Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

மார்ச்சு 10ஆம் தேதி - அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவை தமிழ் நாடெங்கும் கொண்டாடுவோம்!

$
0
0

* தஞ்சாவூரில் 2019 ஜனவரி 5,6 தேதிகளில் கழக மாநில மாநாடு

* சென்னை அண்ணாசாலையில் கலைஞர் சிலை திறப்பு

* இந்து அறநிலையத்துறையை ஒழிக்கும் சூழ்ச்சி - எச்சரிக்கை!

* கீழடி ஆய்வில் கீழடி வேலையா?

* தந்தை பெரியார், அம்பேத்கர் சிலைகளை அவமதிப்போர், தூண்டுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும்

தஞ்சை திராவிடர் கழகப் பொதுக் குழுவில் சிறப்புமிகு 14 தீர்மானங்கள்

சென்னையில் முழு நாள் விழா!

ஒரு கோடி ரூபாய் : அன்னை மணியம்மையார் அறக்கட்டளை நிதிக்கு நன்கொடைகள் அறிவிப்பு

அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நூற்றாண்டை யொட்டி ஒரு கோடி ரூபாய் மூல நிதியாகத் திரட்டப் பட்டு ஓர் அறக்கட்டளை உருவாக்கப்படும் என்று அறிவித்த திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், நூறு குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் நிதி திரட்டப்படும் என்று தஞ்சை பொதுக் குழுவில் அறிவித்தார்.

தனது குடும்பத்தின் சார்பாக (வீரமணி - மோகனா) ஒரு லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என்று அறிவித்த போது பலத்த கரவொலி! வருமான வரித்துறையில் மிகப் பெரிய பொறுப்பில் பணியாற்றி ஓய்வு பெற்ற நமது மதியுரைஞர் ச. இராசரத்தினம் அவர்கள் இந்தத் திட்டத்தை வரவேற்று தங்கள் குடும்பத்தின் சார்பில் ரூபாய் ஒரு லட்சம் என்று முதலாவதாக அறிவித்ததைக் கழகத் தலைவர் கூட்டத்தில் அறிவித்தார்.

இதுவரை அறிவிக்கப்பட்ட விவரம்:

1) ச. இராசரத்தினம்.

2) கி. வீரமணி -மோகனா.

3) டி.கே. நடராசன் குஞ்சிதம்.

4) காரைக்குடி சாமி. திராவிடமணி குடும்பத்தினர் (என்.ஆர். சாமி - பேராண்டாள் நினைவாக மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த இக்கழகக் குடும் பத்தினர் - அதற்கான காசோலையை கழகத் தலைவரி டம் வழங்கினர். சாமி. திராவிடமணி, ஜெயா திராவிடமணி, என்னாரெசு பிராட்லா, பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் நேற்று மேடையில் அளித்தனர்.)

(5) டாக்டர் மீனாம்பாள் குடும்பத்தினர்.

6) புதுச்சேரி மு.ந. நடராசன்.

7) கடலூர் மண்டலத் தலைவர் ஆர். பன்னீர்செல்வம் அம்மா அறக்கட்டளை நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் என்று அறிவித்ததுடன், பெரியார் உலகம் பணி முடியும் வரைக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்ச ரூபாய் அளிப்பதாக அறிவித்தபோது பலத்த கரவொலி!

8) கோபி - மண்டல செயலாளர் பெ. இராசமாணிக்கம்.

9) தாராசுரம் வை. இளங்கோ குடும்பத்தினர்.

10) கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் துரை. சந்திரசேகரன் - கலைச்செல்வி குடும்பத்தினர்.

11) தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் தஞ்சை அமர்சிங் - கலைச்செல்வி குடும்பத்தினர்.

12) கழகப் பொதுக் குழு உறுப்பினர் உரத்தநாடு கை.முகிலன்.

13) தகடூர் தமிழ்ச்செல்வி - ஊமை செயராமன் (பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் சார்பாக)

(14) பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் முனைவர் மு.சு. கண்மணி (தனது தந்தையார் சுந்தரமூர்த்தி நினைவாக)

15) கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி - டாக்டர் கவுதமன் குடும்பத்தினர்.

16) கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் - வெற்றிச்செல்வி, மகள்கள் குடும்பத்தினர்.

