Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

ஜூன் 7 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

$
0
0

* ராஜஸ்தானில் கோவிலுக்குள் நுழைய விடாது தாழ்த்தப்பட்ட சமூக குடியரசுத் தலைவரை அவமதிப்பதா?

* பாரத நாட்டு ஜனாதிபதி' படிக்கட்டில் தரிசனமா?

இந்தியக் குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்களும், அவரது துணைவியாரும் ராஜஸ் தான் மாநிலத்தில் கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதைக் கண்டித்து வரும் 7 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆட்டம் போடுகிறோம். அப்படி ஆட்டம் போடத் தொடங்கி 71 ஆண்டுகள் ஓடிவிட்டன.

உண்மையிலே ஆனந்த சுதந்திரம் வந்துவிட்டதா? குடியரசுத் தலைவருக்கே அந்த சுதந்திரம் வரவில்லை என்றால், வேறு யாருக்கு வரப் போகிறது?

குடியரசுத் தலைவருக்கே அவமதிப்பு

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்கு இந்தியாவின் முதல் குடிமகனான முப்படைக்கும் தலைவரான குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்கள் தன் துணைவியாருடன் சென்றுள்ளார்.

பூர்ண கும்பத்துடன் மரியாதை கொடுக்கப்பட்டதா என்று அவசரப்பட்டு யாரும் கேள்வி எழுப்பவேண்டாம்.

சாமி' கும்பிட அவரை கோவிலுக்குள் நுழையவே அனுமதிக்கவில்லை என்ற செய்தி எத்தகைய கொடுமை - எவ்வளவுக் கேவலமாக ஜாதியின் பெயரால் அவமதிப்பு? ஜாதி ஆணவம்?

வெட்கித் தலைகுனிய வேண்டாமா?

மனித உரிமையை மதிக்கும் ஒவ்வொருவரும் வெட்கித் தலைகுனிய வேண்டாமா? ஒரு குடியரசுத் தலைவருக்கே இப்படிப்பட்ட அவமானம் என்றால், இந்த நாட்டில் நாம் குடிமக்களாக இருப்பதற்காகப் பெருமைப்பட முடியுமா?

தந்தை பெரியார் எழுப்பிய கேள்விக்கு

விடை எங்கே?

நாடு சுதந்திரம் அடைந்ததாகச் சொல்லுகிறார்கள். ஒரு சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா? என்று மனித உரிமைக் காவலர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 60 ஆண்டுகளுக்குமுன் எழுப்பிய கேள்விக்கு  இதுவரை பதில் உண்டா?

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மதப் பாதுகாப்பு என்ற பெயரில் ஜாதி பாதுகாக்கப்படுகிறதே! இதனை அனுமதிக்கலாமா? இது நீக்கப்பட வேண்டாமா?

ஜாதியை ஒழிக்க சட்டத்தையும்

எரித்தோமே!

இதற்காகத்தானே ஜாதியைப் பாதுகாக்கும் சட் டப் பிரிவை தந்தை பெரியார் கட்டளைப்படி 10 ஆயிரம் திராவிடர் கழகக் கருஞ்சட்டைத் தோழர்கள் பகிரங்கமாகப் பட்டப் பகலில் கொளுத்தி சாம்பலையும் அனுப்பினார்கள் (26.11.1957).

அந்த மனித உரிமைப் போராட்டத்தின் உன்னதத்தை உணராமல், சட்டத்தைக் கொளுத்தினால் மூன்றாண்டு கடுங்காவல் தண்டனை என்று அவசர அவசரமாக சட்டம் கொண்டு வந்தது - எவ்வளவுப் பெரிய வேதனை!

தந்தை பெரியார் இறுதியாக

அறிவித்த போராட்டம்!

தந்தை பெரியார் இறுதியாக அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் போராட்டத்தை அறிவித்து அந்தப் போராட்டக் களத்திலே நின்றபடியே உயிர் துறந்தாரே!

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த நிலையில், இரண்டு முறை சட்டம் இயற்றப்பட்டும், இன்னும் நடைமுறைக்கு வராத நிலைதான் சுதந்திர பாரத நாடு என்பதற்கு அடை யாளமா?

