Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

வெளியுறவு நிலைப்பாட்டை மத்திய அரசு மறுபரிசீலனை செய்வது அவசர, அவசியம்!

$
0
0

* மழையோ - புயலோ - வெள்ளமோ தேச எல்லை பார்ப்பதில்லை

* அமீரகத்தின் ரூ.700 கோடி நிதி உதவியை ஏற்க மறுப்பதா?

மழையோ, புயலோ, வெள்ளமோ தேச எல்லையைப்  பார்ப்பதில்லை. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு  அமீரகம் அறிவித்துள்ள 700 கோடி ரூபாய் நிதி உதவியை ஏற்க மறுப்பதா? வெளியுறவு நிலைப்பாட்டை மத்திய அரசு மறுபரிசீலனை செய்வது அவசர, அவசியம் என்று   திராவிடர்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை  வருமாறு:

மழை நீர் - வெள்ளம் வடிந்த பின்னரும்...

கேரளாவில் வரலாறு காணாத மழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக பல உயிர்கள் பலி, பல லட்சக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கை - இருப்பிடம், உணவு முதலியவற்றிற்கும்கூட திண் டாடும் வேதனையான சூழ்நிலை இன்னமும்!

மழை நீர் - வெள்ளம் வடிந்த பின்னரும் அம் மக்களின் துயரக் கடலின் கண்ணீர் வெள்ளம் வற்றாது ஓடிக் கொண்டிருக்கும் அவல நிலை!

'இயற்கைப் பேரிடர்', தேசியப் பேரிடர்' என்று இதனை முன்பே அறிவித்திருக்கவேண்டும் மத்திய அரசு. கடந்த 20.8.2018 அன்று அதிதீவிர இயற்கைப் பேரிடர் என்று அறிவித்திருக்கிறது!

பிரதமர் மோடி, அதற்குமுன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கேரள முதல்வர் ஹெலிகாப்டரில் பறந்து வெள்ளத்தால் சூழப்பட்ட கேரள மாநில பூமியைப் பார்த்துச் சென்றுள்ளார்கள்!

மனிதநேய வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது, ஓரளவு ஆறுதலையும், துன்பத்திலும் இன்பத்தைத் தருவதாக அமைந்துள்ளது.

தேசியப் பேரிடர்' என்ற அளவில் பாதிக்கப்பட் டுள்ளதாக அறிவிப்பதில் மத்திய அரசு மேலும் கால தாமதம் செய்யக்கூடாது.

மனிதநேயத்தோடு உதவுவது வரவேற்கத்தக்கது

உலகத்தின் பற்பல பகுதிகளில் வாழுவோரும், சமூகம் சார்ந்த உணர்வுகளைப் பிரதிபலித்து, மனித நேயத்தோடு தங்களால் முடிந்த அளவு உதவுவது வரவேற்கத்தக்க செயலாகும்.

தமிழ்நாடும், மற்ற தென்னக மாநிலங்களும் மேலும் தாராளமாக உதவிட முன்வரவேண்டும்.

உடுக்கை இழந்தவன்  கைபோல் அவர்தம் இடுக்கண் களைய துடிப்போடு போட்டி போட்டுக்கொண்டு வர வேண்டியது அவசர அவசியமாகும்.

யானைப் பசிக்குப் போடப்பட்ட சோளப்பொறி

இதுவரை மத்திய அரசு அறிவித்திருப்பது முதல் கட்ட உதவி என்று கருதப்பட்டாலும், இது யானைப் பசிக்குப் போடப்பட்ட சோளப்பொறி போன்றதே!

அமீரகத்தின் ரூ.700 கோடி நிதியுதவி!

இந்நிலையில், கேரளத்து மக்களால் வளமாகிடும் அமீரகம் (UAE) தாமாக முன்வந்து - மிகுந்த மனிதநேயத்தோடு அவ்வரசு 700 கோடி ரூபாய் உதவிட முன்வந்திருப்பதை மத்திய அரசு ஏற்கெனவே உள்ள வெளியுறவுக் கொள்கை நிலைப்பாட்டின் காரணமாக ஏற்க மறுப்பது - இத்தருணத்தில் சீரிய முடிவு ஆகாது!

இதுபோலவே, மாலத்தீவும் உதவிட முன் வந்துள்ளது.

நாமாக கேட்டு வாங்கும் பிச்சை அல்ல அது; அவர்கள் தாமாக முன்வந்து உதவுதல் மனிதநேய அடிப்படையில்.

இந்தியாவே பல நாடுகளுக்கு உதவி உள்ளதே! குடியரசுத் தலைவரோ, பிரதமரோ வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பல உதவிகளை அறிவித்துக் கொடுக் கும் வழமை உள்ளபோது, இதை ஏன் மறுக்க வேண்டும்?

மத்திய அரசு பரிசீலனை செய்வது அவசர அவசியம்!

மத்தியில் முன்பு இருந்த அரசு (சுனாமி' வந்த போது) எடுத்த ஒரு முடிவினால், வரவிருந்த உதவிகள் ஏற்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டன என்பது உண்மையே! மத்திய அரசின் இந்த முடிவுக்கு அதுதான் காரணமானாலும், இந்த வெளியுறவு நிலைப் பாட்டை மத்திய அரசு மறுபரிசீலனை செய்வது அவசர அவசியம்!

பல ஆங்கில நாளேடுகள் உள்பட ஊடகங்கள் இம்முடிவினை மறு ஆய்வு செய்ய வற்புறுத்தி தலை யங்கங்கள் தீட்டியுள்ளன!

நிதி உதவியை ஏற்பது தவறல்ல; ஏற்பது இகழ்ச்சி அல்ல!

எனவே, இதுபோன்ற - உதவிகளை தேசிய பேரிடர் காலத்தில் ஏற்பதற்கு அச்சட்டத்தில் இடம் இருக்கும்போது, அதை அறிவித்து இதை ஏற்பது தவறல்ல. ஏற்பது இகழ்ச்சி அல்ல; மனிதநேயத்தை அங்கீகரிப்பது ஆகும்!

எனவே, கேரள மக்களின் புதுவாழ்வுக்கு உதவிடும் பணியில் இதையும் ஒரு முக்கிய அம்சமாக மத்திய அரசு கருதி விரைந்து செயல்பட முன்வரவேண்டும்.

மழையோ, புயலோ, வெள்ளமோ, தேச எல்லை பார்ப்பதில்லையே, பின் ஏன் இந்த செயற்கைத்தனம்?' மறுபரிசீலனை செய்க - மக்களைக் காப்பாற்றிட முன்வருக!

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

24.8.2018


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles