நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும்
திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி
திருச்சி, அக்.13 முதலமைச்சர் எடப்பாடிக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது - யாராக இருந்தாலும் நீதி மன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
12.10.2018 அன்று திருச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
யாராக இருந்தாலும் நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படவேண்டும்
செய்தியாளர்: தமிழக முதல்வர் எடப்பாடிக்கு எதிரான வழக்கை சி.பி.அய். விசாரிக்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது பற்றி...?
தமிழர் தலைவர்: நீதிமன்றத்தைப் பொறுத்த வரையில் அவர்கள் கொடுத்திருக்கின்ற ஆணைக் குக் கீழ்படியவேண்டியது அவசியம். அப்படி ஏதும் தவறு நடைபெறவில்லை என்று சி.பி.அய்.க்கு நிரூபிக்கவேண்டியது அவருடைய கடமை. ஆகவே, அந்த வழக்கை இனிமேல் தவிர்க்கக்கூடிய வாய்ப்பு கிடையாது.
ஆகவே,இந்தசூழ்நிலையில்தெளிவாகப் பார்க்க வேண்டியது அவசியம். பொதுவாக, நீதிமன்றத்தின் ஆணை என்று சொல்லும் பொழுது, யாராக இருந்தாலும் அதற்குக் கட்டுப் படவேண்டியவர்கள்தான். அதன்படிதான் நடக்க வேண்டும்.
சாதாரண நிகழ்விற்குக்கூட பதவி விலகி இருக்கிறார்கள்
செய்தியாளர்: தமிழகத் தலைவர்கள் எல்லாம், முதல்வர் பதவியிலிருந்து விலகவேண்டும் என்று வலியுறுத்துகிறார்களே...?
தமிழர் தலைவர்: தமிழக முதல்வருக்கு எதி ரான வழக்கை சி.பி.அய். விசாரிக்கவேண்டும் என்ற நிலை வந்திருக்கின்றது. ஆனால், அந்தக் காலத்தில், ஒரு சாதாரண நிகழ்விற்குக்கூட பதவி விலகி இருக்கிறார்கள்.
லால்பகதூர் சாஸ்திரி, அரியலூர் விபத்து நடை பெற்றபொழுது பதவி விலகியிருக்கிறார். அதேபோல, ஆந்திர முதல்வர் சஞ்சீவி ரெட்டி அவர்கள், ஒரு மோட்டார் கார் தேசிய மயமாக்கும் பிரச்சினையில் பதவி விலகியிருக்கிறார்.
இதெல்லாம் அந்தக் காலம். ஆனால், இப் பொழுது ஜனநாயகத்தை யாரும் அப்படி மதிப்ப தாகத் தெரியவில்லை.
தேர்தல்மூலம் பதில்!
செய்தியாளர்: தமிழக அமைச்சர்கள்மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சொல்லிக் கொண்டி ருக்கிறார்கள், இப்பொழுது முதலமைச்சர்மீதும் குற்றச்சாட்டுகளை சொல்லியிருக்கிறார்களே?
தமிழர் தலைவர்: ஆளுநர் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்; மத்திய அரசும் பார்த்துக் கொண்டிருக்கிறது. முதலில், தான் சொன்ன கருத்தையே ஆளுநர் மறுக்கிறார். இவையெல்லாவற்றுக்கும் பொதுமக்கள் பதில் சொல்வார்கள் தேர்தல்மூலமாக.
இவ்வாறு செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி குறிப்பிட்டார்.