திருவெறும்பூர் உஷா சாவு; சென்னையில் அஸ்வினி படுகொலை; மலையேறச் சென்ற இருபால் இளைஞர்கள் பரிதாப மரணம்!
இனி இவை நடைபெறாமல் இருக்க அரசும் - சமூக ஆர்வலர்களும் இணைந்து செயல்படவேண்டும்
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
அண்மைக்காலத்தில் நடைபெற்ற மூன்று நிகழ்வு களை எடுத்துக்காட்டி, இந்த சமூக அவலங்கள் இனி ஏற்படாமல் தடுக்க நாம் செய்யவேண்டியது என்ன என்பது குறித்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டில் உலக மகளிர் நாள் - கடந்த 8 ஆம் தேதி நாடே கொண்டாடி மகளிர் பாதுகாப்பு, உரிமைகள் பற்றியெல்லாம் பேசிய அந்த ஒலி அடங்கும்முன்னரே, நம் அனைவரது நெஞ்சங்களைப் பிழிய வைக்கும் வேதனை பொங்கும் துயரமான மூன்று நிகழ்வுகள் சங்கிலித் தொடர்போல் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து, நாகரிக சமுதாயத்தைத் தலைகுனிய வைத்தும், மாணவ, இளைஞர்கள் வீர தீர பராக்கிரமத்தை நிலை நாட்டி மகிழ்வது, மகிழ்ச்சி ஊற்றினைத் தராமல், துயரக்கடலில் அனைவரையும் தள்ளிவிட்ட அதிர்ச்சிதான் மிஞ்சியது!
திருவெறும்பூர் நிகழ்வு
1. திருச்சியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற காதல், ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட அய்யம் பேட்டை சூலமங்கலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர் கருவுற்றிருந்த தனது துணைவியாரை பின் சீட்டில் அமர வைத்து திருச்சியிலிருந்து இரவு சாலை வழியே திருவெறும்பூர் வழியே சென்றபோது தலைக்கவசம் (ஹெல்மெட்) அணியவில்லை என்பதற்காக இவரை, போக்குவரத்து ஆய்வாளர் துரத்தியதோடு, பின்னால் விரட்டி வந்து எட்டி உதைத்தபோது, இருவரும் நிலை குலைந்து தடுமாறி கீழே விழுந்த நிலையில், மூன்று மாதக் கர்ப்பிணிப் பெண் (உஷா) கருக்கலைந்து உயிரிழந்துள்ள சோகச் சம்பவம்!
இரண்டு உயிர்கள் (தாயும், சேயும்) பலியாயின; பல் வேறு கனவுகளைச் சுமந்த அவரது துணைவரும், குடும் பமும், அவ்வூருமே மீள முடியாத துயரத்தில் மூழ்கியுள்ள நிலை.
காவல்துறைஅதிகாரிகள்கடமையாற்றும்போது மனித நேயத்தை மறந்துவிட்டு, முரட்டுத்தனமாக சட் டத்தை மட்டுமே கடைப்பிடிப்பது என்ற நிலையில், அதிதீவிரமான - மனித உரிமைப் பறிப்பில் ஈடுபட்டு விடக்கூடாது.
காவல்துறையில் பணிபுரிவோரின் மன அழுத்தம் பற்றியெல்லாம் பேசப்படுகிறது. தமிழக அரசு அவர்களை அந்த நிலையிலிருந்து விடுவிக்கத் தேவையான நிரந்தரத் தீர்வு காண வேண்டாமா?
இழப்பீடுகளால் ஓரளவு பொருளாதார ஆதரவு பெற முடியுமே தவிர, இழந்த உயிர்களை மீட்க முடியுமா? அந்த இளைஞருக்கு நமது ஆறுதலைக் கூறி, அவர் விரக்தி நிலையிலிருந்து விடுபட்டு, இத்தகைய நிகழ்வுகள் எதிர்காலத்தில் எவருக்கும் நிகழாப் பணியாக தொண்டறத்தில் ஈடுபட்டு, ‘புது மனிதராக' மாறவேண்டும்.
கல்லூரி மாணவி அஸ்வினி படுகொலை
2. ஒரு கல்லூரி மாணவி, தன்னைக் காதலில் ஏமாற்றிவிட்டார் என்று நொந்து, கொலையாளியாக மாறியது மிகப்பெரிய கண்டனத்திற்கும், அதேநேரத்தில் பெண்களை ஏதோ ஆண்களின் அடிமைகள் - ‘காதல், காம விளையாட்டுக்கான கருவிகள்' என்ற மனப் பாங்குடன் எந்த ஒரு ஆண் நினைத்தாலும், அவர்கள் 21 ஆம் நூற்றாண்டில் வாழத் தகுதியற்றவரே. இது ‘மனிதம்' தெரியாத அகந்தையாகும்.
இந்த மனப்பான்மை வெறி இளைஞர்களை ஆக்கிர மிக்காமல் இருக்க, மனோதத்துவ ரீதியாகவும், பாலியல் கல்வியைப் பயிற்றுவித்து அவர்களை நட்பு ரீதியாகப் பழகி, எவரது உரிமையையும் மற்றவர் பறிக்கக் கூடாது என்பதை உணர்த்துவதோடு, கடும் தண்டனையும் கொடுப்பதும் அவசியமாகும்.
இதுதனிமனிதகுற்றங்களாகமட்டும்அரசுகள்பார்க் காமல், சமூக வாழ்வின் நோயாகக் கருதி, அதற்கு நோய்நாடி மருத்துவம் தேடித் தர ஆவன செய்யவேண்டும்.
மலையேறச் சென்றவர்களுக்கு
ஏற்பட்ட சோகம்
3. எல்லாவற்றையும்விட, துன்பக் கடலின் ஆழத்தில் நம்மைத் தள்ளிய மற்றொரு செய்தி!
தமது தீரத்தை மலையேறி நிரூபித்து மகிழச் சென்ற தகவல்தொழில்நுட்பப்பணியாளர்களானபலரும்சுமார் 40 பேர் {Trekking} என்ற மலையேறும் சாதனை புரியச் சென்று, எதிர்பாராதவிதமாக குரங்கணி மலைப் பகுதியில் பிடித்த காட்டுத்தீயில் சிக்கிக்கொண்டு, பலர் மீட்கப்பட்டாலும்கூட, 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி கேட்டு, கண்களில் இரத்தக் கண்ணீ ரைப் பெருக்குகிறது. இன்னும் 8 பேர் நிலை கவலைக் கிடமாகவும் உள்ளது.
மலையேறுதலில் Risk) அபாயம் இருந்தாலும், இப்படி ஒரு விபத்து நிகழ்ந்துள்ளதே! வீர தீர சாதனைக்குத் தகுந்த பயிற்சி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, அனுமதி பெற்று செல்லவேண்டும்.
வாழ்ந்து வரலாறு படைக்கத் துடித்தெழும் இளந் தளிர்களுக்கு இப்படி ஓர் உயிர் பறிப்பா நிகழ்வது!
எதிர்காலத்தில் இவை நடக்கக்கூடாது!
இதுபோன்ற - எதிர்பாராத நிகழ்வுகள் தீ என்றாலும்கூட, அது எதிர்காலத்தில் நிகழாவண்ணம் - இதன்மூலம் படிப்பினைப் பெற்று, கட்டுப்பாடுகளை விதித்து, இப் படிப்பட்ட நிகழ்வுகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்கும் நிரந்தரப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், அரசும், சமூக ஆர்வலர்களும் இணைந்து செய்தல் அவசியம்! அவசரமாகும்!!
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உயிரிழந்த சோகத் தில் கண்ணீர்க் கடலில் மூழ்கியுள்ள பெற்றோர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்.