முழு வெற்றி அடைய, அரசின் கொள்கை முடிவு என்று உச்சநீதிமன்றத்தில் உறுதிப்படுத்திட வேண்டும்
தஞ்சாவூர், மே 29 தஞ்சாவூரில் நேற்று (28.5.2018) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதை வரவேற்பதுடன், இதில் முழுக்கிணறையும் தாண்ட வேண்டுமானால் உச்சநீதி மன்றத்தில் அரசின் கொள்கை முடிவு என்பதை வலியுறுத்திக் கூற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
சரிவரப் புரிந்துகொண்டு, இதை முன்னாலே செய்திருந்தால், இத்தனை உயிர்கள் பலியாகவேண்டிய அவசியமில்லை ஒன்று. இரண்டாவது காலதாமதம் செய்தாலும் பரவாயில்லை, செய்தார்களே என்ற பழமொழி ஆங்கிலத்திலே இருக்கிறது. அதுபோல இந்த அளவுக்கு செய்திருக்கிறார்கள். அது உண்மையிலே செய்யப் பட்டிருக்கிறது நல்ல எண்ணத்தோடு ஆழமாக என்பதை நிரூபிக்க வேண்டிய அடுத்த கட்டம் மிக முக்கியமானது. ஏனென்றால், இந்த அரசின் ஆணையை எதிர்த்து நீதிமன்றத்துக்கு அவர்கள் சென்று உச்சநீதி மன்றத்திலேகூட வாதாட முடியும், முதலாளித்துவ சக்திகளுக்கு அந்த வாய்ப்பு அதிகம். அப்படிப்பட்ட நிலையிலே, ஏற்கெனவே அரசுக்கு நான் ஒரு யோசனையை முன்வைத்தேன். அதனை எதிர்க்கட்சித் தலைவரும் வரவேற்றிருக்கிறார்.
கொள்கை முடிவு
அதாவது, அமைச்சரவையிலே எடுக்கப்பட்ட இந்த முடிவு கொள்கை முடிவு (Policy Decision) என்பதை ஓங்கி அடித்து உச்சநீதிமன்றத்திலே சொல்ல வேண்டும். ஏற்கெனவே உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பலவற்றிலே, கொள்கை முடிவை எதிர்த்து தீர்ப்புக் கொடுக்க முடியாது என்று நீதிமன்றம் சொல்லியுள்ளது. மக்கள் விரோதமாக இருக்கக்கூடிய, சுற்று சூழலுக்கு விரோதமாக இருக்கக் கூடிய - அந்த ஆலை மூடப்பட வேண்டும் என்பதிலே உறுதியாக இருக்க வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் சீல் வைத்தார் என்ற காட்சி மட்டும் போதாது. கடைசிவரை இந்த முயற்சிகளுக்கே அரசு சீல் வைத்தது என்ற அளவிலே அரசு இதை கொண்டு செலுத்த வேண்டும். பாதி கிணறு தாண்டக்கூடாது. முழுக் கிணறையும் முழுமையாகத் தாண்டினால்தான், முழு நம்பிக்கை மக்களுக்கு வரும். மீண்டும் தூத்துக்குடி பழைய நகரமாக, சுமுகமான நகரமாக ஆக வேண்டும். இந்த நிலையிலே இருந்து மாற்றத்தை உருவாக்க வேண்டும். இப்போதைக்கு இது வரவேற்க வேண்டியது; போகப் போகத்தான் இந்த முடிவிற்கு இறுதியான வரவேற்பைக் கூற முடியும்.
தற்காலிக வெற்றி
இது தூத்துக்குடி மக்கள் போராட்டம் மட்டுமல்ல, தமிழக மக்களுக்கே கிடைத்திருக்கிற ஒரு தற்காலிக வெற்றி. ஏன் தற்காலிக வெற்றி என்று சொல்லுகிறேன் என்றால், மக்களுடைய இந்த உணர்வுகளை அரசு கால தாமதமாக புரிந்துகொண்டிருக்கிறது. அதற்கான செயல் பாட்டில் வருகிறபோது, இந்த முயற்சியில் மாவட்ட ஆட்சியர் சீல் வைத்திருக்கிறார். அரசு ஆணை வழங்கப்பட்டுவிட்டது என்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இது முழுமையடைய வேண்டும். முழுமையடைய வேண்டுமானால், அவர்கள் அதனு டைய முதலாளிகள் உச்சநீதிமன்றத்திலே ஏற்கெனவே தொடர்ந்துள்ள வழக்கும் இருக்கிறது. அதைக்காட்டி இந்த ஆணை செல்லாது, எங்களுடைய அடிப்படை உரிமை இருக்கிறது என்று அவர்கள் கூறக்கூடும். அப்படி அவர்கள் கூறக்கூடிய நேரத்திலே தெளிவாக அரசு, இது எங்களுடைய அமைச்சரவை கூடி, அரசு எடுத்த கொள்கை முடிவு என்று தெளிவாக தங்களுடைய வழக்குரைஞர் மூலமாக வலியுறுத்தினால், கொள்கை முடிவாக இருக்கக்கூடிய எதிலும் தலையிடுவதற்கு நீதிமன்றங்களுக்கு உரிமை இல்லை என்ற அடிப்படையிலே இது தெளிவாகும். ஆகவே அதைச் செய்ய வேண்டும். அந்த அளவிற்கு இதைச் செய்து, இது முழுமையடைந்தால், இது முழு வெற்றி அடையும்.
எனவே, இனிமேலாவது இதுபோன்ற அனுபவங் களின் மூலம், காலதாமதம் செய்யாமல் தெளிவாக, திட்ட வட்டமாக செய்வது அரசாங்கத்தினுடைய கடமை யாகும். ஆனால், இழந்த உயிர்கள் இழந்தவைதான் என்று நினைக்கிறபோது, இன்னும் அந்த வேதனையும், துயரமும், துன்பமும் மீளாத்துயரமாக இருக்கிறது. இதில் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
இவ்வாறு தமிழர் தலைவர் குறிப்பிட்டார்.