* திராவிட மாணவர் கழகம் பிறந்த அதே குடந்தையில் பவள விழா மாநில மாநாடு (ஜூலை 8)!
* நமது மக்களின் கல்விக் கண்களைக் குத்த சதித் திட்டம் தீட்டும் மத்திய பி.ஜே.பி. அரசு
திராவிட மாணவர் கழகம் தோன்றிய அதே குடந்தையில் தான் திராவிட மாணவர் கழக பவள விழா மாநாடு வரும் 8 ஆம் தேதி; தந்தை பெரியார் பிறந்த மண்ணில் காவிகள் கடைபரப்ப நினைக்கிறார்கள் - நமது கல்விக் கண்களைக் குத்த சதித் திட்டம் தீட்டுகிறார்கள் - அவற்றையெல்லாம் முறியடிப்போம் வாரீர்! வாரீர்!! என அழைக்கிறார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
74 ஆண்டுகளில் எண்ணற்ற சாதனைகள்!
1943 ஆம் ஆண்டு குடந்தையில் தொடங்கப்பட்ட திராவிட மாணவர் கழகத்திற்கு இப்போது பவள விழா!
ஆம்; கடந்த 74 ஆண்டுகளில் திராவிட மாணவர் கழகம் எண்ணற்ற சாதனைகளைச் செய்துள்ளது!
சமூகப் புரட்சி, கல்விப் புரட்சி, பண்பாட்டுப் புரட்சி, அறி வியல் மனப்பாங்கைப் பரப்பி, மூடநம்பிக்கைகளை எதிர்த்து மூர்த்தண்யமாகப் போர் தொடுத்தல், பெண்களை வெறும் பாலினப் பண்டங்களாகவே பார்த்துப் பயன்படுத்த நினைக்கும் பண்பாடற்ற போக்கிற்கு எதிரான பிரச்சாரம் - போராட்டங்கள் இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு நமது மாணவ இளைஞர்களுக்கு ஏற்பட்ட ஆபத்துகளைத் தடுத்து நிறுத்தல் போன்ற பல்வேறு களங்களில் திராவிட மாணவர் கழகம் சாதனை சரித்திரம் படைத்துள்ளது!
திராவிட மாணவர் கழக முன்னோடிகள்
தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக திராவிட இயக்க ஆட்சி நடைபெற்றுவருகிறது என்றால், அதனைக் கட்டிக் காத்தவர்கள் பழைய திராவிட மாணவர் கழகத்தவர்களாகிய பேராசிரியர் க.அன்பழகன், கலைஞர் மு.கருணாநிதி, நாவலர் இரா.நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், டார்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம் போன்ற எண்ணற்றவர்களின் தொண்டும், பங்கும் வரலாற்றில் மறைக்க முடியாதவை.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோருக்கு இளைஞர் பட்டாளத்தைத் தந்த ஊற்றாக திராவிட மாணவர் கழகமே திகழ்ந்தது - இன்றும் திகழ்ந்து வருகிறது!
இதை எழுதும் நபரே, திராவிட மாணவர் கழகத்தினால் உருவான ஒருவர்தானே!.
நம்முடைய வேர்களுக்கு இந்த விழுதுகள் பலமாக நிற்பதால் தான் எந்தக் கொம்பனாலும் திராவிட இயக்கத்தினை அசைத்துவிட முடியவில்லை.
வேத, மனுதர்ம கல்வித் திட்டம் வருகிறது!
பெரியார் மண்ணில் காவிச் சாயத்தை ஏற்ற முடியவில்லை.
என்றாலும், மத்தியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். - மோடி ஆட்சியின் வேத, மனுதர்மக் கல்வித் திட்டத்தை விரைந்து ஏற்படுத்தும் சூழ்ச்சிகளுக்கு எதிராக மக்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே காப்பாற்ற வேண்டிய கடமை, சமூகநீதிக் கொடி கீழிறங்காமல் மேலே பறந்திட செயலாற்றவேண்டிய பொறுப்பு - இப்போது நமது இயக்கத்திற்கும், திராவிட மாணவர் கழகம் போன்ற துணை அமைப்பினருக்கும் உண்டு!
வரலாறு படைக்கப் போகிறது குடந்தை!
அவற்றைத் திட்டமிடவே, பாசறை வீரர்கள் கூடுவதுபோல - எங்கு தோன்றியதோ அதே குடந்தை மாநகரில் திராவிட மாணவர் கழகம் தனது பவள விழா மாநாட்டை, பகட்டு - படாடோபம் இன்றி, பல்வகை வரலாறும், பயனும் படைக்கும் வண்ணம் ஜூலை 8 ஆம் நாள் நடைபெற மும்முரமான ஏற்பாடுகள் நடைபெறுவது அறிய மிக்க மகிழ்ச்சி!
திராவிட வயலில், பெரியார் பூமியில் விளையும் பகுத்தறிவுப் பயிர்களை அழிக்க சில விஷப் பூச்சிகள் இறக்குமதி செய்யப்படும் நிலையில், அவ்விஷப் பூச்சிகளை, பெரியார் என்ற பூச்சிக் கொல்லி மருந்தினை அடித்து, பகுத்தறிவுப் பயிர் காக்கும்பணியே இந்தப் பவள விழா மாநாடு!
அரியதோர் திட்டம் - குடந்தைக்கு வாரீர் - குடும்பம் குடும்பமாய்!
அனைவரும் குடும்பம், குடும்பமாக, மாணவர்கள், பெற்றோர், கற்றோர்கள், மற்றோர்கள் என திரண்டு வாருங்கள்!
நமது மாணவர்களின் கல்விக் கண்ணைக் குத்தும் தற்போதைய பல்முனை விஷமங்களை எதிர்க்க புதிய திட்டம் ஒன்றை அம்மாநாட்டில் அறிவிக்கவிருக்கிறோம்.
அது தமிழ்நாட்டின் கல்வியை காப்பாற்றிட, மக்களை, மாணவர்களை ஆயத்தப்படுத்தும் அரியதோர் திட்டமாக இருக்கும் என்பதால், ஆவலோடு உங்களை குடந்தைக்கு அழைக்கிறோம்; குவலயமே கொண்டாடும் பகுத்தறிவு - இன உணர்வு - சமூகநீதித் திருவிழாவில் கலந்துகொள்ள தவறாது வாருங்கள் தோழர்களே, மாணவச் செல்வங்களே - முரசு கொட்டி முழங்கிட வாருங்கள்.
அணிவகுத்து, பணிமுடிக்கத் திரண்டு வாருங்கள்!
உங்கள் தோழன்,
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்.
சென்னை
4.7.2018