உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க.வின் மாநிலத் துணைத் தலைவராக உள்ள தயாசங்கர்சிங் என்பவர், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் செல்வி மாயாவதி அவர்களை சொல்லவே கூசும் - நாணும் வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். அக்கட்சி எப்படிப்பட்ட தரந்தாழ்ந்தவர்களை பெற்றுள்ள ஒன்று என்பது நாட்டிற்கே இப்போது புரியத் தொடங்கியுள்ளது!
‘‘பெண்களையும், சூத்திரர்களையும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்’’ என்று எழுதியுள்ள பகவத் கீதையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு, அதை தேசிய நூலாக்க வேண்டும் என்று கூறும் பா.ஜ.க.வினர் இப்படி பொதுவாழ்வில் ஈடுபடும் பெண்களை - அதுவும் அச்சகோதரி ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து இந்நிலைக்கு வந்தவர் என்பதுபற்றியோ, நான்குமுறை உ.பி.யில் முதலமைச்சராக இருந்தவர் என்ற தகுதிபற்றிக்கூட சிந்திக்காமல், இப்படி அபத்தமாகக் கீழ்த்தரப் பேச்சுகளைப் பேசுவது, யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாது.
பொதுவாழ்வில் நம் நாட்டில் பெண்கள் ஈடுபட வருவதே வெகு அபூர்வம்! இந்நிலையில், இப்படிப் பேசுவது எவ்வகை யிலும் நியாயம் அல்ல. அவர்கள் எக்கட்சியினராக இருப்பினும் அவர்களின் கருத்துகளை, கொள்கைகளை விமர்சிக்கலாமே தவிர, இப்படி தனிப்பட்ட தாக்குதல் அருவருக்கத்தக்க மொழிகளை உதிர்ப்பது முற்றிலும் பண்பாடற்ற அரசியல் அநாகரிகம் - மனிதநேய விரோதச் செயல்!
அதுபோலவே, தலைவர்களைப்பற்றி விமர்சிக்கும்போது, அவர்கள் வீட்டுப் பெண்களை, குடும்பத்தாரைப்பற்றி, ஜாதிபற்றி விமர்சிப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
நாடாளுமன்றத்திலே இதன் எதிரொலி கேட்டு, அவையே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கட்சிக் கண்ணோட்டமின்றி, தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் கவிஞர் கனிமொழி மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் பல கட்சித் தலைவர்களும் கண்டித்துள்ளது ஆறுதல் அளிப்பதாகும்!
அவரைக் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கியது மட்டுமோ, நிதியமைச்சர் அருண்ஜெட்லி மாநிலங்களவையில் மன்னிப்புக் கேட்பது மட்டுமோ போதாது; அவர்மீது தீண்டாமை வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் வழக்குப் போட்டு கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும்!
பா.ஜ.க. தலைவர்கள், ஏன் சில அமைச்சர் பொறுப்பில் இருப்பவர்களேகூட இப்படி முன்பும் பேசியுள்ளனர்.
டில்லி சட்டசபைத் தேர்தலில், “பா.ஜ.க.வுக்கு வாக்களிக் காதவர்கள் இராமனுக்குப் பிறக்காமல், வேறு யாருக்கோ பிறந்த வர்கள்’’ என்று மத்திய அமைச்சர் ஒருவரே பேசினாரே! அதைப் பிரதமர் கண்டித்து, அப்போதே பதவி நீக்கம் செய்திருந்தால், இப்போது உ.பி.யில் இப்படி பேசத் துணிவு வராது. உ.பி. தேர்தல் (2017) என்பதால்தான் இந்த நடவடிக்கையோ என்றும் அரசியல் நோக்கர்கள், விமர்சர்கள் கேட்கும் நிலைதான் இன்று!
இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
21.7.2016