கழக மாணவரணி தோழர் சட்டக்கல்லூரி மாணவி மதிவதனி தங்கள் குடும்பத்தின் சார்பாக ரூ.50,000 நிதியை அறிவித்தார். நேற்று கழகப் பொதுக் குழுவில் இவ்வாறு அறிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர், அக்.7 வரும் மார்ச்சு 10ஆம் தேதி அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நூற்றாண்டு விழாவைத் தமிழ் நாடெங்கும் வெகு சிறப்பாகக் கொண்டாடுவது உட்பட பதினான்கு சிறப்பான தீர்மானங்கள் தஞ்சாவூரில் நேற்று (6.10.2018) நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ன. அத் தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண் :1

இரங்கல் தீர்மானம் (7ஆம் பக்கம் காண்க)

முன்மொழிதல்: கலி. பூங்குன்றன்

தீர்மானம் எண்: 2

முன்மொழிதல்: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி

அன்னை ஈ.வெ.ரா மணியம்மையார் நூற்றாண்டையும் - திராவிடர் கழக பவளவிழா - திராவிடர் கழக மாநில மாநாடு ஆகிய முப்பெரும் நிகழ்ச்சிகளை சிறப்புடன் நடத்துதல்!

சுயமரியாதை, ஈகம், துணிவு, தொண்டறம் இவற்றின் ஒட்டுமொத்த வடிவமும், தந்தை பெரியார்தம் பெரும்பணி நடைபெறுவதற்காக அவரைப் பேணிப் பாதுகாக்கும் அருந்தொண்டினை ஆற்றுவதற்காகத் தன் வாழ்வினை முழுவதுமாக ஒப்படைத்தவரும், தந்தை பெரியார் அவர்களின் மறைவிற்குப் பிறகு இயக்கத்தைக் கட்டிக்காத்தவரும், நெருக்கடி நிலை எனும் நெருப்பாற்றை நீந்திக் கரை சேர்ந்தவரும், தந்தை பெரியார் முதலாம் ஆண்டு நினைவு நாளினையொட்டி இராவண லீலா நடத்தி, இந்தியத் துணைக் கண்டத்தையே அதிரச் செய்தவரும், தனக்காக தந்தை பெரியார் விட்டுச் சென்ற சொத்துக்களைக்கூட தனி அறக்கட்டளையாக்கி கல்வி சமூகப் பணியாற்றிட அதனை முழுவதும் ஒப்படைத்தவரும், உலக வரலாற்றில் ஒரு நாத்திக இயக்கத்திற்குத் தலைமை தாங்கி சீரிய முறையில் நடத்திக் காட்டிய ஒரே தலைவருமான அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டுப் பெருவிழாவை 2019 மார்ச்சு 10ஆம் தேதியன்று தமிழ்நாடு தழுவிய அளவில் அனைத்துப் பகுதிகளிலும் சீரும் சிறப்புமாக புகழ் பூத்த பெருவிழாவாக கொண்டாடுவது என்றும், குறிப்பாக  சென்னையில் முழு நாள் நிகழ்ச்சியாக பல்வேறு அம்சங்களுடன் நடத்துவது என்றும் நூற்றாண்டு நிறைவு விழாவை 2020 மார்ச்சு 10ஆம் தேதி அன்னை மணியம்மையார் பிறந்த வேலூரில் வெகு சிறப்பாகக் கொண்டாடுவது என்றும் இப்பொழுதுக்குழு தீர்மானிக்கிறது.

அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் நூற்றாண்டு விழா திட்டங்கள்

1. அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் எழுத்துக்கள் - பேச்சுகள்  - முழுத்தொகுப்பு

2. தனியே நூற்றாண்டு சிறப்பு மலர்

3. நூற்றாண்டு அஞ்சல் தலை வெளியீடு

4. மாவட்டத் தலைநகரங்களில் பெண்ணுரிமை- ஒரு தொடர் பயணம் கருத்தரங்குகள்- பரப்புரைகள்

5. 1 கோடி மூல நிதி திரட்டல் குறைந்தபட்சம்

6. திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் அன்னை  ஈ.வெ.ரா.மணியம்மையார் சிலை 7. தனியே ஒரு கல்வி, சுகாதார, பகுத்தறிவு, சமூகநீதி - பாலியல் நீதி - மூடநம்பிகை ஒழிப்பு நோக்கங்களைக் கொண்ட அறக்கட்டளை

8. விதவைகளுக்குப் பூச்சூட்டு விழா விதவைகள் திருமணங்களுக்குத் தலைமை தாங்க வைத்தல், உடற்கொடை, உறுப்புக்கொடை வழங்கல், மகளிர் தொண்டறத் தோழர்கள் - ம.தொ.தோ., சுற்றுச்சூழல் பாதுகாப்பு - பேய் பிசாசு - பாலின வக்கிரமங்கள்  - ஒழுக்கக் கேடு முதலியவற்றை எதிர்த்து விழிப்புணர்வுப் பிரச்சாரம்

9. மாவட்ட அளவில் ஆங்காங்கே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்துதல். பெரியார் பிஞ்சுகளுக்கு ஓவியப் போட்டி நடத்துதல்

முன்மொழிதல்: மானமிகு கி.வீரமணி, தலைவர் திராவிடர் கழகம்

தீர்மானம் எண்: 3

முன்மொழிதல்: இரா. ஜெயக்குமார் கழகப் பொதுச் செயலாளர்

தஞ்சாவூரில் திராவிடர் கழக பவள விழாவையொட்டி திராவிடர் கழக மாநில மாநாடு

திராவிடர் கழக மாநில மாநாட்டையும், திராவிடர் கழக 75ஆம் ஆண்டு பவள விழாவையும், தஞ்சாவூரில் 2019 ஜனவரி 5, 6 - சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் பெருஞ்சிறப்புடன் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா, திராவிடர் கழக பவள விழா மற்றும் மாநில மாநாடுகளுக்காக வைப்பு நிதியாக ஒரு கோடி ரூபாய் திரட்டுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்: 4

"பெரியார் உலகம்" பணிகளை விரைவாக முடித்தல்!

திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் பணியை விரைவாக முடித்து மக்கள் பார்வைக்குக் கொண்டுவருவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்: 5

முன்மொழதல்: வி. பன்னீர்செல்வம் அமைப்புச் செயலாளர்

சென்னை அண்ணா சாலையில் கலைஞர் அவர்களின் முழுஉருவச் சிலை திறப்பு

சென்னை அண்ணா சாலையில் தந்தை பெரியார் ஆணைப்படி திராவிடர் கழகத்தால் நிறுவப்பட்ட மானமிகு சுயமரியாதைக்காரரான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் சிலை சமூக விரோதிகளால் இடிக்கப்பட்ட நிலையில், மானமிகு கலைஞர் அவர்கள் மறைந்த இந்தக் காலகட்டத்தில் சென்னை அண்ணாசாலையில் அதே இடத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் விரைவாக கலைஞர் அவர்களின் சிலையைத் திறப்பது என்று கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்டதை இப்பொதுக்குழு வரவேற்று செயல்படுத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்: 6

முன்மொழிவு: இரா.குணசேகரன் மாநில அமைப்பாளர்

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலைகளை அவமதிப்போர் தூண்டுவோர் மீதான நடவடிக்கை தேவை

தந்தை பெரியார் சிலைகளையும் அண்ணல் அம்பேத்கர் சிலைகளையும் இந்துத்துவ மதவாத சக்திகளும் தொடர்ந்து அவமதித்து வருவதற்கு இப்பொதுக்குழு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

இதற்குத் தூண்டுகோலாக இருந்தவர்கள் யார் என்று வெளிப்படையாகத் தெரிந்தும், அவர்களைக் கைது செய்வதில் தமிழ்நாடு அரசு தயக்கம் காட்டுவதானது சம் பந்தப்பட்ட பேர்வழிகள் மேலும் மேலும் தங்கள் மதவெறிப் பேச்சையும், நடவடிக்கையையும் தொடரும் நிலைக்கு  ஊக்கப்படுத்தும் நிலை ஏற்பட்டு வருவதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்ற நிலையில் ஆளுக்கேற்ப வளைந்து கொடுப்பது சட்டத்தின் மதிப்பை மக்கள் மத்தியில் குலையச் செய்யும் அபாயப் போக்கை தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு இப்பொதுக்குழு கொண்டு வருகிறது.

மக்களால் மதிக்கப்படும் தலைவர்களை அவமதித்த அனைவரையும், அதற்குத் தூண்டுகோலாக இருந்துவரும் பி.ஜே.பி.யின் தேசிய செயலாளர் எச்.ராஜாவையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று இப்பொதுக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் நடந்துகொள்ளும் போக்கு மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதையும் பொதுக்குழு முதலமைச்சருக்கு தெரிவித்துக்கொள்கிறது.

அ.இ.அ.தி.மு.க. அரசு, மத்திய பி.ஜே.பி தலைமையிலான அரசுக்கு எடுபிடியாக இருந்து வருகிறது என்ற மக்களிடம் நிலவிவரும் பொது எண்ணம் தவறானது என்று காட்டும்வண்ணம் முதுகெலும்போடு செயல்பட வேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. அரசை  இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 7

முன்மொழிவு: வே.செல்வம், அமைப்பு செயலாளர்

தமிழ்நாட்டு மக்களால் வெறுக்கப்படும் மக்கள் விரோத திட்டங்களை விலக்கிக் கொள்க!

தமிழ்நாட்டு மக்களால் கடுமையாக வெறுக்கப்படும், எதிர்க்கப்படும் தூத்துக்குடி ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன் போன்ற திட்டங்களை மறுபடியும், மறுபடியும் தமிழ்நாட்டில் வலுக்கட்டாயமாக செயல்படுத்தத் துடிக்கும் மத்திய அரசின் வெகு மக்கள் விரோத, ஜனநாயக விரோத போக்கிற்கு இப்பொதுக்குழு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண்: 8

முன்மொழிவு: த.சண்முகம், அமைப்பு செயலாளர்

மத்திய அரசின் இந்துத்துவா மற்றும் சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மைக்கு விரோதமாகவும், சமூகநீதிக்கு எதிராகவும் தீவிரமான செயல்களில், பிரச்சாரத்தில் ஈடுபடும் பி.ஜே.பி. தலை மையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிற்கு இப் பொதுக்குழு தனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது!

குறிப்பாக கல்வியில் தேசிய கல்வி என்றும், குருகுலக் கல்வி என்றும் கொண்டுவரத் திட்டமிட்டிருப்பது - அப்பட்டமான பார்ப்பனிய, வருண வெறிக் கண்ணோட்டத்துடனான நடவடிக்கையே என்பதை இப்பொதுக்குழு திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது.

சமஸ்கிருதம் மற்றும் இந்தித் திணிப்பு என்பதும், அந்த வகையைச் சார்ந்ததே என்பதையும் இப்பொதுக்குழு திட்டவட்டமாக அறிவித்துக்கொள்கிறது.

நீட் தேர்வினால் முதல் தலைமுறையைச் சேர்ந்த வர்களும், கிராமப் பகுதியினரும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்டவர்களும், பெரும் அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது புள்ளி விவரங்களின் அடிப்படையில் உணர்ந்த பிறகும்கூட நீட்டைத் தொடருவதில் பிடிவாதமாக இருக்கும் மத்திய பி.ஜே.பி அரசின் சமூகநீதிக்கு விரோதமான போக்கிற்கு இப்பொதுக்குழு தனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

நீட் திணிப்பின் விளைவாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை; நீட் தேர்வின் குளறுபடிகள், ஊழல்கள், தில்லுமுல்லுகள் எல்லாம் வெளிப்படையாகவே வெளிச்சத்திற்கு வந்ததற்குப் பிறகும் அறிவுநாணயமாக நீட்டைக் கைவிடுவதுதான் ஒரு மக்கள் நல அரசின் கடமையாக இருக்க முடியும் என்பதையும் இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

நீட் தேவையில்லை என்று தமிழ்நாடு அரசு இரு மசோதாக்களை ஒருமனதாக நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி இரண்டு ஆண்டுகள் ஓடிய நிலையிலும் அதைப்பற்றி ஒரு சிறு துரும்பு அளவுகூட பொருட் படுத்தாமல் நடந்துகொள்ளும் போக்கு மாநில அரசை ஒரு பொருட்டாக மதிக்கும் நிலையில் மத்திய பி.ஜே.பி. அரசு இல்லையென்பதையே காட்டுகிறது.

தமிழ்நாடு எப்பொழுதுமே மாநில உரிமைக்காக அழுத்தமாகக் குரல் கொடுக்கும், வலுவாகப் போராடும் என்ற நிலையிலிருந்து தாழ்ந்து, மத்திய அரசிடம் போராடிப் பெற வேண்டியவற்றை (சமூகநீதி போன்றவற்றில்கூட) பெற இயலாத நிலையில் இருப்பதால் தமிழ்நாட்டிற்கு நாளும் ஏற்பட்டுவரும் இழப்பின் அளவு அதிகரித்து வருகிறது என்று இப்பொதுக்குழு குற்றஞ்சாட்டுகிறது.

இந்த நிலையில், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி., தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அ.இ.அ.தி.மு.க. அரசுகளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிராகரிக்க வேண்டும் என்று வாக்காளர்களை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. மதச்சார்பின்மை, சமூகநீதிக் கொள்கைகளில் அக் கறை கொண்ட கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் சிறுசிறு மாச்சரியங்களை விலக்கி வைத்து - இப்பொழுது அதிகாரத்தில் இருக்கும் மத்திய மாநில ஆட்சிகளை அகற்றுவதில் ஒன்று சேர்ந்து உறுதியாக பயணிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 9

முன்மொழிவு: சிவ.வீரமணி, புதுச்சேரி மாநிலத் தலைவர்

பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீட்டை முறியடிக்கும் சூழ்ச்சி!

இந்தியாவில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங் களையும் கட்டுப்படுத்தும் மத்திய அமைப்பான UGC கடந்த 3.5.2018 அன்று  சமூகநீதிக்கு எதிரான ஓர் அபாயகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் இடஒதுக்கீடு சுழற்சி முறையில்  (Roaster) என்பது ஒரு பல்கலைக்கழகம், ஒரு கல்லூரி என்றால் ஒட்டுமொத்தமாக ஒரு யூனிட்டாகக் கருதி அத்தனை இடங்களுக்கும் நியமனங்கள் நடைபெறும் என்பதுதான் இதுவரை இருந்துவந்த நிலை.

கடந்த மே மாதம் 3ஆம் தேதி (2018) ஹிநிசி வெளியிட்ட ஆணையில், இதனை முற்றிலுமாக மாற்றி பல்கலைக்கழகம், கல்லூரி என்பது தனித்தனி யூனிட்டு என்பதைத் தலைகீழாக மாற்றி ஒவ்வொரு துறையும் தனித்தனி யூனிட்டாகக் கருதப்பட்டு அதன் அடிப்படையில் சுழற்சி முறை பின்பற்றப்படும் என்பதுதான் அந்த அபாய ஆணையாகும். ஏழு இடங்களுக்கு மேலாகக் காலியிருந்தால்தான் சுழற்சி முறையில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட முடியும். ஒட்டுமொத்தமாக ஒரு பல்கலைக்கழகமோ, ஒரு கல்லூரியோ ஒரு யூனிட்டாக இருந்தால் ஏழுக்கு மேற்பட்ட இடங்கள் காலியாக இருக்கும். அப்பொழுது கண்டிப்பாக இடஒதுக்கீடு பிற்பற்றப்பட்டே தீரவேண்டும்; தனித்தனி யூனிட் என் றால் ஏழு இடங்களுக்குக் குறைவாகவே இருக்கும் -_ இட ஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இந்தச் சூழ்ச்சித் திட்டம்தான் தற்போதைய UGC-யின் புதிய ஆணையாகும்.

மத்தியில் உள்ள பி.ஜே.பி. தலைமையிலான அரசு சமூகநீதிக்கு எதிராகப் பல்வேறு சூழ்ச்சி வலைகளைப் பின்னி வருவதை ஒடுக்கப்பட்ட மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதோடு இந்த ஆணையை ரத்து செய்திட அனைத்து முயற்சிகளையும் அனைவரையும் ஒருங்கிணைத்து மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்: 10

முன்மொழிவு: பொத்தனூர் த.சண்முகம்

சமூகநீதிக்குச் சவக்குழி

பிற்படுத்தப்பட்டோர்களுக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் திணிக்கப்பட்ட காலந்தொட்டு பிற்படுத்தப்பட்ட வர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மாதாந்திர சம்பளம், விவசாய வருமானம இதில் கணக்கில் கொள்ளப்படாது என்று இருந்த நிலைக்கு மாறாக அண்மையில் உச்சநீதிமன்றம் பொதுத்துறையில் பணியாற்றுவோரின் மாதச் சம்பளமும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளதால் பொதுத்துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர் வீட்டுப் பிள்ளைகூட இடஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பதவி உயர்வு -  இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கிரீமிலேயர் கொண்டு வருவது பற்றிய கருத்துகளையும் மேலோட்டமாக சொல்லியிருப்பதை அலட்சியப்படுத்திவிட முடியாது.

சுருக்கமாகச் சொன்னால், கிரீமிலேயர் என்பதன் மூலம் இடஒதுக்கீட்டின் ஆணிவேரையே அழிக்கும் சூழ்ச்சி தலைக்கு மேல் வாளாகத் தொங்கும் நிலையில், சமூகநீதி சக்திகள் ஒருங்கிணைந்து கிரீமிலேயரை ஒழிப்பது முதற் கட்டமான விழுமிய கடமை என்று இப்பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமுதாய மற்றும் சமூகநீதியில் அக்கறை கொண்ட அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருங்கிணைந்து முழு மூச்சாகப் பலமாகப் போராடி  கிரீமிலேயரை ஒழிப்பதில் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்று கோடானுகோடி ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக இப்பொதுக்குழு வலி யுறுத்துகிறது. இடஒதுக்கீட்டில் கிரிமிலேயர் ஒழிப்பு மாநாடு- கருத் தரங்கத்தினை சென்னையில் வரும் டிசம்பரில் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்: 11

முன்மொழிவு: பொறியாளர் இன்பக்கனி (தலைமை செயற்குழுஉறுப்பினர்)

அய்யப்பன் கோயிலில் பெண்கள் வழிபாடு!

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்கள் சென்று நேரடியாக வழிபடக் கூடாது என்றும், அதுதான் சம்பிரதாயம் என்றும் பழைமைவாதிகள் பக்தி சம்பிரதாயங்கள் பெயரால் பெண்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் கருதும் - நம்பும் பிற்போக்குத்தனத்துக்கு மரண அடி கொடுக்கும் வகையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கும், இப்பிரச்சினையில் கேரள மாநில இடதுசாரிக் கூட்டணிக் கட்சியின் உறுதியான முடிவுக்கும் இப்பொதுக்குழு தனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

மதம், சம்பிரதாயம் என்று சொல்லி பக்தியில் உழலும் மக்களை ஒன்றுதிரட்டிப் போராடும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ். ஈடுபடுவதில் உள்ள பின்னணியை _ குறிப்பாக பெண்களை மனுதர்மப் பார்வையில் இரண்டாம் தர குடிமக்களாகப் பார்க்கும் கண்ணோட்டத்தையும் புரிந்துகொண்டு, ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் பார்ப்பன சக்திகளை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு இந்து மதப் பக்தர்களையும், சிறப்பாகப் பெண்களையும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண்: 12

முன்மொழிவு: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர்)

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - அடுத்த கட்டம்!

ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் கண்ணோட்டத்தில் கோயில்களில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் தனது இறுதிப் போராட்டமாக அறிவித்து, அதற்கான போராட்டக் களத்தில் நிற்கும் காலகட்டத்தில்தான் தந்தை பெரியார் தம் இறுதி மூச்சைத் துறந்தார்கள். அவர்களின் மறைவிற்குப் பிறகு திராவிடர் கழகத்திற்குத் தலைமை வகித்த அன்னை மணியம்மையார் அவர்களின் காலத்திலும் அதற்கான போராட்டம் தொடர்ந்தே வந்திருக்கிறது.

அன்னையார் அவர்களின் மறைவிற்குப் பிறகும் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி தலைமையில் தொடர்ந்து போராட்டங்களையும் பிரச்சாரங்களையும் திரா விடர் கழகம் செய்து வந்துள்ளது.

