* தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் 9 ஆம் அட்டவணை பாதுகாப்புப் பெற்றது!
* இதனை எதிர்த்து மீண்டும் வழக்குப் போடப்படுவதன் நோக்கம் என்ன?
* குறுக்குவழிகளில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டை முறியடிக்க முயல்வோர் முயற்சியை முறியடிக்க ஒன்று திரளுவோம்!
* தமிழக அரசு உடனடியாக அவசர நடவடிக்கை எடுத்து கவனமாக வழக்கை நடத்துக!
தமிழ்நாட்டில் கல்வி, வேலை வாய்ப்புகளில் 69 விழுக் காடு இட ஒதுக்கீடு என்பது - இந்திய அரசமைப்புச் சட்டம் 9 ஆம் அட்டவணை பாதுகாப்புப் பெற்றது. இதனை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல; குறுக்கு வழியில் இதனை முறியடிக்க முயலும் சக்திகளை முறியடித்திடும் வகையில் வரும் 29.8.2018 புதன் காலை 10.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் சமூகநீதியில் அக்கறை உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் திராவிடர் கழகத்தின் சார்பில் கூட்டப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டிற்கு உள்ள தனிச் சிறப்புகளில் முதன்மையானது - இது தந்தை பெரியாரின் சமூகநீதி பூமி என்பதாகும்.
இந்தியாவிற்கே - மற்ற மாநிலங்களுக்கே வழிகாட்டும் வகையில், 80 விழுக்காட்டிற்குமேல் மக்கள் தொகையில் இருக்கும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களான - குரலற்ற மக்களின் உரிமைக் குரலாக' ஒலித்து, திராவிடர் இயக்கங்களின் தொடர் பிரச்சாரங்களாலும், போராட்டங்களாலும், ஆட்சிகளின் செயல் திறத்தாலும், தாழ்த்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கும், சிறுபான்மையினரான இசுலாமியர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களில் மிகவும் அடியில் வைக்கப்பட்டு வதியும் அருந்ததியர்களுக்கும் தனி இட ஒதுக்கீடு தரும் சட்டங்களை - ஆணைகளை நிறைவேற்றி அம்மக்கள் கல்வி, உத்தியோகத்தில் பயனடையச் செய்து சமூக மாற்றத்தினை ஏற்படுத்திடும் மாநில மும் தமிழ்நாடுதான்!
69 விழுக்காடு ஒன்றும் அதிகமல்ல!
இந்த இட ஒதுக்கீடு (கல்வி - வேலை வாய்ப்புகளில்) 69 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது - அதிக எண்ணிக்கையே அல்ல; அவர்களது மொத்த ஜனத்தொகையைக் கணக்கிடும் போது இது குறைவுதான்! 100-க்கு 3 பேர்களாகவும் (உ.பி., உத்தரகாண்ட்டில் - மட்டும் 9 முதல் 12 விழுக்காடு வரை பார்ப்பனர் - வடநாட்டில் 10, 5 விழுக்காடு முன்னேறிய ஜாதியினர்) தென்னாட்டில் நால் வருண அமைப்பில் இடையில் உள்ள இரண்டு அமைப்புகளான சத்திரியர், வைசியர்' என்ற பிரிவே இல்லை (நீதிமன்றங்களே ஒப்புக்கொண்ட தீர்ப்பு ஆனபடியால்) சுமார் 10, 15 சதவிகிதம்தான் வடமாநிலங்களில் உண்டு.
திராவிடர் கழகம் போராடிப் பெற்ற அரிய பொக்கிஷமான இட ஒதுக்கீடு - அனைவருக்கும் கடந்த 70 ஆண்டுகளாக அதன் பலன் கிடைத்தே வருகிறது.
69 சதவிகித இட ஒதுக்கீட்டை அளிக்கும் 76 ஆம் அரசியல் சட்டத் திருத்தம் - 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்புடன் அமைந்துள்ள சட்ட அங்கீகாரம் பெற்றது.
அதை செல்லுபடியற்றதாக்கிட பார்ப்பனர்களும் மற்ற முன் னேறிய ஜாதியினராகிய பார்ப்பன அம்புகளும் உச்சநீதிமன் றத்திற்கு சதா படையெடுப்பது, மூக்குடைபடுவது - தொடர்கிறது. (ஏற்கெனவே உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் கபாடியா தலைமையில் இது செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது).
என்றாலும், சில சட்டக் குறுக்கு வழிகளைப் பயன்படுத்தியும், உயர்ஜாதி ஆதிக்க ஊடகங்கள், ஏடுகள், தொலைக்காட்சிகள் - உ.ச்சநீதிமன்றத்தில் சமூகநீதிக்கு எதிரான மனப்பான்மை கொண்ட நீதித் தீர்ப்புகள் கிட்டாதா என்ற நப்பாசையில் பலமுறை தோற்றும் மீண்டும் இப்படி 69 சதவிகிதத்திற்கு எதிராக ஒரு காகிதப் புலிவேட்டையை'' தவறான சட்ட அணுகுமுறையுடன் சென்று இதனை ஒழிக்கத் தீவிர முயற்சிகளை இன்றும் தொடர்கின்றன!
தமிழ்நாடு சட்டம் வழிகாட்டுகிறது!
69 சதவிகித இட ஒதுக்கீட்டின் மாடலை'' இன்று பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களும், மகாராஷ்டிரமும், தெலங்கானாவும்கூட பின்பற்றி இட ஒதுக்கீட்டினை உயர்த்திட தமிழ்நாட்டின் இட ஒதுக்கீடுப் பாதுகாப்புச் சட்டத்தினை எடுத்துக்காட்டுகிறார்கள்.
இதுதான் உயர்ஜாதியினரான - சமூகநீதிக்கு விரோதிகளான - ஏகபோகமாக தாங்கள் அனுபவித்தவைகள் பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில், மீண்டும் மீண்டும் - சட்ட விரோத முயற்சிகளில் இந்த சக்திகள் ஈடுபட்டு வருகின்றன.
விசாரிக்க உகந்ததல்ல!
அனைத்து சமூகநீதியாளர்களும் ஓர் அணியில் திரண்டு நின்று இம்முயற்சிகளைத் தோற்கடித்தாகவேண்டும்.
சட்டப்படி உச்சநீதிமன்றம் இந்த 69 சதவிகித இட ஒதுக் கீட்டினை எதிர்க்கும் வழக்கை அனுமதித்திருக்கவே கூடாது; எடுத்த எடுப்பிலேயே தள்ளியிருக்கவேண்டும், ஏன்?
1. சட்டத்தில் 'Res Judicata' என்ற ஒரு அம்சம் உண்டு; போட்ட வழக்கினையே - அது விசாரணையில் தள்ளுபடி செய்து விட்ட பிறகு, மீண்டும் போட்டு கோர்ட்டுகளின் மதிப்புமிகு நேரத்தை வீணடிக்கக் கூடாது.
சட்டப்படி அது தவறு; செல்லாத ஒன்றாகும்.
2. 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்புடன் உள்ள சட்டம் இந்த சட்டம். இந்திய அரசியல் சட்டத்தின் 9 ஆவது அட்டவணையில் 257 A - The Tamil Nadu Backward Classes, Scheduled Castes and Scheduled Tribes (Reservation of Seats in Educational Institutions and of Appointments or Posts in the Services Under the State) Act, 1993 (Tamilnadu act 45 of 1994) என்ற பாதுகாப்புடன் 76 ஆவது அரசியல் சட்டத் திருத்தமாக Constitution (Seventy - Sixth Amendment) Act 1994 - Sec 2 (w.e.f) 31.8.1994) இதன் பிறகு நியாயமாக இதை விசாரிக்கவே உச்சநீதிமன்றம் உள்பட எந்த நீதிமன்றமும் எடுத்துக் கொள்ளக்கூடாது.
அதையும்மீறி, எடுத்துக்கொண்ட சில வழக்குகளில் உச்சநீதி மன்றமே, ‘'Once a matter is settled it cannot be unsettled again'' முடிவு செய்துவிட்ட ஒரு விஷயத்தை மீண்டும் கிளப்புவதும் முடியாது, கூடாது'' என்று கூறிய நிலையில், திரும்பத் திரும்ப ஏன் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு? புரிந்துகொள்ளுங்கள், ஆதிக்கவாதிகளின் சட்ட அட்டகாசத்தை!
தி.மு.க. செயல் தலைவரின் கடமை உணர்வு!
தி.முக. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று கூறியிருக்கிறபடி, தமிழக அரசு இதில் மிகவும் கவனத் துடன் தக்க மூத்த, சமூகநீதியில் நம்பிக்கையுள்ள, மூத்த தனி வழக்குரைஞர்களை வைத்து வாதாடி, 69 சதவிகித சட்டத் திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தினைத் தடுத்திட உடனடியாக அவ சரமாக முன்வரவேண்டும். அலட்சியமாக இருக்கக் கூடாது. தேவைப்பட்டால் நாங்களும் இணைந்துகொள்ளத் தயார். (Infolead)
நீட்' தேர்வு மசோதாவை நிறைவேற்றியும், அதனைக் கோட்டை'' விட்டதுபோல் விட்டுவிடக் கூடாது என்று அவர் சுட்டியுள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவர் தனது கடமையைச் செவ்வனவே செய்துள்ளார் என்பதற்கான எடுத்துக்காட்டாகும்.
தமிழ்நாட்டில் ஜாதிவாரியான கணக்கெடுப்புக்கான சென்சஸ் - குழுவை உடனே தமிழக அரசு அமைத்து, ஆதாரபூர்வமாக புள்ளி விவரத்துடன் அதைத் தாக்கல் செய்து, நிரந்தரமாகவே இதுபோன்ற விஷமங்கள் தலைதூக்காத வண்ணம் கிள்ளி எறியலாம்.
இது கோடானுகோடி ஒடுக்கப்பட்ட சமூக (சிறுபான்மையினர் உள்பட) மக்களின் உயிர்ப் பிரச்சினை!
இதில் முன்னுரிமையும், முனைப்பும் தமிழக அரசால் காட்டப்படவேண்டும்.
மத்திய அரசு என்ன செய்யவேண்டும்?
மத்தியில் உள்ள பிரதமர் மோடி அரசு, சமூகநீதியில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று அண்மைக்காலத்தில் மார்தட்டுகிறது; இது உண்மையானால், அவர்களும் உச்சநீதி மன்றத்தில் தகுந்தபடி 69 சதவிகிதத்தைக் காப்பாற்றிட வாதாடிட முன்வரவேண்டும்.
அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவுகளிலும் இட ஒதுக்கீட்டுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கவே இல்லை என்பது முழுதாய்ந்த உண்மை.
எனவே, உடனே நாம் இதனைத் தடுத்து நிறுத்திடவேண்டும்.
பெரியார் திடலில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
இதற்காக தமிழ்நாட்டுத் தலைவர்கள் அனைவரையும் நாம் ஓரணியில் திரட்டிடும் பணியில் முதற்கட்டமாக, 29.8.2018 புதன் காலை 10.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் ஒரு கலந்துரையாடல் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். அதில் முக்கிய கட்சித் தலைவர்களும், அமைப்புகளும் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம்.
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்.
சென்னை
23.8.2018