சபாஷ்! சபாஷ்!! ஓங்கட்டும் இந்த ஒற்றுமை!
‘‘காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திடுக!''
தி.மு.க. - அ.தி.மு.க. உறுப்பினர்கள் முழக்கம்
நாடாளுமன்ற இரு அவைகளும் முடக்கம்!
புதுடில்லி, மார்ச் 5 காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் இருந்து பின் வாங்கும் மத்திய பாஜக அரசின் போக்கைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று கூடி முழங்கினர். இதனால் அமளி ஏற்பட்டுள்ளது என்று கூறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டன.
நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி தொடங்கியது. இந்தக்கூட்டத்தொடர்இருகட்டங் களாக நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த கூட்டத் தொடரின் முதல் பகுதியான கடந்த 9 ஆம் தேதிவரை நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடந்தது. பின்னர் இரு அவைகளுக்கும் ஒரு மாதம் விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரின் 2 ஆம் கட்ட கூட்டத் தொடர் இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது.
கூட்டத்தொடர் துவங்கிய உடனேயே அதிமுக கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக விவாதிக்க அனுமதி கோரினார். அவரது கோரிக்கை குறித்து மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு எது வும் கூறாத நிலையில், தங்கள் கோரிக் கையை உடனடியாக ஏற்று எங்களைப் பேச அனுமதிக்கவேண்டும் என்று தமிழகத்தின் திமுக, அதிமுக நாடாளு மன்ற உறுப்பினர்கள் அவையின் மய்யப் பகுதிக்கு வந்து முழக்கங்களை எழுப்பினர்.
அனைத்து அதிமுக உறுப்பினர் களும் அவைத் தலைவரைச் சூழ்ந்து கொண்டு, ‘‘அமைத்திடுக, அமைத்திடுக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திடுக!'' என்று தொடர்ந்து முழக்க மிட்டனர்.
மக்களவையிலும்...
இதே போல் மக்களவையிலும் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக, ‘‘மத்திய அரசே எங்களுக்கு நீதிவழங்கு, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்துவிடு!'' என்று கூறி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழக மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்களின் திடீர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டன, பிறகு மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு கூட்டம் துவங்கும் என்று மாநி லங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.
கடந்த வியாழன் என்று கரூரில் பேசிய மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக உறுப்பினருமான தம்பிதுரை, ‘‘காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பில் தமிழகத்திற்கு எதிர்பார்த்த அளவு தண்ணீர் கிடைக்காவிட்டாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இதில் காலதாமதம் செய் தாலும் தமிழர்களின் நலனை காக்க அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி போராடுவோம் என்று கூறியிருந்தார்.
தி.மு.க. செயல் தலைவர்
அதேபோல் அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்த நிலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் நாடாளுமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து திமுக செயல்படும் என்று கூறியிருந்தார். அதையே சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தபோதும் உறுதிசெய்தார். இதனை அடுத்து நாடாளுமன்றத்தில் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக ஆளும் கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்திற்காக முழக்கங்கள் எழுப்பினர்