மானமிகு சுயமரியாதைக்காரரான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த நிலையில் இருமுறை அதற்கான சட்டங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டும், ஆதிக்க சக்திகளான பார்ப்பனர்கள் மேற்கொண்ட நீதிமன்ற படையெடுப்பால், காலதாமதமானாலும், இறுதி வெற்றி திராவிடர் கழகத்தின் அயராப் பணிக்குக் கிடைத்திருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

கேரள மாநிலத்தில் பிரனாய் விஜயன் தலைமையில் நடக்கும் இடதுசாரி (சி.பி.எம்.) கூட்டணி ஆட்சியில் 36 கோயில்களில் அனைத்து ஜாதியினரும் நியமனம் செய்யப்பட்டது பாராட்டுக்குரியதேயாகும்.

அதனைத் தொடர்ந்து திராவிடர் கழகம் தொடர்ந்து கொடுத்துவந்த அழுத்தத்தால் மதுரையில் தல்லாகுளம் அய்யப்பன் கோயிலில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் அர்ச்சகராக தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில் ஏற்கனவே அர்ச்சகர்கள் பயிற்சி பெற்று நியமனத்துக்காகக் காத்திருக்கும் 200க்கும் மேற்பட்டவர்களுக்கும் உடனடியாக கோயில்களில் அர்ச்சகர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

மேலும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் 69 சதவீத அடிப்படையில் மாணவர்களைச் சேர்த்து பயிற்சியைத் தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 13

முன்மொழிவு: சடகோபன் (வேலூர் மண்டலத் தலைவர்)

இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் - அதனை ரத்து செய்யப் பார்ப்பனிய தொடர் சூழ்ச்சிகள்!

கோயில்கள் பார்ப்பனர்களின் சொந்தவுடைமை போலவும், அதன் சொத்துகள் பார்ப்பனர்களின் வேட்டைக் காடாகவும் இருந்த நிலையைக் கணக்கில் கொண்டு நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் இந்து அறநிலையச் சட்டம் கொண்டுவரப்பட்டது (1924).

1960ஆம் ஆண்டில் சர்.சி.பி.இராமசாமி அய்யர் தலை மையில் அமைக்கப்பட்ட குழுவும் 1962இல் சென்னை மாநில அரசுக்குத் தன் அறிக்கையைக் கொடுத்தது.

கோயில்களின் நிர்வாகச் சீர்கேடுகள், கோயில் சொத்துக் களைச்  சூறையாடுதல், கோயில் நிலங்களை அபகரித்தல், திருடுதல், ஒழுக்கக் கேடுகள் பற்றி எல்லாம் அக்குழு விரிவாக தனது அறிக்கையில் ஆதாரப்பூர்வமாக குறிப்பிட்டு இருந்தது.உண்மை நிலை இவ்வாறு இருக்க, கோயில்களை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலிருந்து எடுத்து மறுபடியும் பழைய நிலைக்குக் கொண்டு செல்வதற்கான தீவிர முயற்சிகள் நடைபெற்று வருவது கண்கூடாகத் தெரிகிறது. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பற்றியும், உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்பட்டும் வருகின்றன.கோயில் சிலை திருட்டுகள், நீண்டகாலமாக நடைபெற்று வருகின்றன; இதில் கோயில் அர்ச்சகர்களின் பங்கும் முக்கியமானதாக இருந்து வந்திருக்கிறது.

இந்த நிலையில் கோயில் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் அங்கு ஊழல்களும், நிர்வாகச் சீர்கேடு களும், திருட்டுகளும் நடைபெறுவதாகப் புரளி செய்து, மத்தியில் தங்களுக்குச் சாதகமான இந்துத்துவா ஆட்சி இருப்பதை முக்கியமாகப் பயன்படுத்திக் கொண்டு, மீண்டும் கோயில்களைப் பார்ப்பனர் ஆதிக்கத்தில் கொண்டு செல்லு வதற்கான தீவிர முயற்சியில் பார்ப்பனர்கள் - இந்துத்துவா சக்திகள் ஈடுபட்டுக் கொண்டு வருகின்றன.

