கல்விக் கடன் கட்ட முடியாமல் மாணவன் தற்கொலை!
தேர்தல் வாக்குறுதிப்படி அ.தி.மு.க. அரசு கல்விக் கடனை தள்ளுபடி செய்யட்டும்!
கடனை வசூல் செய்ய அம்பானி நிறுவனத்திடம் ஒப்படைப்பதா?
இந்த ‘ஈட்டிக்காரன்’ வேலையைத் தடுத்து நிறுத்துக!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
வேலை வாய்ப்பின்மையாலும், பல்வேறு காரணங்களாலும் வாங்கிய கல்விக் கடனைக் கட்ட முடியாத, இயலாத சூழ்நிலையில் அவர் களிடமிருந்து கடனை வசூல் செய்யும் வேலையை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விட்டிருப்பது சட்டப்படி சரியானதுதானா? அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி கல்விக் கடனை ரத்து செய்யாதது ஏன்? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கல்லூரி, பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு தனது கொள்கை முடிவின்படி, கடன் தந்து பிறகு அவர் களிடமிருந்து வசூலிக்க கடன் ஒப்பந்த உறுதிமொழி (பெற்றோர் களிடமும்) பெற்றுள்ள நிலையில், அக்கடன் ஒழுங்காக திருப்பிச் செலுத்தவேண்டியது முறைதான். ஆனால், வேலை வாய்ப்பின்மை, வறுமைச் சூழல் - இப்படி எத்தனையோ இடர்ப்பாடுகள் இருக்கலாம். அதன் காரணமாக அக்கடனை திருப்பி உடனடியாகத் தர முடியாமல் இருக்கலாம்.
சட்ட நெறிமுறைகள்மூலம்
மனிதாபிமானத்திற்கு முற்றிலும் விரோதமாக, வங்கிகள் கூலிப்படைகளையோ, அடியாட்களை வைத்து மிரட்டியோ, வசூலிக்க முயற்சிக்கக் கூடா தல்லவா! சட்ட நெறிமுறைகள்மூலம் தான் கடனை வசூலிக்கவேண்டும்.
கடனை வசூலிக்கும் பொறுப்பை
அம்பானியிடம் விடுவதா?
இந்நிலையில், சில வங்கிகளின் கடனைவசூ லிக்கும் பொறுப்பினை அம்பானியின்ரிலையன்ஸ் கார்ப்பரேட் நிறுவனத்திடம் அரசுடைமையாக்கப் பட்ட வங்கிகள் விட்டிருப்பது பச்சையான சட்ட விரோதமும், நியாய மீறலுமாகும்!
எந்த வங்கிச் சட்டப் பிரிவின்கீழ் இப்படி தனியார் கம்பெனிமூலம் பொதுத் துறை (அரசுடைமை) வங் கிகள் கடன் வசூலைச் செய்ய முடியும்? முடியாதே!
மத்திய, மாநில அரசுகளின் இத்தகு சட்ட விரோத நடவடிக்கைகளால் இளம் மாணவர் ஒருவர் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி, மனிதநேயம் உள்ளவர்கள் நெஞ்சில் இரத்தக் கண்ணீரை வடியச் செய்யும் கொடுமையல்லவா!
தேர்தல் வாக்குறுதியின்படி அதிமுக அரசு கல்விக் கடனை ரத்து செய்யட்டும்!
புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு, மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்வோம் என்று தேர்தலின் போது வாக்குறுதி கொடுத்தது என்னாயிற்று?
எச்சரிக்கை செய்யவேண்டாமா?
தமிழ்நாடுஅரசு,முதல்வர்அவ்வங்கிஅதிகாரிகளை அழைத்து, இதனைச் செயல்படுத்த விருக்கிறோம்; எனவே, இந்த இடைத்தரகர்கள் கொடுமையெல்லாம் செய்யாதீர்கள் என்று எச் சரிக்கை செய்யவேண்டாமா?
மதுரை அவனியாபுரம் கொத்தனார் வேலை பார்ப்பவரின் மகன் லெனின் என்னும் மாணவ இளந்தளிர் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனதால் விளைந்த உயிர்ப் பறிப்புக்கு யார் பொறுப்பு?
தேவை - ஈட்டிக்காரன் வேலைக்கு முற்றுப்புள்ளி!
உடனடியாக வங்கிகளின் இந்த ‘ஈட்டிக்காரன்’ கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்; இன்றேல், திராவிடர் கழகம், திராவிட மாணவர் கழகம் நாடு தழுவிய அறப்போராட்டத்தில் ஈடுபடுவது உறுதி! உறுதி!!
கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.
சென்னை
18.7.2016