ஜூலை 29 ஆம் தேதி சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்!
ஒத்த கருத்துள்ளோர் அனைவரும் பங்கு கொள்வீர்!!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள மனித உரிமை அறிக்கை
பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் செத்த பசுமாட்டின் தோலை உரித்த தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் நால்வர் கண்மூடித்தனமாக தாக்கப் பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் 29.7.2016 வெள்ளியன்று காலை 11 மணிக்கு சென்னையில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பிரதமர் மோடி ஆண்ட குஜராத்தில், தாழ்த்தப் பட்ட சமூகத்தினரின் வாழ்வுரிமை முற்றிலும் பறிக்கப் படும் கொடுமை நாளுக்கு நாள் மாறாமல், மேலும் மோசமான நிலையையே அடைகிறது! இதைவிட மகாவெட்கக்கேடு வேறு கிடையாது.
கடுமையான உடலுழைப்பைத் தரும் பிரிவினர்
‘‘சுதந்திரம்,சுயராஜ்ஜியம்''பெற்று,69ஆண்டு கள் ஆகின்ற நிலையில், இன்னமும் தாழ்த்தப் பட்டோருக்கு எதிரான பல்வகை மனித உரிமைகள் பறிப்பு குறைந்தபாடில்லை! அச்சமூகத்தினர்தான் மற்றவர்களைவிட கடுமையான உடலுழைப்பைத் தரும் பிரிவினர் ஆவர்!
துப்புரவுத் தொழிலாளிகளைவிட அத்தியாவசிய மான சேவை - பணி வேறு உண்டா? அவர்கள் ‘‘இன்றியமையாத பணியாளர்கள்’’ (Essential Sevices என்ற பிரிவு) என்று கருதி, உண்மையாக அவர்களின் உழைப்பைப் போற்றுவதாக இருந்தால், அரசுகள் அவர்களை முதல் நிலையில் வைக்கவேண்டாமா?
உழைக்காத சோம்பேறி வர்க்கத்தினர் இங்கு உயர் ஜாதியாம்! என்னே கொடுமை! பிரதமர் மோடி மாநிலமான குஜராத்தில் - (அதுதான் அண்ணல் காந்தியின் மாநிலமும்கூட). நேற்று வந்த வேதனை மிக்க, வெட்கப்பட வேண்டிய செய்தியால் நாடாளுமன்றமே ஸ்தம்பித்துத் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது!
தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் நான்கு பேர் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டனர்
செத்த பசுமாட்டின் தோலை உரித்ததற்காக (சவு ராஷ்டிர பகுதியில் உள்ள உன்னா நகருக்கு அருகில் உள்ள ‘‘மோட்டா சமாதியாலா’’ என்ற கிராமத்தில்) நான்கு தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்டதோடு, ஒரு காரில் கட்டி இழுத்து வரப்பட்டு, உன்னா காவல் நிலையம் எதிரில் உள்ள மெயின் மார்க்கெட்டில் அவர்களை நிற்க வைத்து அவமானப்படுத்தியுள்ளனர்!
அவர்களை எப்படித் தாக்கியிருக்கின்றனர் தெரியுமா?
ரத்தக் கண்ணீர் வருகிறது நமக்கு! இரும்புக் கம்பிகளாலும், ஸ்டீல் இரும்புக் குழாய்களாலும் அவர்களை அடியோ அடியென்று அடித்த பிறகும், இந்த அணிவகுப்பு அட்டகாசமா?
இது எங்கே? காந்தி பிறந்த மாநிலத்தில் - அதுவும் பிரதமர் மோடியின் ஆண்ட - ஆளும் மாநிலத்தில்! இதைவிட தலைக்குனிவு வேறு வேண்டுமா?
இனியாவது ஹிந்துத்துவா வாதிகளைப் புரிந்துகொள்வீர்!
முதல்வர் மோடியின் ‘குஜராத்தில் வளர்ச்சி! வளர்ச்சி!!’ என்று ஏமாந்து பிரதமராக்கிட வாக் களித்தோரே,இனியாவது பா.ஜ.க.வை, ஆர்.எஸ்.எஸ்ஸை,ஹிந்துத்துவாவாதி களைப்
புரிந்துகொள்ளுங் கள்!
கவ்ராட்சா சமிதி
இவர்களை மிருகத்தன மாக, பசு பாதுகாப்புக்காக - ‘கவ்ராட்சா சமிதி’என்ற பெயரில் இப்படி மிருகத்தன மாக அடித்துச் சித்திரவதை செய்ததைவிட கொடுமை என்ன தெரியுமா?
அதை வீடியோ படம் எடுத்து, முகநூலிலும் போட்டு மற்றவர்களுக்கும் இதே கதிதான் என்று அச்சுறுத்தவும் அக்கொடு மையாளர்கள் துணிந்துள்ளனர்.
இது மட்டுமல்ல, காந்தி பிறந்த போர்பந்தர் அருகில் ஒரு பொது மேய்ச்சல் நிலத்தில் பயிர் செய்ய முயன்றார் என்று கூறி, ஒரு தாழ்த்தப்பட்ட விவசாயி கொல்லப்பட்டுள்ளார் - ஜூலை மாதத் தொடக்கத்தில்,
தற்கொலை செய்துகொண்ட
தாழ்த்தப்பட்ட சகோதரர்!
கேதன் கொராடியா என்ற அகமதாபாத் அருகில் உள்ள உள்ளூர் கோர்ட் ஒன்றில் எழுத்தராகப் பணிபுரிந்த ஒரு தாழ்த்தப்பட்ட சகோதரர், தான் மிகக் கேவலமாக, பாரபட்சத்துடன் பணிமனையில் நடத்தப்படுவதற்காக அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்!
குஜராத்தில் ‘நவ சர்ஜன் டிரஸ்ட்’ என்ற சமூக அறக்கட்டளையை உருவாக்கி நடத்தும் மார்ட்டின் மெக்வான் என்பவர் - இவர் சுமார் 3000 கிராமங் களில் அறப்பணி ஆற்றி வருகிறார். அவரது கூற்று இதோ:
‘‘குஜராத்தில் பெரும்பகுதிகளில் தாழ்த்தப்பட்டோர் எவரும் கோவில்களுக்குள் (கிராமங்களில்) நுழைய அனுமதிக்கப்படுவதே இல்லை.
அவர்களுக்கென தனி சுடுகாட்டைக்கூட உயர் ஜாதிக்காரர்கள் அனுமதிப்பதே இல்லை. பொது சுடுகாட்டுக்கும் வழி இல்லை!
(குடிதண்ணீரை எடுப்பதற்குக்கூட கால அட்ட வணை - தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது).
நான்காண்டுகள் ஓடியும்
விசாரணை அறிக்கைகூட இல்லை!
2012 இல் நரேந்திர மோடி அவர்கள், குஜராத் முதலமைச்சராக இருந்தபோது - மூன்று தாழ்த்தப் பட்ட இளைஞர்கள் - துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்கும் மூவர் குழுவை முதல்வர் (மோடி) நியமித்தார். நான்கு ஆண்டுகள் ஓடிய நிலையில், இன்னமும் விசாரணை அறிக்கை வெளிச்சத்திற்கு வரவே இல்லை!
இத்தகைய நிகழ்ச்சிகள், அவலங்கள் குஜராத்தில் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன! (முன்பு கோவில் நுழைவு சம்பந்தமாக நாடாளு மன்றத்திலேயே இப்பிரச்சினை ராகுல் காந்தி யாலும் எழுப்பப்பட்டு அமளி ஏற்பட்டது’’ நினைவு கூரத்தக்கது) - இவ்வாறு மார்ட்டின் மெக்வான் கூறுகிறார்.
அனைவரும் ஒன்றுபட்டு
குரல் எழுப்பவேண்டும்
இம்முறைதான் மீடியாக்களின் கவனம் இதுபற்றி சற்று திரும்பியுள்ளது என்றும் கூறியிருக்கிறார்!
இதனைக் கண்டித்து நாட்டோர் அனைவரும், மனித உரிமை மாண்பில் நம்பிக்கையுள்ள அனை வரும் ஒன்றுபட்டு குரல் எழுப்பவேண்டும்.
ஒரு மாபெரும்
கண்டன ஆர்ப்பாட்டம்!
திராவிடர் கழகத்தின் சார்பில் வரும் 29.7.2016 வெள்ளியன்று காலை 11 மணிக்கு சென்னையில் ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஒத்த கருத்துடையோர் இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்கலாம்.
இதனை உச்சநீதிமன்றம் ஒரு தனி வழக்காக, தாமே முன்வந்து எடுத்து நடத்தினால், ஓரளவு நீதி கிடைக்கக் கூடும்.
சமூகநீதியும், மனித உரிமையும் இப்படியா அடிபட்டு நசுக்கப்படுவது?
தாழ்த்தப்பட்டோர் என்றால் கிள்ளுக்கீரைகளா? மிதிபடும் புழுக்களா?
வேதனை, வேதனை, வெட்கம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
21.7.2016
குறிப்பு: இவ்வறிக்கை துண்டறிக்கையாக தனியே கிடைக்கும்; வாங்கி ஆங்காங்கே பரப்புங்கள்! - ஆசிரியர்)