பக்தர்களாக இருக்கக் கூடிய தமிழர்களும், இந்தப் பார்ப்பனச் சூழ்ச்சியைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று இப்பொழுதுக்குழு கேட்டுக் கொள்கிறது. திராவிட இயக்க ஆட்சியான நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவதில் அ.இ.அ.தி.மு.க. அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 14

சிவகங்கை - கீழடி அகழ்வாராய்ச்சியில் மத்திய தொல்லியல் துறையின் கீழடி வேலைக்குக் கண்டனம்!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் - தமிழர் நாகரிகத்தின் காலத்தால் முந்திய தொன்மைக்கான தடங்கள், பொருள்கள், கருவிகள் ஏராளமாகக் கிடைத்த நிலையில், அவை வெளிவந்துவிடக் கூடாது என்ற அழுத்தமான கண்ணோட்டத்தில் தொடக்க முதல் மத்திய தொல்லியல் துறை பல்வேறு தடங்கல்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆய்வுக்கு முதுகெலும்பாக இருந்த ஆய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் அசாம் மாநிலத்திற்குத் திடீரென மாற்றப்பட்டார். வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை டெக்சாஸ் மாநிலத்தில் நடைபெறும் அந்தப் பேரவையின் 31ஆம் ஆண்டு கூட்டத்துக்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள கடந்த ஜூன் மாதம் அழைப்பு விடுத்திருந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஆய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணனுக்கு மத்தியஅரசு அனுமதி மறுத்தது. கீழடி ஆய்வின் மூலம் தமிழர்களின் தொன்மை வெளிச்சத்துக்கு வந்துவிடக் கூடாது என்ற பார்ப்பன வன்மமே இதன் பின்னணியில் உள்ளது என்பது இதன் மூலம் வெளிப்படையாகிறது.

கீழடி அகழ்வாராய்ச்சித் தொடர்பாக எந்தவித அறிக்கை யையும் வெளியிடக்கூடாது என்றும், கீழடி அகழ்வாராய்ச்சியிலிருந்து ஆய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் முற்றிலும் விலகி இருக்க வேண்டும் என்றும் தொல்லியல்துறை இயக்குநர் ஆணை பிறப்பித்திருப்பது - உள்நோக்கம் கொண்ட பார்ப்பன விஷமம் என்று இப்பொதுக்குழு திட்டவட்டமாகவே தெரிவித்துக்கொள்கிறது.

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சிக்கு பொறுப்பு அதி காரியாக இருந்த பேராசிரியர் சத்தியமூர்த்தி என்ற ஆய்வாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையிலும் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி தொடர்பான அறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பு அவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், கீழடி அகழ்வாராய்ச்சிக்குப் பொறுப்பு அதிகாரியாக இருந்து சகல பணிகளையும் நேரில் மேற்கொண்டு உண்மைகளை முழுவதும் அறிந்த அமர்நாத் இராமகிருஷ்ணன் கீழடி அகழ்வாராய்ச்சி தொடர்பான எல்லாவற்றிலிருந்தும் முற்றிலும் விலகி இருக்க வேண்டும், இது தொடர்பாக எந்த அறிவிப்பும், அறிக்கையையும் தொகுக்கக் கூடாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது - வரலாற்று ரீதியாக தமிழகத்தின் தொன்மைக்கும் பெருமைக்கும் எதிராக கருத்தியல் ரீதியாக மத்திய பிஜேபி அரசு மேற்கொண்டிருக்கும் காழ்ப்புணர்வு - பகைமை உணர்வின் வெளிப்பாடே இது என்று இப் பொதுக்குழு கருதுகிறது. தொல்லியல் துறை ஆணையர் பிறப்பித்த ஆணையை உடனடியாக ரத்து செய்து, கீழடி அகழ்வாராய்ச்சிக்குப் பொறுப்பு அதிகாரியாக இருந்து உண்மைகளைக் கண்டறிந்த ஆய்வாளர் என்ற முறையில் அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களுக்கே அந்த ஆய்வின் இறுதி அறிக்கையைத் தயாரிக்கும் முழு பொறுப்பும் அளிக்கப்பட வேண்டும் என்று தொல்லியல்துறையையும் மத்திய அரசையும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது!

தமிழ்நாடு அரசும் இதில் உடனடியாகத் தலையிட்டு, இந்த வகையில் செயல்படுமாறும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. இல்லையேல் ஒட்டுமொத்த தமிழர்களின் பெரும்போராட்டமாக இது வெடித்தெழும் என்றும் இப்பொதுக்குழு எச்சரிக்கிறது.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles