இன எழுச்சியோடு திரண்ட மாணவர் பட்டாளம்!
எங்கு நோக்கினும் குடந்தையில் கருப்புச்சட்டை அலைகள்
குடந்தை, ஜூலை 8 குடந்தையில் திராவிட மாணவர் கழகத்தின் பவளவிழா மாநில மாநாடு இன்று (8.7.2018) காலை மாபெரும் எழுச்சியுடன் தொடங்கியது. அதன் எழுச்சியை நேற்றே (7.7.2018) குடந்தை நகரம் கண்டது.
மாநாட்டுக்கு முதல்நாளிலேயே திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் குடந்தை நகருக்கு வருகைதந்தார். கழகத் தோழர்கள் புடைசூழ ரயில் நிலையத்தில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கழகக் கொடிகள் ஏந்தாத கருஞ்சட்டையினரே இல்லை எனும் அளவில் தோழர்கள் பெரிதும் ஆர்வத்துடன் அதிகாலையிலேயே குவிந்து விட்டார்கள். கழகக் கொடிகளுடன் கருஞ்சிறுத்தைப் பட்டாளம் தமிழர் தலைவரை உணர்ச்சிப்பெருக்குடன் வரவேற்றது. தந்தை பெரியார் வாழ்க, அன்னை மணியம்மையார் வாழ்க, தமிழர் தலைவர் வாழ்க என்று வானை முட்டும் முழக்கங்கள் குடந்தையை சிலிர்த்தெழச்செய்தன. மாநாட்டின் ஊர்வலக்காட்சியின் முன்னோட்டம்போல், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வரவேற்பு ஊர்வலம் குடந்தை நகரை திகைக்கச்செய்தது. சாலையின் இருமருங்கிலும் கழகக் கொடிகளின் அணிவகுப்பு, வரவேற்பு பதாகைகள், தோரணங்கள் என கொள்கை உறுதியுடன் ஆர்ப்பரித்த தமிழர்களின், திராவிடர்களின் விழா என்பதை பறைசாற்றும்வண்ணம் தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரசியல் கட்சிகள் பேதமின்றி, ஜாதி, மத பேதங் களின்றி அனைவராலும் மதிக்கப்படக்கூடிய ஒரே இயக்கமாக, உரிமைகளை மீட்டெடுக்கும் இயக்கமாக திராவிடர் கழகம் இருந்து வருவதாலேயே மாணவர்களை பெரும் நம்பிக்கையுடன் பெற்றோரும் இம்மாநாட்டுக்கு அனுப்பிவைத்து மகிழ்ந்துள்ளனர். குடந்தையில் இம்மா நாட்டில் பாலின பேதமின்றி மாணவர்கள் குவிந்துள்ளனர்.
குடந்தை என்றால் மகாமகம் என்று மூடத்தன நோயைப் பரப்பும் மோசடிக்காரர்களையும், ஏமாற்றுக் காரர்களையும், அவற்றால் ஏமாறுகின்ற அப்பாவி மக்களையுமே கண்டுவந்த குடந்தை நகர்வாசிகளுக்கு தன்னலமற்ற கட்டுப்பாடான கருஞ்சட்டைப்பட்டாளத்தை காணுற்றபோது பெரும் வியப்பு மேலோங்கியுள்ளது. ஆரிய ஆதிக்கத்தை தகர்ப்பதற்கு, ஆரியத்தால் விளைந்த கேடுகளை களைவதற்கு ஒரே தீர்வாக, திராவிடர் கழகத் தின் திராவிட மாணவர் கழகத்தின் மாநாட்டைக் காணும் போது மகிழ்ச்சி உண்டாயிற்று. சமூகத்தில் புரையோடிப் போய் பாழ்படுத்திவரும் மூடத்தனங்கள் ஒழியும் நாள் எந்நாளோ? என ஏக்கப்பெருமூச்சு விட்டவர்களுக்கு இந்த இயக்கத்தின் மறவர்களைக் காணும்போது பொதுமக்களும் சிந்தனையில் புத்தாக்கம் பெறுகின்றனர்.
அரசியல் பதவி ஏதுமில்லாத ஓரியக்கத்தில் மாபெரும் இளைஞர், மாணவர் பட்டாளம் உண்டென்றால், அது திராவிடர் கழகத்தில் மட்டுமே உண்டு. எவ்வளவு பெரிய கூட்டம் கூடினாலும், அத்துணை பேரும் கட்டுப் பாடு காத்து கடமையாற்றும் வீரர்களாக இருக்கிறார்கள். கொள்கைத் தங்கங்களாக இருக்கிறார்கள். பிறருக்கு சிறு தீங்கும் விளைவிக்காதவர்கள். மாறாக, அனைவருக்கும் பாதுகாப்பு அரணாக இருப்பவர்கள்தான் இந்த கருஞ்சட்டை பட்டாளத்தின் சிப்பாய்கள் என்பதை குடந்தை நகர மக்கள் கண்டு பாராட்டி மகிழ்கிறார்கள்.
மாநிலம் முழுவதுமிருந்து மாணவர் கழகத்தினர் மட்டுமல்லாமல் கழகத்தின் அனைத்து அணியினரும் பெருமளவில் திரண்டுள்ளனர். கழகத் தோழர்கள் தங்குவதற்கென்று மண்டபங்கள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநாடு தொடங்கியது
குடந்தை நகரில் செக்காங்கன்னி சாலையில் அமைந் துள்ள காஞ்சி சங்கரா திருமண மண்டபத்தில் அரியலூர் அனிதா நினைவரங்கம், பெருவளூர் பிரதிபா, திருச்சி சுபசிறீ நினைவு மேடையில் மாநாட்டின் நிகழ்ச்சிகள் தொடங்கின. திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டின் முதல் நிகழ்வாக பகுத்தறிவு இசை, பகுத்தறிவு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
பகுத்தறிவு இசை நிகழ்ச்சி
காலை 9 மணிக்கு திராவிடக் கலைச்சுடர் திருத்தணி டாக்டர் த.பன்னீர்செல்வம் குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்கியது. அவருக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பயனாடை அணிவித்து சிறப்பித்தார்.இந்த இசை நிகழ்ச்சியில் மாநில, திராவிட மாணவர் கழகச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், மாநில கலைத்துறை செயலாளர் சித்தார்த்தன், இறைவி ஆகியோர் பங்கேற்று பாடினர். திராவிட மாணவர் கழக மாநில துணை செயலாளர் த.யாழ்திலீபன் தொடக்க உரையாற்றினார்.
திராவிட மாணவர்களின் கல்வி
உரிமையும்-கடமையும் கருத்தரங்கம்
காலை 10 மணியளவில் திராவிட மாணவர்களின் கல்வி உரிமையும் & கடமையும் எனும் தலைப்பில் கருத்தரங்கத்துக்கு திராவிடர் கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு தலைமை வகித்து உரையாற்றினார்.
குருகுலக் கல்வியும், குலக்கல்வியும் எனும் தலைப்பில் முனைவர் அதிரடி க.அன்பழகன், நீட்டும், சட்டமன்றமும் எனும் தலைப்பில் கழக சொற் பொழி வாளர் இரா.பெரியார்செல்வன், நீட்டும் நீதிமன்றமும் எனும் தலைப்பில் வழக்குரைஞர் பூவை.புலிகேசி, நீட்டும் மக்கள் மன்றமும் எனும் தலைப்பில் கழக மகளிரணி, மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் உரையாற்றினார்கள். வை.இளங்கோவன், த.ஜில்ராஜ், கோவி.மகாலிங்கம், பீ.இரமேசு, ந.காமராசு, மருத்துவர் பி.எஸ்.திருவருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் கொள்கைப் பாடல்களைப் பாடி இணைப்புரை வழங்கினார். கருத் தரங்கில் பங்கேற்றவர்களுக்கு வை. இளங்கோவன் பய னாடை அணிவித்தார்.
இனமான ஏடுகளின் நோக்கமும் தாக்கமும் கருத்தரங்கு
முற்பகல் 11 மணிக்கு இனமான ஏடுகளின் நோக் கமும் தாக்கமும் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. வழக்குரைஞர் கு.நிம்மதி, வ.அழகுவேல், க.குருசாமி, தி.மில்லர், சு.கலியமூர்த்தி, தங்க.பூங்காவனம், நா.சந்திரசேகரன், க.பவானிசங்கர் ஆகியோர் முன்னிலையில், கணக்கு தணிக்கையாளர் சு.சண்முகம் அறிமுகவுரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் கருத்துரையாற்றினார். இன மான ஏடுகளின் நோக்கங்கள் மற்றும் அவற்றால் விளைந்த மாற்றங்கள், சமூகத்தில் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து உரை யாற்றினார்.
பெரியாரைச் சுவாசிப்போம் கவியரங்கம்
முற்பகல் 11.45 மணிக்கு பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் வா.நேரு தலைமையில் பெரி யாரைச் சுவாசிப்போம் தலைப்பில் கவியரங்கம் நடை பெற்றது.
வலங்கை வெ.கோவிந்தன், அரு.ரெங்கநாதன், எம்.என்.கணேசன், க.சிவக்குமார், நா.கலியபெருமாள், ந.முருகானந்தம், க.திராவிடன் கார்த்திக், பட்டம் க.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர்கள் பா.திவ்யபாரதி, ம.ஜ.சந்தீப், இர.க.தமிழருவி கவியரங் கில் பங்கேற்று கவிதைமழை பொழிந்தனர்.
தமிழர் தலைவர் சிறப்புரை
திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டின் காலை நிகழ்வுகளின் முக்கிய நிகழ்வாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சிறப்புரை அமைந்தது.
முன்னதாக மாநாட்டு அரங்கிற்கு வந்த தமிழர் தலைவருக்கு அனைவரும் எழுந்து நின்று வரவேற்பு அளித்தனர். உள்ளூர் பிரமுகர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தனர்.
காஞ்சி சங்கரா திருமண மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சி, கருத்தரங்கம், கவியரங்கம் மற்றும் தமிழர் தலைவரின் சிறப்புரை கேட்க அரங்கம் நிரம்பி மேல்மாடம் நிரம்பி வெளியே தொலைக்காட்சி வழியாக பெருந்திரளானவர் திரண்டு கேட்டனர்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திராவிடர் கழகப் பொருளாளர் மருத்துவர் பிறைநுதல்செல்வி, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தலைவர் க.சண்முகம், துணைத் தலைவர் இராசகிரி கோ.தங்கராசு, பொதுச்செயலாளர் இரா.செயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி, அமைப்புச் செயலாளர்கள் த.சண்முகம், ஊமை செயராமன், வே.செல்வம், வி.பன்னீர்செல்வம், மாநில வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், மகளிரணி மாநிலச் செயலாளர் அ.கலைச்செல்வி, மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, இளைஞரணி மாநிலச் செயலாளர் த.சீ.இளந் திரையன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, தென்மாவட்டப் பிரச்சாரக்குழுத் தலைவர் தே.எடிசன்ராஜா, சட்டத்துறை மாநிலத் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், செயலாளர் வழக்குரைஞர் மு.சித்தார்த்தன், பெரியார் மருத்துவ அணி தலைவர் மருத்துவர் இரா.கவுதமன், பெரியார் வீர விளையாட்டுக்கழக மாநிலத் தலைவர் ப.சுப்பிரமணியம், செயலாளர் நா.இராமகிருட்டினன், திராவிட விவசாய தொழிலாளர் கழக மாநிலச் செயலாளர் வீ.மோகன், திராவிட தொழிலாளர் கழக மாநிலத் தலைவர் அ.மோகன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், தஞ்சை மண்டலத் தலைவர் வெ.ஜெயராமன், செயலாளர் மு.அய்யனார், மண்டல இளைஞரணிச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், குடந்தை மாவட்டத் தலைவர் கு.கவுதமன், பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, குடந்தை மாவட்டச் செயலாளர் சு.துரைராசு, பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பெ.வீரையன், பெரியார் பகுத்தறிவு கலை இலக்கிய அணி மாநிலச் செயலாளர் மஞ்சை வசந்தன், கலைத்துறை மாநிலச் செயலாளர் ச.சித்தார்த்தன், வீதிநாடக மாநில அமைப்பாளர் பி.பெரியார்நேசன், பகுத்தறிவாளர் கழகப்பொதுச்செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன், மாநில துணைத் தலைவர் கோபு.பழனிவேல், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநிலச் செயலாளர் சி.இரமேசு, பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப்பாளர்கள் வா.தமிழ்பிரபாகரன், எஸ்.அருள்செல்வன், பேரா.இரா.கலைச்செல்வன், புதுச்சேரி மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, மும்பை மாநில திராவிடர் கழகத் தலைவர் பி.கணேசன், கருநாடக மாநில திராவிடர் கழகத் தலைவர் மு.ஜானகிராமன், செயலாளர் இரா.முல்லைக்கோ பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் வி.மோகன், பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவர் தி.இராசய்யா, குடந்தை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லெனின் பாஸ்கர், நாச்சியார்கோயில் நகர திராவிடர் கழகத் தலைவர் சி.முத்துக்குமாரசாமி, பாபநாசம் நகரத் தலைவர் வெ.இளங்கோவன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள், இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, மகளிர் பாசறை, மருத்துவரணி, வழக்குரைஞரணி, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு கலை இலக்கிய அணி, கலைத்துறை, திராவிட விவசாய தொழிலாளர் கழகம், திராவிட தொழிலாளர் கழகம் உள்ளிட்ட கழகத்தின் அத்துணை அணியினரும் பெருந்திரளாக மாநாட்டில் கலந்து கொண்டனர்.