சமூகநீதியை வலியுறுத்தி ஆகஸ்டு 16 அன்று
மாவட்டத் தலைநகரங்களில் முதற்கட்ட ஆர்ப்பாட்டம்
தமிழர் தலைவர்
ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
சில களங்களில் நாம் வெற்றி பெற்றிருந்தாலும், முக்கியமாக நீதித் துறையில், குறிப்பாக உயர்நீதி மன்றங்கள், உச்சநீதிமன்றத்தில் உயர்ஜாதி ஆதிக்கமே நிலவுகிறது. இதனை எதிர்த்து நீதித் துறையிலும் இட ஒதுக்கீடு கோரி வரும் 16 ஆம் தேதி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் முதல் கட்ட ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தந்தை பெரியார் என்ற அறிவு ஆசான் 1925 இல் காங்கிரசு கட்சியிலிருந்து வெளியேறினார் - தனக்குப் பெரிய பதவி கிடைக்கவில்லை என்பதற்காகவா?
தான் ஈரோட்டில் வகித்த 29 பதவிகளை ஒரே நேரத்தில் - ஒரே கடிதத்தில் விலகல் - ராஜினாமா எழுதிக் கொடுத்து வந்தவராயிற்றே! அவரா பதவிப் பிரச்சினையால் விலகு வார்? இல்லை, இல்லை!
சமூகநீதிக்காக - பார்ப்பனரே 100-க்கு 100 அனுபவித்த பதவிகளில் 50 விழுக்காடாவது 100-க்கு 97 பேர்களாக உள்ள பார்ப்பனரல்லாத மக்களுக்கு - வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே வெளியேறினார்!
சுயமரியாதைச் சூரியன் உதித்தது!
அன்று அவர் தொடங்கிய போர் இன்றும் தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி பெற்ற வண்ணம் உள்ளது!
சவால் விட்ட பார்ப்பனரே -
உங்கள் நிலை என்ன?
பெரியார் என்பவர் தனி மனிதரல்ல - மறை வதற்கு; அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னது போல ‘‘அவர் ஒரு நிறுவனம் - தத்துவம் - ஒரு காலகட்டம் - ஒரு சகாப்தம் - ஒரு திருப்பம்'.'
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்த ஜாதிக் கொடுமைகளை வேரறுக்க, அழித்தொழிக்க அவர் தன்னந்தனியராய் தொடங்கிய போர் - பல களங்களைக் கண்டது. பல கட்டங்களைத் தாண்டி வெற்றி நடை போடுகிறது! மனிதத்தை உருவாக்கும் மாமருந்து!
50 விழுக்காடு முடியுமா உங்களால்?
சவால் விட்டது பார்ப்பனீயம் - அதையும் தாண்டி 69 விழுக்காடு கல்வி - பதவிகளில் நீண்டுள்ளதைக் கண்டு துடியாய்த் துடிக்கிறது! தனது கடைசி அஸ்திரங்களான நீதிமன்றங்கள் மூலமாவது முயன்று முடிவு கட்டப் போராடி, மூக்கறு பட்டு மூலையில் ஓலமிடுகிறது!
பெரியார் உருவமாக இல்லை. வருடக் கணக்குப்படி அவர் மறைந்து 45 ஆண்டுகள் - சுமார் அரை நூற்றாண்டு கள் ஓடிவிட்டன. ஒழிந்துவிடும் அக்கொள்கை அவரோடு என்று ஆரூடம் கணித்து ஆசையில் குளித்தோமே, இப்போது அதைவிட - அவர் காலத்தைவிட அவரின் சீடர்கள் காலத்தில் மேலும் நாம் ஏகபோகமாக அனு பவித்ததை நாளும் இழந்து வருகிறோம்; நாம் பின்னுகிற சூழ்ச்சி வலைகளும் அறுபட்டு வருகின்றனவே என்று குமுறுகிறார்கள். ஆத்திரக் கொந்தளிப்புத் தீயில் வெந்து வீழ்கிறார்கள்.
விபீடணர்களைத்
தேடுகிறார்கள்
பெரியார் தத்துவம் அல்லவா! பெரியார் என்ற ஜீவநதி வற்றாமல் ஓடிக் கொண்டே உள்ளதே, அதன் வெள்ளத்தால் நாம் அடித்துக் கொண்டு செல்லும் கற்களாகி விட்டோமே என்று பார்ப்பனீயம் ஓலமிட்டு அடுத்த வியூகம் விபீடணர்கள்தான் நம் கடைசி நம்பிக்கை என்று திட்டமிட்டு அவர்களை நோக்கி வட்டமிடுகிறது!
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக எந்தத் தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பு எழுதி, அது செயல் வடிவமும் பெற்று, காலங்காலமாய் நாம் கட்டிக்காத்த கோவில் கருவறை இன்று திறந்துவிட்ட ஒன்றாகிவிட்டதே!
அதுமட்டுமா?
மத்திய அரசுப் பணிகளில் மண்டல் கமிஷன் என்ற அவர்களின் சமூகநீதி ஏவுகணை, நமது அஸ்திரங்களைத் தாண்டி, நுழைந்து நம் ஆதிக்கக் கோட்டையை ஈரோட்டு பூகம்பத்தால் இடிய வைத்துவிட்டதே என்று ஏங்கு கின்றனர்!
இன்னும் போர் முடியாத களங்கள்
ஜாதி - தீண்டாமை, பெண்ணடிமை என்ற பிறவி பேத ஒழிப்புப் பெரும் போரில் இன்னும்கூட போர் முடியாத களங்கள் உள்ளன என்பதே நமது கணிப்பு - எனவே, ‘குடிசெய்வார்க்கில்லை பருவம்' என்ற குறளுக்கேற்ப - தொய்வின்றி நம் பணி தொடரவேண்டும்.
நீதிபதி பதவிகளில் தேவை
இட ஒதுக்கீடு!
இந்திய நாட்டு உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றமும் தான் உண்மையாக இன்றைய அரசியல் சட்ட ஜனநாயக முறையில் ஆளுகின்ற அமைப்புகள்.
மக்கள் பிரதிநிதிகளின் சட்டம்கூட சரியா - தவறா என்று தீர்ப்பளிப்பது அங்கேதானே! எனவே, அந்த மன்றங்களில் சமூகநீதிக் கொடி பறந்தாகவேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் 31 நீதிபதிகள். அதில் 6 இடங்கள் காலியாகவும் உள்ளன. கடந்த பல ஆண்டுகளாக நமது தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களைச் சேர்ந்த நீதிபதிகள் (உயர்நீதிமன்றங்களில் சிறந்த மூத்த வழக்குரைஞர்கள், சட்ட நிபுணர்களாக இருந்தும்கூட) எவரும் இல்லை.
மருந்துக்குக்கூட ஒருவர் இல்லை.
இதைவிட மாபெரும் சமூக அநீதி வேறு உண்டா?
உயர்நீதிமன்றங்களிலும், சமூகநீதிக் கொடி பறக்க வில்லையே!
அதேபோல், மக்கள் தொகையில் 70 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங் களிலிருந்து நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் எத்தனை பேர்? ஒரே ஒருவர். (அவரும் விரைவில் ஓய்வு பெறவிருக்கிறார்).
8 சதவிகித உயர்ஜாதி நீதிபதிகள்
92 சதவிகித மக்களுக்கு நீதி வழங்குவதா?
8 சதவிகிதம்கூட இல்லாத உயர்ஜாதியினரே 92 சதவிகித மக்களுக்கு இறுதி சட்ட நீதி வழங்குவோர் என்பது மக்கள் நாயகத்தில் சரியா? நியாயமா?
பெண்களுக்குப் பங்களிப்பு என்பதில்கூட உயர்ஜாதிப் பெண்களுக்குத்தான் வாய்ப்பு!
அடக் கொடுமையே!
இதற்கு எப்படிப் பரிகாரம் தேடுவது?
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுச் சென்றுள்ள எமது எம்.பி.,க்களே, உங்கள் கண்களுக்கும், கருத்துக்கும் இந்த சமூகஅநீதி பளிச்சிடவில்லையா?
குடியரசுத் தலைவர் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத் தவராக உள்ள நிலையில்கூட, இந்த சமூக அநீதி ஏற்கத் தக்கதா?
வரும் 16 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் முதற்கட்டமாக ஆர்ப்பாட்டம்
எனவே, இதற்கொரு அகில இந்திய சமூகநீதிப் போராட்டம் - இயக்கம் ஆங்காங்குள்ளவர்களால் பயனுறு முறையில் - மண்டல் போராட்டம் போல தொடங்கப்பட்டு நடைபெறவேண்டும்.
முதற்கட்டமாக, பெரியார் பூமியாகிய தமிழ்நாட்டில், வருகிற 16.8.2018 அன்று ஒவ்வொரு மாவட்டத் தலை நகரங்களிலும் திராவிடர் கழகத்தால் அறப்போராட்டம் - ஆர்ப்பாட்டமாக தொடங்கி நடத்தப்படும்.
அனைவரும் ஆயத்தமாவீர்!
அனைத்து ஒடுக்கப்பட்டோரும் ஆதரவு தாரீர்!
களத்திற்கு வந்து கடமையாற்ற வாரீர்!
தலைவர்
திராவிடர் கழகம்
குற்றாலம்
4.8.2018