தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம்
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள்
சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் தெரிவித்தும், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீரைத் திறந்துவிடக் கோரியும், மத்திய அரசின் குருகுலக் கல்வித் திட்டத்தைக் கைவிடுமாறும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் கூடிய ஒன்பது கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் 1:
தன்னெழுச்சியாகப் போராடிய
தமிழக மக்களுக்கு நன்றி!
காவிரி நதி நீர் பிரச்சினையில் 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில் ஆறு வார காலத்திற்குள் ஒரு வரைவுத் திட்டத்தைத் (Scheme) தயாரிக்க வேண்டும் என்று மத்திய பா.ஜ.க. அரசுக்கு உத்தரவிட்டது. மத்திய பா.ஜ.க. அரசு இந்த வரைவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்க முன் வராமல் ஏதேதோ சாக்கு போக்கு சொல்லி வேண்டுமென்றே தாமதம் செய்ததைக் கண்டு பொறுக்க முடியாமல் தமிழகமே தன்னெழுச்சியாக தீரமுடன் போராடியது. திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரசு, திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து அரசி யல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம், முழு அடைப்பு, காவிரி உரிமை மீட்புப் பயணம், கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம், மனிதச் சங்கிலி போராட்டம் உள்ளிட்ட அனைத்திற்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், தாய் மார்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் கிளர்ந் தெழுந்து போராடியதன் விளைவாக தமிழ்நாட்டு மக்கள் பொறுமையாக இருக்கவேண்டும். தமிழகத்திற்கு உரிய நீதி வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களே தெரிவித்தார். மத்திய பா.ஜ.க. அரசின் தமிழ்நாடு விரோத போக்கு மற்றும் அதற்குத் துணை போன அதிமுக அரசின் துரோகச் செயல் ஆகியவற்றைக் கண்டித்து நடைபெற்ற ஒவ் வொரு போராட்டத்திலும், தமிழ்நாட்டு மக்களின் பெரும் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இடைவிடாத அந்தப் போராட்டத்திற்குப் பணிந்து மத்திய பா.ஜ.க. அரசு இறுதியில் ஒரு வரைவுத் திட்டத்தை அளித்து, அதன்படி காவிரி மேலாண்மை ஆணையம் என்ற பெயரை உச்ச நீதிமன்றம் இறுதி செய்து 18.5.2018 அன்று தீர்ப்பளித்துள்ளது. காவிரி இறுதித் தீர்ப்பு மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும், தமிழகத்தின் காவிரி உரிமையை நிலைநாட்டுவதற்கும் தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களுக்கும் பேரா தரவளித்து, மலைபோல் துணை நின்ற அனைத்துத் தரப்பு பெருமக்களுக்கும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2:
தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை
வாரியத்தை அமைக்காத
மத்திய- மாநில அரசுகளுக்கு கண்டனம்!
தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதுதான் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு. உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று தனது இறுதித் தீர்ப்பை வழங்கி மத்திய அரசுக்கு ஆறு வார அவகாசம் கொடுத்த பிறகு கருநாடக தேர்தல் நடைபெற விருப்பதால் மேலும் மூன்று மாத காலம் அவகாசம் ஸ்கீம்' (Scheme) என்றால் என்ன அர்த்தம், காவிரி மேலாண்மை வாரியம் என்ற சொல்லே உச்சநீதிமன்ற தீர்ப்பில் கிடையாது, பிரதமர், கருநாடக தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் காவிரி வரைவு திட்டத்திற்கு ஒப்புதல் பெற முடியவில்லை. காவிரி மேலாண்மை
ஆணையம்தான் அமைக்கமுடியும் என்றெல்லாம் மூன்று மாத காலம் தாமதம் செய்து, இறுதியில் அதிகார மில்லாத ஒரு அமைப்பை உருவாக்கும் நோக்கில் மத்திய பா.ஜ.க. அரசு திருத்தப்பட்ட வரைவுத் திட்டத்தை உச்சநீதிமன்றத்திடம் வழங்கியது. அதனை உச்சநீதிமன்றமும் இறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. அதிமுக அரசும், அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட மறுத்ததோடு ஒப்புக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தொடுத்து, அதனை விசாரிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் எந்தவிதமான அழுத்தத்தையும் கொடுக்காமல், மத்திய அரசு, நேரம் கேட்கும் போ தெல்லாம் அதற்கு ஒத்துழைத்து, திருத்தப்பட்ட வரைவு திட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் என்று இருந்தும் அதை எதிர்க்காமல், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் சொல்லப்பட்ட தன் னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தாமல் முழுக்க முழுக்க மத்திய அரசின் சொல்கேட்டு இயங்கும் ஒரு ஆணையத்திற்கு ஒப்புதல் அளித்து விட்டு, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது என்று பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட தண்ணீரின் அளவில் 14.75 டி.எம்.சி. தண்ணீரை உச்சநீதிமன்றம் குறைத்ததை எதிர்த்து வாதிடாமலும் அணைகளைத் தனது அதிகாரத்தின்கீழ் கொண்டுவந்து கட்டுப்படுத்தும் தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாமலும் கோட்டை விட்ட அதிமுக அரசுக்கும், அப்படிப்பட்ட வாரியத்தை அமைக்கவே முடியாது என்று வழக்கு விசாரணையின் இறுதி நாளில் கூடப் பிடிவாதமாக மறுத்து, தமிழ்நாட்டை வஞ்சித்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கும் இந்த அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 3:
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையைத் திறந்து விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும்!
காவிரி நீர் பொய்த்துப் போனதால் காவிரி டெல்டா பகுதிகள் வறண்டு கொண்டிருக்கின்றன. தொடர்ந்து 7 ஆவது ஆண்டாக குறுவை சாகுபடி செய்ய முடியாமலும், உரிய நேரத்தில் மேட்டூர் அணை நீர்ப்பாசனத்திற்குத் திறந்து விடப்படாமலும் அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் காலியாகி, விவசாயமும், விவசாயத் தொழில்களும் முழுமையாக நலிவடைந்து விட்டன. அதனால் விவசாயிகள் தற்கொலையும், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வேறு வேலை தேடி அண்டை மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் செல்லும் அவல நிலைமையும் ஏற்பட்டுள்ளது. ஆகவே ஜூன் ஒன்றாம் தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, அரசிதழில் அறிவிக்கை செய்து, குறுவை சாகுபடிக்கு காவிரி நீரைத் திறந்துவிட மத்திய அரசு அவசரகால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அனைத்துக் கட்சி கூட்டம் வற்புறுத்துகிறது.
தமிழக அரசு ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறப்பது மட்டுமன்றி, விவசாயிகளுக்கு உரிய நீரை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக எடுக்கவேண்டுமென்று இந்த அனைத்துக் கட்சிகளின் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 4:
மத்திய பிஜேபி அரசின்
குருகுலக் கல்வி திட்டத்திற்கு எதிர்ப்பு
குருகுலக் கல்வியினை பலப்படுத்துவது, பரவ லாக்குவது தொடர்பாக உஜ்ஜயினியில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நடத்திய மாநாட்டு முடிவுகளை மத்திய பா.ஜ.க. அரசு நடை முறைப்படுத்திட தொடங்கியுள்ளது.
முதல் நடவடிக்கையாக குருகுலக் கல்விச் சாலையில் படித்த மாணவர்கள் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பில் சேருவதற்கு தகுதி படைத்தவர்களாக சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி 15 வயது நிரம்பிய எந்தவொரு மாண வரும் தனக்கு சமஸ்கிருதம் படிக்க, எழுதிடத் தெரியும் என தற்சான்று (வேறு சான்று எதுவும் தேவை யில்லை) அளித்தால் 10ஆம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய திறந்த பள்ளி நிறுவனம் (National Institute of Open Schooling) 10ஆம் வகுப்பில் சேர அனுமதி அளித்துவிடும். அதற்கான அனுமதிச் சான்று பெறு வதற்கு முன்பாக மாணவர்கள் அய்ந்து பாடங்களில் தேர்வு எழுதிட வேண்டும்.
அவை:
வேத அத்தியாயன (வேதம் கற்றல்), பாரதீய தரிசனம் (இந்தியச் சிந்தனை), சமஸ்கிருத வியாகரன (சமஸ்கிருத இலக்கணம்), சமஸ்கிருத சாகித்ய (சமஸ்கிருத புலமை) மற்றும் சமஸ்கிருத மொழி ஆகிய அய்ந்து பாடங்களில் தேர்வு எழுதி குறைந்தது 33 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருந்தால் 10ஆம் வகுப்பில் சேர்ந்து கல்வியினைத் தொடர சான்று அளிக்கப்படும். 10ஆம் வகுப்பிற்கு முன்னர் முறையான கல்வித் திட்டத்தில் பிற மாணவர்கள் பயின்ற பல்வேறு பாடங்களான அறிவியல், கணிதம், வரலாறு, பூகோளம் பற்றி குருகுலக் கல்விக் கூடங்களில் பயின்ற மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இந்தியாவின் அறிவுப் பாரம்பரியத்தினை (Indian Knowledge Tradition) வளர்ப்பதாகக் கூறும் இந்த மத்திய அரசுத் திட்டம் உண்மையில் அடிப்படைக் கல்வி பயிலாத மாணவர்களும் 10ஆம் வகுப்பில் சேர்ந்திட சமஸ்கிருதக் கல்வி பயின்றிருந்தால் போதுமானது எனக் கூறுகிறது.
சமஸ்கிருதத் திணிப்பினை முன்னிறுத்தி கல்வியின் தரம் சீரழிக்கப்படுவதற்கு மத்திய அரசால் இந்த புதிய கல்வித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
சமஸ்கிருதம் பயின்ற மாணவர்கள் - குருகுலக் கல்வி முறையிலோ அல்லது அஞ்சல்வழிப் பள்ளியிலோ பயின்ற மாணவர்கள் முறையான கல்வித் திட்டத்தில் பள்ளிப் படிப்பினை முடித்திட ஏதுவான ஒரு வழிமுறையாக இந்த புதிய திட்டம் கொண்டு வரப்படுகிறது. கல்வியின் தரம் பற்றிய கவலை இல்லை. சமஸ்கிருதம் தெரிந்திருந்தால் போதும் எனும் சமஸ்கிருதக் கலாச்சாரத்தைத் திணிக்கும் நோக்கில் இந்தக் குருகுலக்கல்வி கொண்டு வரப்படுகிறது. சமஸ்கிருத ஆதிக்க அணுகுமுறையில் ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தும் பார்ப்பனீய வருணாசிரம முறையை, குருகுலக்கல்வி என்ற போர்வையில் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வர முயற்சிக்கும், மத்திய பிஜேபி ஆட்சியின் முயற்சியை அதன் தொடக்கத்திலேயே முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமும் கடமையுமாகும்.
மத்திய பிஜேபி அரசின் இந்தப் பிற்போக்குக் கல்வித் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று இந்தக் கூட்டம் வற்புறுத்துகிறது. இல்லையெனில் நாடு தழுவிய அளவில் இதனை முறியடிப்பதற்கான பிரச்சாரத்தில், போராட்டத்தில் முயற்சிகளில் ஈடுபடுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 5:
அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். தேர்வுகளில் தற்போதுள்ள முறையே நீடிக்க வேண்டும்!
இதுவரை அய்.ஏ.எஸ்.. உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் பிரிலிமினரி, மெயின் தேர்வுகளை நடத்தியும், நேர்முகத் தேர்வை நடத்தியும் பணியாளர்களை தேர்வுசெய்து முடிவுகளை வெளியிட்டது. ஆனால், சிவில் சர்வீஸஸ் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் இளைஞர் களை அய்.ஏ.எஸ். மற்றும் அய்.பி.எஸ் உள்ளிட்ட பல்வேறு அகில இந்திய பணிகளுக்கு நியமிக்கும் முறையையும், அதன் அடிப்படையில் அவர்கள் பணியாற்றும் மாநில ஒதுக்கீடுகளையும் ரத்து செய்து விட்டு, முசோரியில் நூறு நாள்பயிற்சியில் இருக்கும்போது எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் எந்தப் பணிக்கு ஒருவரை தேர்வு செய்வது என்பதையும், எந்த மாநிலத்தில் பணியாற்ற அவருக்கு ஒதுக்கீடு வழங்குவது என்பதையும் முடிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் விரும்புகிறது என மத்திய பணியாளர் சீர்திருத்தத் துறையின் இணைச் செயலாளர் விஜய்குமார் சிங் அறிவித்திருப்பது, அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள சமூகநீதியை தட்டிப் பறிக்கும் செயல் என்று இக்கூட்டம் கருதுகிறது. அய்.ஏ.எஸ். மற்றும் அய்.பி.எஸ். உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கான சிவில் சர்வீஸஸ் தேர்வுகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்று நாட்டின் நிர்வாகத்தில் தங்களது பங்களிப்பை செலுத்தி வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பா.ஜ.க. அரசும், பிரதமர் அலுவலகமும் இப்படியொரு அநீதியான பவுன்டேஷன் கோர்ஸ் தேர்வுமுறையை புகுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இரவு பகலாக படித்து, தேர்வு பெற்று, பல தடைகளை தாண்டி நேர்முகத் தேர்விலும் வெற்றிபெற்ற இளைஞர்களின் தலைவிதியை முசோரியில் உள்ள ஒரு சில பேராசிரியர்களிடம் ஒப்படைத்து, சமூகநீதிக் கொள்கைகளுக்கு மன்னிக்க முடியாத அநீதியைச் செய்ய பா.ஜ.க. அரசும், பிரதமர் அலுவலகமும் துணிந்து விட்டது.
நாங்கள், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காகவும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காகவும் பாடுபடுகிறோம் என்று போடப்பட்டு வந்த நான்காண்டு கால பகல் வேஷம் இதன்மூலம் கலைந்துள்ளது. பிரதமர் அலுவலகம் விரும்புகிறது என்றால், பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார் என்றே பொருள். எப்படி வளர்ச்சி என்று சொல்லி வாக்குகள் வாங்கிவிட்டு, மதவாதத்தை திணித்து நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு குந்தகம் விளைவித்து வருகிறதோ, அதேபோல் இப்போது அய்.ஏ.எஸ். உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கான தேர்விலும் சிவில் சர்வீஸ் தேர்வு தவிர, ஒரு பவுன்டேஷன் கோர்ஸ் என்ற போர்வையில், ஒருவகையிலான நீட் தேர்வை அறிமுகப்படுத்தி, இளைஞர்களின் எதிர்காலக் கனவுகளைச் சிதைக்க முயற்சிப்பதை, நாடு பொறுத்துக் கொள்ளாது என்பதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே, பவுன்டேஷன் கோர்ஸ் மூலம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்களின் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ் கனவுகளைத் தகர்க்கும் பிரதமர் அலுவலகத்தின் உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும், ஏற்கெனவே இத்தனை ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் சிவில் சர்வீஸஸ் தேர்வு அடிப்படையிலேயே அகில இந்திய பணிகளுக்கு தேர்வு செய்ய வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்வதுடன், தவறினால் சமூகநீதிக் கொள்கையை சீர்குலைக்கும் மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்து இளைஞர்களை பெருமளவில் திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்துவது என இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
தி.மு.க. செயல் தலைவர், தமிழக சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்,
தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரைமுருகன்,
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி,
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி.,
தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்,
மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ,
தமிழக காங்கிரசு தலைவர் எஸ்.திருநாவுக்கரசர்,
மேனாள் எம்.பி., ஆருண்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு முன்னாள் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்,
திருப்பூர் சுப்பராயன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன்
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா
மனித நேய மக்கள் கட்சி செயலாளர் அப்துல் சமது