இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள்
ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே!
எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்!
தஞ்சாவூர், மே 19 தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். கால் ஊன்ற லாம், ஆதிக்கம் செலுத்தலாம் என்பது பகற்கனவே! இது பெரியார் மண் என்பது வெறும் சொல்லாடல் அல்ல - தமிழர்கள் அனைவரின் அழுத்தமான கருத்தாகும். ஆர்.எஸ்.எஸ். இங்கு கால் ஊன்றலாம் என்பது பகல் கனவு - எங்கள் பிணத்தின்மீதுதான் அது நடக்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (18.5.2018) மாலை தஞ்சாவூர் - காவேரி நகர் சுந்தர் மகாலில் நடைபெற்ற விடுதலை' வாசகர் திருவிழா - விடுதலை' விருது வழங்கும் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் விடுதலை' ஆசிரியர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப் பிட்டதாவது:
விடுதலை' என்பது மூடநம்பிக்கை - இன இழிவு - பெண்ணடிமை - சமூக அநீதி, ஜாதி போன்ற நோய்களைத் தீர்க்கும் மாமருந்து. இது இனிக்காது - கசக்கும்தான்.
விடுதலை'யில் குடிஅரசில்' அண்ணா பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில்தான் தந்தை பெரியார் அவர்கள் வாழ்த்துகளோடு அண்ணா அவர்கள் திராவிட நாடு' இதழைத் தொடங்கினார்.
விடுதலை' பொழுது போக்கு ஏடு அல்ல. இலட்சியமும், கருத்தும் கொண்ட கொள்கைப் பரப்பு ஏடு!
இது பெரியார் மண் என்று ஏதோ திராவிடர் கழகத்தினர் பெருமைக்காக சொன்னதாக யாரும் நினைக்க வேண்டாம்.
மேனாள் மத்திய நிதியமைச்சர், காங்கிரசின் முன்ன ணித் தலைவர்களுள் ஒருவரான ப.சிதம்பரம் சொல்லியிருக்கிறார் இது பெரியார் மண்!'' என்று.
நீட்' என்ற ஏற்பாடு ஒடுக்கப்பட்ட மக்களைத் தலை யெடுக்காமல் வீழ்த்தும் ஏற்பாடு. 10 சதவிகித உயர்தட்டு மக்களுக்காக 90 சதவிகித பெரும்பான்மை மக்களை ஒடுக்கு வதாகும்.
நீட்' இல்லாமல் தமிழக அளவில் தேர்வுகளில் மதிப் பெண் பெற்று மருத்துவர் ஆனவர்கள் உலகில் கொடிகட்டிப் பறக்கிறார்களே - டாக்டர் ஏ.லட்சுமண சாமிகள் எல்லாம் நீட்' எழுதி மருத்துவர் ஆனவர்களா? அவரின் மகப்பேறு தொடர்பான நூல்கள் உலகம் முழுவதும் மருத்துவப் பாட நூல்களாக வலம் வர வில்லையா?
கல்வி என்பது மாநிலப் பட்டியலுக்கானது. அதைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்று விட்டனர். கன்கரண்ட் பட்டியல் என்றால், ஏதோ மத்திய அரசுக்கு மட்டும் உரித்தானது என்று தவறாக வியாக்கியானம் செய்கிறார்கள். கன்கரண்ட் என்றால் ஒத்திசைவு அதாவது மத்திய அரசும் - மாநில அரசும் ஒத்து இசைந்து முடிவு எடுக்கக் கூடியதாகும்.
மத்திய பி.ஜே.பி. அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது - நீட்'டிலிருந்து விலக்குக் கோரி 2 மசோதாக்கள் தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப் பட்டும், 18 மாதங்கள் ஓடிய பிறகும் இசைவு தராதது ஏன்?
அம்மா ஆவி' என்று சொன்னால் போதுமா? மாநில அரசு மத்திய அரசை ஏன் தட்டிக் கேட்கவில்லை?
அம்மா ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதியளிக்கப்பட்டதா? இப்பொழுது எப்படி அனுமதி கிடைக்கிறது?
ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யின் கைப்பாவையாக அ.தி. மு.க. அரசு செயல்படலாமா?
தமிழ்நாட்டில் கால் பதிப்போம் என்கிறார்கள். பல இடங்களில் பயிற்சி முகாம்களை நடத்திக் கொண் டுள்ளனர்.
இங்கே தஞ்சையையடுத்த ஒரு பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடந்துள்ளது - அகில இந்திய தலைவர் மோகன் பாகவத் வந்து பல நாள் தங்கியுள்ளார் - வெளியில் தெரியவே தெரியாது.
அம்பத்தூரில் தனியார்ப் பள்ளி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடந்துள்ளது. ஆர்.எஸ்.எஸின் அகில இந்திய பொறுப்பாளர் மன்மோகன் வைத்யா என்பவர் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் கால் பதிப்பார்களாம். அது எங்கள் பிணத்தின்மீதுதான் நடக்கும்.
அதே வைத்யா இன்னொன்றையும் கூறியிருக்கிறார்.
பெரியார் கொள்கையை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கிறதாம் எச்சரிக்கை!
பெரியார் கொள்கைக்கும், எங்களுக்கும் வேறுபாடு இல்லை. ஜாதி, மத ஒழிப்பில் பெரியார் கொள்கையோடு நாங்கள் ஒத்துப் போகிறோம் என்று சொல்லியிருக்கிறார்.
அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாட ஆரம்பித்த வர்கள் - இப்பொழுது பெரியாரிடம் நெருங்க ஆரம்பித் துள்ளனர். நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
விடுதலை' இந்த இந்துத்துவா சக்திகளை வீழ்த்துவதில் போர்வாளாக செயல்படும்.
விடுதலை' வெறும் காகிதமல்ல - ஆயுதம் என்றார் தமிழர் தலைவர்.
விடுதலை' விருது பெறும் சான்றோர்கள்
மருத்துவர் மா.செல்வராசு, மனிதநேயர் எஸ்.எஸ்.இராஜ்குமார், நீதியரசர் எஸ்.நாகமுத்து (நீதியரசர் சார்பில் அவரது மகள் மருத்துவர் பிரியதர்சினி) ஆகியோருக்கு விடுதலை' ஆசிரியர் தமிழர் தலைவர் சால்வை அணிவித்து விடுதலை' விருது வழங்கி பாராட்டுரையாற்றினார் (தஞ்சை, 18.5.2018).