தந்தை பெரியார் அவர்களின் அந்த இறுதி அறிவிப் புக்கான செயல் திட்டம் நடைமுறைக்கு வந்திருந்தால், குடியரசுத் தலைவருக்கு இந்த சகிக்க முடியாத அவமானம்தான் இப்பொழுது ஏற்பட்டிருக்குமா?

சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுமா?

இதற்குப் பிறகாவது இந்திய அரசமைப்புச் சட்டத் தைத் திருத்தியாவது  அகில இந்திய அளவில் கோவில் கருவறைக்குள் நடமாடும் ஜாதி ஆணவப் பாம்பின் உயிரைக் குடிக்கவேண்டாமா?

தாழ்த்தப்பட்டவர் என்பதால்தானே

இந்த அவமானம்!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தின் தேவை, மதிப்பு மரமண்டைகளுக்கு இனியாவது புரியுமா?

குடியரசுத் தலைவர் மாண்பமை ராம்நாத் கோவிந்த் அவர்களும், அவர்தம் துணைவியாரும் கோவில் கருவறைக்குள் நுழைய முடியவில்லையே! கோவிலுக்குள் செல்வதற்கே தடைவிதிக்கப்பட்டுள்ளதே! இதற்குக் காரணம் என்ன? குடியரசுத் தலைவராக இருந்தாலும் அவர் தாழ்த்தப்பட்டவர் என்பதால்தானே இந்தக் கொடுமை!

இது மன்னிக்கப்பட முடியாத மிகப்பெரிய குற்றமே - தீண்டாமை ஒழிப்புச் சட்டம் என்ன செய்கிறது? இதில் சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள், நிருவாகிகள் பிணையில் வர முடியாத சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்குள் தள்ளப்பட்டிருக்க வேண்டாமா?

இது ஒரு கட்சி சார்ந்த பிரச்சினையல்ல - மனித உரிமைப் பிரச்சினை - சட்டத்தின் மரியாதையைக் காப் பாற்றும் பிரச்சினை.

ஜூன் 7 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்!

கட்சிகளைக் கடந்து கண்டனக் குரல்கள் வெடித்துக் கிளம்பவேண்டும். இந்த அதிமுக்கிய பிரச்சினையில் தலைவர்களும், ஊடகங்களும் கண்டுகொள்ளாதது ஆச்சரியமானதே!

பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்துவிட்ட நிலையில், குடியரசுத் தலைவர் அந்தக் கோவிலுக்கே போகவில்லை என்றும், அதற்கு முரணாக குடியரசுத் தலைவரின் துணைவியாருக்கு மூட்டுவலி, அதனால் படிகளில் ஏறவில்லை என்றும், மூடி மறைக்க ஊடகங்களில் செய்திகளைப் பரப்பி வருகின்றனர். உண்மை என்ன? குடியரசுத் தலைவர், அவர் துணைவியார் கோவில் படிகட்டுகளில் பூஜை செய்த படம் வெளிவந்துவிட்டதே, இதற்கு என்ன பதில்?

படிக்கட்டில் அமர்ந்து பக்தி பூஜை செய்யும்

பாரத'' நாட்டு தாழ்த்தப்பட்ட சமூக ஜனாதிபதி!

முன்பு இராணுவ அமைச்சர் பாபு ஜெகஜீவன் ராமுக்கு, உ.பி.யில் உயர்ஜாதி முன்னாள் முதல்வர் சம்பூர்ணானந்த் சிலை திறக்க எதிர்ப்பு - கங்கை ஜல சுத்திகரிப்பு - இப்போது ஜனாதிபதிக்கே' இத்தகைய கொடுமை! என்னே விந்தை!!

சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினையை எளிதாக விடுவதாக இல்லை. முதற்கட்டமாக வரும் 7 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகில் நடைபெறும்.

இது ஒரு கட்சிக்கான போராட்டம் அல்ல!

ஒத்தக் கருத்துள்ள அனைவரும் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டிருக்கும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

 

கி.வீரமணி,

தலைவர்  திராவிடர் கழகம்

தஞ்சை,

1.6.2018

 

 

 

 

 

 


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles