அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பணி நியமனம் - நீட்' தேர்விலிருந்து விலக்கு - உடனடி சட்டப் பரிகாரம் காணப்படும்
திராவிடர் கழக வழக்குரைஞர்கள் உள்பட அனைத்து வழக்குரைஞர்களை ஒன்று திரட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் தரப்படும்! திராவிடர் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
சென்னை, மார்ச் 17 திராவிடர் கழக வழக்குரைஞரணி கலந் துரையாடல் கூட்டம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் இன்று (17.3.2018) காலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் 1:
தமிழ்நாடு (தி.மு.க.) அரசு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டி, அதன்மூலம் ஜாதி, தீண்டாமை, பிறவி பேதம் ஒழியச் செய்து நிறைவேற்றிய சட்டம், அர்ச்சகராக விண்ணப்பித்தோருக்கு வைணவ, சிவ ஆகமப் பயிற்சிகளை ஓராண்டு தக்க பாடத் திட்டம் வகுத்து, தக்காரைக்கொண்டு பயிற்சி கொடுத்து தயார் நிலையில் 205 பேர் பட்டயம் பெற்றோர் அப்பணிக்கு முழுத் தகுதியும் பெற்று, சுமார் 8 ஆண்டுகளுக்குமேல் காத்திருக்கின்றனர்.
இது சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில் தீர்ப்புக் கூறிய அமர்வு, தமிழக அரசின் சட்டம் செல்லும் என்று கூறி, மதுரை மீனாட்சியம்மன் கோவில் அர்ச்சகர்களும், பிற சங்கங்களும் போட்ட வழக்கை, டிசம்பர் 15, 2015 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தது!
இரண்டு ஆண்டுகளுக்குமேல் ஆன போதும், அ.தி.மு.க. அரசின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகி யோர் சட்டமன்றத்திலேயே வாக்குறுதிகள் அளித்திருந்த நிலையில், அவர்களது ஆட்சியே தற்போதும் தொடருகிறது என்று கூறிக்கொள்ளும் அ.தி.மு.க. அரசு, இதுவரை அதுபற்றி திராவிடர் கழகத் தலைவர் இரண்டு கடிதங்களை முன்னாள் - இந்நாள் முதலமைச்சர்களுக்கு அனுப்பியும், எவ்வித ஆணையும் பிறப்பித்து, அனைத்து ஜாதியினரையும் அர்ச் சகராக்கும் சட்டக் கடமையை நிறைவேற்றாமல் இருப்பதற்கு, தனது ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் இக்கமிட்டி தெரிவித்துக் கொள்கிறது.
அடுத்து, தொடர் நடவடிக்கையாக பாதிக்கப்பட்டுள்ள சில மாணவர்கள் இறந்து போன நிலையில், வேலையில்லாமல் வறுமையில் உழலுபவர்களைக் கொண்டு, உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் போட்டு இதற்கு உடனடியாக சட்டப் பரிகாரம் தேடு வது என்று இக்கமிட்டி ஒருமனதாக முடிவு செய்கிறது!
தீர்மானம் 2:
மத்திய சுகாதாரத் துறை, மனிதவள மேம்பாட்டுத் துறையுடன் இணைந்து, கடந்த கல்வி ஆண்டு முதலே திணித்துள்ள நீட்' தேர்வு எழுதினால்தான் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கும், அதற்கு மேல் படிப்புகளுக்கும் செல்ல முடியும் என்பது அப்பட்டமான மாநில உரிமைப் பறிப்பு ஆகும்.
மாநிலப் பட்டியலில் முன்பு இருந்த கல்வி'', நெருக்கடி காலத்தில் ஒத்திசைவு பட்டியலுக்கு'' (Concurrent List) மாற்றப்பட்டது. அதன்படியேகூட, விலக்குக் கோரும் மாநிலங் களுக்கு அவர்களது விருப்பத்திற்கேற்ப விலக்கு அளிப்பது சட்டப்படி மாநிலங்களுக்குள்ள பறிக்கப்பட முடியாத உரிமை என்பதால், சென்ற ஆண்டு (2017) ஜனவரியில் தமிழ்நாடு சட்டமன்றம் மக்களின் எதிர்ப்பையும், கிராமப்புற மாணவர்களின் நலனைப் பாதுகாக்கும் முறையிலும் நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு (exemption) அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து நிறை வேற்றிய இரண்டு மசோதாக்களை மத்திய அரசு ஏதும் கூறாமலேயே கிடப்பில் போட்டு, தொடர்ந்து நீட்' தேர்வு அறிவிப்புகளை வெளியிட்டு, ஆயத்தங்களை முன்னெடுத்துச் செல்வது அரசியல் சட்ட விரோதமான மாநில உரிமைப் பறிப்பாகும். இதற்கு சட்டப் பரிகாரத்தை - மத்திய அரசு விலக்கு அளிக்கும் நெறிமுறை ஆணை பிறப்பிக்கப்படும்வரை உயர் நீதிமன்றத்தில், சம்பந்தப்பட்ட பல அமைப்புகள், பெற்றோர்கள் இவர்களது முறையீட்டிற்குச் சரியான வழக்குகளைத் தொடுத்து, தீர்வு காண வேண்டிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும் என்றும் இக்கமிட்டி முடிவு செய்கிறது!
தீர்மானம் 3:
2007 இல் காவிரி நடுவர் மன்றம், தமிழ்நாடு காவிரி டெல்டா பகுதி வறண்ட பாலையாக மாறிடும் வேதனையான சூழ்நிலையை மாற்றிட, காவிரி நதிநீர்ப் பங்கீடு - வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது அமைத்த காவிரி நடுவர் மன்றம், அதன் இறுதித் தீர்ப்பை 17, 18 ஆண்டுகள் கழித்து தந்துள்ளதை, செயல்படுத்திட, அண்மையில் உச்சநீதிமன்றம் 16.2.2018 இல் அளித்த தீர்ப்பில், 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம், நான்கு மாநில அதிகாரங்களை உள்ளடக்கிய ஒழுங்காற்று குழு (Regulation Commission) அமைத்திட ஆணையிட்டுள்ளது. இதுநாள் வரை அமைக் காமல் காலந்தாழ்த்தி வருவதும், உச்சநீதிமன்றத் தீர்ப்பில் காவிரி நதிநீர்ப் பங்கீடு - மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு அமைக்கவேண்டும் என்று கூறவில்லை; ஸ்கீம்' - திட்டம்' என்று மட்டும்தான் கூறப்பட்டுள்ளது என்று பிரச்சினையை திசை திருப்பிட மத்திய அரசின் நீர்வளத் துறை செயலாளரும், கருநாடக அரசும் கூறுவது சட்டப்படி தவறானது மட்டுமல்ல, அரசியல் உள்நோக்கத்தையும் கொண்டதாகும்.
எனவே, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும், தமிழக அரசும் போதிய அழுத்தம் தராமல், வெறும் தீர்மானம் போடுவது ஒப்புக்கு அழுவது'' போன்றதாகும். அது போதிய அழுத் தத்தை தர அனைத்துக் கட்சி, இயக்கங்கள், விவசாய அமைப்புகளை அழைத்து, திராவிடர் கழக வழக்குரைஞர்கள் உள்பட, இதற்கான வழக்குரைஞர்களின் பங்களிப்பை ஒன்று திரட்டிடவும் நமது அணி ஆவன செய்வது என்று முடிவு மேற்கொள்ளப்படுகிறது.
தீர்மானம் 4:
ஆங்காங்கு திராவிடர் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யும் பொதுக்கூட்டங்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து வருவது தொடர்வதால், இதுகுறித்து தகுந்த சட்ட நடவடிக் கைகள் எடுப்பது என தீர்மானிக்கப்படுகிறது.
கும்பகோணத்தில்...
அடுத்த வழக்குரைஞரணி கூட்டத்தை கும்பகோணத்தில் வரும் 26.5.2018 சனிக்கிழமை நடத்துவது என்றும் முடிவு செய் யப்பட்டது!
புதிய செயலாளர்
திராவிடர் கழக வழக்குரைஞரணியின் புதிய செயலாளராக மதுரை வழக்குரைஞர் சித்தார்த்தன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.
கலந்துரையாடலில் பங்கேற்றோர்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், செயலாளர் பொ.நடராசன், துணைத் தலைவர் மு.க.இராசசேகரன், துணை செயலாளர் ஜே.தம்பிபிரபாகரன், இணை செயலாளர் ஆ.வீரமர்த்தினி, ஆர்.இரத்தினகுமார், சு.குமாரதேவன், கோ.சா.பாஸ்கர், மு.சித்தார்த்தன், பீ.இரமேஷ், கு.நிம்மதி, பி.சுரேஷ், சு.ந.விவேகானந்தன், ச.முத்துக்கிருஷ்ணன், மு.இராசா, நா.கணேசன், இரா.உத்திரகுமாரன் ஆகியோர் பங் கேற்றனர்.