வரும் நவம்பரில் டில்லியில் அகில இந்திய அளவில் சமூகநீதியாளர்களை ஒருங்கிணைத்து திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் மாநாடு
சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் உரை
சென்னை, ஆக.16 அரசமைப்புச் சட்டப்படி மூன்று முக்கிய துறைகளில் நீதித்துறை மிகவும் முக்கியமானது; மாவட்ட அளவில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு இருக்கும் பொழுது, உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அளிக்கப்படாதது சமூக அநீதியாகும். இத்துறைகளிலும் இடஒதுக்கீட்டை வலியுறுத்திட, வரும் நவம்பர் மாதத்தில் சமூக நீதி உணர்வுடைய அனைத்துக் கட்சிகளையும், தலைவர்களையும் ஒருங் கிணைத்து திராவிடர் கழகம் மாநாடு ஒன்றை டில்லியில் நடத்தும்; தொடர்ந்து போராடும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், இன்று (16.8.2018) சென்னை மண்டல திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து திராவிடர் கழகத் தலைவர் உரையாற்றுகையில் கூறியதாவது:
சமூகநீதி என்பது வெறும் கல்வி, உத்தியோகத்துறையிலே மட்டும் இருக்கக்கூடாது. இதற்கே போராடித்தான் 1951ஆம் ஆண்டில் அரசமைப்புச் சட்ட முதல் திருத்தம் தொடங்கி போராடித்தான் வெற்றி பெற்றிருக்கிறோம்; உயர்நீதி மன்றங்கள், உச்சநீதிமன்றம் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு அறவே புறக்கணிக்கப்படுகிறது.
மூன்று துறைகளில் முக்கியமானது நீதித்துறை
நீதிபதிகள் நியமனம் என்பது அரசமைப்புச் சட்டத்தி னுடைய துறைகளில் மூன்று பிரிவுகளில் மிகமிக முக்கியமானது.
அரசு நிர்வாகம், சட்டங்களை இயற்றுகின்ற சட்டமன்றம், இறுதியாக நீதிமன்றம் என்ற மூன்று பிரிவுகளிலே மூன்றாவது பிரிவுதான் மற்ற இரண்டு பேரும் செய்கின்ற காரியங்களை விமர்சித்து, பரிசீலித்து, செல்லும், செல்லாது என்று சொல்லி, எல்லாவற்றுக்குமே உத்தரவு கொடுத்துக் கொண்டிருக்கக் கூடிய உண்மையான அதிகாரம் நீதிபதிகளிடத்திலே, நீதிமன்றங்களில்தான் இருக்கிறது. அந்த நீதிமன்றங்களிலே தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத் தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், அதேபோல சிறுபான்மை சமுதாயத்தினர், பெண்கள் இவர்கள் அத்துணைப் பேருக்கும் உரிய இடத்தை, பிரதிநிதித்துவத்தைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகம் நடத்தும் இந்தப் போராட்டத்தினுடைய நோக்கமாகும்.
இடஒதுக்கீடு நீதித்துறையிலே உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்திலும்கூட செய்யக்கூடிய அளவிற்கு இன்றைக்கு இருக்கிற சட்டமே போதுமானது.
அரசமைப்புச்சட்டத் திருத்தம்கூட செய்ய வேண்டும் என்று நாம் கோர வேண்டியதில்லை. தேவைக்கு அதிக மாகவே அதைக் கேட்கிறோம் நாம்.
காரணம் என்னவென்று சொன்னால், மாவட்ட நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கின்ற வரையிலே இட ஒதுக்கீடு இருக்கிறது.
மாவட்ட நீதிபதிகளுக்கு அடுத்த கட்டம், மேல் கட்டம் தான் உயர்நீதிமன்றம், அதேபோல, உச்சநீதிமன்றம்.
கோவையில் மட்டும் தனி சட்டமா?
உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும் நீதிபதிகள் நியமனத்திலும் இடஒதுக்கீடு கோரி திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. ஆனால் கோவையில் மட்டும் காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஒரு சட்டம், கோவையில் மட்டும் தனி சட்டம் - கோலோச்சுகிறதோ?
உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட ஒருவர்கூட நீதிபதியாக இல்லை
உச்சநீதிமன்றத்திலே 31 நீதிபதிகளிலே ஒரு நீதிபதிகூட தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் கிடையாது பல ஆண்டுகளாக.
அதேபோல, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இடம் 27 சதவிகிதத்தை இதிலே கடைப்பிடிப்பதே இல்லை. இது ஏதோ மாவட்ட நீதிபதிகள் அளவிலேதான் இடஒதுக்கீடு உண்டு, உயர்நீதிமன்றங்களுக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் கிடையாது என்பது ஒரு தவறான ஒரு நிலை. எனவே இதை வலியுறுத்த வேண்டும். மோடி அரசு அண்மைக்காலத்திலே, தங்களுடைய செல்வாக்கு சரிந்திருக்கிற காரணத்தினால், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியிலே அவர்களுடைய வாக்கு வங்கியைப் பெறவேண்டும் என்று இப்போது அம்பேத்கரைப்பற்றி அதிகமாக கவலைப்படுகிறார்.
இடஒதுக்கீட்டைப்பற்றி அவர்கள் வேகமாகப் பேசுகிறார்கள்.
அண்மையிலே, நேற்று சுதந்திர நாள் உரையிலேகூட, அதை அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
பிரதமர் என்ன செய்ய வேண்டும்?
உண்மையாகவே அதை சிந்திக்கிறார் என்று சொன்னால், உடனடியாக செய்ய வேண்டியது என்னவென்றால், உச்சநீதிமன்றத்துக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதிகள், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதிகள் இவர்கள் வரவேண்டும்.
பெண்களுக்கு உரிய பங்களிப்பை அளிக்க வேண்டும். பெண்களுக்குரிய பங்களிப்பு என்கிற போர்வையிலே, உயர்ஜாதிக்காரப் பெண்களைத்தான் நியமனம் செய்கிறார்களே தவிர, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துப் பெண்களுக்கு அங்கே வாய்ப்பு இல்லை. ஆகவேதான், இந்த போராட்டம் என்பது தமிழ்நாடு முழுக்க மாவட்டத் தலைநகரங்களில் இன்று தொடங்கி நடக்கிறது. அடுத்த கட்டமாக, புதுடில்லியிலே அகில இந்திய தலைவர்களை வைத்து சமூகநீதி நீதித்துறையிலும் வரவேண்டும் என்ற ஒரு கோரிக் கையை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் மாநாடு நடைபெறும். அதுபோலவே, இடஒதுக்கீட்டை ஒருபக்கத்திலே கொடுத்துவிட்டு, இன்னொரு பக்கத்திலே பொதுத்துறைகளையெல்லாம் தனியார் துறை களாக மாற்றி, இடஒதுக்கீடு கிடைக்காத சூழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறது இப்பொழுது.
அந்த சூழ்ச்சியையும் முறியடிக்கின்ற வகையிலே, தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு என்பதை வலியுறுத்துவோம்.
சமூகநீதி வென்றெடுக்க வேண்டுமானால், உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் இவைகளில் இந்தியா முழுவதும் சமூகநீதிக்கு இடமிருக்க வேண்டும். தமிழ்நாட்டைப்பொருத்தவரையில் ஓரளவுக் காவது இருக்கிறது. ஆனால், மற்ற மாநிலங்களிலே பல நீதிமன்றங்களில் தாழ்த்தப்பட்ட சமுதாய நீதிபதிகளே கிடையாது. அதேபோல உச்சநீதிமன்றத்திலே கிடையாது.
நாடாளுமன்றத்திலே இருக்கிறவர்கள் வெறும் முதலைக்கண்ணீர் விடவேண்டும் என்ற நிலை இருக்கக்கூடாது.
உள்ளபடியே அக்கறை இருக்குமேயானால், மோடி, பாஜக அரசு நாளைக்கே அவர்கள் தொடங்கி நவம்பருக்கு உள்ளாக அவர்கள் நியமனத்தை செய்ய வேண்டும்.
உச்சநீதிமன்றத்தில் இடங்கள் காலியாக இருக்கின்றன. 31 இடங்களிலே 25 இடங்களில்தான் இப்போது நீதிபதிகளை நிரப்பி இருக்கிறார்கள். எனவே, காலியான இடங்களிலே பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட் டவர்களை நியமிக்க வேண்டும் என்பது முதல் கோரிக்கை.
இரண்டாவது கோரிக்கை உயர்நீதிமன்றங்களிலும் இது தெளிவாக இருக்க வேண்டும் என்பது.
மூன்றாவது கோரிக்கை தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்பது.
இந்த மூன்று கோரிக்கைகளையும் வலியுறுத்தி இன்றைக்கு தமிழ்நாடு முழுக்க எல்லா மாவட்டங்களிலும் திராவிடர் கழகத்துக்காரர்களால் அறப்போராட்டம் நடைபெறுகிறது.
வரும் நவம்பரில் டில்லியில் மாநாடு
அடுத்த கட்டம் ஒத்த கருத்துள்ள அனைவரையும் அழைத்து டில்லியிலே வருகிற நவம்பரிலே பெரிய அளவிற்கு, தந்தை பெரியாருடைய 140ஆவது பிறந்த நாள் விழாவையும் இணைத்து, அதிலே சமூகநீதி மாநாடு என்பதை மிகத்தெளிவாக பல அமைப்புகளை ஒருங்கிணைத்து நடத்த உள்ளோம். இப்போதே பல வடநாட்டு அமைப்புகள் பல மாநிலங்களிலே இருக்கக்கூடிய பல்வேறு அமைப்புகள் எங்களோடு தொடர்பில் இருக்கின்றன. ஆகவே, அந்த அமைப்புகளையெல்லாம் ஒருங்கிணைத்து திராவிடர் கழகம் ஒரு மாபெரும் மாநாட்டையும், அதற்கு அடுத்து இந்தியா முழுக்க போராட்டத்தையும் இதற்காக தொடங்க இருக்கிறோம். சமுக நீதி வெறும் கானல் நீரல்ல. சமூக நீதி என்பது வெறும் ஏட்டுச்சுரைக்காய் அல்ல,
தொடர்ந்து போராடுவோம்!
சமூக நீதி என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த போராட்டத்தின் நோக்கம்.
இது ஒரு தொடர் போராட்டம். நீதிக்கட்சி என்ற பெயராலே திராவிட இயக்கம் பிறந்ததே சமூக நீதிக்காகத் தான்!
ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அது விரிவாகி இ,ருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டும் வந்தால் போதாது.
இந்த உணர்வு அகில இந்திய அளவிலே வரவேண்டும்.
இடஒதுக்கீடு உலகளாவிய நிலையிலே வளர்ந்திருக்கிறது-.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலேகூட, அஃப்பர்மேட்டிவ் ஆக்ஷன் என்று கறுப்பர்கள், வெள்ளையர்கள் என்ற பேதமில்லாமல், அவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்என்ற அளவிலே; இந்த இடஒதுக்கீட்டினுடைய நியாயங்கள், சமூக நீதியினுடைய தேவைகள் இன்றைக்கு நிலைநாட்டப்பட்டிருக்கின்றன.
சமூக நீதிக்காக இந்த இயக்கம் போராடுகிறது.
தொடர்ந்து போராடும்!
இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.