிதாக எடுத்துக்கொள்வது) இப்படி பல ஊர்களில் குறிப்பாக, தென் மாவட்டங்களிலும், மேற்கு கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்களிலும் நடைபெறுவது வன்மையான கண்டனத்திற்குரியது.
திராவிடர் கழக மாநில சட்டத்துறை இதற்கு தக்க சட்டபூர்வ நடவடிக்கைகளை உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றத்தில் ஏற்பாடு செய்ய ஆலோசித்து வருகிறது!
திராவிடர் கழகக் கொள்கைப் பிரச்சாரம் இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளை வலியுறுத்தி நிகழ்த்தும் இந்திய அரசியல் சட்டத்தில்
(51-ஏ (எச்) பிரிவின்கீழ்) உள்ள அறிவியல் மனப்பாங்கு, கேள்வி கேட்கும் பகுத்தறிவு வளர்ச்சி, மனிதநேயம், சீர்திருத்தத்தினைப் பரப்பும் பிரச்சாரக் கூட்டங்கள் ஆகும்.
போராடிப் பெற்ற சமத்துவ,
சம வாய்ப்பான முழு மனித உரிமை
புன்னைக்காயல் நிகழ்வு, தமிழ்நாடே வெட்கித் தலைகுனியும் நிகழ்வு. அதுவும் வர்ணாசிரம தர்மத்தின் படிகளில் மிகவும் கீழே ஒரு காலத்தில் வதிந்து, தந்தை பெரியார், டபிள்யூபிஏ சவுந்திரபாண்டியனார், அய்யா வைகுண்டர் போன்றவர்களால் போராடிப் பெற்ற சமத்துவ, சம வாய்ப்பான முழு மனித உரிமை பெற்றோரின் இத்தகு ஜாதி ஒழிப்புக்கு, சன்மானம் தருவதற்குப் பதிலாக, இப்படியான ஓர் அவலத்தை உருவாக்கும் ஜாதி வெறித்தனத்திற்கா பலியாவது?
உச்சநீதிமன்றத்தின் அண்மைக் காலத் தீர்ப்பிலும், இந்த மாதிரி கிராம ஜாதி பஞ்சாயத்து (ளீலீணீஜீ ஜீணீஸீநீலீணீஹ்ணீt) பற்றி கடும் நடவடிக்கை எடுத்து தடுக்கப்பட வழிமுறைகள் (நிuவீபீமீறீவீஸீமீ) தரப்பட்டுள்ளன.
தூத்துக்குடி காவல்துறைக்கு இது தெரியாதா? தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும்.
தகவல் அறிந்ததும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதலே நெல்லை, தூத்துக்குடியைச் சேர்ந்த நமது தோழர்கள் இந்தக் கொடுமையை விளைவிப்போரைத் தொடர்பு கொண்டு கடும் கண்டனத்தையும், எச்சரிக்கையையும் பதிவு செய்ததோடு, தொடர்ந்து அங்கு நடைபெறும் முன்னேற்றங்களைக் கவனித்தே வருகிறார்கள். சட்ட விரோதமான எவ்வித நடவடிக்கையையும் ஒருபோதும் கழகம் வேடிக்கை பார்க்காது.
உடனடியாக வெறும் எஃப்.அய்.ஆர். பதிவு செய்து விட்டோம் என்ற ‘ஜால வித்தை'யைக் காவல்துறை நடத்திடாமல், அந்தக் குற்ற நடவடிக்கைக்குக் காரண மானவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க உடனடியாக முன்வரவேண்டும்.
குண்டர் சட்டத்தின்கீழ்
கைது செய்க!
மாவட்ட ஆட்சியர் அத்தகையவர்களை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க உடனே முன்வரவேண்டும். இல்லையேல், தமிழ்நாட்டின் அமைதி குன்றி, அரசுக்குக் கெட்ட பெயர் வரும். அவ்வூர் மக்கள்மீது நமக்கேதும் கோபமில்லை. ஒரு சிலர் ஜாதி வெறியோடு நடந்துகொண்டு இருக்கலாம்.
ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்பவர்களை அக்கிராமத்திற்குள் அனுமதித்து, அவர்களுக்குத் தக்க பாதுகாப்புத் தரவேண்டியது அவசர ஆக்கப்பூர்வ நடவடிக்கையாகும்.
அதுதான் புண்ணை மேலும் காயமாக்காத புன்னைக் காயல் நிகழ்வின்மீதான சரியான நடவடிக்கையாகும்!
சென்னை தலைவர்
27.2.2018 திராவிடர் கழகம்.