நமது அருமைத் தலைவர் மறைந்தார் என்றாலும் வழிந்திடும் கண்ணீரைத் துடைத்தெறிந்து
தளபதி மு.க.ஸ்டாலின் கரத்தைப் பலப்படுத்துவோம்!
தமிழர் தலைவர் விடுத்துள்ள கண்ணீர் மல்கும் கடமை அறிக்கை
நமது அருமைத் தலைவர் கலைஞர் மறைந்தார் எனினும் வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்து, அவர் காண விரும்பிய இலட்சியத்தை ஈடேற்ற கட்டுப்பாடு காத்து, களப்பணியாற்றி அவர் விரும்பிய பணி முடிக்க சூளுரை எடுக்கவேண்டிய தருணம் இது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தந்தை பெரியார் தம் துணிவும், அண்ணாவின் கனிவும் இணைந்த திராவிடர் இயக்கத்தின் - குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் காவல் அரணான மானமிகு சுயமரியாதைக்காரன்' என்று தன்னை ஒரு வரியில் விமர்சனம் செய்து பெருமை அடைந்த நமது ஒப்பற்ற இனமானத் தலைவர் மறைந்துவிட்டார் (7.8.2018) எனும் செய்தி திராவிடர் சமுதாயத்தை மட்டுமல்ல அதற்கு அப்பாற்பட்ட மக்களையும், நாடு, இனம், மொழி, மாநிலங்களைக் கடந்து - கலங்கடித்துள்ள துயரச் செய்தி.
நடக்கக்கூடாதது நடந்தே விட்டது!
நடக்கக் கூடாதது நடந்தேவிட்டது - இழக்கக் கூடாத வரை நாமும், இயக்கமும் இழந்து தவித்துத் தத்தளித்து ஆறுதல் அடைய முடியாமல் தவிக்கிறோம்.
பிறவிப் போராளியான அவர், ஈரோட்டுக் குருகுலத்தின் எதிர்நீர்ச்சல் பாடத்தினைக் கற்று, களங்கள் பலவற்றை வென்று காட்டிய அம்மாவீரர், இதிலும் போராடினார்.
சரித்திரமாகி விட்டார்!
நம் சக போராளி இன்று சரித்திரமாகி விட்டார்!
குருகுலத்தின் சக மாணவர்.
பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம்
ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்''
என்று உணர்ச்சிக் கொப்பளிக்க முழங்கி,
தலைவர் தந்தை பெரியாரை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ததுடன், அவர் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய பிறகே உங்களை விட்டு நான் பிரிவேன் என்பதுபோல் அந்த வெற்றியும் கிடைத்த நிலையில்தான் விடைபெற்றுச் சென்றுள்ளார். கண்ணீர்க் கடலில் நம்மையெல்லாம் தள்ளி விட்டு ஓய்வறியாத அந்த உழைப்பின் உருவத்திற்கு இயற்கை ஓய்வைத் திணித்துவிட்டதுபோலும்!
ஈரோடு போனவன் நீரோடு ஒருபோதும் போக மாட்டேன் என்று எதிர்நீச்சல் வீரராய்த் திகழ்ந்த எம் சக போராளி எம்மைக் கண்ணீர்க் கடலில் தள்ளி, எதிர்நீச்சல் அடிக்க வைத்து பிரிந்து சென்றுள்ளாரே, எப்படித் தாங்குவோம்?
இயற்கை தன் கோணல் புத்தியைக் காட்டிவிட்டது! அதனையும் புறங்காண வேண்டும்.
அவர் மறையவில்லை
நம்மைப் பொறுத்தவரை அவர் மறைந்துவிடவில்லை.
நம் நெஞ்சங்களில் நிறைந்தவராகிவிட்டார்.
நம்முடன் வாழ்ந்த அந்த மாபெரும் தலைவர் வரலாறாகி விட்டார்.
வழிந்தோடும் கண்ணீர் வற்றாததுதான்; என்றாலும் அதனைத் துடைத்து, அவர் வழிகாட்டிய இயக்கத்தைக் காப்பதற்காக ஒவ்வொரு தொண்டரும், தோழரும் - அது அவரது குருதிக் குடும்பமாக இருந்தாலும், பரந்து பட்ட கொள்கைக் குடும்பமாக இருந்தாலும் - திராவிடர் இயக்கமாகவிருக்கும் பாசறையின் இலட்சியப் பயணம் தடைபடக்கூடாது; கொள்கையின் வீச்சுப் பாதைகள் அடை படக்கூடாது. இயக்கத்தின் கட்டுக்கோப்பு எள்ளளவும் உடைபடக்கூடாது; இந்த சூளுரைகளோடு அவருக்கு நமது தலை தாழ்த்தி வீர வணக்கத்தைச் செலுத்தி வழியனுப்பி வைப்போம்.
தேவை அரசு மரியாதை
1. இந்தியக் குடியரசுத் தலைவர், முதலமைச்சர் உள்பட அமைச்சர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்த நயத்தக்க நாகரிகம் வரவேற்கத்தக்கது. அது மேலும் இந்த முக்கிய தருணத்தில் விரிவடையவேண்டும்.
அய்ந்து முறை முதல்வராகவும், பல முறை எதிர்க்கட்சித் தலைவராகவும், 13 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் தொடர்ந்து மக்களின் இதயச் சிம்மாசனத்தில் இடம்பெற்ற நமது கலைஞர் அவர்களுக்கு தக்கதோர் அரசு மரியாதை அளிப்பது தமிழக அரசு, இந்திய அரசின் தலையாயக் கடன்!
அண்ணா நினைவிடம் அருகே!
அவரது விருப்பங்களில் ஒன்றான அறிஞர் அண்ணாவின் நினைவிடத்திற்கருகே சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய பெருமனதுடனும், பெருந் தன்மை யுடனும் இடம்தந்து, அரசியல் நனிநாகரிகத்னைக் கட்டிக் காத்து தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள் உயர்ந்து நிற்கவேண்டியது மிக முக்கியம்.
அரசியல் மாச்சரியங்களுக்கு இதில் இடமே இருக்கக் கூடாது.
எம்.ஜி.ஆரால் மதிக்கப்பட்ட தலைவர்!
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களேகூட, கலைஞரைத் தன் மதிப்புமிகு தலைவராக பல காலம் ஏற்று இறுதிவரை மரியாதை காட்டியவர் என்பதை இன்றைய முதல்வரும், அமைச்சர்களும், அ.இ.அ.தி.மு.க. சகோதரர்களும் மறந்து விடக்கூடாது என்பது நமது கனிவான வேண்டுகோள் ஆகும்!
அனைவருக்கும் ஆறுதல்
தலைவரை இழந்து வாடும் அவரது வாழ்விணையர் திருமதி தயாளு அம்மாள், திருமதி ராஜாத்தி அம்மாள், பிள்ளைகள் மு.க.முத்து, மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, மகள்கள் திருமதி செல்வி, திருமதி கனிமொழி மற்றும் முரசொலி செல்வம், அமிர்தம் மற்றும் அனைத்துக் குடும்பத்து உறுப்பினர்களுக்கும், கலைஞர் நிழலான உதவி யாளர்கள் சண்முகநாதன், நித்யா, கொள்கை குடும்பத்துப் பொறுப்பாளர்கள், இனமானப் பேராசிரியர் முதல் அத்துணைப் பொறுப்பாளர்களுக்கும் தாய்க்கழகம் தனது இரங்கலைத் தெரிவித்து ஆறுதல் கொள்ளக் கேட்டுக்கொள்கிறது.
அண்ணா மறைந்தபோது தந்தை பெரியார்
அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது (3.2.1969) தந்தை பெரியார் விடுத்த இரங்கல் செய்தியில்,
மனிதன் வாழ்நாளில் அடைந்த வெற்றிக்கு, மேன்மைக்கு அறிகுறி, முடிவின்போது அடையும் புகழ்தான் என்பது எனது கருத்து. அதுபோலவே அண்ணா அடைந்த புகழ் மிகவும் பாராட்டுக்குரியதாகும்.
மற்றும் அவர் புகழ் ஓங்க வேண்டுமானால் அண்ணா வுக்குப் பின்னும் அண்ணா இருப்பதுபோல காரியங்கள் நடை பெற்று வருகின்றன என்று சொல்லப்படும் நிலையால்தான் முடியும்.
தி.மு.க. தோழர்கள் எனது நண்பர்களும், அரும்பெரும் கூட்டுப் பணியாளர்களுமாக இருப்பதால், நான் அவர்களை எனது சொந்த தி.க. தோழர்களைப்போல், கூட்டுப் பணியாளர்கள் போலவே கருதுகின்றேன்.''
மேலே காட்டிய வார்த்தைகளை கலைஞர் உடலால் மறைந்து, உணர்வால் நம்மோடு கலந்துள்ள இந்த கட்டத்தில், நம் சகோதரர்களுக்கு நினைவூட்டி, வழியும் கண்ணீரைத் துடைத்து, கலைஞரின் கொள்கைப் பயணத்தை சோர்வும், தொய்வும் இன்றி தொடருங்கள் தோழர்களே!
கலைஞர் மறைந்தார் - அடுத்து என்ன? கட்சியின் செயல் பாடு எப்படி? நாட்டை வழிநடத்தும் அரசியல்பாட்டை எத்தகையது? எப்படி அணுகுவது?
இவைதான் நம் கண்முன் நிற்கக்கூடியவை - நிற்க வேண்டியவையும்கூட!
ஒரு தொடக்கத்திற்காக மிசா காலம் கணக்கிட்டு இந்நாள் வரை ஒரு 40 ஆண்டுகள் மானமிகு கலைஞர் அவர்களால் நேரிடையாக பொதுவாழ்வுப் பட்டறையில் தயாரிக்கப்பட்ட போர் ஆயுதமாக நம் மிடையே கம்பீரமாக இருப்பவர் தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கும், பொது வாழ்வில் கலக்காத மற்றவர்களின் தனி வாழ்வுக்கும் இடையே பெரும் வேறுபாடு உண்டு.
பொங்கி வழியும் கண்ணீரையும் அவசர கதியில் துடைத்துக் கொண்டு, மேலால் ஆகும் பணியில் தீவிரமாகத் தங்களை திணித்துக் கொள்ளும் நிலைதான் பொதுவாழ்வுத் தொண்டர்களுக்கு!
இந்த 40 ஆண்டுகளில் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பல சோதனைகளைச் சந்தித்துப் புடம் போட்டுக் கம்பீரமாக வெளிவந்திருக்கிறார்.
காராக்கிரகமானாலும், ஆட்சிப் பொறுப்பு என்றாலும், இரண்டிலுமே அப்பழுக்கற்ற அரும்பெரும் ஆற்றலாளராக உருவெடுத்துள்ளார்.
கடந்த ஈராண்டு காலமாக கலைஞர் செயல்படும் நிலையில் இல்லாத நிலையில், கட்சியின் செயல் தலைவர் பொறுப்புகளை ஏற்று, தீவிரமாகவும், அதேநேரத்தில், நிதானமாகவும் பக்குவப் பட்ட நிலையில் பணியாற்றி வந்திருக்கிறார்.
கலைஞர் என்ற இமயம் இருக்கிறது என்ற மன திடம் அவருக்கு ஊக்கச் சக்தியைக் கொடுத் திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை என்றாலும், தவிர்க்க முடியாததை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதுதான் பகுத்தறிவாளரின் நிலைப்பாடு!
அந்த இடத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் நிற்கிறார்; மக்கள் பேராதரவு அவருக்கு இருக்கிறது என்பதில் அய்யமில்லை.
கட்சித் தோழர்கள் தளபதிமீது மாறா அன்பும், பெருமதிப்பும், மிகப்பெரிய எதிர்பார்ப்பும் வைத் துள்ளனர்.
அந்த நிலை, கடந்த காலத்தைவிட இப்பொழுது அதிகம் தேவைப்படும் நேரம் இது.
தந்தை பெரியார் சொன்னார் - தி.மு.க.வின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதில் கடைசியாகக் கூறப்படும் கட்டுப்பாடுதான் முதல் இடத்திற்கு வரவேண்டும் என்று.
கலைஞரை மதிப்பது என்பது அவர் மறைந்த இந்தக் காலகட்டத்தில், கலைஞர் தன் இன்னுயிரையும் விட மேலாகக் கருதிக் கட்டிக் காத்த கழகக் கோட்டையை ஒற்றர்கள் உள்ளே நுழைய இடமின்றி, கள்ளச்சாவி போட்டு திறப்பார்களை அடையாளம் கண்டு, அண்ணா, கலைஞர் காலத்தில் இருந்ததை விட தி.மு.க. என்னும் கோட்டையில் கட்டுப்பாடு என்னும் கொடி கம்பீரமாகப் பறந்திட வேண்டும்.
தாய்க்கழகம் துணை நிற்கும்!
தாய்க்கழகம் துணை நிற்கும்; தமிழர்களும், தி.மு.க.தான் நமது அரசியல் பாதுகாப்பு அரண் என்பதை உணர்ந்து தி.மு.க.வுக்குப் பக்க பலமாக இருக்கவேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.
தாய்க்கழகம் என்ற தகைமையில், தவிப்பில் இவற்றை எடுத்துக்கூற நமக்கு முழுத் தகுதி உண்டு என்ற முறையில் இதனை நாம் எழுதுகிறோம்.
எனது பத்து வயதுமுதல் கலைஞருடன் பயணித் தவன் என்ற முறையில் கண்ணீர் அலைகளை அடக்கிக் கொண்டு இதனை எழுதுகிறோம்.
தி.மு.க. வெறும் அரசியல் கட்சியல்ல; சமுதாயக் கொள்கை என்பதுதான் அடித்தளம் என்று பல கட்டங்களிலும் மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்கள் அழுத்தமாகக் கூறியதையும் அழுத்தமாகப் பதிய வைப்பது தாய்க் கழகத்தின் முக்கிய கடமையாகும்.
கலைஞர் மறைந்தார் என்பதைவிட நம் நெஞ்சங்களில் வரலாறாக வாழ்கிறார்!
சோதனைகளை வெல்லுங்கள்!
சாதனைகளாக மாற்றுங்கள்!
வழியும் கண்ணீருடன்
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்.
சென்னை
7.8.2018