அன்னை மணியம்மையார்தம் 40 ஆம் ஆண்டு நினைவுநாள் சிந்தனை!
அடுத்தாண்டு அன்னையாரின் நூற்றாண்டு -
மகளிர் உரிமை, மாண்பை
மலை உச்சத்துக்கே கொண்டு செல்லுவோம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
அன்னை மணியம்மையார் அவர்களின் 40 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (16.3.2018). அடுத்தாண்டு அன்னையாரின் நூற்றாண்டு - மகளிர் உரிமை, மாண்பை மலை உச்சத்துக்கே கொண்டு செல்லுவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பெருமதிப்பிற்கும்,வற்றாதபாசத்திற்கும் உரியநம்அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்கள் மறைந்து, 40 ஆண்டுகள் ஓடிவிட்டன!
இந்த 40 ஆண்டுகால இயக்க நிகழ்வுகள் அனைத்தும் அனைத்திந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்தவை என்றால், அதற்கு முழுமுதற் காரணம் நம் அறிவு ஆசான் தந்தை பெரியாரும், அவர்களுக்குப் பின் தலைமையேற்று நம்மை வழிநடத்திய நம் அன்னையாரும்தான்!
அவர்தம் காலத்தில் இருந்த இன எதிரிகளும், அரசியல் போக்குகளும் இவ்வளவு மோசமானவை அல்ல; இப்போதோ தரந்தாழ்ந்தவர்களுடன் போராடி நாம் நமது லட்சியப் பயணத்தை - வேறு வழியின்றி - நடத்திட வேண்டியுள்ளது!
ஓர் இன எழுச்சி அறப்போரில் நமது அறி வாயுதங்கள் நம் இன எதிரியைப் புறமுதுகிட்டு ஓடச் செய்யும் அளவுக்கு கூர்மழுங்காதவை.
அவற்றை எப்போது, எப்படி கையாளுவது என்ற பயிற்சியை நமக்கு அவ்விரு தலைவர்களும் கற்றுத் தந்துவிட்டே சென்றிருக்கிறார்கள்.
எனவே, நமது இலட்சியப் பயணம் - எந்த (நெருக்கடி) நிலையையும் சந்தித்து வாகை சூடிட ஆயத்தமாகும் உறுதியான பயணம் ஆகும்!
1978 இல் மறைந்த நம் அன்னையார் அவர்கள் சகிப்புத்தன்மையுடன், அலட்சியப்படுத்த வேண்டிய வைகளை அலட்சியப்படுத்திடும் பயிற்சியையும் நமக்கு நன்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள்!
அச்சமில்லை, அயர்வில்லை. எனவே, தோல்வி இல்லை. அன்னையார்தம் தியாகம் - அனைத்துச் சொத்துக்களையும் அறக்கட்டளையாக்கி, மக்க ளுக்கே தந்த மகத்தான ஈகை - எல்லோராலும் வியக்கத்தக்கவை!
‘ஆத்திரக்காரர்களுக்குப்புத்திமட்டு'என்பதை அவனிக்கு உணர்த்திய அருமையான எடுத்துக்காட் டாகும்.
நெருக்கடிகாலகோரத்தாண்டவத்தையும்எதிர் கொள்ளும் ஆற்றல் அவர்களிடமிருந்து நாம் வரித்துக் கொண்டு, பற்றற்ற உள்ளத்தின் பாங்கினைப் பெற்று, அய்யாவின் தத்துவமாம் அறிவுப்பற்று, வளர்ச்சிப்பற்று, மானப்பற்று, மானுடப்பற்று ஆகியவைகளையும் பற்றிக் கொண்டு இலட்சியப் பயணத்தை நடத்திடுவோம் என்பது உறுதி!
அடுத்த ஆண்டு அன்னையாரின் 100 ஆம் ஆண்டு பிறந்த நாள் தொடக்கம்; இயக்கத்தின் வரலாற்றில் இனியதோர் திருப்பம் தரும் ஆண்டு அது!
மகளிர்தம் உரிமையையும், மாண்பையும் மலை உச்சிக்கு எடுத்துச் செல்லும் திட்டங்களின் செயல்பாடு, ஒரு புதிய வரலாற்றைப் படைப்பது உறுதி!
அதுமட்டுமா?
2019 இல் ஒரு புதியதோர் எழுச்சி - மத போதை, ஜாதி போதை, பெண்ணடிமைப் போதை - கடவுள், மூடநம்பிக்கைப் போதை - மது போதைகளுக்கு விடை தரும் ஆண்டாகிட, இவைகளை வைத்து நாட்டை நாசமாக்கிய மதவெறி சக்திகளை ஜனநாயக ரீதியாக விரட்டியடித்து - விடுதலை காண காத்திருப்போம்!
நம்பிக்கையுடன் நடைபோடுவோம்!
வாழ்க அன்னையார்! வாழ்க தந்தை பெரியார்!
வருக அவர்கள் விரும்பிய புரட்சி சமூகம்!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
16.3.2018