Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

மானமிகு சுயமரியாதைக்காரரான'' கலைஞர் தி.மு.க.வின் தலைவராகப் பொறுப்பேற்று 50 ஆம் ஆண்டு இந்நாள்!

$
0
0

சரித்திர சாதனையாளரான கலைஞர் உடல்நலம் மீண்டு,  மீண்டும் தன் பணி தொடர வாழ்த்துகிறோம்!

தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்ற அய்ம்பதாம் ஆண் டான இன்று (27.7.2018) - சரித்திர சாதனை படைத்த மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்கள் உடல்நலம் பெற்று மீண்டு, மீண்டும் தன் பணியைத் தொடர வாழ்த்துகிறோம் என்று உருக்கத்துடன்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

தமிழினத்தின் ஒப்பற்ற தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான 'மானமிகு சுயமரியாதைக்காரர்' முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், தி.மு. கழகத்திற்குத் தலைவராகி இன்று (27.7.2018) 50 ஆண்டு ஆகிறது!

இந்த அரை நூற்றாண்டு அரசியல் வரலாற்றில் அவர் தி.மு. கழகத்தின் தலைவராக மட்டுமல்லாது, முதலமைச்சராக, எதிர்க் கட்சித் தலைவராக, ஏற்பட்ட சோதனைகள், புயல்கள், சகோதரப் பிளவுகள் - இந்த பல்வேறு நிகழ்வுகளையெல்லாம் சமாளித்தவர். சமூகநீதிக் கொடி தலைதாழாது பறக்கும் பணி, பகுத்தறிவு இயக்கமாக ஒரு அரசியல் கட்சி அண்ணா வழியில் அயராது உழைக்கும் இயக்கமாகவும் தி.மு.க.வை வழிநடத்திய சரித்திர சாதனைகளும், பலப்படுத்தப்பட்ட அதன் அஸ்திவார முயற்சிகளும் அநேகம்! அநேகம்!!

கலைஞர்தம் சாதனையின் பரிமாணம்!

இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில், அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சாரத் துறைகளில் இந்த திராவிட இயக்கச் சாதனையின் கன பரிமாணம்' மிகவும் அதிகம். வரலாற்றில் இதனை எவராலும் மறைக்கப்படவோ, மறுக்கப்படவோ முடியாது!

மாநில முதல்வர்கள் தத்தம் மாநிலங்களில் தேசியக் கொடியேற் றும் உரிமை, அவர் வாதாடிப் பெற்ற பெரும் சாதனைதானே!

தமிழுக்குச் செம்மொழி தகுதி!

வேறு எந்த மாநிலமும் செய்யாத ஒன்று. மக்கள் தொகையில் பெரும்பான்மையோரான பிற்படுத்தப்பட்டவர்களுக்கென்று தனி அமைச்சகம் ஏற்படுத்தியது!

செந்தமிழுக்குத் தீமை வந்த பின்பு, இந்த தேகமிருந்தொரு லாபமுண்டோ' என்று கேட்டு, இந்தித் திணிப்பை என்றும் எதிர்த்த தோடு - எதிர்மறைப் பணியோடு நின்றுவிடாமல், தமிழுக்குச் செம்மொழித் தகுதியை அதிகாரபூர்வமாக - மத்திய ஆட்சியை வழங்கிட வைத்த மகத்தான சாதனை - இவரது ஆட்சிக் கிரீடத்தில் ஜொலிக்கும் மற்றொரு வைரம்!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை

ஜாதி, தீண்டாமையை ஒழிக்க - கோவில் கருவறையில் உள்ள பேதம் ஒழிக்கப்பட வேண்டுமானால், மனித சமத்துவம் நிலை நாட்டப்பட வேண்டுமானால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக்கப்படல் வேண்டும் என்று கூறி, ஆகமப் பயிற்சி என்ற தகுதி தேவை என்று உச்சநீதிமன்றம் எழுப்பிய அய்யத்திற்கும் பதில் அளிக்கும் வகையில், ஆகமப் பள்ளிகளை ஏற்படுத்தி, பயிற்சி தந்து, 69 சதவிகித இட ஒதுக்கீட்டுப்படி 215 பேர்களை அனைத்து ஜாதியினரிலிருந்தும் அர்ச்சகர் பணிக்குத் தகுதியாக்கிய நிலையில், அதே உச்சநீதிமன்றம் அச்சட்டம் செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்து - வெற்றி வாகை சூட வைத்த சமநீதிச் சூரியன் அவர்!

பெண்களுக்குச் சொத்துரிமை

பெண்களுக்கு ஆண்களைப் போலவே சொத்துரிமையிலும் சம பங்கு அளிக்கப்படல் வேண்டும் என்று  1929 செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, அரசில் அமர்ந்து செயலாக்கிய பெருமை அவரது சரித்திரச் சாதனை! மக்கள் தொகையில் சரி பகுதியினருக்கு முன்பு மறுக்கப்பட்ட உரிமை, இதன்மூலம் நடைமுறைக்கு வந்து கோடானு கோடி பெண்கள் பயனுறுகின்றனர்!

அறிஞர் அண்ணா மறைந்த நிலையில், 1969 இல் முதல்வர் பொறுப்பை ஏற்கத் தயங்கியவருக்கு ஆணையிட்டு, அவரது இசைவுக்கு வழிவகுத்தவர் நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார்; அந்த செய்தியைச் சொல்லி கலைஞரின் இசைவினை வற்புறுத்திப் பெற்றவன் - இதை எழுதுபவன் என்ற உணர்வு - நினைவு 50 ஆண்டுகாலம் பின்னோக்கிச் செல்கிறது!

மீண்டு வருவார்!

தான் நடத்திய போராட்டங்களில் எல்லாம் வெற்றி பெற்று வந்ததுபோல ஆற்றலின் பல்கலைக் கொள்கலனான நம் கலைஞர் அவர்களது உடல்நலிவு தீர்ந்து அவர் மீண்டு - வருவார் - மீண்டும் வரவேண்டும் என்று விழையும் கோடிக்கணக்கான தோழர்களின் உணர்வோடு நமது விழைவையும் இணைத்துக் கொள்ளுகிறோம்.

தளபதியிடம் விசாரித்தோம்!

நேற்றிரவு தி.மு. கழகத்தின் செயல் தலைவர் அன்பு சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களோடு தொலைப்பேசியில் கலைஞர் உடல்நிலைப்பற்றிக் கேட்டறிந்தோம்; சிகிச்சை நடைபெறும்போது பார்வையாளராகப் போய் அவர்களுக்குத் தொல்லையை ஏற் படுத்தக் கூடாது; நலிவுற்றோரின் நலம் அல்லவா நமக்கு முக்கியம் என்பதால், சந்திக்கும் வாய்ப்பைத் தவிர்த்துள்ளோம்.

காய்ச்சல் காரணமாக தொய்வு ஏற்பட்டிருப்பினும், தக்க வகையில் வீட்டிலேயே பிரபல  மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். பார்வையாளர்களைத் தவிர்க்கவே மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்று தளபதி கூறினார்; ஓரளவு ஆறுதல் அடைந்தோம்!

தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சர் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சில முக்கிய அமைச்சர்கள் கோபாலபுரம் சென்று உடல்நலம் விசாரித்துத் திரும்பியது அரசியலில் நயத்தக்க நாகரிகம்; தக்க பண்பாட்டின் வெளிப்பாடு - இம்முறை அனைத்துக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், தோழர்களிடம் பரவவேண்டும் என்பதும் நம் அவாவாகும்!

முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்பவர் ஏதோ ஒரு தனி மனிதர் அல்ல; உழைப்பின் உருவம்! வாழ்நாள் எல்லாம் தனது கணீர்க் குரலால் உரிமை முழக்கம் செய்தவர். இப்போது மவுனத்தின்மூலம் நம்மை ஆளுகிறார் என்ற ஆறுதலுடன் அவர் விரைந்து உடல்நலம் தேறி, களத்திற்கு வருவார் என்று கூறி, தாய்க் கழகத்தின் சார்பில் வாழ்த்துகிறோம், வழியும் கண்ணீருடன்!

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

27.7.2018


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles