Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

''யுனிஃபார்ம் சிவில்கோட்’’ சட்டத்தின் நோக்கமென்ன?

$
0
0

இந்து மதத்துக்குள் பழக்கவழக்கங்கள், திருமண முறைகளில் மாற்றம் கொண்டுவரப்படுமா?

சிறுபான்மை மக்களையே குறி வைத்து கொண்டுவரப்படும் ஆபத்து!

‘சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுக்க’ முயலவேண்டாம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள சட்ட ரீதியான அறிக்கை

தேர்தல் வாக்குறுதிப்படி அ.தி.மு.க. அரசு கல்விக் கடனை தள்ளுபடி செய்யட்டும்!

மத்திய பி.ஜே.பி. ஆட்சி கொண்டுவரத் துடிக்கும் யுனிஃபார்ம் சட்டம் சிறுபான்மை மக்களை குறிப்பாக முஸ்லிம்களைக் குறி வைத்துக் கொண்டுவரப்படுவதாகும். இந்து மதத்துக் குள்ளேயே மாறுபாடான பழக்கவழக்கங்கள், திருமண முறை கள் உள்ளன. இந்த நிலையில், பொது சிவில் சட்டம் எப்படி சாத்தியமாகும் என்ற சட்ட ரீதியான கேள்வியை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு :

மத்தியில் ஆளும் - ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவான பா.ஜ.க. ஆட்சியினர் ‘பொது சிவில் சட்டம்‘ (Common Civil Code) என்பதைக் கொண்டு வரவேண்டும்; இந்திய அரசியல் சட்டத்தின் அரசுகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைப் பகுதி (Directive Principles of State Policy) யில் 44 ஆவது பிரிவு கூறுவது இன்னமும் செயல்படுத்தாமலேயே இருக்கின்றது என்று மிகவும் கரிசனத்தோடும், கவலையோடும் இருப்பதாகக் காட்டிக் கொண்டு, இதைக் கூறுகின்றனர்!

அரசாங்க நெறிமுறை வழிகாட்டலில் உள்ள மற்ற எல்லா வற்றையும் அரசுகள் செய்து முடித்துவிட்டது போலவும், இது ஒன்றுதான் பாக்கி என்ற நிலையா உள்ளது?

மறைந்துள்ள சூழ்ச்சி


மேலேழுந்தவாரியாகப் பார்க்கும் எவருக்கும் ‘இது நல்லது தானே’ என்றே கருதத் தோன்றும். இப்படி ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.வினர் கூறுவது சிறுபான்மைச் சமுதாயமான இஸ்லா மியர்களை - அவர்களது சட்டங்களைக் குறி வைத்தே கூறு கின்றனர் என்ற அவர்தம் உள்நோக்கத்தைப் புரிந்துகொண்டால், இதில் மறைந்துள்ள இந்துத்துவா சூழ்ச்சி, சூது புரியும்.

இந்திய அரசியல் சட்டத்தின் 44 ஆம் பிரிவில் பயன்படுத்தி யுள்ள சொற்றொடர்  Uniform Civil Code;    ஒரே சீர்மையான சிவில் சட்டமே நாடு முழுவதும் இருப்பின் நலம் என்று கூறியுள்ளது. சிற்சில வழக்குகளில் தீர்ப்புக் கூறுவதில் சிக்கல் ஏற்படும்பொழுதெல்லாம் - இப்படி ஒரு கருத்தை சில உச்சநீதி மன்ற தீர்ப்புகள் கூறியிருக்கின்றன என்பது உண்மையே!

அரசியல் சட்டம் கூறுவது சீர்மையான சிவில் சட்டம் - Uniform Civil Code. ஆர்.எஸ்.எஸ். கூறுவது ‘‘பொது சிவில் சட்டம்‘’ (Common Civil Code) இரண்டும் ஒன்றுதானா? ஆம்! என்றே கூறினால்கூட, எல்லா மதங்களிலும் உள்ள அடிப்படையாகக் கொண்ட சட்டத்தின் பல்வேறு முறைகளை சீர்மைப்படுத்தி விட்டுத்தானே இதைக் கொண்டுவர முடியும்?

ஜாதி பழக்கவழக்கங்களில் தலையிட
சட்டத்தில் இடம் உண்டா?

‘ஹிந்துலா’ என்ற சட்டத்தில் ஜாதி, ஜாதி பழக்கவழக்கம் (Caste Identity) இவைகளில் குறுக்கிட அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) பகுதி அனுமதிக்குமா?

முதலில் ஹிந்து மதத்தின் அடிப்படையான பல்வேறு சட்டப் பிரிவுகளில் உள்ள சட்டப் பாதுகாப்பை அகற்றிட அரசுகள் முன்வருமா? ஜாதி ஒழிக்கப்படுகிறது என்று மத்திய ஆளுங்கட்சி சட்டம் இயற்றினால்தானே, ஜாதியை அடிப்படையாகக் கொண்டுள்ள பழக்கவழக்கம் (Customary Law) என்பதை அடியோடு மாற்ற முடியும்? அதை முதலில் செய்து முடித்தல்லவா அடுத்து சீர்மைக்கு வரவேண்டும்?

இந்துப் பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டமே 2006 இல் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நிறைவேற்றப்பட்டது!

முன்பு, சனாதன குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத் தலைமையில், பார்ப்பன மற்றும் வைதீக வட்டாரங்கள் கடுமை யாக எதிர்த்ததால்தானே, அன்று  சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் வெளியேற வேண்டியதாயிற்று?

இந்துக்களின் திருமண முறைகளில்
ஒரு சீர்மை உண்டா?


எல்லா இந்துக்களுக்குமே சட்டம் சீர்மை பெற்றதாக இல்லை. உள்ளூர் பழக்கவழக்கங்கள், இவை மாறுபட்டுள்ளனவே!

திருமண முறைகளும் - அதில் காட்டப்படும் ஜாதி வழக்கமும், வட்டார வழக்கங்களும்கூட இன்றும் சீர்மை அடையவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை!

எனவே, முதலில் ‘யானையை வர்ணித்த அய்வரைப் போல’, இதுபற்றிப் பேசிக் கொண்டிருப்பதைவிட, வரைவு ஒன்றினைத் தயாரித்து - ‘‘இதோ சீர்மையான சிவில் சட்ட வரைவு’’ என்று கூறி, நாடு தழுவிய அளவில் விவாதிக்க முன்வரவேண்டும்.

அதன் நோக்கம் வடிவம் - எந்த அளவு சீர்மைத்தத்துவம் அதில் செயலாக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்தால்தானே அதுபற்றிக் கருத்து கூற முடியும்?
அரசியல் சட்டத்திலேயே தடைகள்

மற்றொரு சட்ட சிக்கல் - அரசியல் சட்டப்படி உள்ளது. இந்திய  நாடு முழுவதும் இச்சீர்மைச் சட்டம் பாய தற்போதுள்ள அரசியல் சட்டப் பிரிவுகளே தடையாக உள்ளனவே. அதற்கென்ன பதில்?

1. இந்திய அரசியல் சட்டத்தின் 371-ஏ என்ற பிரிவும், 371-ஜி என்ற பிரிவும் பழக்க வழக்க சட்டங்கள் - குடும்பச் சட்டங்கள் அமுலில் உள்ள நாகாலாந்து, அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோராம் போன்ற மாநிலங்களுக்குள் வேறு நாடாளுமன்றத்தின் சட்டங்கள் நுழையவே முடியாது -  குறிப்பிட்ட அந்தந்த மாநில சட்டமன்றங்களில் அதற்கு ஒப்புதல் தந்தால் ஒழிய, இந்த சட்டத்தை கொண்டுவர முடியாது.

இந்திய அரசியல் சட்டத்தின் ஆறாவது அட்டவணை இந்த அதிகாரத்தை அந்தந்த வடகிழக்கு மாநிலங்களுக்குத் தந்துள்ளதே!

மற்றபடி அப்படி எல்லா மதங்களையும் தாண்டி, ஜாதி, பழக்கவழக்கங்கள், திருமண முறைகள் எல்லாவற்றையும் மாற்றி சீர்மைப்படுத்தும் அளவுக்கு புரட்சிகரமான சட்டத் திருத்தமாக அது அமையுமா என்றால், நிச்சயமாக இவர்கள் அதைச் செய்யும் பக்குவமும், துணிவும் கொண்டவர்கள் அல்லர்!

திட்டத்தின் பின்னே ஒளிந்திருக்கும் நோக்கம்!

எனவே, நாட்டின் அமைதி, பல மதத்தவர் வகுப்பினரின் சமூக நல்லிணக்கம் இவைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போதும், இந்தத் திட்டத்திற்குப் பின்னே ஒளிந்து சிறுபான்மை யினரின் - குறிப்பாக இஸ்லாமியரின் உரிமைப் பறிப்புக்காகவே - அவர்களை அச்சுறுத்தவே இப்படிக் கூறப்படுகிறது என்ற கருத்துப் பரவலாக உள்ளது.

பெண்ணுரிமைப் பாதுகாப்பில் நம்மைவிட அக்கறை அதிகம் உள்ளவர்கள் வேறு எவரும் இருக்க முடியாது. எனவே, நாம் கூறுவதன் முக்கிய கருத்தை யாரும் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது.

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுக்கலாமா?

இதைப் போக்கிவிட்டு, அனைத்து மதங்களுக்கும் - தனிச் சட்டங்கள் (Personal Laws) இவைகளைச் சீர்மைப்படுத்தும் வரைவை தந்துவிட்டுக் கேட்கட்டும் - இதற்கு ஆதரவு உண்டா? இல்லையா? என்று. அதுதான் சரியான முறை. அதன் பின் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

சும்மா கிடந்த சங்கை முன்பு ஆண்டிதான் ஊதிக் கெடுப்பது வழக்கம். இப்போது ஆளுங்கட்சியே ஊதிக் கெடுக்க முயலலாமா?


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.


சென்னை
23.7.2016


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles